சீனி. வேங்கடசாமி

2022 டிசம்பர் 16-31 2022 மற்றவர்கள்

இல்லற வாழ்வு தமிழ்ப் பணிக்கு இடையூறாக அமையும் என்ற அச்ச உணர்வினால் திருமணம் செய்து கொள்ளாமல் துறவு பூண்டு வாழ்ந்த சீனி.வேங்கடசாமி அவர்கள் 16.12.1900ஆம் நாள் மயிலையில் பிறந்தார். புனித தோமையர் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று பின் ஆசிரியப் பயிற்சி பெற்று 1942இல் மயிலை நகராண்மைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். தெ.பொ.மீ, சற்குணர் போன்றோரிடம் தமிழ் பயின்றார். சிறந்த தமிழ்ப் பணியாற்றினார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தந்தை பெரியார் ஆகியோரால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவுச் சிந்தனை வயப்பட்டவர். ‘திராவிடன்’ இதழ் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுப் பணியாற்றினார்.

இவர் நடுநிலை நின்று வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டதன் விளைவாக சில வரலாற்று ஆசிரியர்களால் மறைக்கப்பட்ட உண்மைகள் உலகுக்குத் தெரியலாயிற்று. இவர் சமணமும் தமிழும், பௌத்தமும் தமிழும், கிருத்துவமும் தமிழும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், சமயம் வளர்த்த தமிழ், கொங்கு நாட்டு வரலாறு போன்று பல ஆய்வு நூல்களையும், வரலாற்று நூல்களையும் ஆக்கியுள்ளார்.
1964 – 65ஆம் ஆண்டுகளில் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்
பட்டு அப்பொறுப்பில் சிறப்பாகப் பணியாற்றினார்.
8.5.1980ஆம் நாள் மறைந்தார்.