கட்டுரை – மனபலமும்! பலவீனமும்!!

2023 கட்டுரைகள் மே-16-31,2023

– வி.சி.வில்வம்

மனபலம் என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது! மன பலகீனம் என்பது பிறர் நமக்கு ஏற்படுத்துவது!
பகுத்தறிவும், சிந்திக்கும் திறனும் இருப்பவர்கள் அதிகமான மன பலத்தைப் பெறுவர்! மற்றவர்கள் பிறரால் அடிக்கடி மன பலகீனம் அடைவர்!
உதாரணமாக பார‘தீய’ ஜனதா கட்சியின் பிரச்சார முறை இதுதான்! அவர்களுக்கென்று எந்தக் கொள்கையும் இல்லாததே இதற்குக் காரணம்.
தகவல்களைப் பொய்யாக உருவாக்கி,அதற்குள் பிரமிப்பைச் செலுத்தி, கூடவே மூளைச் சலவை செய்து, ஒரு கூட்டத்தை நம்ப வைத்துவிடுவார்கள். பிறகுஅதுவே அவர்கள் கட்சியின் பலமாக மாறிவிடும்.தொடர்ந்து உருவாக்கப்
படும் பொய்களை இந்த மனபலம் கொண்டவர்கள் வெறித்தனமாய்ப் பரப்பி மகிழ்வர்.

அதேபோல பிற கட்சித் தொண்டர்களிடம் மன பலகீனத்தை ஏற்படுத்தி, தம் சொந்தக் கட்சியையே சந்தேகப்பட வைப்பது! ஆக சித்தாந்த எதிரிகள், தங்கள் ஆதரவாளர்களுக்குப் மன பலத்தையும், எதிரிகளுக்கு மன பலகீனத்தையும் உருவாக்குபவர்கள்!
போர் புரிய ஆயுதங்கள் எவ்வளவு முக்கி-யமோ, அதுபோலவே எதிரிகளுக்கு மன பலகீனத்தை ஏற்படுத்துவதும் நடைமுறையாய் இருக்கிறது! ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆண்டாண்டு காலமாகச் செய்து வரும் உத்தி இதுதான்!

“உண்மை புறப்படும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்’’, என்பார்கள்! வன்முறை மீது நம்பிக்கை கொண்டவர்களே இந்தப் பொய்யின் நாயகர்கள்.
2002ஆம் ஆண்டு குஜராத்தில் “சபர்மதி எக்ஸ்பிரஸ்” கொளுத்தப்பட்டதன் உண்மை வருவதற்கு முன்பே, அதன் பொய் முக்கால் இந்தியாவைக் கடந்துவிட்டது. காந்தியைச் சுட்டவர் இஸ்மாயில் என்பதும், வாஞ்சிநாதன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்பதும், ஒய்.ஜி.மகேந்திரன் நகைச்சுவை நடிகர் என்பதெல்லாம் இப்படி வலம் வந்த பொய்களே!

இதுபோலத்தான் ஜாதி வெறி வீரர்களும் உருவாக்கப்படுகிறார்கள். சில ஜாதியினரை எதற்கும் அஞ்சாத வீரப் பரம்பரையாக (?) கட்டமைக்கின்றனர். குறிப்பிட்ட ஜாதியில் ஓரிருவர் கொலை செய்து சிறை சென்றிருப்பர். அந்த ஓரிருவரை வைத்தே “நாங்களும் ரவுடிதான்”
என ஒட்டுமொத்த ஜாதியும் வலம் வரும்!

மக்களுக்கு மனரீதியான பாதிப்பை உண்டாக்குவது தொடர்பான ஒரு சிறுகதை!
அது ஒரு சிற்றூர்.

அதன் ஒரு பகுதிக்கு யாருமே செல்லமாட்டார்கள். காரணம் அங்கேதான் ஒரு திருடன் வாழ்ந்து வந்தான். அவன் பல கொலைகள் செய்தவன், அந்தப் பக்கம் யார் சென்றாலும் வழிப்பறி செய்பவன் என்பதால் அந்த ஊரே அச்சத்தில் அப்பகுதிக்குச் செல்லாமல் இருக்கும்.
பலப்பல ஆண்டுகளாக யாருமே பயன்படுத்-தாத காரணத்தால் அந்த இடமே பாழடைந்து போயிருந்தது. திருடனின் கொடூரச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் மக்கள் பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் வெளியூரில் இருந்து வந்த இளைஞன் ஒருவன், திருடன் இருந்த திசை நோக்கி நடந்தான். உடனே ஊர் மக்கள் அந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தினர். அது ஓர் ஆபத்தான பகுதி என்றும், உயிரோடு திரும்ப முடியாது என்றும் எச்சரித்தனர்.
ஆனால், அந்த இளைஞன் எதையும் கேட்பதாக இல்லை. திருடன் இருந்த பகுதியை நோக்கி நடந்தான். ஒரு கட்டத்தில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. சாலைகள் முடிவுற்றன. செடிகளும், கொடிகளும், முட்புதர்களும் காணப்பட்டன. தைரியத்தை இழக்கத் தொடங்கினான் அந்த இளைஞன். எனினும் அந்த அடர்த்தியான பகுதிக்குள் கணிசமாக நுழைந்திருந்தான்.

என்ன செய்வது என யோசிக்கத் தொடங்-கினான். கிராமத்து மக்கள் சொன்னதைக் கேட்காமல் வந்துவிட்டோமே என வருந்தினான். எனினும், அவனது கால்கள் சிறிது, சிறிதாக முன்னேறிக் கொண்டே இருந்தன.

அப்போதுதான் அந்த வித்தியாசமான சத்தத்தை உணரத் தொடங்கினான். புயல் காற்றின் போது எழுமே, அப்படியான ஓர் ஓசை. நான்கு புறமும் சுற்றிப் பார்த்ததில் பெரிய ஆலமரம் ஒன்று கண்ணில் பட்டது. அங்கிருந்துதான் பயமுறுத்தும் அந்தச் சத்தம் கிடைத்தது. அந்த இடமே இவனுக்கு மேலும் பயத்தை அதிகரிக்கச் செய்தது. அப்போதுதான்,”டேய்! யார்ரா நீ?’’ என்கிற பெரும் அதட்டல் சத்தம்.
சப்தநாடியும் ஒடுங்கியது அந்த இளைஞனுக்கு! நின்றுவிட்டான்! ஒரு அடிகூட நகரவில்லை. “என்ன தைரியம் இருந்தால் உள்ளே வருவாய்? உன்னைக் கொலை செய்யப் போகிறேன்”, என்றெல்லாம் மிரட்டியது அந்தக் குரல்.

பயந்து நின்ற அந்த இளைஞனுக்கு அப்போதுதான் சிறிய சந்தேகம் பிறந்தது.‌ அச்சுறுத்தும் குரல் வருகிறதே தவிர, அங்கு எந்த மனிதனும் தென்படவில்லை. இப்போது ஆலமரத்தை நோக்கி மேலும் நகர்கிறான் அந்த இளைஞன்.
இவன் நெருங்க, நெருங்க அந்த மிரட்டல் குரல் மேலும் கதறுகிறது; அலறுகிறது!

ஆனால், முகத்தைக் காணோம். ஆலமரத்தை அடைந்ததும், முன்னால் இருந்த முட்புதரை விலக்குகிறான். அப்போது தான் அந்த மனிதனைப் பார்க்கிறான். சீவப்படாத தலை, அழுக்குகள் நிறைந்த உடை, வெகுளியான முகம், இரண்டு கால்களும் இல்லாத உருவம். அந்த இளைஞன் அவரை ஆச்சர்யமாய் பார்க்கிறான்.

இந்த மனிதருக்கா தீவிரவாதி போர்வை போர்த்தினார்கள்? கொலைகள் பல செய்ததாகச் சொன்னார்கள? இலை, தழைகளைத் தள்ளிவிட்டு இரண்டு அடிகள் கூட முன்னேற முடியாத இவரா இத்தனை ஆண்டுகள் அச்சுறுத்தி வந்தார்?
ஆம்! அவர்தான் அச்சுறுத்தி வந்தார். தம் போலி பிம்பத்தால் ஒட்டுமொத்த மக்களையும் அடக்கி வந்தார். இந்த இளைஞர்தான் அவரின் பரிதாப நிலையைக் கண்டுபிடித்தார். இந்தக் கதையின் தலைப்பு “நொண்டித் திருடன்’’ அறிஞர் அண்ணா எழுதியதாக நினைவு.
ஆக, நம் இனத்தை, நம் இயக்கத்தை, நம் கட்சியை நமக்குள்ளே பலகீனப்படுத்த முயல்வார்கள். நம்மை வெல்வதற்கு எதிரிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது!

மதம், ஜாதி, ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்றவை எல்லாம் “போலி பிரமாண்டம்’ என்பதை உறுதியாக நாம் நம்ப வேண்டும். பிறருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்! மன உறுதி என்பது நம் சொத்தாகும்!