மத்திய பிஜேபி அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்கு எதிர்ப்பு

ஜூன் 01-15

குருகுலக் கல்வியினை பலப்படுத்துவது, பரவ லாக்குவது தொடர்பாக உஜ்ஜயினியில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நடத்திய மாநாட்டு முடிவுகளை மத்திய பா.ஜ.க. அரசு நடை முறைப்படுத்திட தொடங்கியுள்ளது.

முதல் நடவடிக்கையாக குருகுலக் கல்விச் சாலையில் படித்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 15 வயது நிரம்பிய எந்தவொரு மாணவரும் தனக்கு சமஸ்கிருதம் படிக்க, எழுதிடத் தெரியும் என தற்சான்று (வேறு சான்று எதுவும் தேவையில்லை) அளித்தால் 10ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (ழிணீtவீஷீஸீணீறீ மிஸீstவீtutமீ ஷீயீ ளிஜீமீஸீ ஷிநீலீஷீஷீறீவீஸீரீ)   10ஆம் வகுப்பில் சேர அனுமதி அளித்துவிடும். அதற்கான அனுமதிச் சான்று பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதிட வேண்டும்.

அவை:

வேத அத்தியாயன (வேதம் கற்றல்), பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை), சமஸ்கிருத வியாகரன (சமஸ்கிருத இலக்கணம்), சமஸ்கிருத சாகித்ய (சமஸ்கிருத புலமை) மற்றும் சமஸ்கிருத மொழி ஆகிய அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதி குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 10ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வியினைத் தொடர சான்று அளிக்கப்படும். 10ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையான கல்வித் திட்டத்தில் பிற மாணவர்கள் பயின்ற பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம் பற்றி குருகுலக் கல்விக் கூடங்களில் பயின்ற மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தினை (மிஸீபீவீணீஸீ ரிஸீஷீஷ்றீமீபீரீமீ ஜிக்ஷீணீபீவீtவீஷீஸீ) வளர்ப்பதாகக் கூறும் இந்த மத்திய அரசுத் திட்டம் உண்மையில் அடிப்படைக் கல்வி பயிலாத மாணவர்களும் 10ஆம் வகுப்பில் சேர்ந்திட சமஸ்கிருதக் கல்வி பயின்றிருந்தால் போதுமானது எனக் கூறுகிறது.

சமஸ்கிருதத் திணிப்பினை முன்னிறுத்தி கல்வியின் தரம் சீரழிக்கப்படுவதற்கு மத்திய அரசால் இந்த புதிய கல்வித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் பயின்ற மாணவர்கள் – குருகுலக் கல்வி முறையிலோ அல்லது அஞ்சல்வழிப் பள்ளியிலோ பயின்ற மாணவர்கள் முறையான கல்வித் திட்டத்தில் பள்ளிப் படிப்பினை முடித்திட ஏதுவான ஒரு வழிமுறையாக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது. கல்வியின் தரம் பற்றிய கவலை இல்லை. சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் போதும் எனும் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நோக்கில் இந்தக் குருகுலக்கல்வி கொண்டு வரப்படுகிறது. சமஸ்கிருத ஆதிக்க அணுகுமுறையில் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் பார்ப்பனீய வருணாசிரம முறையை, குருகுலக்கல்வி என்ற போர்வையில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சிக்கும், மத்திய பிஜேபி ஆட்சியின் முயற்சியை அதன் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் கடமையுமாகும்.

மத்திய பிஜேபி அரசின் இந்தப் பிற்போக்குக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வற்புறுத்துகிறது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் இதனை முறியடிப்பதற்கான பிரச்சாரத்தில், போராட்டத்தில் முயற்சிகளில் ஈடுபடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

(22.4.2018 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற 9 கட்சிகள் அடங்கிய கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் அளித்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கலந்துகொண்ட கட்சிகள்  – திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.அய்.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *