கட்டுரை: உணவுமுறை குறித்து பெரியாரின் பார்வை!

2022 கட்டுரைகள் டிசம்பர் 16-31 2022

வி.சி.வில்வம்

கடவுள் இல்லை என்று மட்டுமே சொன்னவர் பெரியார்”, எனச் சிலர் நினைக்கின்றனர். அது அவர்களின் தவறில்லை; பார்ப்பன ஊடகங்களின் சதி!
கடவுள், மதம், ஜாதி, புராணம், இதிகாசம், மூடநம்பிக்கைகள் என அனைத்தையும் அறிவியல் பூர்வமாகப் ஆய்வு செய்து கருத்து கூறியவர்.
தவிர பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சமதர்மம், கல்வி, பெண்ணுரிமை, வாழ்க்கை ஒப்பந்தம், தொழிலாளர் நலன், தமிழ் வளர்ச்சி, கிராம முன்னேற்றம், மனிதர்களின் பொது நலம், சுயநலம், மனித வாழ்க்கை, கலை, இசை, நாடகம், தமிழக நன்மைகள், அயல்நாட்டு வாழ்க்கை முறை, எதிர்கால உலகம் எனப் பெரியார் பேசாத துறைகளே இல்லை!
ஆத்திகர்களில் எண்ணற்றோர் பெரியாரைப் படித்ததால் தான் வியந்து நேசிக்கின்றனர்; தங்கள் தலைவராகவும் ஏற்றுக் கொண்டனர்!
அப்படியான பெரியார் மனிதர்களின் நலத்திற்குத் தேவையான உணவுமுறை
குறித்தும் பேசியுள்ளார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் தொகுத்த “பெரியார் ஒரு வாழ்க்கை நெறி” எனும் நூலில் அதை விரிவாக அறியலாம்.
இதோ பெரியார் பேசி-யதைக் கேட்போம்.

1) ஆறு அறிவு படைத்த நமக்கு இன்று ஏற்பட்டுள்ள பெருங்கவலையும், குறையும், தொல்லையும் “உணவு விஷயத்தில் பஞ்சம், – தேவை’’ என்பது முதலாவதாகும். இப்படிப்பட்ட கவலை தோன்றுவது பைத்தியக்காரத் தனமான குறைபாடேயாகும். ஏனெனில், முதலாவது இக்குறை நமக்கு நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட முறையாகும். எப்படியென்றால்,
2) நம் மக்களுக்கு அரிசிச் சோறு தேவையற்றதும் பயனற்றதும்; பழக்கமற்றது
மாகும். நம் வயல்கள் (விவசாயம்) எல்லாம் சமீபத்தில் ஓராயிரம், இரண்டாயிரம் ஆண்டு-களுக்குள் உண்டாக்கப் பட்டவையே.
3) நாம் மாமிசம் சாப்பிடுவதை விட்டு, காய்கறிப் பண்டங்களை மட்டும் உண்பது நமக்குக் கேடான பழக்கமாகும். இவைகளும் அரிசிக்குப் பின் உண்டாக்கப்பட்டவையே.
4) ஆடு, கோழி, பன்றி போன்றவற்றின் மாமிசம் சாப்பிடும் மக்களை மாட்டிறைச்சியும் சாப்பிடும்படி செய்து, அது எளிதாய் குறைந்த விலைக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் எனப் பெரியார் பேசுகிறார். அந்தக் கட்டுரையை முழுவதும் வாசித்தால் நாம் வியந்து போவதைத் தவிர வேறு வழியில்லை.
இன்றைக்கு மருத்துவ விஞ்ஞானம் பெரிய அளவிற்கு வளர்ந்துவிட்டது. மாவுச்சத்து உணவுகள் எவ்வளவு தீங்கு செய்கின்றன என்கிற விழிப்புணர்வும் வந்துவிட்டது.
நாளொன்றுக்கு மாவுச்சத்து (கார்போ ஹைட்ரேட்) 40 கிராம் போதுமானது என்பதை ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் மனிதர்கள் 300 முதல் 400 கிராம் வரை மாவுச்சத்தை உண்கின்றனர். கொழுப்பு 120 கிராம் வரை தேவை. ஆனால் நாம் 40 கிராம் கூட சாப்பிடுவதில்லை.
ஆக ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நல்ல கொழுப்பும், சிறந்த புரதமும் அவசியம் தேவை. அரிசி, கோதுமை, மைதா போன்றவை பெரும் உடல்நலக் கேட்டை ஏற்படுத்துகின்றன.
இதனை 50 ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் வெகு இயல்பாகப் பேசிச் சென்றுள்ளார். இன்றைய உணவு ஆய்வாளர்கள் இதைப் பெரும் வியப்பாகக் காண்கின்றனர்.

கொழுப்பு, புரதம்?குறித்து நாம் கூடுதலாக அறிய வேண்டும். மாமிச உணவுகளின் மூலம் பெறும் கொழுப்பு நமக்கு நன்மை பயப்பவை! அரிசி, கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுச்சத்துகள் மூலம் உருவாகும் கொழுப்பு (Converted Cholesterol) தீமை பயக்கும். இத்தகைய கொழுப்புக்கும். தான் உடல்பருமன், நீரழிவு நோய், மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கிறது.
புரதம் என்பது மாமிச உணவில் அதிகமாக இருக்கிறது; நல்ல ஆரோக்கியத்தையும் அது கொடுக்கிறது. மரக்கறி மூலம் கிடைக்கும் புரதம் பெரிய பயனைத் தருவதில்லை.

இதுகுறித்துப் பெரியாரின் பாணியில் பகுத்தறிந்து மேலும் அறிந்து கொள்வது ஆரோக்கியமான சமூகத்திற்கு வலுசேர்க்கும்.
ஏனெனில், 50 வயது கடந்துவிட்டாலே மாமிச உணவுகள் கூடாது என்கிற முடிவுக்குப் பலர் வந்துவிடுகின்றனர். அதனால் தான் இரண்டு வகையான கொழுப்புகள், இரண்டு வகையான புரதங்கள் குறித்து நாம் அறிய வேண்டியுள்ளது!
மரக்கறி உணவுதான் சிறந்தது; உயர்ந்தது என்பது பார்ப்பனியம் விதைக்கும் நஞ்சுகளில் ஒன்று!
அதற்கு விடையாக விவசாயம் தோன்றியது எப்போது? மரக்கறி உணவை விட மாமிச உணவு ஏன் சிறந்தது? என்பதையெல்லாம் விரிவாகப் பேசி இருக்கிறார் சமூக மருத்துவ விஞ்ஞானி தந்தை பெரியார்!
அந்தச் சிந்தனையை மேலும் முன்னெடுப்பது நமது கடமை மட்டுல்ல; அதுதான் நமது ஆரோக்கியமும் கூட!