உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத் திருநாளும் கொண்டாடும் நாடுகளும்

2024 கட்டுரைகள் மற்றவர்கள் ஜனவரி 16-31, 2024

வை. கலையரசன்

தந்தை பெரியார் ஏற்றிப் போற்றிய ஒரு விழா பொங்கல் விழா. காரணம், பொங்கல் விழா ஒன்றுதான் மத சார்பற்ற அறுவடைத் திருநாளாகவும் புராணப் பின்னணி இல்லாததாகவும் இருக்கிறது.

இயற்கைக்கும், சூரியனுக்கும், விவசாயிகள் நன்றி சொல்லும் தினமாகப் பொங்கல் விழா இருக்கிறது.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’என்ற பழமொழி
அதனால்தான் வந்தது. அறுவடை முடிந்ததும் புத்தரிசியில் பொங்கல் வைத்து, உழவுக்கு உதவிய கால்நடைகளுக்குப் பொங்கல் பண்டிகை அன்று நன்றி சொல்வோம். அறுவடை தினத்தைக் கொண்டாடும் மரபு உலகெங்கும் உண்டு.

மியன்மார்: இந்நாட்டில் அனுசரிக்கப்படும் குளிர்கால அறுவடைத் திருவிழாவிற்கு மக்கள் நாடு முழுதும் கிடைக்கும் பழங்கள், காய் வகைகளைக் கொண்டு வருவார்கள்.
அரிசி, தேங்காய், இஞ்சி, வேர்க்கடலை, எள் ஆகியவற்றைப் பெரிய சட்டியில் கலந்து கட்டியான பசை போன்ற சோறு வகை தயாரிக்கப்படுகிறது. அதைத் தயாரிப்பது சுலபமல்ல; அதிகளவில் பலம் தேவை. திருவிழாவிற்கு வருபவர்கள் உட்கொள்வர்.

இங்கிலாந்து : இந்த விழா பிரிட்டனில் ‘அறுவடைவீடு’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் மாதம் கொண்டாடப்படும் இந்த விழா நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த விழா கோதுமை அறுவடை செய்யப்பட்ட பின்பும் ஆப்பிள்கள் கொய்யப்பட்ட பின்பும் கொண்டாடப்படுகிறது. கடைசியாக விளைந்த கோதுமையில் செய்யப்பட்ட ரொட்டியுடன், பழங்கள், பூக்கள் ஆகியவை பகிரப்படுகின்றன.

ரோம் : *ரோமானியர்கள் ‘செரிலியா’என்ற பெயரில் அறுவடை நாளைக் கொண்டாடு-கிறார்கள். பழங்காலத்தில் அங்கு நடை பெற்ற திராட்சை விவசாயத்தை நினைவுபடுத்தும் வகையில் நடைபெறும் விழா இது. இயற்கைக்கு நன்றி செய்யவே இந்த விழாவினை இன்றும் கடைப்பிடித்து நடத்துகின்றனர் ரோமானியர்கள்.

ஜப்பான் : ஜப்பானியர் உணவில் நம்மைப் போல நெல் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தில் நெல் அறுவடை முடிந்ததும் இந்த அறுவடைத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். ஒட்டோரி சாய் என்றும், ஒட்டோரி சாமா என்றும் அழைக்கப்படும் இந்நாளில் நள்ளிரவில் தொடங்கி 24 மணி நேரத்துக்கு தொடர்ந்து இசையை இசைத்தபடி ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி, பலத்த ஒலியுடன் இயற்கைக்கு நன்றி செலுத்துகின்றனர். திருவிழா நாள் வரை புதிதாக விளைவித்த நெல் அரிசியை யாரும் உண்ண மாட்டார்கள்.

அமெரிக்கா : ‘கிரீன் கார்ன் பெஸ்டிவல்’ என்று பூர்வகுடி அமெரிக்க மக்களால் கொண்டாடப்படும் அறுவடை விழா பல நாள்கள் தொடர்ந்து நடைபெறும். அறுவடைக்குத் தயாராக முதல் சோளம் தயாரானவுடனே வரும் பௌர்ணமியன்று இந்த விழா நடக்கும். தலையில் இறகுகள் மணிகள் ஆகியவற்றைச் சூடிக்கொண்டு பாரம்பரிய முறையில் அலங்கரிக்கப்பட்ட வண்ணமயமான உடைகளுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து உற்சாகமாக அறுவடையைக் கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் மக்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். நவம்பர் மாதம் இலையுதிர் அறுவடை காலத்தில் அதே மாதத்தின் 4-ஆம் வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அமெரிக்காவின் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா: சீனர்கள் நெல் மற்றும் கோதுமை அறுவடைக்குப் பிறகு விழா கொண்டாடுகின்றனர். இவ்விழாவின் போது ‘மூன் கேக்’ என்னும் பாரம்பரியமான பலகாரத்தை உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து உண்பார்கள். குடும்பத்துடன் இணைந்து இரவில் ‘நிலாவைப் பார்த்தல்’ என்னும் இந்த ‘மூன் கேக்’ திருவிழாவில் முட்டை, இறைச்சி, தாமரை விதை அனைத்தும் கேக்கினுள் ‘ஸ்டஃப்’ செய்து சமைக்கிறார்கள், அதைத்தான் அவர்கள் மூன் கேக் என்கிறார்கள்.

கொரியா: கொரியாவில் அறுவடை சீசன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கிறது. இந்த மாதங்களில் வரும் முழு நிலவு நாளில் இந்த பண்டிகை சூசாக் அல்லது அறுவடை நிலவுத் திருநாள் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உறவினர்கள் சூழ புதிதாக விளைந்த உணவுப் பொருள்கள் முன்னோருக்குப் படைக்கப்படுகின்றன. ‘சாங்பியான்’ எனப்படும் பிறை வடிவ அரிசிப் பலகாரம் இந்தப் பண்டிகையின்போது உண்ணப்படும் புகழ்பெற்ற உணவாகும்.

இஸ்ரேல் : யூத ஈப்ரு மாதமான திஷ்ரி மாதம் 15ஆம் நாள் சுக்கோத் என்ற அறுவடைத் திருநாள் இஸ்ரேலில் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ஒரு வார காலம் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அறுவடை விழாவான இது நன்றி தெரிவித்தல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக யூதர்கள், பழங்காலத்தில் செய்த திராட்சை அறுவடையை நினைவுகூரும் வகையில் ஏழு நாள்கள் இந்த அறுவடை விழாவைக் கொண்டாடுகின்றனர்.

ஜெர்மனி: ஜெர்மனியில் அறுவடை விழா அக்டோபர் விழா என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திராட்சை அறுவடையின் கடைசியில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது. மலைகளில் மேய்ச்சல் முடித்துவிட்டு ஆடு,மாடு மேய்ப்பவர்கள் வீடு திரும்பும் நாள் என்றும், திராட்சை விளைச்சலைக் கொண்டாடும் திருவிழா எனவும் இரண்டு விதமான அறுவடை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. வண்ணமயமான பேரணிகளும், நடனங்களும் இந்த விழாவில் முக்கிய இடம் பிடிக்கின்றன.

வியாட்நாம்: இங்கு ‘ரெட் திரங்து’ என்ற பெயரில் அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. வயலில் உழைத்த பெற்றோர்கள், அறுவடைக்குப் பிறகு தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த அறுவடை விழா.
*மலேசியாவில் நெல் விளைச்சலுக்கு நன்றி செலுத்தி அறுவடை விழா கொண்டாடப்படுகிறது. புதிய அரிவாள்களால் நெல்லை அறுவடை செய்து, வயல் வெளிகளில் கூடி இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
ஆப்ரிக்காவில் பெரும்பாலான நாடுகளில் பொதுவாக ஆகஸ்ட் மாதத்தில்
கொண்டாடப்படுகிறது. இது ‘ஹாம்(வள்ளி கிழங்கு) திருவிழா’ என்றும் ’ஹோமாவோ திருவிழா என்றும் அழைக்கப்
படுகிறது.
கானாவைச் சேர்ந்த இவி மக்கள் மழைக்காலம் முடிவுற்று சேனைக்கிழங்கு விளையும் தருணத்தைக் கொண்டாட சேனைக்கிழங்குத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். அங்குள்ள
மக்கள் அதிகமாகச் சேனைக்கிழங்கைச் சாப்பிடுவதுண்டு. கொண்டாட்டங்களின் கால அளவு வட்டாரத்தைப் பொறுத்திருக்கும்.

தாய்லாந்தில் சந்தாபூரி என்று அழைக்கப்படும் அறுவடைத் திருவிழாவில் விதவிதமான உருவங்களைக் கனிகளைக் கொண்டு உருவாக்கி அவற்றை ஊர்வலமாகத் தெரு வழியாகக்

கொண்டு வருவர். இவ்வூர்வலத்தில், மிக அரிதான விலை மிகுந்த துரியன் பழங்கள், ரம்புஸ்தான் பழங்கள் போன்றவையும் காணப்படும்.
சுவிட்சர்லாந்தில் அறுவடைத் திருவிழாவுக்கு உடைமரம் அல்லது குடைவேல் மரம் எனப்படும் புனித மரக்குச்சிகளை நட்டு வைத்து வளர்த்து தோட்டம் போடுவர்.
அர்ஜென்டினாவில் திராட்சைப்பழங்கள் மிக உயர்வானவையாகப் போற்றப்படுகின்றன.

இத்தாலியில், நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும். ஒலிவ மரத்தின் புதிய கனிகளைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் எடுத்து தேவாலயத்துக்குக் கொண்டு செல்வர். நிகழ்வு முடிந்ததும் ஊர் மக்கள் அனைவரும் ஒரு பெரிய அரண்மனையில் விருந்துண்பர். இப்போது, இது நடைமுறையில் இல்லை. வேளாண்மையின் முதல் பலன், கடவுளுக்குப் படைத்தல், மன்னனுக்கு மரியாதை செலுத்துதல் ஆகிய மூன்று கூறுகளும் மேனாடுகளின் அறுவடைத் திருவிழாவில் அமைந்திருப்பதைக் காண முடிகிறது. ♦