நான் அறிந்த ஆசிரியர்!

டிசம்பர் 01-15

 

– டாக்டர் சோம.இளங்கோவன்

அடர்ந்த அழகிய கரு முடி. சினிமா நடிகர் போன்ற தோற்றம். ஆணித்தரமான ஆதாரங்கள் நிறைந்த பேச்சு. சிறுவனான எனக்கு அவரது பேச்சின் ஆழம் புரியாவிட்டாலும் கருத்துக்கள் ஓரளவு புரிந்தன. பார்ப்பன ஆசிரியர்களிடம் படித்த காலத்திலே வெளியே சுனா மானா (சுயமரியதைக்காரன்) என்று காட்டிக் கொள்ள முடியாது. இருந்தாலும் எனது சித்தப்பா பி.வி.ஆர் (பிச்சாண்டார்கோவில் இராமச்சந்திரன்) அவரது நண்பர்களுடன் தஞ்சை எடைக்கு எடை வெள்ளி மாநாட்டிற்குச் சென்று விட்டேன். திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் புதுமுக வகுப்பு முடித்துத் தந்தை பெரியார் அவர்களிடம் கடிதம் பெற்றுக் கொண்டு மருத்துவக் கல்லூரி நேர்முகத் தேர்விற்குச் சென்னை சென்றோம். கடிதத்தை ஆசிரியரிடம் கொடுத்தோம். அதுதான் முதல்முதல் அருகே சந்தித்தது.

மாநாடுகள் கூட்டங்களில் பேச்சைக் கேட்டதுடன் சரி. தந்தை பெரியார் அவர்களைத் திருச்சி மாளிகையில் நானே தனியாகச் சென்று  கேக்கும், மலைப் பழமும் கொடுத்துப் பார்த்திருக்கின்றேன். ஆனால் ஆசிரியரைத் தனியாகப் பார்த்துப் பேசியதில்லை. தஞ்சையில் மருத்துவப் படிப்பு முடித்து அமெரிக்கா வரும் முன் 1971இல் சென்னையில் தந்தை பெரியாரைப் பார்த்துச் சொல்லி வாழ்த்துகள் பெற்று அமெரிக்கா வந்து விட்டேன்.

1974இல் ஊருக்குக் குறுகிய விடுமுறையில் வந்து பத்தே நாட்களில் ஏற்பாடுகள் நடந்து அய்யா ஆளவந்தார் தலைமையில் மண-முடித்துத் திரும்பி விட்டேன். அய்யா பி.வி.ஆர் மட்டும் தொடர்ந்து ஆசிரியர் அவர்களை அமெரிக்கா அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டேயிருப்பார்.

ஒருமுறை விடுமுறைக்கு வருகின்றேன். திடலிலே ஆசிரியரைப் பார்க்கச் செல்கின்றேன். அவர் கானடா போவதாகச் சொல்கின்றார். நான் இல்லாதபோது அவர் அமெரிக்கவிலா என்ற பெரிய ஆதங்கம். கானடாவில் முடித்துக் கொண்டு அவர் அமெரிக்கா வருவதற்கும் நான் மீண்டும் சிகாகோ செல்வதற்கும் சரியாக இருக்கும் என்றதும் பெரிய நிம்மதி! அவர் கானடா நிகழ்ச்சிகள் முடித்துக் கொண்டு பாஸ்டன் வரும்போது வரவேற்க எனது நெருங்கிய நண்பர் குடந்தையைச் சேர்ந்த மருத்துவர் திருஞானசம்பந்தத்தை அழைத்து ஏற்பாடுகள் செய்துவிட்டேன். நான் சிகாகோ வந்த அன்றே ஏற்பாடுகள் செய்து அடுத்த  நாள் சிகாகோ தமிழ்ச் சங்கத் தலைவர், தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைத் தலைவர்  கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தேன். ஆசிரியர் அன்று பேசியது அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு ஒரு நல்ல அடிக்கல்! அதே லாகிராஞ்சு ஒய்.எம்.சி.ஏ.வில் மாண்புமிகு சந்திரஜித் யாதவ்  அவர்களுடன் இணைந்து பெரியார் பன்னாட்டமைப்பு  அமைக்க அடித்தளமாகி விட்டது!

அமெரிக்கா, மியான்மர், சிங்கப்பூர், குவைத் என்று பல இடங்கட்கு அவருடன் சேர்ந்து செல்லும் நல்வாய்ப்பைப் பெற்றேன். அனைத்தும் வெறும் பயணங்கள் அல்ல! பாடங்கள்! கற்றுக் கொள்ளும் அனுபவங்கள்! அவை அனைத்தையும் எழுத வேண்டும் என்ற விருப்பம் நிறைவேறுமா? முயற்சிக்கின்றேன்.

அவரிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம், ஏராளம்! அவற்றில் முக்கியமான-வற்றைப் பார்ப்போம்.

எளிமை!

ஆம்! எளிமையின் சிகரம் அவர்! எங்குப் படுத்தாலும் தூங்கி விடுவார். அது சரியில்லை, இது சரியில்லை என்ற பேச்சிற்கே இடமில்லை. உடை, உணவு எளிமை. ஆனால் தூய்மை. உணவை வீணாக்க மாட்டார். பிடித்ததைக் கேட்டு வைக்கச் சொல்லி விரும்பி உண்பார். விருந்தளிப்போர் மனமும் கோணாமல், அவர் உடல் நலனுங் கருதும் ஒரு நேர்மை! அவருக்கு வேண்டியது படிக்க நூல்கள், எழுதுவதற்கு ஒரு அமைதி. பேப்பர், பேனா எப்போதும் உடன் இருக்கும். அடுத்தவர்க்குத் தொல்லை தராத ஒரு அருமையான விருந்தாளியாக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராய் இருந்திடுவார்.

உழைப்பு!

ஓயாத உழைப்பு! காலத்தில் செல்ல வேண்டிய கட்டுரைகள். கேள்வி பதில்கள். கணினிகள் இல்லாத காலத்திலேயே கணினி போல நேரத்தை ஒதுக்கி உழைத்தவர். இரவு, நேரமானாலும் காலையில் எழுந்திடுவார். நேரத்தின் அருமையை நன்கு உணர்ந்தவர். வீணடிக்க மாட்டார். அந்த மூளை ஒரு கணினி தான். எந்தெந்த வேலைகள், எங்கு எது கிடைக்கும், யார் யார் வருகின்றார்கள், அவர்களது ஊர், உறவினர் பெயர்கள், நிகழ்வுகள் என்பன மளமளவென்று அருவி போல! எப்போதும் கல்வி நிறுவனங்கள், அவற்றிற்கு வேண்டியவை என்பது முதல் இடத்திலே இருக்கும். ஒவ்வொரு பயணமும் நிறுவனங்களுக்கு ஒரு பயனைக் கொண்டவையாகத்தான் அமைந்து விடும். வியப்பாக இருக்கும், எப்படி, எதை, எங்கு சேர்த்துவைத்துப் பார்த்துப் பயனடைய முடியும் என்று அவர் செய்வதைச் சிந்தித்தால் மகிழ்ச்சியும் நிறைவும் அடையும்படியாக இருக்கும்.

பொறுமை!

அவர் சிந்தனை, நடை மிகவும் விரைவாக இருக்கும். ஆனால் செயல் பொறுமை உடையதாக இருக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பேச்சிற்கே இடமிருக்காது. எதையும் ஏன், எப்படி, எவ்வாறு என்று விரைவாகக் கேட்டு ஓர் தீர்மானத்திற்கு வந்த செயலாகத்தான் இருக்கும். குறிப்பிட்டது நடக்கவில்லை யென்றாலும் பொறுமையுடன் சிந்தித்து அதற்கு வழிகாணும் பக்குவம் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

கட்டுப்பாடு!

அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லிய கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவரிடந்தான் நேரில் காணமுடியும். தந்தை பெரியாரின் தொண்டு என்ற கடமை 24 மணி நேரமும். அனைவரிடத்திலும் காட்டும் மரியாதை, தொண்டர்கள், அவர்கள் குடும்பத்தினரிடம் காட்டும் அன்பும் மெய்சிலிர்க்க வைக்கும். ஒரு முறை தஞ்சையிலிருந்து தொலைவில் உள்ள ஊரில் ஒரு வாழ்க்கைத் துணைநல விழாவிற்குச் செல்ல வேண்டும். அன்று கடுமையான பயணம். கட்டாயம் போகவேண்டுமா அய்யா என்று நான் கேட்டே விட்டேன். அங்கு சென்றால் மிகவும் எளிமையான குடும்பம், எளிமையான ஏற்பாடுகள். அன்பு ஒன்றுதான் மிகவும் நிறைந்திருந்தது! திரும்பும்போது மன்னிப்புக் கேட்டேன். அந்த அன்பிற்கு ஈடு இல்லை யென்றேன். அவர் சிரித்துக் கொண்டே எனது தலைமையில் நடத்தவேண்டும் என்று ஓராண்டு காத்திருந்தார்கள். கடைசி நேரத்திலே வர முடியாதென்று சொல்லலாமா? அந்த அன்பிற்கு நாம் என்ன கொடுக்க முடியும் என்றார்?

நகைச்சுவை!

அவருடன் பயணம் செய்வது மிகவும் நகைச்சுவையானதாகவும் இருக்கும். தந்தை பெரியாரின் பயண நகைச்சுவைகள். அவரது நகைச்சுவை அனுபவங்கள், ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற எமர்ஜென்சி சிறை அனுபவங்களில் நகைச்சுவைகள், கல்லூரி வாழ்க்கை எளிமையும் நகைச்சுவையுமாய் வாழ்ந்த நிகழ்வுகள் என்று நேரம் போவதே தெரியாது! நடுவில் சரியாகத் தூக்கமும் போட்டுக் கொள்வார்!

ஆசிரியர், பெரியாரின் சொத்துக்களை அனுபவிக்கின்றார் என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வது, அவருடன் ஒரு வாரம் உடன் சென்று பாருங்கள் தெரியும்! ஒரு வாரம்கூட வருகிறேன் என்று சென்ற என்னால் இரண்டு நாட்கள்தான் தாங்க முடிந்தது. இரவு இரண்டு மணிக்குத்தான் படுத்தோம். காலையில்  ஏழரை மணிக்கு எழுப்பினார்கள். தூக்கக் கலக்கத்தில் அய்யா எங்கே என்றேன். அய்ந்தரை மணிக்கே குளித்துக் கிளம்பி விட்டார்கள் என்றார்கள்!

அய்யா அவர்களின் தலைமையில் பெரியார் தொண்டர்களாக வாழ்கின்றோம் என்பதே நமக்குப் பெருமை!

வாழ்க ஆசிரியர்! வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *