குதிப்பதுதான் குண்டலினியா?

ஆகஸ்ட் 01-15

திருவண்ணாமலையில் ராஜசேகரன் என்ற ஒரு இளைஞன். சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி காவிகளுடன் அலைந்து திரிந்தான். அந்தக் காவிகளின் எல்லாப் பழக்கங்களும் தொற்றிக்கொண்டு நான்தான் ரமணரின் அவதாரம் என்று கூறிக்கொண்டு நித்யானந்தா என்று புதுப்பெயர் சூடிக்கொண்டான்; ஆசிரமம் அமைத்தான். சாமியார் தொழில்தான் எப்போதும் நல்லாக் கல்லாக் கட்டும் தொழில் ஆயிற்றே. கல்லாப் பெட்டி நிரம்பியது.

பக்தி வியாபாரம் படு ஜோர். காலத்திற்குத் தகுந்தவாறு நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு பக்த கோடிகளைச் சேர்த்துக் கொண்டார். பேச்சில் வல்லவராகப் பேசப்பட்டார். அப்படிப் பேச இவரே பணம் கொடுத்து பலரையும் கிளப்பிவிட்டார். புத்தகங்கள் போட்டார். பல எழுத்து வியாபாரிகள் பணம் பெற்றுக்கொண்டு எழுதிக் கொடுத்ததையெல்லாம் இவரது பெயரிலேயே வெளியிட்டுக் கொண்டார். கதவைத் திற காற்று வரும் என்று முன்னணி ஏட்டில் தொடரும் வந்தது.

 

 

உடல் உழைப்பில்லாதவர்கள், மனம் சோர்ந்தவர்கள், குடும்பத்தோடு, குழந்தைகளோடு வீட்டில் சரியாகப் பேசாதவர்கள், தனிமையில் இருப்பவர்கள், கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரிந்தவர்கள், முதியவர்கள் என வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத ரகத்தினர், சமூகச் சிந்தனை இல்லாதவர்கள் இந்த மாதிரிச் சாமியார்களைச் சரணடைவதுதான் சில ஆண்டுகளாக ஒரு பேஷன். அந்த பேஷன் இந்தச் சாமியாருக்கும் கை கொடுக்க கூட்டம் கூடியது. பணமும் சேர்ந்தது. கீதா உபதேசத்திலிருந்து பிரம்மச்சரியம் வரை வாய் கிழியப் பேசுவது நித்யானந்தாவின் சிறப்பு. கூடவே தியானம், யோகம் போன்ற எளிதான உடற்பயிற்சிகளும் சொல்லித் தரப்பட்டன. ஊர் ஊருக்கு அமைப்புகள் உருவாயின. உபதேசங்களுக்குப் பயணமும் சென்றார். சகல வசதிகளுடன் வாழ்க்கை முறை அமைந்தது. மனிதனின் உடல் தேவையும் ஏற்பட்டது சாமியாருக்கு.

ஒரு மார்க்கெட் இழந்த நடிகை ஆசிரமத்தில் அடைக்கலமானார். அவரே சாமியாருக்குப் பணிவிடைகள் செய்தார். இது நித்யானந்தாவே  சொல்லிய வாக்குமூலம். ஆசிரமத்துக்குள் சிக்கல் உருவாக சாமியாரின் அந்தரங்கம் சி. டி.யில் பதிவாகி இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக ஒளிபரப்பானது. நக்கீரன் பத்திரிகையில் நித்யானந்தாவின் உண்மை முகத்தை அவரது சீடர் லெனின் கருப்பன் என்ற தர்மானந்தா வெளிக்கொணர்ந்தார்.

ஒரு ஆணுக்கு ஒரு பெண் துணை தேவைதான். அதனை உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், பிரமச்சரியம் பற்றிப் பேசியவர் அப்படி இருக்கலாமா என இந்து மதத்தினரே கேள்வி எழுப்பினர். நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ இவரது பிடதி ஆசிரமம் கருநாடகாவில் இருப்பதால் வழக்குப் பதிவானது. சில நாள் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்து பின் கைது செய்யப்பட்டு சாமியார் கம்பி எண்ணினார். அவருடன் இருந்த நடிகை ரஞ்சிதாவோ தலைமறைவானார். வழக்கில் ஜாமீன் பெற்று ஆசிரமம் திரும்பியவருக்கு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தைரியம் இங்கு பேட்டி கொடுக்கும் அளவுக்கு வந்தது.

கடந்த ஜூலை 13 அன்று எல்லா பத்திரிகையாளர்களையும் அழைத்து, தனது தரப்பு கருத்துகளைச் சொல்லிய நித்யானந்தா அந்த சி.டி.யில் இருப்பது நான் இல்லை; அது முழுக்க போலியானது; என்னிடம் பணம் பெற பேரம் பேசப்பட்டது; இதையெல்லாம் காவல்துறையிடம் புகாராக அளித்துள்ளேன் என்று கூறினார். இவ்வளவு பேசியவர் நமது உண்மை நிருபரின் எந்தக் கேள்விக்கும் விடை அளிக்கவில்லை. இன்னும் சிலர் கேட்ட தனது சொத்து விவரம் குறித்த கேள்விக்கும் விடை சொல்லவில்லை. ஆதாரத்தைத் தருகிறேன் என்று கூறியவர் அதனைத் தராமலேயே பேட்டியை முடித்தார். (பேட்டி முழு விவரம் பெரியார் வலைக்காட்சியில் காணலாம்: www.periyar.tv)

நித்யானந்தா ரஞ்சிதாவுடன் உள்ள வீடியோவை உலகமே பார்த்துவிட்டது. youtube இணைய தளத்தில் ஒரு பகுதியை மட்டுமே பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். டெல்லியில் உள்ள Forensic Science Laboratory, Govt. of NCT of Delhi ஆய்வு மய்யம் அந்த வீடியோவில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும்தான் என்று சான்றிதழும் அளித்துவிட்டது. ஆனால், அப்பட்டமாகப் பொய் கூறும் இவர், இழந்த மதிப்பை – மரியாதையைத் திரும்ப மீட்க குண்டலினி யாகம் செய்யப்போவதாக அந்தப் பேட்டியின் போது கூறினார்.  அதன்படியே ஜூலை 15 அன்று அந்த நாடகத்தை தனது பிடதி ஆசிரமத்தில் அரங்கேற்றினார்.

பக்தர்களைக் கூட்டிவைத்துக் கொண்டு குண்டலினி யாகம் என்று கூறி மந்திரங்கள் ஜெபித்து கையை உயர்த்தி சைகை காட்டினார். ஏற்கெனவே பயிற்றுவிக்கப்பட்ட சிலர் கால்களை மடக்கி உட்கார்ந்தவாறே குதித்தனர். தவளை போலத் தவ்வினார்கள். இதுதான் குண்டலினி சக்தி என்பதுபோல நித்யானந்தாவும் சிரித்தபடியே உஷ்..உஷ்.. என்றார். ஆனால், சர்வசக்தி உள்ளதாகவும், தமக்கு எல்லா யோகாசனங்களும் தெரியும் என்றும் புற்று நோயையே குணப்படுத்தும் ஆற்றல் பெற்ற வித்தைகள் தெரியும் என்றும் பேட்டியில் பீற்றிக்கொண்ட நித்யானந்தா குண்டலினியைச் செய்துகாட்டவில்லை.

குறைந்தபட்சம் அந்த பக்தர்கள் குதித்ததுபோலக் கூடக் குதிக்கவில்லை. சிறிது நேரம் குதித்த அந்த பக்தர்கள் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டனர். இந்த நிகழ்ச்சியை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க அமெரிக்காவில் இருந்தும் டெல்லியில் இருந்தும் பெங்களூருவில் இருந்தும் ஆய்வு நிறுவனங்கள் வர இருக்கின்றன. அவர்களின் முன்னிலையிலும், பத்திரிகையாளர்களின் முன்னிலையிலும் செய்துகாட்டப்போவதாகச் சொன்னார். எந்த நிறுவனத்தினரும் வந்ததாகத் தெரியவில்லை. அந்தத் தகவலை நித்யானந்தா தரப்பும் அறிவிக்கவில்லை. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு சில பத்திரிகையாளர்கள் சென்றிருந்தனர். இவர்களில் கர்நாடகாவைச் சேர்ந்த கிரண் என்ற பத்திரிகையாளரும் ஒருவர். இவர் அங்கு என்ன நடந்தது என்பதை விவரிக்கிறார். கடந்த 15ஆம் தேதி குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்றேன். அப்போது, நித்யானந்தா, குண்டலினி யாகம் நடத்தினார். அதில், மனிதனுக்குள் தெய்வீக சக்தியை வரவழைத்து ஒரு அடி உயரம் அந்தரத்தில் பறக்க வைக்க முடியும் என அறிவித்தார். இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்றார். நானும் முயற்சி செய்தேன். எதுவும் நடக்கவில்லை.

உடனே அவரிடம், எனக்குப் பறப்பது போன்று எந்த உணர்வும் ஏற்படவில்லை. நீங்கள் மக்களை ஏமாற்றுகிறீர்கள். அதற்காக, ஆட்களை நியமித்து நாடகம் நடத்துகிறீர்களா? கம்ப்யூட்டர் யுகத்தில் இது சாத்தியம் இல்லாதது என்றேன். அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறினார். எனது உடல் அமைப்புதான் இளைஞனைப் போன்றது. உணர்வுகள் 6 வயதுச் சிறுவனைப் போன்றது. எனவே, எனது சக்தி அபரிமிதமானது என்று சம்பந்தம் இல்லாமல் எதைஎதையோ பேசினார். இது குறித்து ரஞ்சிதாவிடமும் கேட்டேன். ஆனால், அவர் மழுப்பலாக சிரித்தார். எனது இந்த அனுபவத்தின் மூலம், நித்யானந்தா போலிச் சாமியார் என்பதைத் தெரிந்து கொண்டேன். குண்டலினி யோகா என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறார். பிடதியில் விவசாயம் செய்வதற்காக வழங்கப்பட்ட நிலத்தில், அவர் ஆசிரமம் அமைத்து மக்களை ஏமாற்றி வருகிறார். இது குறித்து அரசுக்குப் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இனிமேலாவது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

யோகாசனங்களில் பல வகை உண்டு. அதில் குண்டலினி யோகாசனமும் ஒன்று என்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாகச் செய்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஏனென்றால், நித்யானந்தா சொல்வதுபோல புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக உடலை சில அடிகள் உயர்த்தி அந்தரத்தில் பறப்பதுதான் குண்டலினி. இது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி. யோகாசன வகுப்பு நடத்துபவர்களும் இதுவரை இப்படிச் செய்து காட்டியதில்லை. அதுவே முழு வேலையாக இருப்பவர்களுக்கே இன்னும் சாத்தியப்பாடாதபோது இந்த மோசடிப் பேர்வழிக்கு எப்படிச் சாத்தியப்படும் என்று பகுத்தறிவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காவி அணிந்து கொண்டு ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்து வெட்டவெளிச்சமான ஒரு ஆபாசக்கூத்தைக் கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி ஒருவரால் வெளிப்படையாக வந்து போலியாக மறுக்கமுடிகிறது என்றால் மக்கள் எவ்வளவு மடையர்களாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? இதுவே காவி அணியாத வேறு ஒரு துறையைச் சேர்ந்தவராக இருந்தால் இப்படிப் பேசியிருக்க முடியுமா? வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பேட்டி கொடுக்க முடியுமா? இன்னும் எத்தனைக் காலத்திற்குத்தான் இந்தக் காலிகள் ஏமாற்றுவார்கள்?

–  மணிமகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *