பெரியார் பேசுகிறார் – திராவிட மக்களை இழிவுபடுத்தும் புராணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்

2023 ஏப்ரல் 16-30,2023 பெரியார் பேசுகிறார்

-தந்தை பெரியார்

தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்து கிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிட நாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்பதும், தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமே யொழிய, இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.

ஆரியர்கள் முதலில் தம் கலாச்சாரத்தைப் புகுத்தித்தான் நம்மை வெற்றி கொண்டார்கள். நம் கலாச்சாரத்தைக் கெடுத்துத்தான் நம் மீது ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். நாமும், நம் கலாச்சாரத்தை மறந்து ஆரியக் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டதால்தான் அவர்களுக்குக் கீழான மக்களாக, அவர்களுடைய இழி மக்களாக, சூத்திரர்கள், பஞ்சமர்களாக ஆக்கப்பட்டோம்.

எனவே, அக்கலாச்சாரத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் மொழிப் போராட்டம் ஒன்றினால் மட்டுமே வெற்றி பெற்றுவிட முடியாது. கலாச்சாரத்தின் பேரால், இனத்தின் பேரால் போராட்டம் நடத்த வேண்டும். அதில் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நாம் விடுதலைப் பெற்றவராவோம். மொழிப் போராட்டம், கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதி தானேயொழிய, முழுப் போராட்டமாகவோ, முடிவான போராட்டமாகவோ ஆகிவிடாது.

சட்டம், சாஸ்திரம், சமுதாயம், சம்பிரதாயப் பழக்க வழக்கங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவை எல்லாவற்றிலுமே நம் இழிவு, நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, இவை எல்லாவற்றிலிருந்தும் நம் இழிவு நீக்கமடைந்தாக வேண்டும். மொழியில் மேம்பாடு, வெற்றியும் பெற்று விடுவதாலேயே நமது இழிவும், இழிவுக்கு ஆதாரமான கலாச்சாரமும் ஒழிந்துவிடாது. மேலும் இவ்விழிவால் அவதிப்படுபவர்கள் தமிழ் மொழி பேசுகிறவர்கள் – தமிழர்கள் என்பவர்கள் மாத்திரமல்லாமல், சென்னை மாகாணத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாகாணங்களிலும், அதாவது வேறு பல மொழிகள் பேசும் மக்கள் உள்ள வங்காளம், பீகார், பம்பாய், மகாராஷ்டிரா முதலிய மாகாணங்களிலும் இருக்கிறார்கள்.

அங்குள்ள தாழ்த்தப்பட்ட தோழர்களும், தம்மைத் திராவிடர்கள் என்றுதான் கூறிக் கொள்கிறார்கள். உண்மையில் அவர்களும் திராவிடர்கள்தான்!
இவர்கள் எல்லோருமே இன்றில்லையானாலும் நாளை நிச்சயம் ஆரியத்தை எதிர்க்க, அதற்காக புரட்சி செய்ய ஒன்றுபடப்-போவது நிச்சயம். எனவேதான் நாம் பல எதிர்ப்புகளுக்கிடையேயும் திராவிடர் கழகம் என்கிற பேராலேயே தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இந்த ஆரியர் – திராவிடர் போராட்டம் புராண காலந்தொட்டே நடைபெற்று வரும் போராட்டமாகும். புராண காலத்தைப் பற்றி நமக்கு விளக்கமாகத் தெரியவில்லை என்றாலும், ஆரியர் கலாச்சாரத்தை ஒழிக்க பவுத்தர்கள் வெகு பாடுபட்டிருக்கிறார்கள். இந்துக் கலாச்சாரத்திற்கு அதாவது, ஆரியக் கலாச்சாரத்திற்கு நேர் எதிர்ப்பான இஸ்லாம் கலாச்சாரத்தைக் கொண்டவர்களான முகலாயர்களும், ஆரியத்தை அழிக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். ஆனால், அவர்கள் வெற்றி பெற்றவர்களில்லை.எனவேதான் அவர்களே வெற்றி காண முடியாதபோது, இந்த திராவிட கழகத்தார் எங்கே வெற்றி காணப்போகிறார்கள் என்று பார்ப்பனர்கள் நம்மைப் பரிகாசம் செய்து வருகிறார்கள்.
அவர்கள் பரிகசிக்கட்டும்; நமக்குக் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரையில் நம் முயற்சி வெற்றி பெறும் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு, திடமான உறுதியுண்டு.

வெள்ளையனுடைய சுமார் 200 வருட கால ஆட்சியும், நமது அய்ந்து வருட கால பகுத்தறிவுப் பிரச்சாரமும், ஆரியக் கலாச்சாரத்தின் ஆதிக்கத்தை, குறிப்பிடத்தக்க அளவுக்குக் குறைத்திருக்கின்றன. சமுதாய உயர்வு, தாழ்வுகள் இன்று அவ்வளவாக மக்கள் மனதைப் பீடித்து நிற்கவில்லை. முன்பெல்லாம் ஓர் உயர் ஜாதிக்காரனுக்கு ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன் வீட்டில் தண்ணீர் சாப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டால் அவனுக்கு வயிறெல்லாம் வேதனைப்படும்.

இன்று அப்படிக்கில்லை. யார் கடையிலும் டீ சாப்பிடுவதும், யார் கையாலும் தண்ணீர் குடிப்பதும் சகஜமாகி விட்டது. இன்னார் வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்வதே தனக்குப் பெருமை என்று இருந்ததுபோய், இப்போது தனக்கு அது மரியாதைக் குறைவு என்று நினைக்கும்படிக்கும், அருகிலுள்ளவரும் இன்னும் இந்தக் காட்டுமிராண்டி காலப் பழக்கத்தைக் கைவிடாமல் இருக்கிறாய் என்று கேட்கவும் ஆன நிலை ஏற்பட்டிருக்கிறது.

குருகுலப் போராட்டத்தின்போது பார்ப்பனர்களுக்குக் தனி இடமும்,தனி உணவும் இருக்கவேண்டும் என்று கிளர்ச்சி செய்தது போய், அவர்களே பெரும்பாலோர் இன்று சமபந்தி போஜனம் பற்றியும், சம உரிமை பற்றியும் பேச முன் வந்திருக்கிறார்கள். இன்று கிட்டத்தட்ட எல்லா மாணவ உணவு விடுதிகளிலுமே ஒரே சமையல், ஒரே இடத்தில் எல்லோரும் சமமாய் உட்கார்ந்து சாப்பிடல் என்ற பழக்கம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. பெண் கொள்வது, கொடுப்பது என்பது தவிர்த்து மற்ற எல்லாவற்றிலுமே ஓர் அளவுக்காவது சமத்துவம் வந்திருக்கிறது. அதிலும் பார்ப்பனருக்கு சகிப்புத்தன்மை வந்து இருக்கிறது. மனு தர்மத்தைப் பற்றிப் பேசினால் எங்கு தம் நிலை இன்னும் அதிக ஆபத்துக்குள்ளாகி விடுமோ என்று பார்ப்பனர்களே மனுதர்மத்தைப் பற்றிப் பேச அஞ்சும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடவுள் விஷயத்திலும் முன்போல் யாரும் பக்தி செலுத்துவதில்லை அதுவும் கோயிலில் தாசிகள் ஒழிக்கப்பட்டு விட்ட பிறகு கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் இருபாலிலும் வெகுவாகவே குறைந்துவிட்டது. தேர் திருவிழாக்களிலும் மக்கள் முன்போல் அதிகமாகக் கலந்துகொள்வதில்லை. கடவுள் பக்தி குறையவே, கடவுளுக்குக் கோவில் கட்டுவதும், மானியம் கொடுப்பதும் குறைக்கப்பட்டு, பள்ளிக்கூடம் கட்டவும், ஆராய்ச்சிக் கல்லூரிகள் அமைக்கவும், ஆஸ்பத்திரி கட்டவும் பணம் உதவப்பட்டு வருகிறது.என்றாலும் இவையே போதுமானதாகி விடாது.

இன்னும் புராணங்கள் மதிக்கப்பட்டு வருகின்றன. புராணப் பாத்திரங்களே நமக்குக் கடவுள்களாகவும், புராணக் கருத்துகளே நமக்கு மதக் கருத்துகளாகவும், பண்டிகை விரதங்களாகவும் இன்னும் இருந்து வருகின்றன.

பழங்காலத்தில் – சரித்திரத்துக்கு முந்திய காலத்தில் ஆரியக் கலாச்சாரத்தை யார் யார் எதிர்த்தார்களோ, அவர்களை இழித்தும், பழித்தும் பேசி அவர்கள் ஒழிக்கப்பட்ட விதத்தை எடுத்துக் கூறும் கதைகளே புராணங்களும், இதிகாசங்களும் ஆகும்.
ஆரியத்தை எதிர்ப்பவன் இன்ன கதிக்குள்ளாவான் என்பதை எடுத்துக்காட்டி, மக்களைப் பயமுறுத்தி ஆரியத்தின் உயர்வில் நம்பிக்கைகொள்ளுமாறு செய்வதற்கென்றே எழுதப்பட்டனவாகும் அவைகள். ஆரியத்தை எதிர்த்தவர்கள் அத்தனை பேருமே நம்மவர்கள்; திராவிடர்கள்.அவர்கள் அத்தனை பேருமே ஒழுக்க ஈனர்களாக, அயோக்கியர்களாக ஆரியத்தால் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்திராவிடர்களை ஒழித்த எல்லாருமே நமக்கு கடவுளர்களாக ஆக்கப்பட்டு, அவற்றை நாம் இன்றும் தொழுது வருகிறோம்.

இராவணனை அழித்த இராமன் நமக்குத் தெய்வம். இராவணைக் காட்டிக் கொடுத்த விபீஷணன் நமக்கு ஆழ்வார். இரண்யனை ஒழித்த நரசிம்மாவதாரம் நமக்குக் கடவுள், நரகாசுரன் ஒழிக்கப்பட்ட தினம் நமக்குப் புண்ணியதினம். இப்படிப்பட்ட கதைகளே தினம் நம் புராணங்கள். என்னே அறியாமை!

நம்மவரின் முன்னேற்றத்திற்காக, நம்மவரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட நம் மன்னர்கள் ஒழிக்கப்பட்ட தினங்களா நமக்குப் புண்ணிய தினங்கள்? நம்மவரை வென்ற கதாபாத்திரங்களா நமக்குத் தெய்வங்கள்?
இவ்வறியாமையிலிருந்து நாம் என்றுதான் மீட்சி பெறுவது? மதம் என்றால் மக்களுக்கு நல்லொழுக்கம் கற்பிக்கத்தக்கதாக இருக்க வேண்டும்.

(24.01.1950இல் சென்னை – ராபின்சன்பார்க் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை – ‘விடுதலை’, 26.01.1950)