ஆசிரியர் பதில்கள்

பிப்ரவரி 01-15

கேள்வி : யூகத்தின் அடிப்படையிலேயே, ஊழல் செய்துவிட்டதாகக் கூப்பாடு போடும் பார்ப்பனீயம், கடவுள், மதம், யாகம், பூஜை, பரிகாரம் என்று கோடானு கோடி ரூபாய்களைக் காலங்காலமாகப் பாழடித்துக் கொண்டிருப்பதை, பெரியார் தவிர வேறு தலைவர்கள் யாராவது (இந்திய அளவில்) கண்டித்ததுண்டா?
– நெய்வேலி க. தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

பதில் : பக்தி வந்தால் புத்தி போய்விடும் என்ற பெரியார் கூற்று எவ்வளவு சரி என்பதற்கு அவர்கள் கணிப்பே சரியான சான்றாகும்!

கேள்வி : திராவிடர் கழகத்தினர் பிள்ளையாரை உடைத்தால் நாத்திகர்கள் என்று கூறுகிறார்கள்.  ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையாரை உடைக்கும் இந்துமதவாதிகளுக்கு என்ன பெயரிட்டு அழைப்பது-? – மு. இராஜாராம், எர்ரம்பட்டி

பதில் : திராவிடர் கழக நாத்திகர்கள் _ அறிவாளிகள். பக்தியில் உடைப்பவர்கள் _ முட்டாள்கள் என்றே அழைக்க வேண்டும்!

கேள்வி : தமிழ்நாடு குஜராத் மாதிரி ஆக வேண்டும் என்றும், இந்த ஆட்சி நீடிக்கவே கூடாது என்றும் சோ கூறியுள்ளாரே…..
– ர. சக்திவேல், போடிநாயக்கனூர்

பதில் : அவாள் ஆசை; மதக் கலவர பூமியாரை விட, கலைஞர் ஆட்சி நிலைத்திடக் கூடாது என்ற வயிற்றெரிச்சலே உண்மைக் காரணம்.

கேள்வி : திருவரங்கம் மொட்டைக் கோபுரம், ராஜ கோபுரமாக உயர்ந்தால் இலங்கை அழிந்து விடும் என முன்னாள் அதிபர் சந்திரிகாவிடம் ஜோதிட அஞ்ஞானி உன்னிகிருஷ்ணன் கூறினாராமே? – இயற்கை தாசன், கொட்டாகுளம்

பதில் : இன்னும் ஏன் இலங்கை அழியாமல் இருக்கிறது?  சந்திரிகாவே உயிருடன் உள்ளார்.  மற்ற அதிபர்களும்கூட ராஜபக்சே என்ற கொடுங்-கோலனையும் பார்க்கின்றனரே!

கேள்வி : கடவுள் இல்லை என்று பிரசங்கம் செய்வதனால் மட்டுமே இந்நாட்டில் சமூக நீதியும் சமுதாய மாற்றமும் கிடைத்துவிடுமா?
– ரவிக்குமார், மேலமணக்காடு

பதில் : அதைச் செய்தால்தான் அறிவு வளரும், விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஏற்பட்டு சமதர்மம் மலரும்.

கேள்வி : இலங்கையில் நடக்கும் அவலங்களைக் கண்டும் காணாமல் இருந்தவர்கள் இப்போது மட்டும் வெளிப்படுவதேன்?
– ச.தமிழ்ச்செல்வி, கோயமுத்தூர்

பதில் : தேர்தல் வருகிறதே! ஏமாந்த தமிழர்களுக்குச் சல்லடம் கட்டி அவர்கள் வாக்குகளைத் திருட வேண்டாமா?

கேள்வி: கடவுளை வணங்குவதால் நிம்மதி கிடைக்கிறது என்று சிலர் சொல்கிறார்களே…….? – ச. செந்தாமரை, திருச்சி

பதில் : சாராயம் குடிப்பது, பொடிபோடுவது, புகைபிடிப்பது சூதாடுவது -விபச்சாரம்  இவைகளால் கூட நிம்மதி கிடைக்கிறதே சிலருக்கு – ஆதரிக்கலாமா?

கேள்வி : விலைவாசி உயர்வைத் தடுக்கவே முடியாதா? – கே.ஆர். இரவீந்திரன், சென்னை – 1

பதில் : முடியும். சம்பளம் உயர்த்தப்படாமல் இருந்தால் , Online வர்த்தகம் தடைசெய்யப்பட்டால்.

கேள்வி : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க புதிய சட்டம் தேவையா? – கோ.பிரியா, திருவள்ளூர்

பதில் : தேவை – சட்டத்திருத்தம். தேர்தல் விதிகளில் தேவையே தேவையே!

கேள்வி : சபரிமலையில் நடைபெற்றுள்ள கொடூரத்திற்குப் பிறகாவது மக்கள் திருந்துவார்களா? – மகாலட்சுமி, மதுரை

பதில் : பட்டும் எளிதில் புத்திவராத காரணம், பக்தி போதை இருந்தால் தீராது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *