கோவில் பிரச்சினைகள்… முடங்கும் நிர்வாகம்!

ஜூன் 01-15

 

பக்தியின் பெயரால் ஆங்காங்கே நடந்து வரும் மோசடிகளை அப்போதைக்கப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் ஏமாறுவது ஏமாற்றப்படுவது என பலவகை மோசடிகள் இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் சில நாட்களாக பக்தியின் பெயரால் நடந்து வரும் சம்பவங்களைப் பார்த்தால் நாம் எந்தக் காலக்கட்டத்தில் இருக்கிறோம் எங்கே இருக்கிறோம் என்பதை விட, நம் தமிழ்ச் சமுதாயத்தை எங்கே கொண்டுபோய் விடப்போகிறது என்பதை நினைக்கையில் மலைப்பாக இருக்கிறது.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பார்ப்பனர்கள் தங்களுக்குச் சொல்லிக் கொண்ட வாசகத்தை எதற்கு எடுத்துக் கொள்கிறோம் என்பதே புரியாமல் நம்மவர்கள் எடுத்து வைத்துக் கொண்டு ஊர்கள்தோறும் வீதிகள் தோறும் தெருக்கள் தோறும் கோவில்களைக் கட்டி வைத்துக் கொண்டு பார்ப்பனக் குடும்பங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு கோவில் கட்டினாலும் கோவில் கட்டுவதால் ஏற்படும் பயன் என்பது அதைத்தவிர ஒரு துரும்பைக் கிள்ளி எடுத்துப் போடக்கூடப் பயன்படாது. கோவில் கட்டுவதற்குக் காரணம் கேட்டால் ஒற்றுமையாக இருப்பதற்கு என்று சொல்வார்கள். அப்படிக் கட்டுவது ஒற்றுமையாக இருப்பதற்கு என்று சொன்னால் அப்புறம் ஒருவரிடமிருந்து பிரிந்து போய் இன்னொரு இடத்தில் கோவில் கட்டுவதற்கு என்ன காரணம்? கட்டிய கோவிலால் பிரிவினை ஏற்பட்டுவிட்டது என்பதுதானே உண்மை.

மாங்குடி. இது புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள சிறு கிராமம். இந்த ஊரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். அனைத்து ஜாதியினரும் சேர்ந்து திருவிழா நடத்தினாலும் அதிக எண்ணிக்கையில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் கட்டுப்பாட்டில் மட்டும் இருந்ததால் குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்களுக்கு மண்டகப்படி ஒதுக்கவில்லை என்ற குறைபாடு நீண்ட காலமாக இருந்து வந்தது.

அதனால் தாழ்த்தப்பட்டவர்களும் கோனார் வகுப்பைச் சேர்ந்தவர்களும் அது குறித்து அதிகாரிகளிடம் 1981-ஆம் ஆண்டு முறையிட்டதில் 12 ஆண்டுகளுக்குப் பின் 1993-ஆம் ஆண்டு கோனார் வகுப்பினருக்கு மட்டும் மண்டகப்படி கிடைத்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதுவும் இப்போதுவரை புகைச்சலில் இருந்து, கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்தது.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அந்தக் கோவிலுக்குக் காப்புக்கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. எங்களுக்குப் பதில் சொல்லிவிட்டுக் காப்புக்கட்டுங்கள் என்று ஊர் முக்கியப் பிரமுகர்களிடமும், மண்டகப்படி வேண்டும் என்று வருவாய்த்துறை அதிகாரிகளிடமும் முறையிட்டார்கள். அதன் விளைவு கோட்டாட்சியர் வட்டாட்சியர் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வழக்கம்போல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காததால் பிரச்சினை என்று ஊரே அல்லோல கல்லோலப்பட்டது.

வட்டாட்சியர் தவச்செல்வம் மாங்குடிக்கு காவல்துறை உதவியோடு வந்து 144-தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதாக அறிவித்துவிட்டு காவல்துறையை நிறுத்தி விட்டுச் சென்றுவிட்டார். திருவிழா தடைப்பட்டுவிட்டது. இப்போது ஊரும் அமைதியாக இருக்கிறது. அம்பாளும் அமைதியாக இருக்கிறாள். அதிகாரிகள் மட்டும் திருவிழா நடத்தக்கூடாது என்று அறிவித்ததோடு எதுவும் யாரும் நடத்திவிடக் கூடாது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதே போல் புதுக்கோட்டையின் கடைக்கோடிப் பகுதியான பேயாடிக்கோட்டை என்ற ஊரில் உள்ள அம்மன் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கோவில் திருவிழாவிற்காக புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய குளத்தூர் அச்சுதமங்கலம், வெட்டிவயல், ஆய்க்குடி, தென்னமாரி மங்கலம், பறையத்தூர், எட்டிச்சேரி, புத்தாம்பூர், சுந்தனூர், செங்கானம், வசந்தனூர், பேயாடிக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் திரளுவார்கள். அங்கும் இதே போல் பிரச்சினைதான் தலைதூக்கியிருக்கிறது. இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு மண்டகப்படி தராவிட்டால் வேற்று மதத்திற்குச் சென்று விடுவதாக வந்த மிரட்டலையடுத்து அதிகாரிகள் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இங்கு சற்று வேடிக்கையாக, தாழ்த்தப் பட்டவர்களாக இருந்தாலும் உயர் ஜாதிக்காரர்களாக இருந்தாலும் அனைவரும் இந்துக்கள், எக்காரணத்தைக் கொண்டும் திருவிழாவை நிறுத்திவிடக் கூடாது; ஏதாவது காரணத்தைக் காட்டி, திருவிழா தடைப்பட்டு விட்டால் இந்துக்களாக இருப்பவர்கள் மதம் மாறிவிட்டால் இந்துக்களின் எண்ணிக்கை (பலம்)குறைந்து விடும் என்று கருதிய இந்து முன்னணி அமைப்பின் பொறுப்பாளர்கள் மேல்ஜாதி எனப்படுபவர்களிடம் வலியச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதனால் ஊருக்குள் 144-தடை உத்தரவு போடப்பட்டது.

இங்கும் திருவிழா நடத்துவதா வேண்டாமா, போவதா போகாமல் இருந்து கொள்வதா என பக்தர்கள் பட்டிமன்றம் நடத்துவதைவிட ஒவ்வொரு நிமிடமும் பதைபதைப்புடன் இருந்தார்கள். கிராமமே திகுதிகு என்று எந்த நேரத்திலும் பற்றிக் கொள்ளும் சூழ்நிலையில் இருந்தது. திடீரென்று மே மாதம் 14-ஆம் தேதி மதியம் அக்கோவிலின் பக்தர்கள் அய்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பால்குடம் காவடி என்று எடுத்துக் கொண்டு தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்தனர்.

அதைப் பார்த்த அதிகாரிகளும் காவல் துறையினரும் தடை உத்தரவைக் காரணம் காட்டித் தடுத்து நிறுத்தினார்கள். அதனால் பக்தர்கள் காவடியை அங்கேயே இறக்கிவிட்டு பால்குடங்களைக் கொண்டு போய் அருகில் இருந்த குளத்தில் கொட்டிவிட்டுத் திரும்பினார்கள். கோவில் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை விரதத்தை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள் பக்தர்கள். அப்படி என்றால் என்ன பொருள். அவர்கள் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஜாதிக்குச் சாதகமான தீர்ப்பு வரும்வரை வெறியாக இருப்போம் என்றுதானே பொருள்.

இந்த இடத்தில் நாம் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். நமது ஆட்சி முறையில் கிராம நிர்வாக அலுவலர் முதல் மாவட்ட ஆட்சியர்வரை சாதாரண காவலர் முதல் மாவட்டக் கண்காணிப்பாளர் வரை ஊராட்சி மன்ற உறுப்பினர் முதல் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர்கள்வரை எதற்காக நியமிக்கிறோம்? எதற்காகத் தேர்ந்தெடுக்கிறோம்? என்பதைப் பற்றித் தெளிவாகச் சிந்திக்க வேண்டும். அவர்களது கடமை என்ன? அவர்களுக்கு இந்தச் சமூகமும் ஆட்சிமுறையும் இட்ட கட்டளை என்ன என்பதைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டும்.

பொதுமக்களும் பக்தர்களும் ஒற்றுமையாக இருப்பதற்கும் சாதாரணமாக கோவிலுக்குள் போவதற்கும் அனைத்துத்துறையும் வந்து காவல் காத்துக் கொண்டிருந்தால் அவரவர் செய்ய வேண்டிய அன்றாடப் பணிகள் அனைத்தும் தேங்கி விடாதா? அவ்வாறு தேங்கிவிட்டால் அதைச் செய்து முடிப்பது எப்போது? மாங்குடியில் சிக்கல் என்று சொல்லிக் கொண்டு வட்டாட்சியர்களும் கோட்டாட்சியர்களும் மாவட்ட ஆட்சியரும் காவல் துறையின் அத்தனை பிரிவு அதிகாரிகளும் வந்து நாள் கணக்கில் ஒரு கிராமத்துக்குள் தங்கள் வேலை நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருந்தால் மற்ற ஊர்களில் இருந்து பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது யார்?

மாங்குடியையும் பேயாடிக்கோட்டையையும் போல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமாக இந்த அதிகாரிகள் சென்று கொண்டிருந்தால் ஒட்டு மொத்தப் பணிகளும் பாதித்து விடாதா? சர்வ  சாதாரணமாக இப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தேர்தல் விதிமுறை கடந்த மார்ச் 4-ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதிவரை இருந்ததால் எந்த ஒரு பணியையும் அதிகாரிகள் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டோடும், எப்போது அரசுப் பணிகள் தொடங்கும் என்ற எதிர்பார்ப்போடும் நாட்டு மக்கள் காத்துக் கிடக்கையில் பக்தியின் பேரில் இவ்வாறு அதிகாரிகளை ஒரே இடத்தில் குவிந்து கிடக்கச் செய்வதில் நமக்கு ஒன்றும் பெருமை வந்துவிடப் போவதில்லை.

அதே நேரத்தில் இன்னொன்றையும் சிந்திக்க வேண்டும். அதாவது, எதனை பக்திக்கு உரியது என்றும் போற்றுதலுக்கு உரியது என்றும் புனிதமானதாகக் கருதுகிறோமோ அந்தக் கோவிலைப் பூட்டி விட்டதால் இப்போது யாருக்கும் ஒன்றும் நட்டமில்லையே. இந்த மாதிரி நேரத்தில்தான் பார்ப்பான் சொன்ன மாதிரி கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றால் கோவில் பூட்டப்பட்டு விட்டதால் அவன் வேண்டுமானால் ஊரைவிட்டுப் போய்விடலாம். ஆனால் பல வகையிலும் சரியாக இருக்குமே தவிர கிராமத்தில் ஊருக்குள் இருக்கும் யாருக்கும் எந்த ஒரு நட்டமும் வந்துவிடப்போவதில்லை. அது மாங்குடி, பேயாடிக்கோட்டை மட்டுமல்ல; எல்லா ஊர்க் கோவில்களுக்கும் பொருந்தும். காவடியை நடுவழியிலேயே இறக்கிவைத்து விட்டதாலோ சாமிக்குக் கொண்டு சென்ற பாலைக் குடங்குடமாக குளத்தில் கொட்டிவிட்டு வந்து விட்டதாலோ சாமிக்குத்தம் ஏதும் நடந்துவிடப் போவதில்லை. சாமி இருந்தால்தானே தன் உரிமையைக் கேட்டுப் பெறுவதற்கு? அதுதான் இல்லையே.

திருவிழாக் காலங்களில் செய்யப்படும் எந்தச் செலவானாலும் அது உருப்படியானதாக இருக்காது. அதைக் கணக்கிட்டுப் பார்த்தாலே திருவிழா வேண்டாம் என்று எளிதில் சொல்லிவிடலாம். திருவிழா என்ற பெயரைச் சொல்லிக் கொண்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், குடி, கூத்து, சுருட்டல் என்று இருப்பவர்களுக்கு வேண்டுமானால் வருவாயை ஈட்டித் தந்திருக்கலாம். அதற்கு பக்தி என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு அனைத்து நிர்வாகத்தையும் முடக்கிப் போடுவது எந்த வகையில் சரி என்று சிந்திக்க வேண்டும்.

– ம.மு.கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *