மாயமான மலேசிய விமானம்: (3)

ஜூன் 01-15

கிடைக்காமலே போன
கறுப்புப் பெட்டி!

– ப.ரகுமான்

239 .பேருடன் மாயமான மலேசிய விமானத்தைத் தேடும் பணிக்கு தலைமையேற்றுள்ள ஆஸ்திரேலியா, இந்தப் பணிக்காக அடுத்த 2 ஆண்டுகளில் தனது பட்ஜெட்டில் 84 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்குவதாக கடந்த மே 13ஆம் தேதி அறிவித்தது. அதாவது, குறைந்தது இன்னும் 2 ஆண்டுகளுக்காவது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி தொடரும் என்பதுதான் இதில் உள்ள ஊகம். அமெரிக்காவும்கூட மலேசிய விமானத் தேடலுக்காக கணிசமான தொகையைச் செலவிட்டுள்ளது.

பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்கியுள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தத் தேடுதல் வேட்டையில் பங்களிக்கின்றன. ஒவ்வொரு முறையும் தேடுதல் நடைபெறும்போது, பத்துக்கும் மேற்பட்ட ராணுவ விமானங்கள், சில பயணிகள் விமானங்கள், 14 கப்பல்கள் என பெரும் பட்டாளமே களமிறக்கப்படுகிறது. இருப்பினும், விமானம் மாயமான மார்ச் 8ஆம் தேதி தொடங்கி, இரண்டரை மாதங்களுக்கு மேல் தேடியும் விமானம் தொடர்பாக ஒரு துரும்பைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. தேடல் தொடர்பாக அவ்வப்போது அளிக்கப்பட்ட தகவல்கள், கிடைக்காது அல்லது இல்லை என்று தெரிந்தே தேடுகிறார்களோ என்ற அய்யத்தைக் கிளறவும் தவறவில்லை. இதற்கு நடுவே விமானம் கடலில் விழுந்திருக்கவே வாய்ப்பில்லை என மீண்டும் ஒரு விவாதம் கிளப்பப்படுகிறது.

ஆஸ்திரேலிய அரசோ மேலும் 2 ஆண்டுகளுக்கு இதற்காக நிதி ஒதுக்குகிறது  என்பதையும் சேர்த்துப் பார்க்கும்போது, விமானம் மாயமானதன் பின்னணியில் வல்லரசுகளின் விளையாட்டு ஏதும் உள்ளதோ என்ற அய்யம் வலுப்பெறுகிறது.

கறுப்பு அத்தியாயம்

எத்தகைய விமான விபத்து நடந்தாலும், மீட்புக் குழுவினர் உடனடியாகத் தேடுவது பிளாக் பாக்ஸ் என்ற கருவியைத்தான். கருப்புப் பெட்டி என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், உண்மையில் இந்தச் சாதனத்தின் நிறம் இளஞ்சிவப்பு. விமானிகள் அறையில் நடைபெறும் உரையாடல், விமானிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாட்டு மய்யங்களுக்கும் இடையே பரிமாறிக் கொள்ளப்படும் தரவுகள், விமானத்திற்குள்ளேயே கருவிகளுக்குத் தரப்படும் கட்டளைகள் இந்தக் கருப்புப் பெட்டியில் பதிவாகி விடும். எவ்வளவு பயங்கரமான தீ விபத்திலும் எரிந்து போகாத வகையிலும், எவ்வளவு உயரத்திலிருந்து எத்தகைய வேகத்தில் மோதினாலும் சிதைந்து போகாத வகையிலும் வடிவமைக்கப்படும் கறுப்புப் பெட்டி, நீரில் விழுந்துவிட்டால் உயர்திறன் கொண்ட சிக்னல்களை அனுப்பிக் கொண்டேயிருக்கும். அந்த சிக்னல்கள் மூலம், கறுப்புப் பெட்டி கடலில் விழுந்துள்ள இடத்தைக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், 30 நாட்களுக்குள் கண்டுபிடிக்காவிட்டால் பேட்டரி தீர்ந்துபோய், அதன் பிறகு கறுப்புப் பெட்டியை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாமலே போய்விடும். அதில் பதிவாகியுள்ள தகவல்களும் பயனற்ற முறையில் அழிந்துபோய்விடும்.

மார்ச் 8ஆம் தேதி மாயமான மலேசிய விமானம், ஆஸ்திரேலியாவுக்கு அருகே, தெற்கு இந்தியப் பெருங்கடலில் தொலைதூரப் பகுதியில் விழுந்திருக்கலாம் எனவும், அங்கு விமானத்தின் சிதைகூலங்கள் மிதப்பதாகவும் செயற்கைக் கோள் தகவல்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்றது. கடலடியில் விழுந்துகிடக்கும் கறுப்புப் பெட்டி அனுப்பும் சிக்னல்களைக் கண்டறிவதற்காக அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான டோவ்டு பிங்கர் லொக்கேட்டர் (Towed pinger locator) என்ற மீன்போன்ற கருவி கடலில் இறக்கப்பட்டு தேடல் நடைபெற்றது. ஓஷன் ஷீல்டு என்ற ஆஸ்திரேலிய கடற்படை கப்பலில் கட்டி இழுத்தபடி செல்ல, 20 ஆயிரம் அடி (6000 மீட்டர்) ஆழம் வரை, ஒலியலைத் துடிப்புகளை வைத்து கறுப்புப் பெட்டி இருக்குமிடத்தைக் கண்டறிய முயன்றது இந்தக் கருவி.

தொடக்கத்தில் கறுப்புப் பெட்டியிலிருந்து வந்த 4 சிக்னல்களை இந்தக் கருவி பெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால் ஏப்ரல் 9ஆம் தேதிக்குப் பிறகு எந்த சிக்னலும் கிடைக்காததால், புளூஃபின்-21 என்ற பெயர்கொண்ட, தானியங்கி நீர்மூழ்கி எந்திரத்தைப் பயன்படுத்தித் தேடல் தொடர்ந்தது. முன்னர் கிடைத்த சிக்னல்களின் அடிப்படையில், கடலில் 75 ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பில் இந்தத் தேடுதலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

புளூஃபின் என்ற இந்தத் தானியங்கி நீர்மூழ்கி, கடலடியில் ஒலிஅலைகளை அனுப்பி, அது எதிரடிக்கப்படுவதை வைத்து (side-scan sonar), கடலடித் தரையில் விழுந்து கிடக்கும் பொருள்களை அடையாளம் காணும் திறன் கொண்டது. புவியின் நிலத்தரை வரைபடங்கள் போல, கடலடித்தரை வரைபடங்களை உருவாக்குவதற்குப் பயன்படும் கருவி இது. புளூஃபின் கடலடிக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். அதன்பிறகு அங்கு 16 மணி நேரம் ஆய்வு செய்யும். மீண்டும் மேற்பரப்பிற்கு வர 2 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். அது சேகரித்த தரவுகளைப் பதிவிறக்க, பகுப்பாய்வு செய்ய 4 மணி நேரம் பிடிக்கும்.

இதுபோன்ற கருவியைப் பயன்படுத்தித்தான் அட்லாண்டிக் பெருங்கடலில் 3800 மீட்டர் ஆழத்தில் கிடந்த டைட்டானிக் கப்பல் 1985ஆம் ஆண்டிலும், இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கிய ஆஸ்திரேலியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் 2008ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டன.

4500 மீட்டர் ஆழம் வரை செயல்படும் இந்தக் கருவி, பத்துக்கும் மேற்பட்ட முறை கடலில் இறக்கப்பட்டு, பல லட்சம் சதுரகிலோ மீட்டர் ஆழப்பரப்பு இந்த வகையில் அலசி ஆராயப்பட்டது. புளூஃபின்-21 சல்லடை போட்டுச் சலித்தது போலத் தேடியும் விமானத்தின் சிதைகூலம் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இதையடுத்து மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளும் மே முதல்வாரத்தில், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆலோசனை நடத்தின. அதில், இன்னும் திறன்மிக்க, மல்ட்டிபீம் எக்கோசவுண்டர் (multibeam echosounder) மற்றும்  பேக்ஸ்கேட்டர் (backscatter) எனப்படும் கடலடித் தேடல் கருவிகளைப் பயன்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இவை 6 ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஆய்வு செய்யும் திறன்கொண்டவை. மல்ட்டிபீம் எக்கோசவுண்டர், பேக்ஸ்கேட்டர் இரண்டுமே கப்பலின் அடிப்பரப்பிலிருந்து (தூர்ப் பகுதியிலிருந்து) நேரடியாக ஒலியலைகளை அனுப்பும். இதில் எக்கோசவுண்டர், கடலடித் தரையில் மென்மையான பகுதி, கடினமான பகுதி ஆகியவற்றைப் பிரித்தறிய உதவும். பேக்ஸ்கேட்டர் எதிரடிக்கப்படும் ஒலியலைகளை வைத்து முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கும் திறன்கொண்டது.

கடலுக்கென்ன மூடி?

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை இந்தத் தேடலில் தீவிர ஆர்வம் காட்டுவதற்கு, அந்நாட்டிற்கு நேரடியாகவே ஒரு நன்மை உண்டு. பன்னாட்டு உதவியுடன், ஆஸ்திரேலியாவைச் சுற்றி அமைந்துள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான கடலடி வரைபடத்தைத் தயாரித்துவிடும்.

இது ஒருபுறம் இருந்தாலும், இந்தத் தேடலின்போது பயன்படுத்தப்பட்ட கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள், கடலில் தேடுவதில் உள்ள இடர்ப்பாடுகள் மற்றும் வரம்புகளை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன. பேரண்ட வெளியில், பல லட்சம் கோடி மைல் தொலைவிற்கு நம்மால் பார்க்க முடிகிறது. ஹப்பிள் வானியல் தொலைநோக்கி பல கோடி ஒளியாண்டு தொலைவிற்குப் பார்க்கும் திறன் பெற்றது. (நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் ஒளி, ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவு ஒரு ஒளியாண்டு எனப்படுகிறது).

செவ்வாயின் பரப்பைப் பகுப்பாய்வு செய்து வரைபடம் தயாரிக்கிறோம். ஆனால், பூமியின் கடலடித் தரை குறித்து நமக்குத் தெரிந்தது குறைவே. 90 விழுக்காடு கடற்படுகை இன்னும் ஆராயப்படாமலே உள்ளது. இந்த அறியாமைக்குக் காரணம் என்ன? நவீன தொடர்பு தொழில்நுட்பங்களுக்கு அடிப்படையான பார்க்கும் ஒளி, ரேடியோ எனப்படும் வானலை, எக்ஸ்-ரே, மற்றும் வைஃபை எனப்படும் வயர்லெஸ் தகவல்தொடர்பு என அனைத்தும் எலெக்ட்ரோமேக்னட்டிக் ரேடியஷன் எனப்படும் மின்காந்த அலைகளாகும். இவை எதுவும் கடல்நீரை ஊடுருவிச் செல்ல முடியாது. மின்காந்த ஆற்றல் நீர்மூலக்கூறுகளால் உறிஞ்சப்பட்டு விடும். ஒளி ஊடுருவிச் செல்ல முடியாததால், கடலில் குறிப்பிட்ட ஆழத்திற்குக் கீழ் சென்றால் முழுமையாக இருள்தான்.

கடலின் ஆழத்தில் ஊடுருவிச் செல்லக்கூடியது ஒலி (Sound) மட்டுமே. எனவேதான் சோனார் (Sonar) பயன்படுத்தப்படுகிறது. ஒலியலைகளும்கூட அதிர்வு மூலம் ஊடுருவிச் (பரவி) செல்லக் கூடியவை என்பதால் அதற்கும்கூட வரம்பு உண்டு. டோவ்டு பிங்கர் லொக்கேட்டர், புளூஃபின் போன்ற சோனார் கருவிகளும் 4 ஆயிரத்து 500 மீட்டர் ஆழம் வரை மட்டுமே செயல்படும்.

இதுவல்லாமல், மனிதச் செயல்பாடுகளில் கடலில் சேர்ந்து கிடக்கும் பல லட்சம் டன் சிதைகூலங்களும் தேடுதலுக்குப் பெரும் இடையூறாக அமைகின்றன. அதனால்தான், 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் மீத்திரள் (பேரண்டத்தின் நோக்கியறியத்தக்க பகுதி) உருவானதன் சுவடுகளை அறிவியல் கண்டடையும்போது, கடலுக்குள் விழுந்ததாகச் சொல்லப்படும் விமானத்தின் சிதைந்த பாகங்களைத் தேடுவதில் தொழில்நுட்பம் திண்டாடி நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *