பகுத்தறிவு – பெரியார் கொள்கையில் பிறழாமல் நிற்கும் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ!

2023 ஏப்ரல் 16-30,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கர்நாடக அமைச்சருமான சதீஷ் ஜார்கிஹோலி சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் துவங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இடுகாட்டில் இருந்து தனது பரப்புரையைத் துவங்கவும், வேட்புமனுவை கெட்ட நேரம் என்று கூறப்படும் நேரத்தில் தாக்கல் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

பெலகாவி மாவட்டத்திலுள்ள எமகன்மார்டி (தனித் தொகுதி) தொகுதியிலிருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான இவர், பரப்புரைக்குப் பயன்படுத்துகிற இரண்டு வாகனங்களையும் இடுகாட்டில் இருந்துதான் இயக்கத் துவங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

‘மனித உறவுகள் மன்றம்’ என்னும் ஓர் அமைப்பை நடத்தி வருகிற ஜார்கிஹோலி, முற்போக்கான சிந்தனைகளை தீவிரமாக முன்னெடுப்பவர் ஆவார்.

இடுகாட்டில் இருந்து பரப்புரையைத் தொடங்குவதை நியாயப்படுத்தும் விதமாக ஜார்கிஹோலி, “அது கண்மூடித்தனமான ஒரு மூடநம்பிக்கை தான்” என்கிறார். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் வேட்புமனுவை ராகு காலத்தில்தான் தாக்கல் செய்து வருகிறேன் என்று அவர் சொல்கிறார்.

ஒரு தேர்தல் பரப்புரையைத் துவங்கும் போதும், வேட்புமனுவை தாக்கல் செய்யும்-போதும், பின்னர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போதும் அவருடைய கட்சித் தோழர்கள் நல்ல நேரத்தைத் தேர்வு செய்வர். அதற்கு நேர் மாறானவையாக இவருடைய செயல்கள் உள்ளன. அவர்களெல்லாம் அநுகூலமான சுப நேரத்தில் தான் எல்லாவற்றையும் செய்வது வழக்கம்.

மூடநம்பிக்கைகளைத் தகர்க்கும் நோக்கத்துடன் ஜார்கிஹோலி செய்கிற வழக்கத்திற்கு விரோதமான செயல்களை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒருபோதும் விமர்சித்தது கிடையாது.

இந்திய பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரான நரேந்திர நாயக், மூட நம்பிக்கைகளை தவறு என்று நிரூபிக்கிற ஜாரகிஹோளியின் தொடர் முயற்சிகளை மிகவும் பாராட்டியுள்ளார்.

மங்களூரிலுள்ள கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராகப் பணி புரிந்துள்ள ஒரு மெடிக்கல் பயோகெமிஸ்ட்-ஆன நாயக், இடுகாடு என்பது மற்ற இடங்களைப் போன்றதே! அது அச்சத்திற்கோ, கேட்டிற்கோ வாய்ப்பில்லை. தவிர வேறு வித்தியாசம் எதுவும் அதில் இல்லை என்கிறார்.

“எங்களைப் போன்றவர்களுக்கு, ஒரு தேர்தல் பரப்புரை இடுகாட்டிலிருந்து துவங்கப்பட்டதா அல்லது வேறு எங்காவது துவங்கப்பட்டதா என்பது ஒரு பொருட்டே அல்ல. ஆனால், அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை உடையவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட இதைப்போன்ற செயல்கள் மிகவும் பயன்படுகின்றன. நல்ல நேரம், கெட்ட நேரம், நல்ல சகுனம் கெட்ட சகுனம் என்றெல்லாம் எதுவும் கிடையாது என்பதை இது நன்கு உணர்த்துவதாக அமையும்” என்று நாயக் தெரிவித்தார்.

(நன்றி: ‘த டெலிகிராப்’, 07-04-2023)
தமிழாக்கம்: ஆர்.எம்.பி.ராஜ்