பெண்ணால் முடியும் – விண்வெளியில் பறக்க பயிற்சிபெறும்

2023 பெண்ணால் முடியும் மே-16-31,2023

உதயகீர்த்திகா

குழந்தைப் பருவ வளர்ச்சி நிலைகளில், குழந்தைக்கு நிலவைக் காட்டி சோறு ஊட்டுவார் அன்னை. நிலவின்மீது ஓர் ஈர்ப்பு அனைவருக்குமே உருவாவது இயற்கைதான். சகபள்ளி மாணவர்கள் பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் இவர் ராக்கெட்,

ஏரோபிளேன்ல பறக்கணும்னு தனது சிந்தனைச்சிறகை விரித்து எதிர்காலத்தில் சாத்தியமாக்கியுள்ளார், சாமானிய குடும்பப் பின்னணியைக் கொண்ட சாதனைப் பெண் உதயகீர்த்திகா.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பெண்ணுரிமைச் சிந்தனை, பெண் ஆண் சமம். அனைத்துத் துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டும் எனும் சிந்தனையை தமிழ்நாடு முழுவதும் விதைத்தவர். திராவிட நாட்டில், தமிழ் நாட்டின் தென்மேற்குப் பகுதியின் எல்லையில் உள்ள தேனியிலிருந்து விண்வெளிக்குச் செல்லப்போகும் தமிழ்ப்பெண். சிறு வயதிலிருந்தே தனது அந்தத் கனவை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, நனவாக்கி அடைய தினமும் முயன்று வருகிறார். விண்வெளி வீராங்கனை உதயகீர்த்திகா.

விண்வெளியில் பறக்கவேண்டும் என்ற எண்ணம் இவரின் சிந்தனையில் தோன்றவே, அதனைச் செயல்படுத்தும் ஆற்றலை உருவாக்கிக்
கொண்டுள்ளார். கீர்த்திகாவின் பெற்றோர் தாமோதரன் (டைபிஸ்ட்), தாய் அமுதா. தேனி மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.
விண்வெளி வீராங்கனையாக பயிற்சி பெற்றுவரும் உதயகீர்த்திகா 24 வயது பயிற்சி மாணவி ஆவார். இவர் 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது ‘இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (மிஷிஸிளி) இஸ்ரோ நடத்திய “சுற்றுச்சுழல் பாதுகாப்பில் விண்வெளி ஆய்வின் பங்கு குறித்த கட்டுரைப் போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு அளவில் முதல் மாணவி-யாகத் தேர்வாகியுள்ளார். அதற்கு, ராக்கெட் பாகங்களை உற்பத்திசெய்கின்ற ‘‘மகேந்திர கிரி’’ ஆய்வு மய்யத்தில் சந்திரயான்1 செயற்கைக்கோள் வடிவத்தில் கேடயம் கொடுத்துள்ளார்கள். பன்னிரண்டாம் வகுப்புபடிக்கின்றபோது அப்போட்டியில் கலந்து கொண்டு முதல் மாணவியாக வந்துள்ளார். அதற்கு
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் வடிவத்தில் பரிசு கொடுத்துள்ளார்கள். இவையெல்லாம் இவரின் ஆர்வத்தைத் தூண்டி, விண்வெளி ராக்கெட் சயின்ஸ், சேட்டிலைட் மீது ஆர்வம்கொள்ளச் செய்துள்ளது.

விண்வெளிக்குப் போக என்ன படிக்கவேண்டும் என்று தேடி உக்ரைன் ‘கார்க்கிவ் விமானப்படை பல்கலைக்கழகத்தில்’ ஏர்கிராஃப்ட் டெக்னீசியன் இன்ஜினியரிங் படிப்பு 4 வருடம் படித்து தேர்ச்சியாகினார். விண்வெளி வீரர் ஆகணும்னா பலத் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். போலந்து இராணுவ ஏவியேஷன் இன்ஸ்ட்டியூட்டில், விண்வெளி வீரர்களுக்கான சிறப்புப் பயிற்சி எடுத்துள்ளார். இராணுவ விமானப்படையினருக்குப் பயிற்சி தருகிற மய்யத்தில் சாதாரண குடிமகளாக அங்கு பயிற்சி பெற்ற முதல் பெண் இவர்தான். அடுத்து பைலட் ட்ரெயினிங் எடுக்கவும் உள்ளார்.

விண்வெளி ஆய்வுகள் பற்றி எதிர்வரும் மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் ‘என் வழி விண்வெளியில்’ புத்தகத்தை இவரும் இவரின் தந்தையும் இணைந்து எழுதி வெளியிட்டுள்ளனர். விண் வெளியில் சாதிக்க தன் கடின உழைப்பால் சாத்தியப்படுத்தியுள்ளார் வீரப்பெண் உதயகீர்த்திகா!

புரட்சிப் பெண்மணிக்கு வாழ்த்துகள்!