கோடி இட்டழைத்தாலும்…….

ஏப்ரல் 16-30

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் : ஏப்ரல் 29
நினைவு நாள் : ஏப்ரல் 21

புரட்சிக்கவிஞரின் சாகாத காதல் காப்பியமான எதிர்பாராத முத்தம், மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தால் பொன்முடி திரைப்படமாக உருவெடுத்தது.  காதல் சுவை நனிததும்பும் மூலக் கதை; திரைக்கதை உரையாடல்களை டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதினார்கள்; மிக அரிய பாடல்கள்.  இனிமையாக இசையமைத்திருந்தார் ஜி. இராமநாதன்.  இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன்.
நினைவிலும் நின்றது அந்தக் காதல் காப்பியம்.

இதன்பின் புரட்சிக்கவிஞரின் வளையாபதி இலக்கிய மணம் வீசும் படைப்பாக மிளிர்ந்தது, கவிஞர் கண்ணதாசன் மகிழுந்தை அனுப்பி, ஒரு மடலில் புரட்சிக் கவிஞரைச் சென்னைக்கு அழைத்தார்.  ஆயிரம் விளக்குப் பகுதியில் அமைந்த இந்தியா விடுதியில் தங்கினார் புரட்சிக்கவிஞர். விடுதியின் வாயிலிலே நின்றபடி கவிஞர் கண்ணதாசன் வரவேற்றார்.

நலம் விசாரித்துக் கொண்டனர்.  மிகவும் பரிவுடன் புரட்சிக்கவிஞரை வரவேற்று, தன் அழைப்பினை ஏற்று வருகை தந்தமைக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பகல் உணவு பரிமாறச் செய்தார்.  இதற்குள் என்னிடம் தமது விருப்பத்தைச் சுருக்கமாகக் கூறிவிட்டார் கண்ணதாசன்.

தம் அண்ணனின் உதவியுடன் அம்பிகாபதி, கதையைத் திரைப்படமாக்கிட முடிவு செய்து, தொடக்க வேலைகள் நடந்தன.  இதே அம்பிகாபதி கதையைப் படமாக்கிட ஏ.வி.எம். நிறுவனம் விளம்பரம் செய்துவிட்டது.

காதல் ஓவியங்களில் தலைசிறந்து விளங்கிய புரட்சிக்கவிஞர், தம்முடைய அம்பிகாபதி கதைக்கு உரையாடல், பாடல் எழுத இருப்பதாக அறிவித்து அம்பிகாபதி முயற்சியை ஏ.வி.எம்க்காக விடச்செய்தார் கண்ணதாசன்.

புரட்சிக்கவி எதிர்பாராமுத்தம், பாண்டியன் பரிசு போன்ற படைப்புகளில் காதல் உயிர் இயற்கை என்கிற கோட்பாட்டை நிலைநாட்டிய பெருங்கவிஞர் பாரதிதாசன்தாம் இந்த அம்பிகாபதியைத் திரை ஓவியமாக்கும் தனித் திறம் படைத்தவர் என்றும், அவரைத் தவிர வேறு எவரும் அம்பிகாபதியை உயிர் ஓவியமாகப் படைத்திட இயலாது என்றும் கண்ணதாசன் கருதினார்.  இது குறித்து விளக்கி எப்படியும் உடன்படிக்கை எழுதிப் பெற வேண்டும் என்று என்னிடம் வலியுறுத்தினார் கவிஞர் கண்ணதாசன்.  என் மீது அளவிலாத அன்பு செலுத்தியவர் கண்ணதாசன்.  அவருடைய வேண்டுகோளை ஏற்கச் செய்வதில் எனது முயற்சி அதிகம் என்றே சொல்லவேண்டும்.

உடன்படிக்கையில் அதிக கெடுபிடியான விதிமுறைகள் குறுக்கிட்டு முயற்சி ஈடேறாமற் போய்விடலாகாது என்பது கண்ணதாசனின் கருத்து.  இதை நிறைவேற்றுவதில், எனக்கும் சில காரணங்கள் இருந்தன.

திருக்குறள் – புரட்சியுரை ஒன்றை எழுதிக் கொண்டிருந்தார் தந்தையார். அதனை நூல்வடிவத்தில் கொண்டு வரவேண்டும் என்கிற முனைப்பில் நான் இருந்தேன்.  எமது அச்சகத்தில் புதிய வகை எழுத்துகள், வேறு சில கருவிகள் இருந்தால்தான் திருக்குறள் உரை நூலை அழகிய பதிப்பாக வெளியிட முடியும்.  எம்மிடம் இருந்த சிறிய அளவு இயந்திரம் தோதுப்படாது, புதிய பெரிய அளவு அச்சுப் பொறி தேவை.

இந்த என் முயற்சிக்குத் தேவைப்படும் தொகை இந்தத் திரைப்பட ஊதியத்தின் மூலம் கிடைக்கும்.  எனவே, வாய்ப்பைத் தட்டிவிடாமல் சற்றுப் பதமாகக் கையாண்டேன்.

அம்பிகாபதி திரைக்கதை, உரையாடல், பாடல், எழுதித் தருவதற்கு  இருபத்திரெண்டாயிரத்து அய்ந்நூறு ஊதியம் என்று பேசி முடிவு செய்து, இரண்டாயிரத்து அய்ந்நூறு முன்பணம் பெற்றுக் கொண்டோம். கண்ணதாசனின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

அவருடைய மகிழுந்திலேயே வீடு திரும்பினோம்.

அச்சகத்துக்கு என்னென்ன எழுத்துவகைகள் தேவை?  எந்த அச்சுப் பொறி வாங்குவது என்கிற சிந்தனையில் நான் மூழ்கினேன்.  தந்தையாரும் ஒரு தேடலில் ஈடுபட்டார்.

அம்பிகாபதி கம்பருக்கு மகனாக விளங்கினான் என்பது வரலாறல்ல.  ஆனால், அம்பிகாபதிக் கோவை, என்றொரு நூல் உண்டு.  அதனில் ஆராய்ச்சி செய்து தனித்தமிழ் ஆசான் மறைமலை அடிகளார் நூல் வெளியிட்டுள்ளார்.  சரி…கம்பர், ஒட்டக்கூத்தர், சோழ மன்னன் காலம் போன்ற திசையில் ஆதாரங்கள் தேடினார் என் தந்தையார்.

அரசிளங்குமரி – கவிஞனின் மகன் ஆகிய இருவரின் காதல் கதை என்பதால், தமது எழுதுகோலை நிமிர்த்தினார்.  ஒரு கிழமையில் நிறையப் பக்கங்கள் எழுதி முடித்துவிட்டார்.

கனிச்சாறு போன்ற கவிதை நடை… கருத்தேற்றமிகுந்த கதை அமைப்பு…பாடல்களோ கற்கண்டு!  இந்தப் படைப்பு வேளையில் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தன அம்பிகாபதி கதை அமைப்பு – காட்சிவரிசை அடங்கிய ஏடுகள்!   படித்துப்பார்த்து அப்படியே ஒரு மூலையில் தூக்கிவைத்துவிட்டார்.  என்னை அழைத்தார், கடிதம் ஒன்று கண்ணதாசனுக்கு எழுது!  உடன்படிக்கையின்படி அம்பிகாபதி கதை, காட்சி அமைப்பு, உரையாடல்கள், பாடல்கள் எழுதியாகிவிட்டன.  இடையிலே நீங்கள் அனுப்பிய காட்சி அமைப்பு ஏடுகள் வந்தன.  அவற்றிற்கேற்ப எழுதினால் அது அம்பிகாபதி படமாக இருக்காது.  கம்பர் _ ஒட்டக் கூத்தரிடையே நடந்த சச்சரவுதானே மிஞ்சும்.
இதுவரை எழுதப்பட்டவை இன்று பதிவு அஞ்சலில் உங்கட்கு அனுப்பப்பட்டுள்ளன.  மீதிப்பகுதி இன்னும் சில நாட்களில் நேரில் சென்னையில் தரப்படும் என்று தந்தையார் கூறினார். எனக்குள் புயல் வீசத் தொடங்கிவிட்டது.  எட்டாயிரம் ரூபாய் பெறுமான புதிய அச்சுப்பொறியும், நான்காயிரம் ரூபாய் பெறுமான அச்செழுத்துகளும் வாங்கிட ஏற்பாடு செய்திருந்தேன்.  இடையில் முறிவு ஏற்பட்டு விட்டதால்?

கலங்கினேன்.  அந்த நேரம் பார்த்து கோவை அ. அய்யாமுத்து அவர்கள் புதுச் சேரிக்கு வந்தார்.  தந்தையாரின் நெஞ்சறிந்த நண்பர். அவரிடம் இந்த விவரம் சொன்னேன்.  திரு. அய்யாமுத்து அவர்களும் நீ மனம் தளராதே… உன் முயற்சியை விடாதே.  திருக்குறள் உரை வெளிவரவேண்டியதுதான் உனது முதன்மைப் பணி என்று தெம்பூட்டினார்.

எந்தையார் மிக மும்முரமாக அம்பிகாபதி காட்சிகளை எழுதிமுடிக்கும் நேரம் பார்த்து கோவை அ. அய்யாமுத்து என் தந்தையாரைக் கண்டு நெடுநேரம் உரையாடிவிட்டுத் திருக்குறள் புத்தகத்தை அச்சிடும் வேலை எப்படி இருக்கிறதென்று வினவினார்.

ஊம்! நடக்குது. அச்சகத்தில் புதிய அச்சு இயந்திரம் தேவைப்பட்டது. எழுத்துகளும் புதிதாக வாங்கவேண்டும். தம்பி ஏதோ ஏற்பாடு செய்கிறான் என்றார் தந்தையார். (என்னைத் தம்பி என்றுதான் குறிப்பிடுவது வழக்கம்.)

திரு. அய்யாமுத்து அவர்கள், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றத் தொடங்கினார்.

அம்பிகாபதி படம் எழுத்துவேலை எல்லாம் முடிச்சாச்சா என்று கேள்வி எழுப்பினார் அய்யாமுத்து.

ஆமாம். நம்ம கண்ணதாசனுக்காக ஒப்புக்கொண்டேன். முன்பணம் கொடுத்தாங்க. நான் நல்லபடியா முடிச்சி எழுதி அனுப்பியிருக்கேன். அவனுங்க ஒரு டிரீட்மெண்ட் அனுப்பி வச்சானுங்க. எடுத்த எடுப்பில முருகர் வீதிஉலா வராராம். அம்பிகாபதி பாடி வரவேற்கிறானாம்னு ஒரு காட்சி. கம்பர் வெகு பாடுபட்டு ஒட்டக்கூத்தரோட வம்பு வளர்க்கிறாராம். கம்பரை ஒழிச்சிக்கட்ட ஒட்டக்கூத்தர் சதி செய்றாராம். இராமாயணத்தை அரங்கேற்ற ரங்கநாதரே கனவில் வந்து உத்தரவு போடுறாராம்…
இதையெல்லாம் எழுதச் சொல்றானுங்க…

அய்யாமுத்து: அவங்க சினிமா ஓடணுமே, சம்பாதிக்கணுமே, அப்படித்தான் கேட்பாங்க.

தந்தையார்: இவனுங்க விருப்பப்படி எல்லாத்தையும் மாத்திடுறதா? அம்பிகாபதி-அமராவதி காதலுக்குக் குறுக்கே நிக்குது அரசு அந்தஸ்து?: இதை ஒடைக்கிறதும், கவிஞனுடைய திறமையையும், காதலின் வலிமையையும் எடுத்துச் சொல்றதை விட்டுட்டு…

அய்யாமுத்து: அவனுங்க எப்படியாச்சும் போகட்டும். சினிமாவுல நீ எழுதினது எப்படி இருந்தா என்ன? சரின்னு போ?

தந்தையார்: நானா! அதுதானே முடியாது. கவிஞனின் கதை _ கவிஞர்களின் வாழ்க்கை – இதில புகுந்து வீண் சச்சரவை மூட்டிவிடுவேனா! அது என்கிட்ட முடியாதப்பா!

அய்யாமுத்து: முன்பணம் வாங்கிட்ட, மீதித் தொகை வரும்னு தம்பி அச்சகத்துக்கு வேண்டியதை எல்லாம் வாங்கி, திருக்குறள் உரையை வெளியிட ஏற்பாடு செய்திருக்கான். அதெல்லாம் எப்படி நடக்கும்?

தந்தையார்: வளையாபதி படம் போல மூணு படம் எழுதித்தர மாடர்ன் தியேட்டர்ஸ் உடன்படிக்கை செய்துகொண்டது. வளையாபதியில் அவனுங்க வாலாட்டினாங்க. ஒப்பந்தத்தைக் கிழிச்சிப் போட்டுட்டு வந்துட்டேன்பா நானு!

அய்யாமுத்து: இந்த சினிமாவை வச்சா உன் திறமையையும் பெருமையையும் பேசப்போறாங்க. அட போப்பா. அவனுங்க கேக்றமாதிரி எழுதித் தூக்கி எறிஞ்சிட்டுப் போப்பா!

தந்தையார்: கோடி ரூபா கொண்டாந்து என் காலடியில கொட்டினாலும் அது நடக்காதப்பா. அய்யாமுத்து, அடி நாளிலிருந்து என்னைப் பத்தி நீ நல்லாத் தெரிஞ்சவன். நான் என் போக்குல மாறியதுண்டா?

உரையாடல் முடியும்போது கோவை அய்யாமுத்து என்னை அழைத்து, குடிக்கத் தண்ணீர் கேட்டார். கொண்டு போய்க் கொடுத்தேன்.

ஒங்கப்பன் பிடிவாதக்காரம்பா. பல ஆண்டுகளாகவே நான் பார்த்திருக்கேன். சரி, வேற ஏற்பாடு ஏதாச்சும் செய்யலாம்! என்று மனம் வருந்திச் சொன்னார்.

வேறு ஏற்பாடு என்ன செய்தேன் நான்? என் மனைவி அணிந்திருந்த நகைகளை விற்று அச்சகத்தை விரிவுபடுத்தினேன்.

அம்பிகாபதி பட நிறுவனத்தார் வழக்குரைஞர் மூலம் அறிக்கை அனுப்பினார்கள்.
கதை உரையாடல் பாடல்களை முன்பே அனுப்பிவிட்டோம் என்று தொலைவரி கொடுத்தோம்.

நிறுவனம் ஏற்கவில்லை. நான் நேரில் சென்று கவிஞர் கண்ணதாசனிடம் விவரம் சொன்னேன். நிறுவனத்துக்காக காட்சி கதை அமைப்பு எழுதியவர் திரு. சின்ன அண்ணாமலை என்று சொல்லப்பட்டது. அதனால் வந்ததுதான் குளறுபடி. அப்பாவிடம் விவரம் சொல்லிவிடு.

மேற்கொண்டு நிறுவனமும் தொடராது. நாமும் நிறுத்திவிடுவோம்! என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.

நல்ல தமிழ்த் திரைப்படம் ஒன்று உருவாகாமல் போயிற்று.

என் துணைவியாரின் நகைகள் விற்கப்பட்டன.

திருக்குறள் – உரை – நூல் வடிவில் வருவதில் தடங்கல்.

எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்  மிகச்சிறந்த கொள்கைதான்! இம்மியும் மாறாதவர் எந்தையார். அவருக்கு இருந்த கொள்கைப் பிடிவாதம், தமிழ்க் குலத்திடையே நிலைபெற வேண்டுமே!

எதிர்பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *