கட்டுரை – பகத்சிங் பார்வையில் மதம்!

2023 கட்டுரைகள் செப்டம்பர் 16-30, 2023 மற்றவர்கள்

– சிகரம்

இருபத்து நான்கு வயதுக்குள்ளாகவே பகத்சிங் எல்லா சிக்கல்கள் குறித்தும் நுட்பமாகச் சிந்தித்துக் கருத்துகள் கூறி உள்ளார். அதே வகையில் மதமும் அரசியலும் குறித்தும் விரிவாக 1928 மே மாத ‘கீர்த்தி’ இதழில் எழுதியுள்ளார்.

மதம் மக்களிடையே கெட்ட இரத்தத்தைப் பாய்ச்சவில்லையா? முழுமையான சுதந்திரத்தை நோக்கி நாம் போவதை மதம் தடுக்கவில்லையா?
எல்லாம் வல்லவர் கடவுள் என்றும், நாம் ஒன்றுமில்லையென்றும் குழந்தைகளிடம் சொல்லப்படுவது அவர்களைப் பலவீனமாக்குமல்லவா? அதன் மூலம், அவர்களின் தன்னம்பிக்கை கெடும் அல்லவா? என்று அறிவுசார்ந்த வினாக்களை எழுப்பினார்.

மதம் நம்முடைய பாதையில் தடைக்கல்லாகவே உள்ளது. நமது மக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் அல்லர். அனை
வரும் சமமாக இருக்க விரும்புகிறோம். தீண்டாமை கூடாது; உயர்வு தாழ்வு கூடாது என்று விரும்புகிறோம். இதற்கு மதம் ஒத்து வருகிறதா? இந்து மதம் வேறுபாடுகளைக் கற்பிக்கிறது.

சுவாமி தயானந்தர் தீண்டாமையைப் பற்றி பேசுகிறார். ஆனால், அவரும் நான்கு வர்ணங்களைத் தாண்டிச் செல்லவில்லை.
குருத்வாராக்களில் சீக்கியர்கள் கல்சா ராஜ்யத்தைப் பற்றிப் பேசுகின்றனர். வெளியே வரும்போது அவர்கள் பஞ்சாயத்து ராஜ்யத்திற்கு ஆதரவாக இருக்கின்றனர். இந்த இரு பார்வைக் கோளாறுகளுக்கு இடையில் எப்படி நாம் இணக்கம் காண முடியும்?

இஸ்லாத்தின்மீது நம்பிக்கையில்லாதவர்களை (கபீர்) கொன்றுவிடு என்று மதம் சொல்கிறது. ஆனால், நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்!
மதம் என்னும் மலை நம் பாதையைத் தடுத்துக் கொண்டிருக்கிறது.

இரண்டு இராணுவங்களும் ஒன்றுக்கொன்று எதிர் எதிராக நின்று போர் துவங்கும் நேரத்தில், முகமது கோரியின் கதையில் வருவது போல, யாராவது பசுக்கள், பன்றிகள், கிரந்தம், வேதங்கள், குரான் முதலானவற்றை நம் முன்னால் கொண்டு வந்தால், நாம் உண்மையான மதவாதிகளாய் இருந்தால், பின்வாங்கி நாம் வீட்டிற்குப் போய்விடுவோம்.

ஹிந்துக்களால் ஒரு பசுவைச் சுட முடியாது; முஸ்லிம்களாலும், சீக்கியர்களாலும் ஒரு பன்றியைச் சுட முடியாது. இதிலிருந்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்? மதத்திற்கு எதிராகச் சிந்திப்பதற்கு நாம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம் என்பதுதானே அந்த முடிவு? மதக் கொள்கைகளுக்கு எதிராகச் செயல்பட்டாக வேண்டும் என்பதுதானே உண்மை?

மதம் இல்லாவிட்டால் உலகத்தில் கேடுகள், குழப்பங்கள் மலியும் என்கின்றனர். ஆனால், உண்மையில் கேடுகளும், குழப்பங்களும் மதங்களாலேயே உருவாகின்றன.

இந்துவும் இஸ்லாமியரும் பிரச்சனைகளை விவாதிக்கும்போது, கோபத்தோடும், வேகத்தோடும் மோதிக் கொள்கின்றனர். இரண்டு தரப்பினரும் தங்களது அறிவுக் கூர்மையையும், புரிந்துகொள்ளும் திறனையும் வீட்டில் பூட்டி வைத்துவிட்டுத்தான், விவாதத்திற்கே வருகின்றனர்.
ஒரு மசூதியின் முன்பாக இசை முழங்கப்படக் கூடாது என்று இஸ்லாத்தில் இருக்கிறது. நாம் என்ன செய்வது? இசை முழக்கத்துடன் அப்பாதையைக் கடந்து செல்ல மக்களுக்கு உரிமையுள்ளது. ஆனால், மதம் கூடாது என்கிறது.

ஒரு மதத்தில் பசுவைப் பலியிடுவது முக்கியம். இன்னொரு மதம் கூடாது என்கிறது; பசுவை வணங்குகிறது. இதற்கு என்ன செய்யலாம்?
மதத் தத்துவங்களும், சடங்குகளுமே நாட்டின் ஒற்றுமையையும், ஒன்றுபட்ட தேச விடுதலைக்கான போராட்டத்தையும் சீர்குலைக்கின்றன.
வேற்றுமையையும், குழப்பத்தையும், குருட்டு நம்பிக்கையையும் வளர்ப்பதுதான் மதம் என்றால் அந்த மதம் எதற்கு?

இந்த நாட்டின் விடுதலைக்கு ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்றாலும், முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள் திரண்டெழுந்து சமதர்ம நிலையை, சம உரிமை நிலையைப் பெற வேண்டும் என்றாலும், மதத் தடைகளைத் தகர்த்தெறிந்து, அறிவுப்பூர்வமான மனிதப் பற்றுடன் கூடிய சிந்தனை மற்றும் செயல்பாடுகளுமே கட்டாயம்! என்று தனது அறிவுப்பூர்வமான சிந்தனைக் கருத்துகளுடன் வினாக்களும் தொடுத்துள்ளார், பகத்சிங். ♦