செய்தியும் பார்வையும்

ஜூலை 16-31

விடாக்கண்டர்கள்

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனித் தெலுங்கானா அமைக்க வேண்டும் என்ற போராட்டத்தை சில ஆண்டுகளாக அப்பகுதி இயக்கங்கள் நடத்திவருகின்றன. இக்கோரிக் கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி என்ற தனிக்கட்சியே உருவானது.முதலில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தும் பின்னர் கோரிக்கைக்குப் பலன் கிடைக்காமல் விலகியும் இப்போதும் தொடர்ந்து போராடிக்கொண் டுள்ளது.

இதன் தாக்கம் எல்லாக் கட்சிகளிலும் எதிரொலிக்க அகண்ட பாரதக் கனவை நீண்ட நாட்களாகக் கண்டுவரும் பாரதீய ஜனதா கூட தெலுங்கானாவை ஆதரிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டது. இப்போது காங்கிரசிலும் ஆதரவுக் குரல்கள் கேட்டு அது தெலுங்கானா பகுதி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் பதவிவிலகல் வரை சென்றுவிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை கண்டித்தும் கூட அவர்கள் தனி மாநிலக் கோரிக்கையைக் கைவிடவில்லை. ஜூலை முதல் வாரத்தில் மத்திய காங்கிரஸ் அமைச்சர் ஜெய்பால் (ரெட்டி) தெலுங்கானா மக்கள் உணர்வுகளை காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்தியுள்ளார். இந்நிலையில் மீண்டும் இப்போராட்டம் சூடுபிடித்துவிட்டது. உஸ்மானியா பல்கலை மாணவர்கள் வீதிக்கு வந்துவிட்டார்கள். எல்லாக்கட்சிகளையும் ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் தெலங்கானா போராட்டக் குழு ஈடுபட்டுள்ளது.உலகமயச் சூழலால் நுகர்வோர் கலாச்சாரம் அதிகரித்து விட்ட நிலையில் வீதிக்குவந்து போராடும் மனநிலை அண்மைக் காலமாக இந்தியாவில் குறைந்துவருவது கண்கூடாகத் தெரியும் காலகட்டத்தில் தெலுங்கானா மக்களின் போராட்டக் குணத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.


மறைந்தார்

ஈழத்தைச் சேர்ந்த தமிழ் அறிஞர் கா.சிவத்தம்பி தனது 80 ஆம் அகவையில் ஜூலை 6 அன்று மறைந் தார். பழந்தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வையும்,மார்க்சிய நோக்கில் முற்போக்குப் பார்வையும் கொண்ட சிவத்தம்பி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்காக கோவை வந்ததும்,8 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை அன்றைய ஜெயலலிதா அரசு தஞ்சையில் நடத்திய போது அவரைத் திருப்பி அனுப்பியதையும் மறக்க முடியாது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக திராவிட இயக்கம் ஆற்றிய பணியையும்,தந்தை பெரியாரின் சமூகப் பங்களிப்பையும் தவறாமல் பேசிவந்தவர் சிவத்தம்பி என்பது திராவிட இயக்கத்தின் மீது காழ்ப்புக் கொண்ட புதிய தமிழ்த் தேசியர் களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.


வக்கிரங்கள்

இணையம் உலகத்தையே விரல்  நுனியில் கொண்டுவந்துவிட்டது. அதன் பயன் மலையளவு இருக்க அதனைப் பயன்படுத்தி தனது வக்கிரங்களுக்கு வடிகால் தேடுவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இன்றைய தலைமுறை தமிழ் இளைஞர்களும், இளம்பெண்களும் இணையத்தால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் புதிய சிந்தனைகளால் இணைய இணையமே வழிவகுத்துள்ளது. அப்படி ஆர்வத்துடன் இருப்பவர்களிடம் தவறாக அணுகும் மனிதர்களில் ஒருவராக, எழுத்தாளர் சாரு நிவேதிதா இருக்கிறார் என்பதுதான் இந்த மாத இணையப் பரபரப்பு.

தனது எழுத்தை வாசித்து நேசித்த ஒரு இளம்பெண்ணிடம் காமக் குறும்பைச் செய்துள்ளார் அந்த மனிதர். மானம்,வெட்கம் கருதி முதலில் வெளியே சொல்லாமல் இருந்த அந்தப் பெண் பின் இணையத்தில் நீண்ட நாட்களாக உள்ள சிலரின் தைரியமூட்டலில் அந்தக் குறும்புச் செயல்களை அசைக்கமுடியாத ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். அவற்றை நம்முடைய ஏட்டில் கொண்டுவரமுடியாது. அவ்வளவு ஆபாசம், வக்கிரம். இந்தப் பிரச்சினை இணையத்தில் விமர்சிக்கப்படும் அதே நேரத்தில் இவரது கட்டுரைகளை, கதைகளை வெளியிட்ட பத்திரிகைகளில் ஒரு வரி கூட விமர்சிக்கப்படவில்லை. நக்கீரன் இதழ் மட்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து  வெளியிட்டுள்ளது.அவரது குற்றச் சாட்டுகள் குறித்து சாரு நிவேதிதாவிடமும் பதில் கேட்டுள்ளனர். அவர் அலட்டிக்கொள்ள வேயில்லை.எனது பாஸ்வேர்டைப் பயன்படுத்தி நண்பர் ஒருவர் இவ்வாறு செய்துவிட்டார் என்று சுருக்கமாகச் சொல்லித் தப்பித்துக் கொண்டுவிட்டார். அப்படி எழுதியது நானே இல்லை என்று கூறி விட்டார். இப்படிச் சொன்ன இவரின் பொறுப்பற்ற செயலை சேர்வார் தோஷம் என்பார்களே அதுபோலத்தான் இது என்றார் ஒரு பத்திரிகை நண்பர். அது என்ன சேர்வார் தோஷம் என்றேன். தெரியாதா உங்களுக்கு, சில மாதங்களாக துக்ளக் இதழில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சுயநலமில்லாதவர் என்று எழுதினாரே சாரு அதைப் படிக்கவில்லையா? தான் போட்ட கையெழுத் தையே தன்னுடையது இல்லை என்று ஜெயலலிதா சொன்னாரே,அது போலத்தான் இளம்பெண்ணிடம் இணையத்தில் குறும்பு செய்துவிட்டு நான் இல்லை அது என் நண்பர் என்கிறார் சாரு என்றார்.இப்படிப்பட்ட அறிவுஜீவிகளிடம்தான் இணையத்தைப் பயன்படுத்தும் இளம்தலைமுறை எச்சரிக் கையாக இருக்க வேண்டும்.


இன்னொரு புதிய நாடு உதயம்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் இருந்து பிரிந்து தெற்கு சூடான் என்னும் தனிநாடு ஜூலை 9 அன்று உதயமாகி யுள்ளது. இந்தப் புதிய நாட்டின் தலைநகரான ஜூபாவில் அந்நாட்டின் மக்கள் விடுதலை நாளைக் கொண்டாடினர். 48 ஆண்டுகாலப் போராட் டத்தில் 20 இலட்சம்  உயிர்களை இழந்து பெற்ற வெற்றி இது. அய்க்கிய நாடுகள் அவையின் அங்கீகாரத்துடன் உலகின் 193 ஆவது நாடாக தெற்கு சூடான் மலர்ந்துள்ளது. இப்படி ஒரு நாள் நமது தமிழீழ மண்ணிற்கும் வாய்க்கும் என்ற நம்பிக்கையில் தெற்கு சூடான் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்போம்.

  • அன்பன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *