முகப்புக் கட்டுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!

2022 டிசம்பர் 16-31 2022 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது வயது தொடக்க விழா 02.12.2022 அன்று காலை முதலே உலகத் தமிழர்கள் வாழும் இடமெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. குறிப்பாக அன்று காலை பெரியார் திடலில் தமிழ்நாடு மற்றும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பெரியார் தொண்டர்கள், பற்றாளர்கள், ஆசிரியரைச் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து விடுதலை சந்தா வழங்கினார்கள்.
அன்று மாலை 5:30 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்த, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துப் பேசினார்கள்.
கழகத்தின் தலைவர்களுக்கு பிறந்த நாள் நிகழ்வு என்றாலே அது கொள்கைப் பரப்புதலுக்கு ஒரு செயல் திட்டமாகவே நிகழும். அந்த வகையில் அனைத்துத் தலைவர்களின் பேச்சிலும் சனாதன எதிர்ப்பு, சமூக நீதிக்காப்பு, சமத்துவ வேட்கை மிகுந்திருந்தது. வாழ்த்துரையின் நிறைவாக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன், அவருக்கு பெரியார் பன்னாட்டு அமைப்பின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பெரியார் பன்னாட்டு அமைப்பு, மாண்பமை வி.பி.சிங், நிதிஷ்குமார், கலைஞர் உள்ளிட்ட 21 தலைவர்களுக்கு, சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அந்த வரிசையில் இந்த ஆண்டு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ‘சமூக நீதிக்கான கி.வீரமணி விருது’ அவரின் 90 ஆவது வயது தொடக்கவிழாவில் அவர் முன்னிலையிலே வழங்கப்பட்டது. மிகவும் சிறப்புக்குரியதாகும்.
அமெரிக்க வாழ் தமிழரான பெரியாரின் பெருந்தொண்டர் இலக்குவன் தமிழ் அவர்கள் விருது பற்றிய அறிமுக உரை ஆற்றிய பின், அமெரிக்க வாழ் பெரியார் பெருந் தொண்டர் மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் விருதினை முதல்வருக்கு தமிழர்களின் ஆரவாரத்திற்கிடையே வழங்கினார்.
“சமூக நீதிக்கான சரித்திர நாயகர்’ என்று தமிழர் தலைவரின் சிறப்பு அடைமொழி சேர்க்கப்பட்ட நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ஆசிரியர் பிறந்த நாள் விழாவிலே அவர் முன்னிலையிலே அவர் பெயரால் அமைந்த விருதை வழங்கியது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும்.
விருதினைப் பெற்றுக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏற்புரையையும், தமிழர் தலைவரை நன்றியுடன் பாராட்டி வாழ்த்துரையையும் ஒருசேர வழங்கினார்.

முதலமைச்சரின் உரை.
என் உரையைத் தொடங்குவதற்கு முன்னால், பெரியார் பன்னாட்டு அமெரிக்க அமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான கி.வீரமணி விருதுக்கு இந்த ஆண்டு என்னைத் தேர்வு செய்தமைக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதிலும் அய்யா ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் பெறுவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். இந்தப் பெருமையை எனக்குச் சேர்த்திருக்கக்கூடிய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள், பேராசிரியர் இலக்குவன் தமிழ், பேராசிரியர் அரசு செல்லையா, அருள்செல்வி வீரமணி உள்ளிட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பு அமெரிக்க நிருவாகிகள் அனைவருக்கும் நான் என்னுடைய இதயப்பூர்வ-மான நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஆசிரியர் வீரமணி அவர்களை வீண் செயல் எதிலும் வீழ்த்தவில்லை என்பதை விட, வீணர்கள் எவராலும் அவரை வீழ்த்த முடியவில்லை என்பதன் அடையாளம்தான் இந்த 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா!
இங்கு எல்லோரும் குறிப்பிட்டதைப்போல, 90ஆம் ஆண்டு விழாவை மட்டுமல்ல; – நூற்றாண்டு விழாவையும் நாங்கள் எடுப்போம்_ – ஏன், நூற்றாண்டைக் கடந்து அவருடைய பிறந்தநாளை இதே எழுச்சியோடும் – உணர்ச்சியோடும் கொண்டாடுவோம் என்பதன் அடையாளமாகத்தான் இந்த விழா அமைந்திருக்கிறது.
தமிழினத் தொண்டுக்காக_ பகுத்தறிவு இயக்கத் தொண்டுக்காக மட்டுமல்ல; ஆசிரியர் அவர்களைத் தனிப்பட்ட முறையில் நன்றி உணர்ச்சியோடு வாழ்த்துவதற்காக நான் இங்கே வந்திருக்கிறேன்.

