இந்தியத் தத்துவங்களில் கடவுள் மறுப்பு

டிசம்பர் 16-31

(நவம்பர் 16-30 இதழில் வெளியான இப்புதிய தொடரின் முன்னுரையின் தொடர்ச்சி…)

இரண்டாவதாக மனுசாத்திரம். இதை எழுதியது ஓர் ஆளா, அல்லது பலரா என்பதே விளங்காமல் உள்ள சாத்திரம்.

உள்ளடக்-கத்தைப் படித்தால் ஒரே காலத்தில் எழுதப்-பட்டது அல்ல என்பது மட்டும் புரியும். மனிதர்கள் பிறக்கும்போதே நான்கு பிரிவுகளாக ஏற்றத் தாழ்வுகள் உள்ளவர்களாகப் பிறப்பிக்கப்-பட்டுள்ளனர் எனும் சமூக அநீதியைக் கற்பிக்கும் சாத்திரம். ரிக் வேதத்தில் புருஷசூக்தம் எனும் பிரிவுகளில் உள்ளவையே இதிலும் உள்ளது.

 

இவை இரண்டிலும் உள்ள பாகுபாடுகளே பகவத் கீதையிலும் இடம் பெற்றுள்ளன என்பதைப் பார்க்கும்போது பலவகையிலும் நம் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் தெரியவரும்.

 

மூன்றாவதாக காமசாத்திரம். காம சூத்ரம் என்றும் கூறுவார்கள். வாத்ஸ்யாயனன் என்பான் எழுதியது. உலகுக்கே இது பற்றிய முதல் நூல் இதுதான் என்று மேலை நாட்டார் மூக்கில் விரல் வைத்துப் பார்க்கின்றனர் என்பார் பார்ப்பனர்கள். வீர்யத்திற்கே காயத்ரி மந்த்ரம் ஜெபிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள் அல்லவா! இப்படித்தான் வாயைப் பிளப்பார்கள்.

ஆயுர்வேத சாத்திரம் என்பது நான்காம் சாத்திரம். மருத்துவம் பற்றிய சாத்திரமாம். அறுவை சிகிச்சைபற்றியெல்லாம் இதில் உண்டாம். பால்கடலைக் கடைந்து ஆலகாலமும் மற்றவையும் வந்தபோது மூதேவியும் சீதேவியும் வந்தபோது, உடன் வந்ததாம் ஆயுர்வேதமும் தன்வந்த்ரியும்! பிறகுதான் அமுதம் வந்ததாம். ஆயுர்வேதமும் தன்வந்த்ரியும் இதுவரை கிழித்தது என்ன? பைத்தியக்காரர்களின் வீடு (விகிஞி பிளிஹிஷிணி) என்று விவேகானந்தரால் வருணிக்கப்பட்ட மலை-யாளத்தில் மட்டும் கொடிகட்டிப் பறக்கும் மருத்துவம். இதை நம்பி அண்ணா, வி.வி.கிரி போன்றவர்களை நவரை, பிழிச்சல் என்று எண்ணெய் வைத்தியம் பார்க்க வைத்தார்கள். வயோதிகத்தை வெளிக்காட்ட விரும்பாத வலிப்பு நடிகர்கள் இன்றைக்கு இந்த மருத்துவமுறைக்கு விளம்பர தூதர்களாகச் செயல்படப் பயன்படுகிறது. மற்றபடி பல்பொடி, தலைமயிர் எண்ணெய், சோப்பு எண்ணெய் என இரண்டொரு உபயோகப் பொருள்களின் விலையைக் காட்டிச் சொல்வதற்கு மட்டுமே ஆயுர்வேதம் பயன்படுகிறது. இதைச் சொல்ல ஒரு சாத்திரமாம்! தேவையா?

அய்ந்தாவதாக வந்துள்ளது வாஸ்து சாத்திரமாம். கோயில்களை எப்படிக் கட்டுவது என்பதுபற்றிய வரைபட விளக்கநூல் இது. ஆகவேதான் இதில் சமையல் அறை (கோயிலில் மடப்பள்ளி) உண்டு. கழிப்பறை கிடையாது. ஏன் என்றால் கடவுளுக்கு மலம் வராது. (மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வரும்) இந்த சாத்திரத்தை மனிதன் வசிக்கும் வீட்டுக்கானது எனக் கூறிச் சம்பாதிக்கிறார்கள்; ஏமாற்று-கிறார்கள். அதுவும்-கூட இந்நாட்டில் விந்திய மலைக்கு வடக்கே ஒரு வாஸ்து சாத்திரம்; தெற்கே ஒரு வாஸ்து சாத்திரம். இதைப்பற்றிய பித்தலாட்டங்களைத் தனியே பார்க்கலாம்.

மனிதனோடு, மனித வாழ்க்கையோடு இணைந்து, இயங்கும் தத்துவங்களை இந்தியத் தத்துவம் எனக் கூறலாம். அந்த இலக்கணப்படி, சாங்கியம் என்பது ஒரு தத்துவம். கபிலரால் வழங்கப்பட்டது. சாங்கியம் என்றால் எண்ணம் எனப் பொருள். கபிலரைக் கபிலமுனி (KAPILA) என்றாக்கி அவருடைய தத்துவம் சாங்க்யா என்று எழுதி வைத்துக் கொண்டனர் ஆரிய வட-மொழியினர். சாங்கியம் எனக் கபிலர் சொன்னது எண்ணம், எண்ணுதல், சிந்தனை செய்தல், நினைத்தல் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். ஆனால் பார்ப்பன சாங்க்யம் என்றால் 1, 2, 3 என எண்ணுதல் (COUNTING) என்று பொருளாம். எப்படிப் பொருத்தம் எனக் கேட்டால், அது மறைந்துவிட்டது என்று கூறிவிடுகிறார்கள். சாங்கியம் என்றால், ஒரு செய்தியை புதுவிதமாக மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே சொல்வதை சாங்கியம் எனலாம். சிந்தனையை ஒழுங்குபடுத்தும் தத்துவ மரபு எனலாம். நினைத்தேன், வந்தாய் எனப் பாடும் பாடலை நினைத்துக் கொள்ளலாம்.

அடுத்தது யோகம். யோகா என்பார்கள். இந்தப் பயிற்சி பெற்றவர்கள் யோகிகள். ஊண் சுருக்கி, உள்ளொளி பெருக்கி, யோகம் எனும் பயிற்சி முறை பயின்று வாழ்பவர்கள். மனமும் உடலும் ஒன்றி செயல்படுவதைத்தான் யோகம் என்கிறார்கள். காலை 4 மணிக்கு எழவேண்டும் என்ற நினைப்போடு படுத்துத் தூங்குபவர்கள் 4 மணிக்கு எழுந்து-விடுவதைப் பார்க்கிறோம். அதைப் பழகியவர்களை யோகி எனலாம்.

மீமாம்சம் என்பது அடுத்த தத்துவம். செயல்முறை வித்தகத்தை மீமாம்சம் எனலாம். விதைக்கப்படும் ஒரு நெல்மணி நூற்றுக்-கணக்கான நெல் மணிகளாகப் பயிரில் செழித்து விளைகிறது அல்லவா, அத்தகைய செயல்வினை ஆற்றுதல் மீமாம்சம்.

ஞாயம் என்கிற தத்துவமுறை எது சரி, எது தவறு எனப் பகுத்துப் பார்த்து முடிவு செய்கிற ஆய்வு முறையாகும். இதைத் தர்க்கம் எனவும் கூறலாம். ஏரணம் என்று மெய்ப்-பொருளைக் காண்பதற்காக விவாதம் நடத்துகிற முறை என்பதாகும். எல்லா மதங்களுமே அவற்றின் நூல்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள், நம்பு, அய்யம் கொள்ளாதே, கேள்வி கேட்காதே என்றெல்லாம் மிரட்டு-கின்றன. அதற்கு நேர் மாறாக எதையும் தர்க்கித்து விவாதம் நடத்தி முடிவுக்கு வரவேண்டும் ஞாயத்தை உணர-வேண்டும் என்கிற தத்துவம் நம்முடையது.

பொருள்தான் முதலில் எனப்படும் பொருள்முதல்வாதம் ஒன்று. கருத்துதான் முதலில், பின்னர்தான் பொருள் உருவானது என்பது கருத்துமுதல்வாதம் என்பது மற்றொன்று. பொருள் முதல்வாதம் கடவுளுக்கு வேலை இல்லை என்கிறது. கருத்து முதல்வாதம் அல்லது எண்ண முதல்வாதம் என்பது எல்லாவற்றிற்கும் கடவுளைக் கட்டி அழுவது. பொருள்களின் தன்மைபற்றியும் திரவியங்கள், குணங்கள், இயக்கங்கள் பற்றியும் ஆய்வு செய்த தத்துவம்தான் வைசேஷிகம் எனும் தத்துவம். கணாதர் என்பவர் ஆய்வு செய்த தத்துவம்.

ஆக, இந்த ஆறுவகைத் தத்துவங்களில் வேதாந்தம் வேதத்தைத் தாங்கிப்பிடிப்பது என்பது வெளிப்படையாகத் தெரிந்த சேதிதான். மீதி உள்ளவை வேதத்தைத் தாங்கியவையா தாக்கியவையா என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். கடவுள் என்கிற மாயையை எப்படியெல்லாம் மறுத்து கருத்துகள் மேலோங்கியிருந்தன என்பதையும் விரிவாகப் பார்க்கலாம்.
தத்துவ ஆய்வுகள் அடுத்த இதழிலிருந்து….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *