குலக் கல்வியிலும் கொடிய குருகுலக் கல்வியை கொண்டு வர ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி சதித்திட்டம்

ஜூன் 01-15

 

கவிஞர் கலி.பூங்குன்றன்

 

அன்று குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து போர்ச்சங்கு ஊதினார் தந்தை பெரியார்.

உடம்பெல்லாம் மூளை என்று பார்ப்பனர்களால் பல்லக்கில் வைத்துப் பாராட்டப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) இரண்டு முறை சென்னை மாநிலத்திற்கு முதல் அமைச்சராக வந்தார்.

1937இல் வந்தபோது அவர் செய்த கைங்கர்யம் 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியதுதான். அதே நேரத்தில் ரூ.12 லட்சம் செலவில் சமஸ்கிருதக் கல்லூரியை ஏற்படுத்தினார்.

1952_54 காலகட்டத்தில் சென்னை மாநில முதல் அமைச்சராக வந்தார். இரண்டு முறையும் தேர்தலில் நின்று மக்கள் வாக்குப் பெற்று முதல் அமைச்சர் ஆனவர் இல்லை. கொல்லைப்புறம் வழியாக (மேல்சபை மூலம்) உள்ளே நுழைந்தவர்தான் அவர்.

இரண்டாவது முறை வந்தபோதும் என்ன செய்தார்? 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்.

உடம்பெல்லாம் மூளை உள்ளவர் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்? அதுதான் அந்த மனுதர்மச் சிந்தனை.

‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே’ என்பதுதானே மனுதர்மம்!

அந்த மனுவாதி முதல் அமைச்சரானால் என்ன செய்வாரோ, அதையேதான் ராஜாஜி இரண்டு முறையும் முதல் அமைச்சரானபோது செய்தார்.

இரண்டாவது முறை முதல் அமைச்சரானபோது, 6000 பள்ளிகளை இழுத்து மூடி மீதிப் பள்ளிகளிலும் அரை நேரம் படிப்பு _ மீதி நேரம் அவரவர்களின் குலத் தொழிலைச் செய்ய வேண்டும்.

குலத் தொழிலை அம்மாணவர்கள் செய்கிறார்களா என்பதை மேற்பார்வை செய்ய வேண்டியது ஆசிரியர்களின் வேலையாம்.

தொழிற்கல்வி என்று கூறிப் பார்ப்பனர்கள் பம்மாத்துக் காற்றடித்த அந்தப் பலூனை குலக்கல்வி என்று அடையாளம் காட்டிக் குத்திக் கிழித்து வெடிக்கச் செய்தார் தந்தை பெரியார்.

அவ்வளவுதான்! என்னனென்னவெல்லாமோ கழைத்துகூத்து ஆடிப் பார்த்தனர். நடக்கவில்லை. தந்தை பெரியார் அடையாளம் காட்டிய அந்தக் குலக்கல்வி என்பதுதான் மக்கள் மத்தியில் மேலோங்கி நின்றது.

சொல்லிப் பார்த்தார்; எழுதிப் பார்த்தார் தந்தை பெரியார். ஆச்சாரியார் அசைவதாகத் தெரியவில்லை.

“எடு தீப்பந்தத்தை _ நாள் குறிப்பிடுகிறேன்! அக்ரகாரத்துக்கு வை நெருப்பை’’ என்றார்.

ஆத்தூரில் மாநாடு கூட்டி சட்டத்துக்கு உட்பட்டு கத்தியை வைத்துக் கொள்ளுங்கள் என்ற கட்டளையிட்டார் தந்தை பெரியார். அக்ரகாரம் அலறியது. ஆச்சாரியாரோ உடல் சுகவீனம் என்று கூறி, ஆட்சியை விட்டு நடையைக் கட்டினார். அன்றைக்கு போர்ச்சங்கு ஊதி ஆச்சாரியாரின் அரசியல் வாழ்வையே அஸ்தமனம் செய்யச் செய்தார். பார்ப்பனர் அல்லாத மக்களின் வயிற்றில் கல்விப் பாலை வார்த்தார்.

இன்று மீண்டும் அதே மேகம் கருகருத்துச் சூழ்ந்து நிற்கிறது. குருகுலக் கல்வியாம் _ கொண்டு வரத் துடிக்கிறது மத்திய பி.ஜே.பி ஆட்சி _ அதற்கு சாவி கொடுப்பது ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவாரக் கும்பல்.

அன்று அய்யா போர்ச்சங்கு ஊதியது போல, இப்பொழுது திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி போர்ச்சங்கு ஊதிவிட்டார்.

தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் (22.05.2018) ஆரியக் குருகுலக் கல்வியின் ஆபத்தினை எடுத்துச் சொன்னபோது அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதனை எதிர்த்துத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் உள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எனும் ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி அரசுக்கான கெடு 2019ஆம் ஆண்டு  முடிவடைகிறது. அதற்குள் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி நிரலை விரைந்து முடித்திட வேண்டும் என்பதில் வாயு வேகமாகச் செயல்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாகக் கல்வித்துறையைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளது. சமஸ்கிருதக் கலாச்சார இந்துத்துவாவைத் திணிப்பதுதான் அதன் திட்ட அறிக்கையில் முதல் இடத்தில் இருப்பது உறுதியாகிறது.

உஜ்ஜயினியில் (2018 ஏப்ரல்) கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் குருகுலக் கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்குமுன் ‘புதிய கல்விக் கொள்கை’ ஒன்றை அறிவித்தது நினைவிலிருக்கலாம்.

புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த கூற்றுக்கள்:

கல்வித்திட்டம் இந்தி, சமஸ்கிருதத்தை முன்னிறுத்தும் நோக்கில் வரையப்பட்டுள்ளது. இதன் வரைவுக் கொள்கை முகவுரையில், வேதக்கல்வி அடிப்படையானதாக அமைந்துள்ளது. மேலும் குரு  மாணவன் உன்னத உறவை வலியுறுத்துகிறது.

அறக்கட்டளை மூலம் இயங்கும் பள்ளிகளின் உரிமம் விலக்கப்படும். இதனால்  ஒரே மதம், ஒரே பண்பாடு, என்ற பெயரில் சிறுபான்மையினர் உரிமைகள் பறிபோகும்.

அய்ந்தாம் வகுப்பு வரை தேர்வு இல்லை, அதற்குப்பிறகு இரண்டு முறை தேர்வு வைக்க வேண்டும். அதில் தேர்ச்சி பெறாதவர்கள் தொழிற்கல்வி கற்க வேண்டும். .

அந்தந்த மாநில அரசிற்கு என்று கல்விக்கொள்கை, திட்டங்கள் விலக்கப்பட்டு நாடு முழுவதும் பொதுவான ஒரு கல்வித்திட்டத்தைக் கொண்டுவருவது. இதனால் மாநில கல்வி உரிமைகள் பறிபோகும்.

கல்வியை பன்னாட்டு அளவில் வணிகமய மாக்குவது; இதனால் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் உயர் கல்வி பெறுவது என்பது எட்டாக்கனியாகத் தான் போய் முடியும்.!

புதிய கல்விக்கொள்கை தொடர்பாக யாரும் நீதிமன்றத்தை அணுக முடியாது. அதற்கென அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்களைத் தான் அணுக வேண்டும். .

மழலையர் முதல் உயர்கல்வி வரை ஒரே பாடத் திட்டங்களை நிர்ணயிக்க தனி அமைப்பு உருவாக்கப்படும். அந்த அமைப்பு இந்திய கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கருத்தில் கொண்டு பாடத்திட்டத்தை நிறைவேற்றும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கொள்கையை கல்வியாளர்கள் வகுக்கவில்லை. தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரரும், மகாபாரத இராமாயண ஆய்வுகளை தீவிரமாக மேற்கொண்டு பல புனைக் கதைகளை உண்மை போன்று எழுதிய  ஜெ.எஸ். ராஜ்புத் என்பவர் தான் இக்குழுவின் முக்கிய முடிவெடுக்கும் இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்.

இதனுடைய தொடச்சியே தான் இப்பொழுதைய குருகுலக் கல்வித் திட்டமாகும்.

இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதையே ஏற்றுக் கொள்ளாதவர்கள்தாம் இந்த பிஜேபியினர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது உறுதி எடுத்துப் பதவியை ஏற்றவர்கள் அதற்கு எதிரான நடவடிக்கையில் செயல்படுவதை எப்படிப் பார்ப்பது?

இவர்கள் சட்டத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள். மக்கள் நலனைப் பற்றியும் அக்கறை செலுத்தாதவர்கள். இவர்களின் நோக்கமெல்லாம் மீண்டும் மனுதர்மத்தை பார்ப்பன ராஜ்ஜியத்தை உண்டாக்குவதுதான்.

இது இந்தியாவுக்கே பொதுவானதுதான் என்றாலும் தமிழ்நாட்டைத் தவிர இதன் கொடிய ஆபத்தின் ஆழத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய சிந்தனைப் போக்கு இல்லை என்பது இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.

ஆம், தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் பிறந்த தமிழ்நாடுதான் இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழி காட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் (22.4.2018) கூடிய ஒன்பது கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பிஜேபியின் குருகுலக் கல்வியை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (பெட்டிச் செய்தி காண்க)

அண்ணாவின் பெயரையும், ‘திராவிட’ எனும் இனச் சுட்டுப் பெயரையும் கட்சியில் ஒட்டிவைத்துள்ள அதிமுக அரசோ யாருக்கோ வந்த விருந்து என்று கைகட்டி வாய்ப் பொத்தி மத்திய அரசுக்குச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது.

பார்ப்பனர்கள் ஆட்சிக்கு வரும் பொழுதெல்லாம் பார்ப்பனீயத்தைக் கல்வி மூலம் பரப்புவதிலேயே குறியாக இருப்பார்கள். எத்தனை எத்தனையோ ஆதாரக் குவியல்கள் உண்டு.

வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது _ மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் முரளிமனோகர் ஜோஷி.

பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம், வேதக் கணிதம் கற்பிக்க ஏற்பாடு செய்யவில்லையா? ஒர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவிக்கப்பட்டது.(1999_2000)

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி என்ன சொன்னார்?

“நீண்ட பாரம்பரியம் மிக்க, பழமையான மொழி சமஸ்கிருதமாகும். இதன் பழமையைப் போற்றும்விதமாக இந்தக் கல்வியாண்டை (1999_2000) சமஸ்கிருத ஆண்டாக அறிவித்துள்ளோம். இதுகுறித்து மத்திய சமஸ்கிருத கல்வித்துறை இந்த ஆண்டு முழுவதும் சமஸ்கிருதம் குறித்த அனைத்து முக்கிய தகவல்களையும் அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டு சென்று சேர்க்கும். இதற்காக 200 கோடி வரை செலவாகும் என்றும், மத்திய அரசு முதலில் ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் நிதி தனியார் மற்றும் பொதுமக்களிடமிருந்து வசூலிக்கும் முடிவையும் எடுத்துள்ளோம்’’ என்று கூறினாரே!

தமிழுக்கும் அப்படி ஓர் ஆண்டை அறிவிக்க வேண்டும் என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் வற்புறுத்தியும் மத்திய பி.ஜே.பி அரசு அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லையே!

1998 அக்டோபர் 22ஆம் நாள் புதுடில்லியில் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அதுபற்றி அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் என்ன சொன்னார்?

“இந்தக் கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் ஒரு முக்கியமான கருத்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை பாரதீய ஜனதா கட்சியின் ஒரு பிரிவாக இயங்கும் ஒரு இறக்கையாகவோ, ஒரு பகுதியாகவோ இருக்கிற சங் பரிவார் என்கின்ற அந்த நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புகொண்ட அந்த நிறுவனம் பரிந்துரை செய்திருக்கிறது. என்ன பரிந்துரை? இனிமேல் பாடங்களில் இந்துத்துவா கொள்கை பரப்ப வேண்டும்.’’ (‘முரசொலி’ 25.10.1998) என்று குறிப்பிட்டார் கலைஞர்.

அந்தக் கல்வி அமைச்சர்கள் மாநாடு மூன்று நாள் நடைபெற்றது. மாநாட்டு தொடக்கத்தில் சரஸ்வதி வந்தனா பாடப்பட்டது. தமிழ்நாடு அரசு உட்பட (அம்மாநாட்டில் கல்வி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் பங்கேற்றார்) பல மாநில கல்வி அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர். (பெட்டிச் செய்தி காண்க.)

அம்மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ். கல்வி நிபுணர் என்று கூறப்படும் சித்தலிங்கையா என்பவரால் தயாரிக்கப்பட்டிருந்த கல்வித் திட்டம் அந்தக் கூட்டத்தில் வைக்கப்படுவதாக இருந்தது. கடும் எதிர்ப்பின் காரணமாக அது ஈடேறவில்லை. (பெட்டி செய்தி காண்க!)

பார்ப்பனர்களாக இருந்தாலும் சரி, ஆர்.எஸ்.எஸ்._ சங் பரிவார் _ பி.ஜே.பி.யாக இருந்தாலும் சரி, இவர்களுடைய சிந்தனைகள் எல்லாம் மனுதர்ம சிந்தனைதான் _ வர்ணாசிரம சிந்தனைதான் என்பது கல்வெட்டாகும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *