– சிறுகதை – நல்ல நேரம்? – ஆறு. கலைச்செல்வன்

2023 சிறுகதை செப்டம்பர் 16-30, 2023

-ஆறு. கலைச்செல்வன்

‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை” என்று அரசியல் தலைவர்கள் மேடைகளில் முழங்குவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம்.
“காஷ்மீரில் ஒருவனுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் உள்ளவனுக்கு நெறி கட்டுமாம்” என்ற கூற்றையும் கேள்விப்
பட்டிருக்கிறோம்.

காஷ்மீரை நினைத்தால் கூடவே “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்”’ என்ற பாடலும் நினைவுக்கு வரும்.
தமிழ்த் திரைப்படங்கள் பல காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும்.

பழைய தமிழ்த் திரைப்படம் “தேன் நிலவு” பல காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். அப்போது காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் படம் சரியாக எடுக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பிரிண்ட் போடும் வசதிகள் இல்லையாம். அதனால் படக்குழுவினர் வாரத்தில் இரண்டு நாள்கள் இயக்கப்படும் டக்கோட்டா விமானத்தில் சென்னைக்குப் படச்சுருளை அனுப்புவார்களாம். சென்னையில் பிரிண்ட் போட்டு மீண்டும் சிறீநகர் கொண்டு வந்து ஒரு கிராமத்தில் இருந்த சினிமா

தியேட்டரில் போட்டுப் பார்த்து சரியாக உள்ளதா எனப் பார்ப்பார்களாம்.

இதய வீணை படத்தில் சில காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர் என்ற பாடல் பலராலும் விரும்பப்பட்ட பாடல்.

‘ரோஜா’ படம் முழுவதும் காஷ்மீர்தான்.

‘உத்தமன்’ படமும் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும்.

காஷ்மீர் பற்றிய இந்தச் செய்திகளை யெல்லாம் நினைவு கூர்ந்தார் ஆழியன்.
கன்னியாகுமரியைக் கண்ட அவருக்குக் காஷ்மீர் சென்று வரவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

ஆண்டுக்கு ஒருமுறை சுற்றுலா சென்று வருவது அவருக்கு வழக்கம். பல வெளிநாடு
களுக்குச் சுற்றுலா சென்று வந்துள்ளார். பெரும்பாலும் தனியாகவே செல்வார். கடந்த ஆண்டு சிம்லா, மணாலி, டில்லி ஆகிய ஊர்களுக்குத் தனது துணைவியாரையும் அழைத்துச் சென்றார்.

இந்த ஆண்டும் துணைவியார் வனிதா வரவிரும்பினால் அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்தார். ஆனால், கடந்த ஆண்டு சுற்றுலாவில் வனிதா குளிரால் மிகவும் துன்பப்பட்டார். ஒவ்வாமை நோய் இருப்பதால் அதிக சில்லிப்பு ஒத்துக்கொள்ளாது. அதுவும் காஷ்மீர் குளிர் சுத்தமாக ஒத்துவராது. மேலும் செல்லும் வழியில் பஞ்சாப் அமிர்தசரஸ் பொற்கோயில், ஜாலியன்வாலாபாக், வாகா எல்லை இவற்றையெல்லாம் பார்க்க விரும்பினார். வரலாற்றுப் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்ற அவர் வரலாற்றுச் சுவடுகள் தாங்கிய அனைத்து இடங்களையும் பார்க்க விரும்பினார். விரும்பியதோடு மட்டுமல்லாமல் அந்த இடங்களையெல்லாம் தன் வழியில் ஆய்வு செய்து புத்தகம் எழுதவும் மிகவும் ஆசைப்பட்டார்.

ஆனால், வனிதாவிற்கு வழியில் முக்கியமான கோயில்கள் இருந்தால் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்கான சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்ய வற்புறுத்தினார் வனிதா. ஆழியன் அதற்கு உடன்படவில்லை. மறுத்துவிட்டார். மேலும் தனக்கு மட்டும் காஷ்மீர் செல்ல பணம் கட்டிவிட்டார். வனிதா சமாதானமான பிறகு பணம் கட்டிவிடலாம் என்பது அவரது எண்ணம்.

“என்னை சுற்றுலாவுக்கு அழைச்சிக்கிட்டுப் போகணும்கிற எண்ணம் உங்களுக்கு இல்லையா?” என்று ஒருநாள் கேட்டார் வனிதா.

“கண்டிப்பா அழைச்சிகிட்டுப் போறேன். ஆனால், நாம் போறது வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கவும் இயற்கை அழகை ரசிக்கவுமாகத்தான் இருக்கவேணும். கோயில் குளம்னு சுத்தக்கூடாது. நம்ம ஊரில் இல்லாத கோயில்களா? காஷ்மீரில் பார்க்க வேண்டிய இடங்கள் எவ்வளவோ இருக்கு.

“சரி, சரி. நான் சொல்ற முக்கியமான கோயிலை மட்டும் காட்டுங்க. எனக்கும் டிக்கெட் போடுங்க.”
வனிதா இவ்வாறு சொன்னதும் சரியெனத் தலையசைத்த ஆழியன் வனிதாவுக்கும் உடனே பணம்கட்ட முனைந்து கணினி முன் அமர்ந்தார்.

அப்போது ஒரு பூனை குறுக்கே ஓடியது. உடனே பதறிய வனிதா “இப்ப பணம் அனுப்ப வேணாம். நாளைக்கு அனுப்புங்க”, என்றார்.

“ஏன்?”, என்பது போல் அவரைப் பார்த்தார் ஆழியன்.

“பூனை குறுக்கே ஓடுச்சே. நீங்க பார்க்கலையா?” என்றார் வனிதா.

“பூனை எலியைப் பார்த்திருக்கும். அதைப் பிடிக்க அது ஓடியிருக்கும். பணம் கட்டுவதற்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என்று பேசியபடியே கணினி வழியாக பணம் கட்டிவிட்டார் ஆழியன்.

“நான் சொல்றதைக் காதில் வாங்கிக்காமல் பணம் கட்டிட்டீங்களா? அதுவும் இராகு காலத்தில்”, என்று சலிப்புடன் கூறினார் வனிதா.
சுற்றுலா செல்வதற்கு ஒரு வாரம் முன்பாக ஆழியனின் நண்பர் ஆளவந்தார் ஆழியன் வீட்டிற்கு வந்தார். அவர் வில்லங்கமாக ஏதாவது பேசுவது வழக்கம். இன்றும் ஏதாவது பேசி தனக்கும் வனிதாவுக்கும் மனத்தாங்கலை ஏற்படுத்திவிடுவாரோ எனப் பயந்தார் ஆழியன்.

“சுற்றுலா போறீங்க போலிருக்கு” என்று பேச்சைத் தொடங்கினார் ஆளவந்தார்.’

“ஆமாம், காஷ்மீர் செல்கிறோம். வழியில் அமிர்தசரஸ் செல்கிறோம்” என்றார் ஆழியன்.

“வருஷா வருஷம் வெளிநாட்டுக்குப் போயிட்டு வருவாய். அதுவும் தனியாகத்தான் போவாய். இப்போ நம் நாட்டுக்குள்ளேயே சுற்றுலா போகிறாய். அதுவும் துணைவியாரையும் அழைச்சிக்கிட்டு. சந்தோஷமா போயிட்டு வாங்க,” என்றார் ஆளவந்தார்.

“நீ பணத்தைச் சேத்து வச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறே? நீயும் உன் துணைவியாரை அழைச்சிக்கிட்டு சுற்றுலா வாயேன்” என்று கேட்டார் ஆழியன்.

“அதெல்லாம் எனக்கு வேணாம்பா. நீயே போயிட்டு வா. வெளிநாடுகளுக்கெல்லாம் சுற்றுலா போனாயே. இங்கு இல்லாத சிறப்பு அங்கு என்ன இருக்கு? பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் பற்றி பெருமையா ஒரு நாள் சொன்னாய். நம்ம தஞ்சாவூர் கோயிலைவிட அது சிறப்பானதா?” என்று பேச ஆரம்பித்தார் ஆளவந்தார்.

“நண்பா, நீ சொல்றது உண்மைதான். தஞ்சைப் பெரிய கோயில் தமிழனின் சிற்ப _ கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. சிறப்பான அமைப்பு. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதன் கட்டுமானத்தில் சிறு கீறல்கள்கூட விழவில்லை என்பது அதன் சிறப்பு. பைசா கோபுரத்திற்கும் பல சிறப்புகள் உண்டு. முக்கியமாக வானவியல் அறிஞர் கலீலியோ கலிலி பிறந்த ஊர் பைசா நகரமாகும். அவர் புவி ஈர்ப்பு விசையை ஆராய்வதற்காக பைசா கோபுரம் மேலே ஏறி இரும்புக் குண்டுகளை கீழே போட்டு சோதனை செய்தாராம். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்கது பைசா கோபுரம். மேலும் அங்கு முக்கியமாக எல்லா மக்களும் ஜாதி மத வேறுபாடு இல்லாமல் செல்லலாம்.”

“கலீலியோ கலிலி பிறந்த ஊர் பைசா நகரமா?” என்று கேட்டார் ஆளவந்தார்.

“ஆமாம். சூரியமய்யக் கொள்கையை வகுத்தளித்தார் கோப்பர் நிக்கஸ் என்ற போலந்து
நாட்டு அறிஞர். அந்தக் கொள்கையை ஏற்று நிரூபித்தவர் கலீலியோ கலிலி,” என்று கூறி முடித்தார் ஆழியன்.
இதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பவில்லை ஆழியன். ஆளவந்தாரை அனுப்பிவிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கலானார் ஆழியன்.

சுற்றுலா செல்லும் நாள் வந்தது. ஆழியனும் வனிதாவும் சென்னைக்குப் புறப்பட்டனர். சென்னை விமான நிலையம் சென்றால் அங்கு அவர்களோடு சுற்றுலாவிற்குச் செல்லும் மற்றவர்களும் குழுமி இருப்பார்கள். வழிகாட்டியும் அங்கு இருப்பார். அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு விமானத்தில் புதுடில்லிக்கு அழைத்துச் செல்வார். அங்கிருந்து பேருந்தில் முதலில் பஞ்சாப் சென்று, பிறகு காஷ்மீர் அழைத்துச் செல்வார். இப்படித்தான் சுற்றுலா ஏற்பாட்
டாளர் பயணத் திட்டத்தை வகுத்திருந்தார்.

ஆழியனும் வனிதாவும் தேவையான பொருள்களையெல்லாம் இரண்டு பெட்டிகளில் எடுத்துக் கொண்டு சென்னை செல்ல பேருந்தில் ஏறி உட்கார்ந்தனர். ஆழியன் காஷ்மீர் செல்லப்போவதை நினைத்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ஆனால் வனிதாவின் மனதில் பல எண்ணங்கள் தோன்றியபடி இருந்தன. இராகு காலத்தில் சுற்றுலாவிற்குப் பணம் கட்டியது, பூனை குறுக்கே ஓடியது, தாமதித்துப் பணம் கட்டியது போன்றவை எல்லாம் அவரது மனதில் நிழலாடி அவரை அச்சம் கொள்ளச் செய்தபடியே இருந்தன.

பேருந்து சென்னை நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தது. வனிதா பேருந்தில் சன்னல் பக்கம் அமர்ந்தபடி வெளியே பார்வையை செலுத்தி சிந்தனையில் ஆழ்ந்தார்.

பேருந்து கடலூர் செல்லும் சாலையில் செல்லும்போது அங்கு புதியதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் பேருந்து அடிக்கடி மாற்றுப் பாதையில் சென்றது. இதனால் பேருந்து குலுங்கியபடியே சென்றது. எதிரே சல்லிக்கற்களை ஏற்றியபடி டிப்பர் லாரிகள் அடிக்கடி வந்தன. அவற்றைப் பார்த்து மிகவும் பயந்தார் வனிதா.

திடீரென பயங்கர சத்தம். பேருந்து தாறுமாறாக ஓடி சாய்ந்த நிலையில் ஓரிடத்தில் நின்றது. வனிதா உடல் முழுவதும் கண்ணாடித் துகள்கள். கண் இமைக்கும் நேரத்தில் எதிரே வந்த டிப்பர் லாரி பேருந்தின் பின் பக்கத்தில் சாய்வாகச் சென்று உரசியதால் ஏற்பட்ட விபத்து. பேருந்தில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கினர். ஆனால் நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பில்லை. பின் பக்கம் உரசியதால் பேருந்தின் கண்ணாடிகள் மட்டும் உடைந்து சிதறின அவ்வளவே.

பேருந்து ஓட்டுநரும், டிப்பர் லாரி ஓட்டுநரும் கீழே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற வாக்குவாதம் பிறகு சமாதானமாகியது. ஓட்டுநரும், நடத்துநரும் கண்ணாடித் துகள்களை அகற்றியபின் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

வனிதாவின் மனதில் பயம் சூழ்ந்து கொண்டது.

“ஏங்க, எனக்கு ஒரே பயமா இருக்கு. இராகு காலத்தில் பணம் கட்டினீங்க, பூனை குறுக்கே ஓடியது, ஆரம்பத்தில் நீங்க மட்டும் தனியா போகணும்னு நெனைச்சீங்க, இப்ப லாரி மோதி விபத்து நடந்துபோச்சு. என்ன பண்ணலாம்?” என்று கேட்டார் வனிதா.

“வனிதா, இது ஒரு விபத்து. அவ்வளவுதான். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. இராகு காலம், பூனை என்பதெல்லாம் மூடநம்பிக்கைகள். முதல்ல நீ அதையெல்லாம் விட்டொழிக்கணும். அதையே நினைச்சிகிட்டு இருக்காதே,” என்று கேட்டுக்கொண்டார் ஆழியன்.

சென்னை விமான நிலையத்தை அடைந்த அவர்கள் மற்ற சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து வழிகாட்டி உதவியுடன் புதுதில்லியை
அடைந்து, அங்கிருந்து பஞ்சாப் அமிர்தசரஸ் சென்றனர். அங்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடத்தைப் பார்த்தனர்.

“1919ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் திரண்டனர். அப்போது இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் படையினரை அழைத்து வந்துமுன் அறிவிப்பு ஏதுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். பலர் நடுவில் இருந்த கிணற்றில் குதித்து மாண்டனர். சுவர்களில் குண்டு துளைத்த அடையாளங்கள் இவை”, என்று வனிதாவிடம் அந்த இடம் பற்றி விளக்கினார் ஆழியன்.
வனிதா அவற்றைப் பார்க்க ஆர்வம் காட்டினாலும் அவர் எண்ணத்தில் அடிக்கடி வந்து போனவை இராகு காலமும், பூனை குறுக்கே ஓடியதும்தான். அமிர்தசரஸ் பொற் கோயிலைப் பார்க்கவும் ஆர்வம் காட்டவில்லை. அவர் விரும்பிய வைஷ்ணவதேவி கோயிலைப் பார்க்க வேண்டும் என்பதில் மட்டுமே ஆர்வம் காட்டினார்.

பிறகு வாகா எல்லையும் சென்றனர்.

பஞ்சாப் சுற்றுலா முடிந்ததும் காஷ்மீர் தலைநகரம் சிறீநகரை அடைந்தனர். காஷ்மீர் குளிரை மிகவும் ரசித்தார் ஆழியன். தால் ஏரியில் படகு சவாரி மேற்கொண்டபோது உற்சாகம் அவருக்குப் பொங்கியது. ஆனாலும் வனிதாவுக்கு ஒரே பயம். பேருந்து விபத்து நடந்தது போல் எங்கே படகு கவிழ்ந்துவிடுமோ எனப் பயந்தார்.

“இராகு காலத்தில் பணம் கட்ட வேணாம்னு சொன்னதை, இவர் கேட்கலையே”, என்று அப்போதும் ஆதங்கப்பட்டார்.

மறுநாள் குல்மார்க் பனிமலையைப் பார்க்கவேண்டும் என்பது ஏற்பாடு. சிறீநகரிலிருந்து கோடை வாழிடமான குல்மார்க் 52 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் பழைய பெயர் கவுரி மார்க் என்பதாகும். யுசூப் ஷா சாக் என்ற மன்னர் இதன் பெயரைக்குல் மார்க் என்று மாற்றினார். குல்மார்க் என்பதற்கு பூக்களின் இடம் என்று பொருள். இது 8,830 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்தச் செய்திகளையெல்லாம் பேருந்தில் சிறீநகரிலிருந்து குல்மார்க் செல்லும்போது மனதில் அசைபோட்டபடியே பயணித்தார் ஆழியன். வனிதா எதுவும் பேசாமல் பார்வையை வெளியே செலுத்தியபடி பயணித்தார்.

ஓரிடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அதற்குப் பிறகு தனியாக வாகனம் ஏற்பாடு செய்து கொண்டு மலைமீது செல்ல வேண்டும். அவ்வாறே அனைவரும் பயணித்தனர்.

அந்தப் பயணத்திற்குப் பின் ஓரிடத்தில் குளிரைத் தாங்குவதற்கான ஆடைகள், காலணிகள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு குதிரையின்மீது அமர்ந்து பயணிக்க வேண்டும்.

வனிதா இப்படி ஒரு பயணத்தை எதிர்பார்க்கவில்லை. பயந்தபடியே குதிரையின் மீது அமர்ந்தார். ஆனால், அவரைவிட வயதானவர்கள் எல்லாம் மிகவும் மகிழ்வாக பதற்றம் ஏதுமின்றி குதிரைகள் மீது ஏறி அமர்ந்தனர்.

ஆழியனும், வனிதாவும் குதிரைகள்மீது உட்கார்ந்து அருகருகே பயணம் செய்தனர். ஆழியன் எதிரே தெரிந்த இயற்கைக் காட்சிகளை வெகுவாக ரசித்தார்.
குதிரைகள் செல்லும்பாதை மிகவும் கரடுமுரடாக இருந்தது. சிதறிக்கிடக்கும் பாறைகளுக்கு இடையே மெல்ல மெல்ல குதிரைகள் நடந்தன. சில இடங்களில் சிற்றோடைகள் குறுக்கிட்டன. கிடுகிடு பள்ளத்தாக்குகளும் காணப்பட்டன.
அந்தக் குளிரிலும் வனிதாவுக்கு வியர்த்தது.

“ஏங்க, வரும் போதே சகுனம் சரியில்லை. பஸ்சும் விபத்துக்குள்ளாச்சு. பணமும் இராகு காலத்தில் கட்டினீங்க. என்ன ஆகப் போகுதோ!”, எனப் புலம்பியபடியே இருந்தார் வனிதா.

“நாம் வந்த நோக்கத்தையே நீ மறந்துட்டே. அதோ அந்தப் பனி படர்ந்த மலைகளைப் பார். மேகக் கூட்டங்களைப் பார். மற்ற சிந்தனைகளைத் தவிர்த்துவிடு”, என்று புத்திமதி கூறினார் ஆழியன். இனி மேலாவது மூடநம்பிக்கைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு இயற்கையின் துணைகொண்டு கவனமாகச் செயல்பட்டு பொறுமையைக் கையாண்டு வாழக் கற்றுக்கொள். ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் நல்ல நேரம்தான். இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.” நல்வாய்ப்பாக நான் உன் அருகிலேயே வந்த காரணத்தால் உடன் உன்னை சிறீநகர் மருத்துவமனையில் முதல் உதவி செய்துகொண்டு அழைத்து வந்தேன். வேண்டாம் மூடநம்பிக்கைகள்” இவ்வாறு நாளுக்கு நாள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து குணமாகி வந்த வனிதாவிடம் கூறினார் ஆழியன்.
வனிதா பதில் ஏதும் பேசவில்லை. ஆனால் ஆழியன் கூறியவை உண்மை என்பதை மட்டும் உணர்ந்தார். ♦