நடந்த கதை – நடுநிசியில் வந்த தீப்பந்தம்..!

2023 ஏப்ரல் 1-15,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

ஆப்ரகாம் டி. கோவூர்

இருநூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள அந்தத் தென்னந்தோப்பு உடரட்ட,பஹத்தரட்ட என்றழைக்கப்படும் மலை
நாட்டுக்கும், பள்ளத்தாக்கிற்குமிடையில் அமைந்திருந்தது.

இந்தத் தோப்பின் உரிமையாளரான டிக்கிரி சேனா என்பவர் இப்பகுதியில் ஓர் அரசனைப் போன்றே விளங்கினார்.
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போர் என்கிறார்களே, அப்படிப்பட்ட-வர்கள்தாம் டிக்கிரி சேனாவும், அவரது மனைவியும்.
சுமார் அய்ம்பது குடும்பங்களுக்கு அவர்கள் இலவசமாகக் காணிகளை வழங்கி, அங்கு குடியேற்றி இருந்தார்கள்.
ஜேமிஸ், பீட்டர் என்ற வேலையாள்கள் மிகமிக விசுவாசத்துடன் டிக்கிரி சேனாவின் வீட்டில் வேலை செய்தனர். அவர்களின் மனைவியரும் அதே வீட்டில்தான் வேலை செய்தனர்.

காலை அய்ந்து மணிக்கெல்லாம் அவர்கள் வேலைக்கு வந்து விடுவார்கள். மனைவிமார் மாலை ஆறு மணியளவில் வீடு திரும்பிய பின்னரும், மிகுதி வேலைகளையெல்லாம் செய்து முடித்துவிட்டு இரவு பத்து மணிக்கு மேல்தான் ஜேமிஸும், பீட்டரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவது வழக்கம்.

1951ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள் வேலையாள்கள் இருவரும் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிவிட்டனர். மணி இரவு பதினொன்-றாகிவிட்டது. டிக்கிரிசேனாவும் குடும்-பத்தினரும் நித்திரையில் ஆழ்ந்திருந்தனர்.
அய்ம்பது குடும்பங்கள் குடியேறியிருந்த அந்தக் கிராமப் பகுதியிலிருந்து திடீரெனப்
பயங்கரமான அலறல் ஓசையொன்று இருளைக் கிழித்துக் கொண்டு பயங்கரமாக ஒலித்தது.
இயற்கையில் பயந்த சுபாவமுள்ள டிக்கிரிசேனா எழுந்து, என்ன நடந்துவிட்டது என்பதைப் பார்ப்பதற்குப் பதிலாக
ஜன்னல்களை இழுத்து மூடிவிட்டு போர்த்திக் கொண்டு தூங்க முற்பட்டார்.

கண்டியிலிருந்து விடுமுறையைக் கழிக்க வந்திருந்த தனது இருபது வயது மகனையும் அழைத்து, அவனையும் ஜன்னல்களை மூடிக்கொண்டு தூங்கும்படி எச்சரித்தார்.

மிகுதி இரவு முழுவதும் டிக்கிரிசேனாவுக்கு நித்திரை வரவேயில்லை. கிராமத்தில் ஏதோ கொலை நடந்துவிட்டிருக்க வேண்டுமென்று நிச்சயமாக நம்பினார்.

பொழுது புலர்ந்தது. வழமைபோல் ஜேமிஸ், பீட்டர் ஆகியோரும் அவர்களது மனைவிமாரும் விடியற்காலையில் வேலைக்கு வந்தனர்.
அவர்கள் வழமைபோல் வேலையில் ஈடுபடுவதை விடுத்து முதல்நாள் இரவு தாங்கள் கண்ட மர்மமான அக்கினிப் பிழம்பைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தனர். அந்த அக்கினிப் பிழம்பு பிரதான ஒழுங்கை வழியாக அசைந்து கொண்டு சென்றதாகவும் அதிசயமாகப் பேசினர். டிக்கிரிசேனா குடும்பத்தினர் எழும்பி வந்ததும் அவர்களிடம் அக்கினிப்பிழம்பு அந்தரத்தில் மிதந்து சென்ற காட்சியைப் பற்றி மிக நடுக்கத்துடன் நால்வரும் கூறினார்கள்.

அன்று முழுவதும் அக்கினிப் பிழம்பின் மர்மம் பற்றியே கதையாக இருந்தது.
அன்றிரவும் சரியாக பதினொன்று மணிக்கு பிரதான ஒழுங்கையில் அக்கினிப் பிழம்பு அங்குமிங்குமாக மிதந்து கொண்டிருந்துவிட்டு மறைந்தது.

டிக்கிரிசேனா உள்பட பலரும் இதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
மூன்று தினங்களுக்குப் பின்பு இச்செய்தி பக்கத்துக் கிராமங்களுக்கெல்லாம் பரவி, அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் இக்காட்சி
யைப் பார்க்க டிக்கிரிசேனாவின் வளவுக்குள் திரள ஆரம்பித்தனர்.
அன்றிலிருந்து அப்பகுதியில் இருந்தவர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வெளியே தலைகாட்டுவதில்லை. பிள்ளைகளை ஏழு மணிக்கே படுக்க வைத்து விடுவார்கள்.

வேலைக்குச் செல்லுபவர்கள் இருளுக்குமுன் வீடுதிரும்பி விடுவார்கள். இரவு பத்து மணிக்கு மேல் வீடு திரும்பும் பீட்டரும், ஜேமிஸும் கூட இப்போது இருட்டிற்கு முன்பே வீடு திரும்பலாயினர்.

காலையிலும் பொழுது நன்கு புலர்ந்த பின்னரே வளவுக்கு வேலைக்குச் செல்வார்கள்.
மர்ம ‘அக்கினிப் பிழம்பு’ பற்றி கிராமத்தவர்கள் பலவிதமான கதைகளைச் சொன்னார்கள்.
‘கினிபிள்ளிய’ என்ற அக்கினிப்பேய்தான் யாரோ ஒருவரை வஞ்சம் தீர்க்க இப்படி அலைகிறது என்றனர்.
அந்த ஒழுங்கையில் கொலை செய்யப்பட்ட பண்டார என்பவரின் ஆவியே இப்படி உருவெடுத்து நடமாடுகிறது என்றார்கள் சிலர், இது ‘தேவதா-எளிய’ என்ற தெய்வங்களின் ஒளி என்றும் வேறு சிலர் கூறினார்கள்.

அக்கினிப் பேயின் நடமாட்டத்தினால் டிக்கிரிசேனாவின் குடும்பத்திற்குப் பெரும் கஷ்டம் ஏற்பட்டது. எவ்வளவு பணமும் சொத்தும் இருந்தாலும் சில நாள்களாக இரவில் வேலையாள்கள் இல்லாமையால் அவர்கள் பாதிக்கப்பட்டார்கள். ஜேமிஸின் உதவியின்றி டிக்கிரிசேனாவால் குளிக்கக்கூட முடியவில்லை.
இதனால், அந்த அக்கினிப் பேயை விரட்டினால்தான் தனக்கு நிம்மதி என அவர் நினைத்தார். பலரும் மாந்திரீகரை அழைத்து இது பற்றி ஆலோசிக்கும்படி ஆலோசனை வழங்கினார்கள்.

டிக்கிரிசேனாவின் மகனைப் பார்க்க கொழும்பிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞர் மட்டும் கோவூரை அணுகி இதற்கு முடிவு காணுமாறு அறிவுரை வழங்கினார்.
இதன் பிறகுதான் டிக்கிரிசேனா கொழும்புக்கு விரைந்து கோவூரைச் சந்தித்து மேற்கூறிய முழுக் கதையையும் கூறினார்.
கதையைக் கேட்ட கோவூர், இம்மர்மத்தைத் துலக்கும் ஆவலுடன் டிக்கிரிசேனா சகிதம் அவரது வளவுக்குப் புறப்பட்டார்.

கடும் மழையினூடே அவர்கள் பயணம் செய்த கார் சரியாக பிற்பகல் மூன்று மணிக்கு டிக்கிரிசேனாவின் வளவைச் சென்றடைந்தது.
நேரத்தோடு வீடு திரும்பிவிட வேண்டுமென்ற அவசரத்தில் வேலையாள்கள் பதற்றத்துடன் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர்.
மாலை ஆறு மணிக்கெல்லாம் இரவு உணவை அனைவருக்கும் பரிமாறிவிட்டு பீட்டரும், ஜேமிஸும் மனைவியருடன் தங்கள் வீடுகளுக்குப் புறப்பட்டு விட்டனர்.

கோவூர் சிறிது நேரம் அங்குமிங்குமாக உலாவிவிட்டு நன்கு இருட்டிய பின்னர் வீட்டு முற்றத்திலே அமர்ந்து டிக்கிரிசேனாவுடன் பேசிக்கொண்டிருந்தார்.
நேரம் ஒன்பது… பத்து… என கடந்து கொண்டிருந்தது. எப்போது அக்கினிப் பிழம்பு தோன்றும் என கோவூர் தனது கழுகுக் கண்களைச் சுழல விட்டுக் கொண்டிருந்தார்.

மணி பதினொன்றடித்தது. கிராமப் பகுதியிலிருந்து ஊளையிடும் சத்தங்கள் இடைவிட்டு கேட்க ஆரம்பித்தன.
சத்தம் நின்றது. ஒரே அமைதி, தவளைகள் கத்தும் சத்தத்தைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்க
வில்லை.

அதோ அதோ, “கினிபிள்ளிய” என்று டிக்கிரிசேனா கிசுகிசுத்தார். அவர் காட்டிய திசையைக் கோவூர் பார்த்தார். தூரத்திலே அக்கினிப் பிழம்பு தெரிந்தது.

இருவரும் எழுந்து நின்றனர். இப்பொழுது அக்கினிப் பிழம்பு தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. கிழக்கு நோக்கி மிதந்து சென்று கொண்டிருந்த பிழம்பு சுமார் இருநூறு கெஜம் தூரம் சென்றதும் மீண்டும் மேற்கு நோக்கி மிதந்து செல்ல ஆரம்பித்தது. சுமார் இரண்டடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்டதாக அது இருந்தது.

இதை நன்கு அவதானித்த கோவூர், அக்கினிப் பிழம்பை நோக்கி நடக்கத் தீர்மானித்தார். டிக்கிரிசேனாவை அல்லது அவர் மகனைத் தன்னுடன் வரும்படி அழைத்தார். இருவருமே திகிலுடன் மறுத்துவிட்டனர். தனியே செல்ல முடிவு செய்த கோவூர், கைத்தடியொன்றை எடுத்துக்கொண்டு அந்த மர்ம அக்கினிப் பிழம்பை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

அக்கினிப் பிழம்பு முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. ஒழுங்கைக்குள் கோவூர் நுழைந்தவுடன் அக்கினிப் பிழம்பு மேலும் தெளிவாகத் தெரிந்தது. பூமியிலிருந்து ஆறடி உயரத்தில்தான் அது காணப்பட்டது. கோவூர் அந்தப் பிழம்பை நோக்கி முன்னேறலானார். அவர் எந்த வேகத்தில் சென்று கொண்டிருந்தாரோ அதே வேகத்தில் அக்கினிப் பிழம்பு அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது.
பத்து அடி தூரம்தான் இடைவெளி இருக்கும். கோவூர் அதே இடத்தில் அசையாது நின்றார். அக்கினிப் பிழம்பு நிற்கவில்லை. அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான் கோவூருக்கு ஒரு விஷயம் விளங்கியது. அந்த அக்கினிப் பேய்க்கு இரு கால்களிருப்பதை அவர் கண்டுவிட்டார்.

அவ்வளவுதான், “யார் நீ? அங்கேயே நில்!”
என்று சத்தமிட்டார். அந்தச் சத்தம் அந்த பகுதியெங்கும் எதிரொலித்தது.
ஒரு வினாடி கூட இருக்காது. அக்கினிப் பிழம்பு கீழே விழுந்து சிதறியது. ஒரு மனித உருவம் ஓட ஆரம்பித்தது. கோவூரும் துரத்திக் கொண்டு ஓடினார். ஒரு தென்னந்தோப்புக்குள் அந்த உருவம் ஓடியது. கோவூரும் அதை விரட்டிக் கொண்டு ஓடினார்.
திடீரென ஓர் ஓசை கேட்டது. அதன் பிறகு ஓடிக்கொண்டிருந்த உருவத்தைக் காணவில்லை. கோவூர் ஓடிச்சென்று ஓசை எழுந்த இடத்தில் நின்றார். அருகிலிருந்த ஒரு குழிக்குள்ளிருந்து யாரோ வேதனையால் முணுமுணுப்பது கேட்டது. கோவூர் அங்கே சென்று உள்ளே எட்டிப் பார்த்தார். குழிக்குள்ளிருந்து எழுந்திருக்க ஒரு மனிதன் முயன்று கொண்டிருந்தான். அவனை கோவூர் வெளியே தூக்கிவிட்டார்.

“துரை, என்னை மன்னித்து விடுங்கள். என்னைக் கொன்றுவிடாதீர்கள். நான்தான் ஜேமிஸ், மாலை உங்களுக்குச் சாப்பாடு பரிமாறியவன். என்னை விட்டுவிடுங்கள்” என்று அவன் கெஞ்சினான்.
அவனது முகத்தை உற்று நோக்கினார் கோவூர். அவன் கூறியது உண்மையென்று புரிந்தது,

“உன்னை நான் விடப்போவதில்லை. ஏன் அந்தக் காரியத்தைச் செய்தாய்? உண்மையைச் சொல்” என்று அதட்டினார்.

“துரை, என் வீட்டுக்கு வாருங்கள். விவரம் கூறுகிறேன்” என்று பரிதாபமாகக் கெஞ்சினான் அவன்.
இதற்குச் சம்மதித்த கோவூர், அவன் காட்டிய பாதையில் அவன் பின்னால் நடக்க ஆரம்பித்தார்.
ஒரு சிறு குடிசையை நெருங்கியதும் அதற்குள் அவன் நுழைந்தான். கோவூரும் உள்ளே சென்றார். முதலில் தனது மனைவியை அழைத்து அறிமுகம் செய்து வைத்தான். அதன் பின் இருவரும் அமர்ந்தனர்.

“நீ சொல்ல வேண்டியவற்றைச் சீக்கிரம் சொல்” என்றார் கோவூர்.
அவன் பேச ஆரம்பித்தான், “அய்யா! என் பெயர் ஜேமிஸ், இந்த வளவு பிரபுதான் எங்கள் பரம்பரையையே வளர்த்தவர். எனது தந்தையும் இவர் வீட்டில்தான் வேலை செய்தார். நானும், எனது மனைவியும் இவர் வீட்டில்தான் வேலை செய்கிறோம். எனக்கு ஆறு மாதத்திற்கு முன்புதான் திருமணம் நடந்தது. எனது மனைவி மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பிவிடுவாள். நான் இரவு பத்து மணிக்கு மேல்தான் வேலைகளை முடித்து விட்டு வீடு திரும்புவது வழக்கம். கடந்த விடுமுறையின்போது இங்கு வந்திருந்த பிரபுவின் மகன், நான் நேரம் சென்று வீட்டுக்கு வருவதைப் பயன்படுத்தி என் வீட்டுக்கு வந்து என் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றிருக்கிறார். என் மனைவி இதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனாலும், சின்ன பிரபு பலமுறை இப்படி நடந்து கொண்டிருக்கிறார். இதை என் மனைவி என்னிடம் சொன்னபோது, எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. இவ்விஷயத்தை வெளியே சொல்லவும் பயம். பெரிய இடத்து விஷயமானதால் எங்கள் எதிர் கால வாழ்க்கைக்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சினோம். இந்தச் சமயத்தில் விடுமுறை முடிந்து சின்னபிரபு கண்டிக்குச் சென்று விட்டார்.
இந்த முறை அவர் இங்கு வந்ததும் அவரை என் வீட்டுக்கு வராமல் தடுக்க இதுதான் வழியென எனக்குப் பட்டது! மேலும் எனக்கும் சீக்கிரம் வீடு திரும்பிவிடவும் இது வசதியைச் செய்தது. இதனாலேதான் ஒரு பாத்திரத்தில் உமியையும், தென்னை ஓலையையும் நிரப்பிப் பற்றவைத்து, இரவில் இந்த நாடகத்தை ஆடினேன்.”

இப்படி ஒரே மூச்சில் கூறிமுடித்தான் ஜேமிஸ். மேலும் என் மனைவியின் கற்பைக் காப்பாற்றவே இதைச் செய்தேன்! யாரிடமும் இதுபற்றிக் கூறிவிடாதீர்கள். எங்கள் உயிருக்கும் ஆபத்து வந்து விடுமெனவும் கூறி அவன் கோவூரிடம் கெஞ்சினான்.

கலங்கிய கண்களோடு காணப்பட்ட ஜேமிஸின் முதுகில் தட்டிக்கொடுத்த கோவூர், இனிமேலும் இதைச் செய்யாதே என எச்சரித்துவிட்டு டிக்கிரிசேனாவின் வளவுக்குத் திரும்பினார்.

அங்கே நடுங்கிய வண்ணம் அனைவரும் காத்திருந்தனர்.
கோவூரைக் கண்டதும் “என்ன நடந்தது?” என அவர்கள் ஆவலோடு கேட்டனர்.

“கினிபிள்ளியை விரட்டிவிட்டேன். இனி அது வராது” என்று மட்டும் கூறிய கோவூர், தனது அறையை நோக்கிச் சென்றார். டிக்கிரிசேனா குடும்பத்தினர் ஆறுதல் பெருமூச்சுவிட்டனர்.

விடிந்ததும் டிக்கிரிசேனாவின் கார் கோவூரைச் சுமந்து கொண்டு கொழும்பு நோக்கி விரைந்தது.
கோவூர் மனிதர்களின் சாகசத்தை நினைத்து இலேசாகத் தனக்குள் சிரித்துக் கொண்டார்.