பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் – 7

ஜூலை 16-31

ஸ்ரீ பகவான் வாக்கியம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணன் பதில் என்ன சொல்லுகிறான். அதையும் கேளுங்கள் பக்தசிரோன்மணிகளே!

வாருங்கள் ஹே பெண்களே! நீங்களெல்லாரும்

வெகுகாலமா யொன்றாகச் சேர்ந்து ஒரே மனதுடையவர்களாய் உங்கள் முன்னோர்களுக்குத் தெரியாமல் மனதிலொன்றும் வாக்கிலொன்றும் விரதங்களை யநுஷ்டிக்கின்றீர்கள். உங்களைப் போல விரத மனுஷ்டிப்பவர்கள் எந்த லோகத்திலுங் கிடையார்கள். உங்களுடைய மோசகரமான சித்த விர்த்தியைக் கொண்டு என்னைத் தூறு செய்வது என்ன சாதுர்யமோ? ஆம், நீங்கள் நன்றாய்த் தெரிந்தவர்களே? தயவு செய்து ஜலத்தைவிட்டு வெளியில் வந்து உங்கள் வஸ்திரங்களை வாங்கிக் கொள்ளுங்களென்றார், இப்படிச் சொல்லிய ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய வசனங்களைக் கேட்ட மாத்திரத்தில் யமுனா நதி சலத்துடன் வேறுபாடு தெரியாமல் கலந்திருக்கின்ற கறுத்த அளதபாரத்தைப் படைத்த இந்தச் சோப கன்யா சிரோமணிகள் ஒருவருக்கொருவர் முகார விந்தங்களைப் பார்த்து அந்தந்த தாமரைப் புஷ்பங்களில் அந்தந்த மூன்றாம் பிறைகள் ஏககாலத்தில் காணப்பட்டாற்போலப் புன்னகை செய்துகொண்டு இவர் சொல்லுகின்ற மர்ம வசனங்களைக் குறித்து வெட்கியும் அதி குளிருக்கஞ்சியும் கழுத்தளவு சலத்திலிருந்து கொண்டு பதிலுரைக்கலாயினர்.

 

 

அப்படி கடவுள் உத்தமபுருஷன் அல்ல. காலிப்பயல், காலிப்பயல் என்றுதானே அது ஆகிறது?

அதற்கு கோபிகாஸ்திரிகள் என்ற உடையற்ற பெண்கள் நிர்வாண கோலத்து குளிக்கும் குளத்திலிருந்து பாதி வெளிவந்து மறுமொழி என்ன சொல்லுகின்றார்கள்.

ஆ கிருஷ்ணா! ஸ்திரீ ஜனங்கள் ஜலமாடும்போது அவ்விடத்திற்கு உத்தம புருஷர்கள் வரவேமாட்டார்கள். இப்படிப் பட்ட சாதுர்யங்கள் இப்பூமியில் முன்னம் நடந்ததென்று கேட்டதில்லை. இந்த நிகழ்காலத்திலும் இச்செய்கைகளை நீயொரு வன் மாத்திரம் துணிந்து செய்தாயே யல்லாமல், மற்றொருவரும் ஆசரிக்க மாட்டார்கள். ஆகையால் எங்கள் பிபுவே! உனக்கு அடிமை செய்கின்றோம். சந்தேகமில்லை. ஸ்ரீ யமுனாநதி பிரவாகத்தினின்றும் பிரமாணமாகச் சொல்லுகின்றோம். உனது கிருபாபிமான வஸ்திரங்களை எங்களுக்குக் கொடுத்தருள்வா யென்று துதித்து இன்று முதல் உனது ஆக்கனையின்படி அடிமைக்கடிமைகளாய் ஆள் செய்து எங்களுடைய சர்வேந்திரியங் களையும் உனக்கே காணிக்கையாகச் சமர்ப்பித்து, உனது ஆக்கினையைச் சிரசா வகித்து, அநுஷ்டித்துக்கொண்டு வருகின்றோ மென்று பிரார்த்தித்தார்கள். தங்கள் ஸ்தனபாரங்களிலணிந்த செஞ்சந்தனக் குழம்புகளோடு கலக்கப்பட்டுச் சோனை யாற்றுக் கொப்பாய் விளங்குகின்ற யமுனா நதியிலிருந்துகொண்டு இப்படி நானாவிதமாகப் பிரார்த்திக்கின்ற இவர்களைச் சம்பூரணமாகக் கடாக்ஷித்து ஸ்ரீ பாலகோபாலன் மலர்ந்த தாமரைக் கொப்பான முகமுடையவராய் ஸ்ரீ கோபகன்னி களுக்கு மர்மமான சில வார்த்தைகளைச் சொல்லுகின்றார்.

ஸ்ரீ பகவத் வாக்கியம்

சுகுண சுந்தரவதிகளே! நீங்கள் உங்கள் முன்னோர்களின் மீது பிரமாணப்படிக்கு எந்த புருஷனைப் பர்த்தாவாக வரிப்பதற்குப் பரிசுத்தை களாய் மிகவும் பக்தியுடன் நோன்புகளை யநுஷ்டித்தீர்களோ, அந்த அநுஷ்டானப்படி உங்களிடத்தில் சனித்த தவப்பலமே உங்களுக்கு லபித்தது, அப்படியிருக்க ஸ்ரீ நந்தகோபருடைய புத்திரனாகிய என்னை யேன் வெறுக்கின் றீர்கள். எந்த மகா புருஷனை வரித்து மோகித்தீர்களோ அவன் உங்களுடைய மர்மதனங்களை யபகரித்தான். வெகுகாலமாய் நீங்கள் உங்கள் மனோவீதியில் பக்தி பூர்வமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த புருஷார்த்த வாஞ்சைக்கு நான் அன்யனோ? பிரமாணமாகச் சொல்லுவீர்களென்றார். ஸ்ரீ ஸ்வாமியினாலே இவ்விதம் சொல்லப்பட்ட வசனங்களைக் கேட்டு, இந்தக் கோபிகா ரத்நங்கள் ஒருவர்க்கொருவர் தங்கள் முகமாகிய தாமரை புஷ்பங்களை பார்த்துக்கொண்டு மனதாகிய தாமரைகளில் முக்தியைக் கோரத்தக்க மன்மதன் தங்கள் இருதய முதலிய சர்வேந்திரியங்களையும் அபகரிக்க நிர்விண் விருதய நிருத்தரைகளாய், மௌனமாயி ருந்தார்கள். அப்படியிருக்கின்றவர்களைத் தமது பரம கிருபையினால் மறுபடியும் கடாக்ஷத்து லோகேந்திர பரம குரு சிகாமணியாகிய ஸ்ரீ ஹரியானவர் சாஸ்திரோக்த சர்வவியாபக கிரமப்படி சில நீதி வசனங்களோடு ஆத்ம ஸ்வரூப தர்மத்தையும் தமது குணாதிசயங்களையும், வெளியிட்டுச் சொல்லுகின்றார்.

சுகுணவதிகளே! இன்றுமுதல் எப்போதும் எனது கிருகத்தில் நித்தியமாக வசித்து, நந்தகோப யசோதா தேவிகளுக்குப் பணி செய்து, எனக்கு அடிமைகளாய் என்னுடைய ஆக்கினையைச் சிரசாக வகித்து, அநுஷ்டிப்பீர்களாகில், இப்பொழுதே உங்கள் வஸ்திரங்களைத் தருகின்றேன். ஜலமத்தியினின்றும் வெளியில் வந்து சிரத்தா பூர்வகமாக வாங்கிக் கொள்ளுங்க ளென்றார். இவ்வண்ணமாகச் சொல்லிய ஸ்ரீ பகவானுடைய மதுரமாகிய வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில், குளிருக்கஞ்சி ஜல மத்தியில் இருக்கக் கூடாதவர்களா யிருக்கின்ற கோபஸ்திரீகளுக்குள் சிலர், குளிருக்கு சஹிக்கமாட்டாமல் சலத்தைவிட்டு வெளியிற் போகலாம் வாருங்கள் போனவுடனே ஸ்ரீ பகவான் நமது கலைகளை கிருபை செய்து தருவரென்று சொன்னார்கள். சிலர் நாம் சலத்தைட்டு வெளியிற்சென்ற மாத்திரத்தில் நமது அருந்தவப் பயனாகிய ஸ்ரீ கோவிந்த மூர்த்தியானவர் நம்முடைய லச்சைகளை யபகரிப்பரென்று சொன்னார்கள். இந்தப் பிரகாரம் அவரவர்களும் நானாவிசாரங்களை கொண்டவர்களாய், அந்த ஜலத்தினின்று சீதளஸ்பரிச வாய்வு வேகத்தினால் உண்டாகிய சரீர நடுக்கத்துடன் என் செய்வோமென்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது காற்றினால் அசைகின்ற தாமரைப் புஷ்பங்கள் இந்தக் கோபகன்யா ஸ்திரீகளினுடைய ஸ்தனங்களின் மேற்படுதல், ஸ்ரீ கண்ணபிரானுடைய கரங்கள் இவர்க ளுடைய ஸ்தனங்களைப் பற்றுதல் போலுமிருந்தது. சில முகூர்த்தகாலஞ் சென்றபின்பு தங்கள் இருதயங்களைத் திடஞ்செய்துகொண்டு, யாவருந் துணிந்து, அவனிட்ட வழக்காய் ஸ்ரீ பகவானிடத்தில் வைத்த மன முடையவர்களாய் மெதுநடையாய் புன்சிரிப்புடன் தீர்த்த பிரவாகத்தினின்றும் வெளியில் வந்து, வெட்கமில்லாதவர்களாய், அவதூதாசிரமிகளைப்போல நிஷ்களங்கமான மனதுடையவர்களாய் நின்றார்கள். இப்படி நிற்கின்ற இந்த கோபஸ்திரீகள் தங்களை ஒருவர்க்கொருவர் பார்த்துக் கொள்ளும்போது, வஸ்திர ஈனமாயிருக்கின்றோமே யென்கிற நினைப்பும், லஜ்ஜையும் தோன்றுகின்றதே யல்லாமல், மற்றையோர்களுக்கு வஸ்திர பூஷணாலங்காரத்துடனிருந்து, வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கிறதாய்க் காணும்படி, தமது கிருபாபிமான வஸ்திரங்களை இவர்களெல்லா ருக்குங் கொடுத்து, இவர்களைப் பார்த்து ஸ்ரீ பகவானானவர் மகோத்தம தர்ம யுக்தமான சில வார்த்தைகளைச் சொல்லுகின்றார்.

 

– கி. விரமணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *