அண்ணாவின் கேள்விக்கு தமிழ்ப் புலவரின் பதில்

டிசம்பர் 16-31

(நவம்பர் 16-30 இதழின் தொடர்ச்சி…)

முதன்மை வினா எண் 11

ஆரியர் உயர்வு, தமிழர் தாழ்வு இதனைப் போதிக்க எழுந்தவைகளே புராண இதிகாசங்கள் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கின்றிர்களா?

 

விடை

கட்டாயமாக ஒப்புக்கொள்கிறோம். இதில் எவ்வகை மறுப்போ கிடையாது.
முதன்மை வினா எண் 12

புராண இதிகாசங்கள் ஒழியக் கூடாது; என்றால், மக்களிடம் அறியாமை, மூடநம்பிக்கை, அடிமை, தன்மானமற்ற செயல் ஆகியவை நிலைத்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒப்புகின்றீர்கள் என்பதுதானே பொருள்?

விடை

ஆம்! அதுதான் பொருள்! ஆனால், அவை ஒழிய _ ஒழிக்கப்பட வேண்டும் என்று, அய்யாவின் தன்மதிப்பியக்க _ பகுத்தறிவாளனாகிய இந்த எளிய புலவன் ஆகிய நான் உளமார விரும்புகிறேன்.
முதன்மை வினா எண் 13

தமிழர்க்குச் ஜாதிபேதம் உண்டா? பலதெய்வ வணக்கம் உண்டா? இல்லை எனில், அவற்றைப் போதிக்கின்ற, ஆதரிக்கின்ற நூற்களைக் கலைகள் என்று போற்றுவதேன்?

விடை

பண்டைத் தமிழரிடையே ஜாதி என்ற நிலைப்பாடு இல்லை. தொழில் நிலை வேறுபாடுதான்! அதுபோலவேதான் பல தெய்வ வணக்கம் இல்லை. ஆரிய_ வர்ணதரும வல்லாண்மை இங்கே புகுந்து கால்கொண்ட பின்னரே வந்தவைதான்!

இந்நிலை தொல்காப்பியத்துக்கு முன்னரே புகுந்து சங்ககாலத்தில் நிலைகொண்டு பிற்காலத்தில் கால்கொண்டுவிட்டது. அப்படியாயின், அவற்றைப் போதிக்கின்ற, ஆதரிக்கின்ற நூல்களைக் கலைகள் என்று போற்றக் காரணம் இந்நூல்களைக் கற்று, விளக்க, விரிவுரை செய்து, விருதுகள், பட்டங்கள் பெற்று, மத நம்பிக்கையுள்ள பெரிய மனிதர்களின் தயவு, செல்வம், செல்வாக்கு, சொகுசு வாழ்க்கை, ஜாதியுயர்வு இவற்றில் சில தமிழ்ப்புலவர்களுக்கு விருப்பம் இருந்ததால்தான்.

எடுத்துக்காட்டுகள்:

ரா. இராகவய்யங்கார்; உ.வே. சாமிநாதய்யர்;

மீனாட்சிசுந்தரம்பிள்ளை; கதிரேசன் செட்டியார்.

முதன்மை வினா எண்: 14

காதல் மணம் இன்ப வாழ்வையளிக்கும் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

விடை

ஆம்! ஒப்புக்கொள்கிறேன். எல்லாத் தமிழ் புலவ(பண்டித)ர்களும் ஒப்புக் கொள்வார்கள் என என்னால் கூறமுடியாது.

சார்பு வினா(1)

பழந்தமிழர் திருமணமுறை காதலோடு இயைந்தது என்று நீங்களே கூறுகிறீர்கள்?

விடை

ஆம். கூறுகிறோம்.

சார்பு வினா(2)

அந்த முறை இன்று சமுதாயத்தில் இகழப்படுவானேன்?

விடை

அறியாமை, பழங்கால மரபுத் திருமண முறையில் மயக்கம், பிற்போக்குத் தன்மை; பரந்த உலகியலறிவின்மை, ஆரிய வல்லாண்மை முதலானவை அப்படி இகழப்படுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

சார்பு வினா(3)

அப்படி இகழப்படுவதை, நீங்கள் ஆதரிக்கிறீர்களா?

விடை நான் ஆதரிப்பதில்லை; ஆதரிக்கவும் மாட்டேன்.ஆனால், எல்லாப் புலவர்களும் என் போலவே இருப்பர் என உறுதியளிக்க முடியாது.

சார்பு வினா எண்(4)

இல்லை எனில், விதியின் மேல் பழிபோட்டு விளையாட்டுத் திருமணம் நடைபெற்று வருவதைத் தடுக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?

விடை

என்னைப் பொறுத்தவைர அய்யாவின் பின்பற்றாளன் என்ன முறையில் நான் பங்கு பெறும் மணவிழாக்கள், கூட்டங்கள் இவற்றில் பரப்புரை செய்து வருகிறேன்; வருவேன்.

பிற புலவ(பண்டித)ர்கள் இப்படிச் செய்யவில்லை; செய்ய மாட்டார்கள். எல்லாம் முன்னோர் வழியில் நடப்பதே முறை என்ற தவறான கண்ணோடடம்தான்!

சார்பு வினா(5)

பழந்தமிழர் காலத்தில் இன்றைய நிலைதன் பெண்களுக்கு இருந்ததா?

விடை

ஆம்! என்றுதான் சொல்லவேண்டும் தொல்காப்யிம், கடல் தாண்டிச் செல்வது மகளிர்க்கு உரிமையில்லை என்கிறது.

முந்நீர் வழக்கம் மகடூஉக்கு இல்லை _ (தொல்.: சூத். 37)

அச்சம், அறியாமை, நாணப்படுதல் பெண்பாற்குரியன.

அச்சமும் மடனும் நாணும் முந்துறுத்தல் நிச்சயம் பெண்பாற் குரிய _ (தொல்.:96)
(நிச்சம் = என்றும்)

தன் காதல் விருப்பத்தைத் தன் காதலனிடம் வெளிப்படுத்தல் காதலிக்கு இல்லை. தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை _ (தொல். பொரு. 116)

செயலாற்றுவது  ஆடவர்க்கு உயிர்; வீட்டிலிருந்து கொண்டு அடங்கிக் கிடக்கும் மகளிர்க்கு ஆடவர்தாம் உயிர் _ என்கிறது ஒரு சங்கப்பாடல்.

வினையே ஆடவர்க்கு உயிரே; வாள்நுதல் மகளிர்க்கு ஆடவர் உயிரே. _ (குறுந்தொகை : 135)

மறுமண உரிமை மகளிர்க்கு இல்லை; கணவன் இறப்பின் கைம்மை கடைப் பிடிக்க வேண்டும். கூந்தல் கொய்து, குறுந்தொடி நீக்கி… (குறுந்தொடி _ கைவளையல்)

பிள்ளையைப் பெற்று வளர்த்தல் மட்டுமே ஒரு தாயின் கடமை. ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே! _ (புறநானூறு)

அவ்வையார் போன்றவர்கள் விதிவிலக்காக இருந்துள்ளனர்.

முதன்மை வினா 15

ஒரு நாட்டில் வீழ்ச்சிக்கும், தாழ்ச்சிக்கும் புலவர்களே காரணம் என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

விடை

ஆம்! ஒப்புக் கொள்கிறேன். தந்தை பெரியாரின் கருத்தும் இதுதான். அவர் கூறுகிறார்.
நம் நாட்டை நாசமாக்கியது பார்ப்பான் மட்டுமல்ல; நமது புலவர்களும் ஆவர்…  பார்ப்பான் செய்த வடமொழிப் புராணங்களை எல்லாம் நம் புலவர்கள், தமிழில் ஆக்கியதால்தான் அது சந்து பொந்து எல்லாம் பரவி, மக்களையெல்லாம் மடையர்கள் ஆக்கிவிட்டது. _ (விடுதலை: 21-.2.1968)

சார்பு வினா (1)

அப்படியானால் நம் நாடு எந்த நிலையில் இருக்கிறது? ஏன்?

விடை

மிகப் பெரும்பாலான தமிழ்ப் புலவர்களால் நம் நாடு தாழ்ந்த தமிழகமாக _ வீழ்ச்சியுற்ற தமிழகமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், எந்த முற்போக்குக் கருத்துகளுக்கும், பகுத்தறிவு _ அறிவியல் மனப்பான்மை (Scientific Attitude) – க்கும் அவர்கள் எதிராகவும் தடைக்கல்லாகவும் இருந்து முட்டுக்கட்டை போட்டுவிட்டார்கள்.

முதன்மை வினா எண்: 16

தமிழர்கள் 100க்கு 93 பேர் தற்குறிகளாக இருப்பதேன்? விடை

ஆரியப் பண்பாட்டுத் தாக்கத்தால் _ மனுநீதியின் வல்லாண்மையால் தமிழர்களாகிய 100க்கு 93 பேருக்கு கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டது.

எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே! என்கிறது மனு(அ)நீதி. இதனால்தான் மிகப் பெரும்பாலான தமிழர்கள் தற்குறிகளாக இருக்கும் நிலை வாய்த்தது.

முதன்மை வினா 17

முன்னேற்றம், பகுத்தறிவு, தன்மானம் இவை உமக்கு வேம்பா?

விடை

ஆம்! அப்படித்தான் புலவர்கள் மிகப் பெரும்பாலோர் நினைக்கிறார்கள். எனக்கு அவை வேம்பு அல்ல; கரும்பு!

முதன்மை வினா எண் 18

ஆரியக் கோட்பாடுகள் தமிழர்க்கு அவசியமா?

விடை

அவசியமே இல்லை!

சார்பு வினா (1)

இல்லையென்றால், அதை இந்நாட்டைவிட்டு அகற்ற நீங்கள் செய்த காரியம் என்ன?

விடை

நாங்கள் செய்த காரியம் எதுவுமே இல்லை. பெரியார் இதற்கு அளிக்கும் விடையைப் பார்ப்போமே. பெரிய புலவர்கள், அறிவாளிகள், மேதாவிகள் யாரும் வெட்கப்படுவதாகவோ கவலைப்படுவதாகவோ தெரியவில்லை! _ (விடுதலை: 21.2.1968)
சார்பு வினா(2)
இனியாவது செய்யப்போவது என்ன?

விடை

செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் அய்யாவின் நெறி ஒழுகும் புலவர் குழந்தை திராவிட (தமிழ்) வேந்தன் இராவணனை தலைவன் ஆகக் கொண்டு இராவண காவியம்  பாடினார். புரட்சிக் கவிஞர், தமிழ், தமிழினம், தன்மதிப்பு, பகுத்தறிவுப் பாக்கள் புனைந்தார். இன்னும், புலவர் ந.இராமநாதன், புலவர் பொன்னம்பலனார் அய்யாவின் கொள்கைப் பரப்பினார். எளியவனான நானும், பல்வேறு நகரங்களில் இராவண காவியம் தொடர் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்துள்ளேன். நம் கழக இதழ்களில், அறிவியல்,இ மொழியியல் முதலிய கட்டுரைகளை எழுதிவருகிறேன்; வருவன்.

முதன்மை வினா 19

பழந்தமிழர் வாழ்வு, அவர்தம் புகழ் ஆகியவை சீரழிந்து போவதற்குத் தடையாயிருந்தவர்கள் பண்டிதர்களும் அரசர்களும் தானே?

விடை ஆம்! ஆம்!! சார்பு வினா(1)

இன்று தமிழரசர்கள் துணை உங்கட்கு இருந்தால் பெரியாரையும் அவர்தம் கூட்டத்தாரையும், சமணர்களைச் சைவர்கள் கொன்றது போலத் தண்டிக்காமல் விட்டுவைக்கச் சம்மதப்படுவீர்களா?

விடை

அறியாமை, ஆரியமாயை, பக்திப் போதை காரணமாக இதற்குப் பெரும்பாலான புலவர்கள் சம்மதப்படுவர். ஆனால், அய்யாவின் கொள்கை வலிவால் அம்முயற்சி நடவாது; பலிக்காது; தோல்வியையே தழுவும்.

முதன்மை வினா 20

ஆரியப் பாம்புக்குப் பால்வார்த்து அதனைக் காபந்தோடு வளர்ப்பவர்கள் பண்டிதாகள் அல்லவா?

விடை

ஆம்! அதில் என்ன அய்யம்?

சார்பு வினா(1)

இல்லை என்றால் இத்தனை புராணேதிகாசங்கள் எப்படித் தோன்றின? யாரால் தோன்றின?

விடை

இந்தப் புராணோதிகாசங்கள் எல்லாம் தமிழில் தமிழ்ப்புலவர் சிகாமணிகளால் எழுதப்பட்டன. இவற்றின் தோற்றத்திற்குக் காரணம் தமிழ்ப் புலவர்களே!

முதன்மை வினா 21

பழந்தமிழரைக் குறிப்பிடும்போது, மறத்தமிழ் வீரர்கள் என்று பெருமையோடு பேசுகிறீர்கள். இன்று அந்த நிலை உண்டா?
விடை
இல்லை!

சார்பு வினா(1)

இல்லை எனில், அதனைப் போக்கியது எது?

விடை

ஆரியப் பண்பாட்டுப் படை எடுப்பும், வெட்டி வேதாந்தத் தாக்கமும், சும்மா இருப்பதே சுகம் என்னும் திண்ணைத் தூங்கிக் தத்துவமும், தமிழினம் பல்லாண்டுக்காலமாக போர்க்குணம் இல்லாமல் போனதும்தான் காரணங்களாகும்.

சார்பு வினா(2)

ஆரியம் எனில் அதனைப் போக்க நீங்கள் செய்தது என்ன?

விடை

எதுவும் இல்லை! மாறாக, அதனை இலக்கியங்கள் மூலம் வளர்த்துத்தான் வந்துள்ளோம்.
சார்பு வினா (3)

அதனைப் புகுத்தியுள்ள நூல்களைக் கலைகள் என்று போற்றுவானேன்?

விடை

எல்லாம் ஆரிய _ பக்தி மயக்கம்தான்! போதைதான்!

துப்பாக்கித் தோட்டாக்கள்

இதுவரை, அறைகின்றார் அண்ணா என்ற தலைப்பிலான அண்ணாவின் 21 முதன்மை வினாக்களுக்கும் சார்பு வினாக்களுக்கும் ஒருவாறு விடை கூறப்பட்டுள்ளது. இந்த வினாக்கள் உள்ளபடியே வினாக்கள் அல்ல! தமிழ்ப் புலவ(பண்டித)ர்களின் உள்ளங்களைத் துளைத்தெடுக்கும் துப்பாக்கித் தோட்டாக்கள்! பிய்த்து உதறும் பீரங்கிக் குண்டுகள்! இவற்றிற்கு, நான் அளித்தவை விடைகள் அல்ல; அவை, ஒப்புதல் வாக்குமூலம் என்று கூறுவதே சாலப் பொருந்தும்.

கன்னத்தில் அறைகின்றாரே!

விடைகளின் இடைஇடையே என்னைப்பற்றிய குறிப்புகள் தவிர்க்க இயலாக் காரணங்களால் தேவைகருதி இடம் பெற்றுள்ளதை நீக்விட்டுத் தமிழர்கள் படிப்பார்களேயானால் அறைகின்றார் அண்ணா என்னும் தொடர், கேட்கின்றார் அண்ணா என்ற பொருள் தருவதைக் காட்டிலும் புலவர்களின் கன்னத்தில் அறை(அடிக்)கின்றார் என்னும் பொருள்படுவதை உணரலாம்.

எவர்க்கும் அய்யம் ஏற்படாது

அறைகின்றார், அறைகின்றார் அண்ணா! அது நமக்கு, சூடு, சுரணை மானம் ஊட்டும் என்பதில் எவர்க்கேனும் அய்யம் ஏற்படுமா, என்ன?

– பேராசிரியர் புலவர் ந.வெற்றியழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *