பிறப்பொக்கும் – பாலமுருகன்

2023 சிறுகதை மார்ச் 1-15,2023

ஓம் நம சிவாய என்று தொடங்கி தஞ்சை பெரிய கோயிலின் அத்தனை அதிசயங்களையும் ஒன்று விடாமல் புட்டுப் புட்டு வைத்தான் சிவகுமாரன்.

தமிழகத்தின் ஆகச் சிறந்த பேச்சாளர்களில் ஒருவன்.
மேடையில் சிங்கம் போலக் கர்சித்தான். அவன் பேச்சின் ஒவ்வொரு முடிவிலும் ஆச்சர்யமான தகவல்களும், அதற்கு கைதட்டல்களும் வந்து கொண்டே இருந்தன

.
அவன் வெற்றுப் புகழ் பாடவில்லை. சமூக ஊடகங்களின், கட்டுக்கதைகளைப் பேசவில்லை, அவன் பேசியது யாவும், வரலாற்றுத் தகவல்கள்.
“நீங்கள் நினைப்பது போல தஞ்சைக் கோபுரம்மேல் இருக்கும் பீடமானது ஒரே கல்லில் ஆனது அல்ல; அது துண்டுகளால் ஆனது. கோபுரத்தின் நிழல் கீழே விழும். அந்தப் பீடத்தின் வியப்பு, அதன் எடையின் சமன்பாடுதான். எட்டாயிரம் கிலோ எடையுள்ள அந்தப் பீடத்தை, கோபுரம் தாங்கும் அளவு, எடையைச் சமன்படுத்தியதுதான் அதன் கட்டுமான வெற்றி.

சிவகுமாரனின் பேச்சு அனைவருக்கும் புதிதாக இருந்தது. கூட்டம் கலையவே இல்லை.
தஞ்சைக் கோயிலின் உள் அரங்கில்தான் விழா நடந்து கொண்டிருந்தது. கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்தான் சூரியன். சிவகுமாரனும் அவனை அவ்வப்போது பார்த்தபடி இருந்தான்.

‘எந்தக் கோவிலைப் பார்த்து தஞ்சைக் கோயிலைக் கட்டினான் ராசராசன் தெரியுமா…?”
கூட்டத்தில் அமைதி.

“காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் பார்த்துதான் கட்டினான். ஆனால், அது வரலாற்றில் மறைக்கப்பட்டது. உண்மையில் காஞ்சி கைலாசநாதர் கோயில்தான் தமிழகத்தின் முதல் கற்கோயில். அதைத்தான் ஆலயத்திற்கெல்லாம் ஆலயம் என்று ராசராசன் புகழ்ந்தான். மீண்டும் கைதட்டல்…

இரண்டு மணி நேரம் தஞ்சையின் புகழ் பாடினான் சிவகுமாரன். சிறிதும் ஓய்வில்லை.
அவன் சொன்னது

யாவும் கோயிலைக் கட்டிய மன்னனுக்கோ, பணியாளர்களுக்கோ, ஏன்? அங்கு இருக்கும், மூலவருக்கோ தெரியுமா என்று தெரியவில்லை.
கூட்டம் முடிந்ததும் சூரியன் சிவகுமாரனை நோக்கிச் சென்றான்.

மேடைக்கு முன் அமர்ந்தவன் என்பதால் அவன் முகம் சற்று பரிச்சயம்.
“உங்களிடம் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும்” என்றான்.

“யார் நீங்கள், என்னிடம் என்ன பேச வேண்டும்?”

“நீங்கள் தஞ்சையைப் பற்றியும் கோயிலைப் பற்றியும் பேசியது அற்புதமானது. ஆனால், யாருக்கும் தெரியாத ரகசியம் ஒன்று உள்ளது; அதை உங்களிடம் காட்ட வேண்டும்.’’

குமாரன் ஆர்வமானான். ஆனாலும் அவன் பொய் சொல்கிறானோ என்று நினைத்தான்.

“அப்படி என்ன ரகசியம்?”

“அதை இங்கு சொல்ல முடியாது. கொஞ்சம் விளக்கமாகப் பேச வேண்டியது.’

“நான் அடுத்து கங்கை கொண்ட சோழபுரம் செல்ல வேண்டும், நேரமில்லை-. பிறகு ஒரு முறை பார்க்கலாமா…?” அவன் தன்னை ஏமாற்றுகிறானோ என்று நினைத்தான்.
அதை அவன் உணர்ந்தவனாய்…

“அய்யா நீங்கள், என்னை நம்பவில்லை. பயம் வேண்டாம். உங்களை ஏமாற்றவில்லை. பல நாட்களாக யாரிடமாவது கூறவேண்டும் என்று நினைத்த விடயம். உங்கள் பேச்சை நான் தொடர்ந்து கேட்பவன். நீங்கள்தான் அதற்குச் சரியான ஆள். நம்புங்கள். பக்கத்தில் தான் எங்கள் வீடு. வாருங்கள். மற்றபடி உங்கள் விருப்பம்’’ என்று ஒதுங்கி கொண்டான்.

சிவகுமாரனுக்கு அவன் பேச்சு நம்பிக்கை கொடுத்தது… அது போக அவன் கூறிய அந்த விடயத்தின் மீது ஆர்வமும் இருந்தது. அவனும் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தான். அது போக அவன் ஒரு பேச்சாளன் தான் அவனை கடத்திப்போய் ஒன்றும் ஆவதற்கு இல்லை.
ஆனாலும், அவனுக்கு உள்ளூர சிறு பயம். பேச்சில் யாரையாவது தவறாகக் கூறி விட்டோமோ, எந்தச் சமூகத்தையாவது இழிவாகப் பேசி விட்டோமோ என்றெல்லாம் யோசித்தபடியே இருந்தான்.

சரி என்று ஒப்புக் கொண்டார்.

இருவரும் அவன் வீட்டிற்குச் சென்றனர். வீடு முழுதும் சிற்பங்கள் நிரம்பியிருந்தன. எல்லாம் இந்தக் காலச் சிற்பங்கள். அவை அவனை சிற்பி என்று அறிமுகப்படுத்தின.

அவன் அவருக்கு, அவனுடைய குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செய்தான்; உபசரித்தான்.

“என்ன ரகசியம்?”
அவனுக்கு அதன் மீது தீராத ஆர்வம் இருந்தது.

“அய்யா, நீங்கள் லிங்கத்தைப் பற்றிப் பேசினீர்கள், இல்லையா?’’

‘ஆமாம்!’

“நீங்கள் சொன்ன விடயங்கள் எல்லாம் உண்மை தான்’’
பேசியபடியே, அவன் ஓர் அறைக்குள் சென்றான். அங்கிருந்து ஏதோ ஒரு பெட்டியை எடுத்து அதிலிருந்த ஓலைச்சுவடியைக் காட்டினான்,

“என்ன இது?”
ஒரு லிங்கம் எப்படிச் செய்யப்பட வேண்டும். அதற்கு முன் எப்படித் தயாராக வேண்டும் என்பதனைக் குறிக்கும் ஏடு. நாங்கள் படி எடுத்து வைத்திருக்கிறோம். அவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. அட, உண்மையில் இது ரகசியம் தான், அதிசயம் தான்!

‘‘இது எப்படி உங்களுக்கு?…’’
அவன் கேட்குமுன் நிறுத்தினான்.

“தஞ்சை பிரஹதீஸ்வர ஆலய லிங்கத்தைச் செய்தது நாங்கள்தான். அதாவது, எங்கள் முன்னோர்கள். அவர்களின் தலைமுறை நாங்கள்.”
கொஞ்சம் பெருமையும், கர்வமும், சோகமும் அதில் இருந்தது.
குமாரன் திடீரென்று எழுந்தான்.

”என்ன சொல்கிறீர்கள்-? அப்படியானால், அந்தப் பெருந்தச்சன்!”

 

“அதெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொண்ட பெயர், உண்மையில் லிங்கத்தை வடிவமைத்தவரின் பெயர் ஓலைச் சுவடியில் கூட இல்லை.’
அவன் கை கால்கள் பதறின. “அதை அங்கேயே சொல்லியிருக்கலாமே, நான் உங்களை மேடையில் கவுரவப் படுத்தியிருப்பேனே!’’
அய்யோ! எத்தனை பெரிய சிற்பியின் தலைமுறை வீட்டில் இருக்கிறான். ஆனால் அந்த வீடு அத்தனை சிறியதாகத் தான் இருந்தது.
அவன் நிறுத்தவே இல்லை.

சூரியனுக்கு இது புதிதாக இருந்தது.
தங்களை யாரும் இப்படிப் பாராட்டி அவன் பார்த்ததில்லை. இத்தனைக்கும் இது அவன் முன்னோருக்குக் கிடைக்க வேண்டியது.
அவன் அதிர்ச்சியிலிருந்து மீண்டான். அந்தச் சிறு வீடு அவர்களுக்கு வசதியாக இருக்குமோ என்று எண்ணினான். “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’

“இப்போதும் நான் சிற்பிதான். என் மகனும், மகளும் கல்லூரியில் படிக்கிறார்கள்.” அவனுக்கு நாற்பது வயது இருக்கும்.
குமாரன், அவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் என்று நினைத்தான். எப்படிப்பட்ட பொக்கிசத்தை வடிவமைத்த தலைமுறை, ஏன் இப்படி கவனிப்பாரற்று இருக்கிறது என்று எண்ணினான்.

நல்லவேளையாக அவனை நம்பி வந்தான். இல்லையெனில் ஓர் அரிய தகவலை இழந்திருப்பான்.
இன்றும் பல கோயில்களைக் கட்டிய மன்னர்களின் பெயர் அவனுக்குத் தெரியும்… அதன் புராணங்கள் அவனுக்கு அத்துபடி, எல்லா கட்டுமானங்களும் அறிந்தவன். ஆனால், எந்தக் கோவிலின் சிற்பியின் பெயர் மட்டும் எப்படி தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் போனது. அவன் அறிவை எண்ணி அவனே சிரித்துக் கொண்டான்.
நிதானித்தான்.

“நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்? என்று நினைக்கிறேன்; உங்களுக்கு என்ன வேண்டும். தயவு செய்து கேளுங்கள்; அரசு உதவியாக இருந்தாலும் பரவாயில்லை” என்றான்.
அவனை அதுவரை யோசிக்க விட்ட அந்தத் தபதி சூரியன், அவன் வாய்ப்பு வந்ததும் தயாரானான்.
அவன் ஏதோ உதவி கேட்கப்போகிறான் என்று உறுதியாய் நினைத்தான். ஒரு கணம் அவனுக்கு உதவுவதால் தனக்குக் கிடைக்கும் பெருமையையும் நினைத்துக் கொண்டான்.

”அய்யா, எனக்கு ஒரே ஒரு ஆசைதான். எனக்கு மட்டு மல்ல, என் தலைமுறைக்கு, என் முன்னோர் தலைமுறைக்கு எல்லோருக்கும் ஒரே ஒரு ஆசை தான்.’

“சொல்லுங்கள்..’’ என்ன?

“ஒரு முறையாவது அந்தக் கோவிலுக்குள் நுழைந்து, அந்தக் கருவறை லிங்கத்தைத் தொட்டுப் பார்த்து, அதன் வித்தைகளை காண வேண்டும்.”
அவன் அதை எதிர்பார்க்கவில்லை. இது நடக்காத ஒன்று, இதை அவனால் செய்யவே முடியாது.
ஆலயப் பிரவேசம் கேள்விக் குறி, இதில் கருவறைப் பிரவேசம் ஆச்சர்யக்குறிதான்…

‘‘நீங்கள் கோயிலுக்குச் சென்று பார்த்த-தில்லையா?’’

“இல்லை… எங்களை அவர்களுக்குத் தெரியும்; நன்றாக எங்கள் தலைமுறையைத் தெரியும். எனவே, எங்களை எங்கு வைக்க வேண்டும் என்று அவர்கள் அறிவார்கள்.’

“இப்போதுமா அப்படி?”

“எப்போதுமே அப்படித்தான்!’ மண்டபம் வரை வருவோம்; எல்லோருடனும் கலந்து பார்த்தாலும் லிங்கம் பாதிதான் தெரியும். ஆனால், உங்களுக்குத்தான் லிங்கம், கடவுள். எனக்கு அது சிற்பம். அதை பார்க்கும்போது எல்லாம் என் தாத்தாவுக்குத் தாத்தாவெல்லாம் அதன் மேல் ஏறி அமர்ந்து, குத்து உளி வைத்துக் குத்திக் கொண்டு இருப்பது போல் இருக்கும்.”
தன்னையும் மீறிச் சிரித்துக் கொண்டான் குமாரன்.
அவன் சொல்வது சரிதான். ஓர் ஓவியனுக்கு எல்லாம் ஓவியம் போல், ஒரு சிற்பிக்கு எல்லாம் சிற்பம்தான்.
அவன் யோசனையைக் கலைத்த சூரியன்,

“அய்யா… எங்கள் ஆசை தவறா…?”
என்ன சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை…
நிச்சயமில்லை.

“நீங்கள் பெருமையாய்ப் பேசுகிறீர்கள். உண்மையில் நாங்கள் வளரும்போதும், இன்றும் எங்களிடம் இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறார்கள்.’ “நீங்கள்தான் கட்டினீர்கள், செய்தவர்கள். எங்கே உள்ளே போய் அதை தொடுங்கள் பார்க்கலாம். தொடுறது இல்லை… எங்கே உள்ள போங்க பார்க்கலாம்? என்கிறார்கள். ‘அதற்காகவே நாங்கள் இதைப் பற்றி பேசிக் கொள்வதில்லை.
இதுவும் ஒருவகை வீண் பெருமைதான், இல்லையா?”
குமாரனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவனிடம் பதிலும் இல்லை.

“சரி, நிச்சயம், என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்” என்று விடை பெற்றான்.
அவனால் எதுவும் செய்ய முடியாது, அது அவனுக்கும் தெரியும், சூரியனுக்கும் தெரியும்.
ஒரு மாபெரும் கலைக்கூடத்தில் இருந்து வெளியேறியதைப் போல உணர்ந்தான் அவன்.
சூரியன் அவனை வழி அனுப்பினான். மீண்டும் ஓலைச் சவடியை மடித்து பெட்டிக்குள் பூட்டி, அதனோடு அவனும் பூட்டுண்டான். அந்தப் பெருமையெல்லாம் அதோடு முடிந்தது.
ஒரு மனிதனின் பழம்பெருமைகள் அதைச் சிதைத்துக் கொள்ளாத தலைமுறையிடம் இருக்கிறது. அந்த அதிர்வுகளை அவன் அங்கு உணர்ந்தான். ஆலயத்தின் அழகில், பிரம்மாண்டத்தின் முன் எப்படி உணர்ந்தானோ அப்படியே இங்கும். இதுவும் ஒரு தரிசனம் என்றே நினைத்தான்.

“சரி வருகிறேன்.”
அவன் குடும்பம் வாசல் வரை வந்தது.
அவன் யோசித்துக்கொண்டே கங்கை கொண்ட சோழபுரம் வந்தான்.
மறுநாள் குமாரன் அங்கு பேச வேண்டியிருந்தது. அதற்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டான். நினைவு சூரியனை நோக்கி இருந்தது.
மேடையேறினான். அவன் முன் கூட்டம் திரளாய் இருந்தது. முன் வரிசையில் யாரேனும் சூரியனைப் போல் அமர்ந்திருக்கிறார்களா என்று பார்த்தான்.

எல்லோரும் அவனுக்கு சூரியனைப் போல் தெரிந்தார்கள்.
இந்த கூட்டத்தில் கோயிலைக் கட்டியவன், சிற்பத்தைச் செதுக்கியவன், லிங்கத்தை வடிவமைத்தவர், அவன் தலைமுறைகள் யாராவது இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டான்.
எப்போதும் போல் ஓம் நம சிவாய என்றில்லாமல் இப்போது

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”
என்று தன் பேச்சை ஆரம்பித்தான்.

கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது. அதில் யாரேனும் ஒரு சூரியன் இருக்கக்கூடும்.