நெருக்கடி நிலை (மிசா) அமல்படுத்தப்பட்ட நேரத்தில், நான் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்கிறேன். அது தான் என்னுடைய முதல் சிறை அனுபவம், அப்போது எனக்கு 23 வயது. எனக்கு முன்னால், ஆசிரியர் அவர்களும் மற்ற தோழர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள், கொட்டடியுள் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். நான் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட அன்று, அங்கிருக்கக்கூடிய காவலர்களால் குண்டாந்தடியால் பலமாகத் தாக்கப்படுகிறேன். அப்போது என்மீது விழுந்த பெரும்பாலான அடிகளை, தன் உடம்பிலே தாங்கியவர் மறைந்த அண்ணன் சிட்டிபாபு அவர்கள். சிட்டிபாபு அவர்கள் மட்டுமல்ல, அண்ணன் ஆசிரியர் அவர்களும்தான். இந்த நேரத்தில் நான் நினைத்துப் பார்க்கிறேன். இன்று இருப்பதைவிட மிக மெலிந்த உருவாக இருந்தவன் நான். அடி தாங்க உடம்பு மட்டுமல்ல, அடி என்றால் எப்படி இருக்கும் என்பதை அறியாத நிலையில் இருந்தவன் நான்.

அப்போது என்மீது விழுந்த அடியைத் தாங்கி, அதன் பிறகு மனதைரியத்தைக் கொடுத்தவர்தான் நம்முடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள். தன்னுயிரையும் காத்து என்னுயிரையும் காத்த கருப்புச் சட்டைக்காரர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள். அதேபோல், திராவிட முன்னேற்றக் கழகத்தின்
மீது – இந்த ஆட்சி மீது அரசியல் எதிரிகள் விமர்சனத் தாக்குதல் நடத்தினால், எங்களுக்கு முன்னால் அதனைத் தடுக்கக்கூடிய கேடயமாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடியவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். எதிரிகள் மீது கொள்கை அம்பு பாய்ச்சும் சொல் வீச்சுக்காரராகச் செயல் படுபவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
தினந்தோறும் அவர் விடும் அறிக்கைகள் மூலமாக, நாங்கள் எடுக்க வேண்டிய முடிவுகள் அத்தனையையும் நாங்கள் தீர்மானிக்க வேண்
டும். அண்ணன் வைகோ அவர்களும், நம்முடைய திருமா அவர்களும் சொன்னார்கள், தமிழ்நாடு முதல்வருக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும், இருக்கிறார், இருப்பார் என்று சொன்னார்கள். அதுதான் எனக்கு இந்த அளவிற்கு உற்சாகத்தை, ஊக்கத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது.

நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் மறைவிற்குப் பிறகு திக்கற்ற நிலையில் இருந்த நேரத்தில் தைரியத்தை, தெம்பை ஊட்டி இன்றைக்கு ‘திராவிட மாடல்’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு உணர்ச்சி ஏற்படுத்தித் தந்தவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள் தான்.
நாட்டில் நடக்கும் அனைத்துப் பிரச்சினை
களுக்கும் சுயமரியாதைச் சுடரொளிகளைக் காட்டி வழிகாட்டுபவராக நம்முடைய ஆசிரியர் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இதைத்தான், எனக்கு முன்னால் பேசிய தலைவர்கள் அனைவரும் சுட்டிக் காட்டினார்கள்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடந்த பொதுக் கூட்டத்தில், பத்து வயது சிறுவன் வீரமணி பேசுகிறார். அதனைப் பார்த்த பேரறிஞர் அண்ணா அவர்கள் அடுத்துப்

பேசும் போது சொல்கிறார்…


‘‘இப்போது பேசிய சிறுவன் காதிலே குண்டலம் அணிந்திருந்தால், ஞானப்பால் அருந்திய திருஞான சம்பந்தன் என்று சொல்லி இருப்பார்கள். அது ஞானப்பால். ஆனால் இந்தச் சிறுவன் அருந்தியது பகுத்தறிவுப்பால்” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தகைய பகுத்தறிவுப் பால் அருந்திய காரணத்தால் 90 வயதிலும் இளமையோடும், கொள்கைப் பிடிப்போடும் இருக்கிறார் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
10 வயதில் கடலூரில் மேடை ஏறினார். 11 வயதில் சேலம் மாநாட்டில் உரை-யாற்றினார். 12 வயதில் நாகை பொதுக்கூட்டத்தில் தலைமை தாங்குகிறார். 13 வயதில் திருத்துறைப்பூண்டியில் கழகக் கொடியை ஏற்றுகிறார். 14 வயதில் கடலூரில் இவர் பேசிக் கொண் டிருந்தபோது சவுக்குக் கட்டை வீசப்பட்டது.. 16 வயதில் அண்ணா அவர்களிடம் தூது போனார். 18 வயதில் கழகத்தின் இளம் பேச்சாளி என்று அழைக்கப்-பட்டார். 20 வயதில் இவரது கல்லூரிப் படிப்புக்காக நாடகம் நடத்தி நிதி தருகிறார் எம்.ஆர்.ராதா அவர்கள். 25 வயதில் அரசமைப்புச் சட்டப் பிரிவைக் கொளுத்தும் போராட்டத்துக்கான ஷரத்தை எழுதித் தருகிறார். 28 வயதில் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர். 30 வயதில் ‘விடுதலை” ஆசிரியர்.

இப்படியே நான் சொல்லிக் கொண்டிருந்தால் விடிந்துவிடும். இத்தகைய விடிவெள்ளிதான் நம்முடைய ஆசிரியர் வீரமணி அவர்கள். தலைவர், போராட்டக்காரர். எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர், வழக்குரைஞர், சட்ட வல்லுநர், கல்வித் தந்தை முக்கியவத்துவம் வாய்ந்திருக்கக்கூடிய தலை சிறந்த நிருவாகி, தொடக்க காலத்தில் ‘இசைமுரசு’ நாகூர் ஹனிபாவுடன் சேர்ந்து ஒரு மேடையில் பாடலும் பாடி இருக்கிறார். தலைவர் கலைஞர் அவர்கள் நடித்த நாடகத்தில் ஒரு திருமணக் காட்சியிலும் அவர் நடித்து இருக்கிறார்.
இன்றும் நமது ஆசிரியர் எழுதிவரும் வாழ்வியல் களஞ்சியத்தைப் படித்தால் அவர் மருத்துவம் படித்தவரோ என்று சந்தேகம் வரும் வகையில் நமக்குத் தோன்றும். இப்படி அனைத்து விதமான திறமைகளையும் கொண்ட ஒரு நடமாடும் பல்கலைக்-கழகமாகவே நம்முடைய ஆசிரியர் அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். இந்த பல்கலைக்கழகம்தான் தமிழினத்தின் விடி வெள்ளியாக 90 ஆண்டுகள் ஒளிவீசிக் கொண்டு இருக்கிறது, ஒளிவீசப் போகிறது, இன்னும் தொடர்ந்து வீசிக்கொண்டேதான் இருக்கப் போகிறது.

1945ஆம் ஆண்டு திருவாரூரில் தலைவர் கலைஞர் அவர்கள் தென் மண்டல திராவிட மாணவர் முன்னேற்றக் கழக மாநாட்டுக்கு ஆசிரியர் அவர்களை அழைத்துச் சொற்பொழி-வாற்ற வைத்திருக்கிறார். அவருக்கு தந்த தலைப்பு என்ன தெரியுமா? ‘போர்க்களம் நோக்கி’ என்ற தலைப்பில் அப்போது உரையாற்றி இருக்கிறார். 1945 இல் மட்டுமல்ல; 2022 லும் போர்க்களம் காணக்கூடிய தலைவர்! 1945 ஆம் ஆண்டில் மட்டுமல்ல, இந்த 2022 ஆம் ஆண்டிலும் போர்க்களம் நோக்கிச் செல்வதற்குத் தயாராக இருப்பவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை நாம் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம் ஆளுநருக்கு. இத்தனை நாள் கழித்து ஆளுநர் அதற்கான ஒப்புதல் அளிக்காமல் இருப்பதைக் கண்டித்து நேற்றும் போர்க்களம் கொண்டிருக்கிறார்.
“நாளை நமது பிறந்த நாளாச்சே! அது முடிந்த பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கவில்லை. நான் கேள்விப்பட்டேன், தம்பி அன்பு அவர்கள், ‘இரண்டு நாட்கள் ஆகட்டுமே’ பொறுத்து செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். ”டிசம்பர் 2 ஆம் தேதி அன்று கூட போராட்டம் நடத்துவேன். சிறையிலும் பிறந்தநாள் கொண்டாடத் தயார்’ என்று ஆசிரியர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.
மணக்கோலத்தில் இருக்கும்போதும் – மணவிழா நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துப் பேசியபோதும், அண்ணன் வைகோ அவர்கள் குறிப்பிட்டதைப்போல, ‘நாளை அறிவிக்கப்படும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளத் தயார், மாமியார் வீட்டுக்குச் செல்ல நான் தயார்’ என்று சொன்னவர்தான் நம்முடைய ஆசிரியர் அவர்கள்.
இதுதான் ஆசிரியர்! இதனால்தான் நமக்கெல்லாம் ஆசிரியராக இருக்கிறார்.

இந்த நேரத்தில் நான் அவருடைய துணைவியார்,அவருடைய வாழ்விணையராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய மோகனா அம்மையாரை
நான் மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். உங்கள் அனைவரின் சார்பில் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். இத்தகைய பெருமைக்குரிய இயக்கத்தை வழி நடத்தும் ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகிறேன். ஏன், தமிழ்நாட்டு மக்களின் சார்பில், தமிழர்களின் சார்பில் நான் வாழ்த்துகிறேன்.
இன்று நம்முடைய தலைவர் கலைஞர் இருந் திருந்தால், 99 வயதில் இந்த மேடையில் உதயசூரியனாய் காட்சி அளித்திருப்பார். அப்படிப்பட்ட நிலையில், 90 வயது ஆசிரியரை 99 வயது கலைஞர் அவர்கள் நிச்சயம் பாராட்டி இருப்பார். இன்றைக்கு அவர் இல்லை. கலைஞரின்
மகனான நான் அவரது சொல் எடுத்து ஆசிரியர் அவர்களை நான் வாழ்த்துகிறேன்.
வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக! வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக! வீரமணி வென்றிடுக! வெற்றிமணி ஒலித்திடுக! நன்றி, வணக்கம்!

தமிழர் தலைவரின் ஏற்புரை.


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, மற்றுமுள்ள அனைத்து கட்சித் தலைவர் பெருமக்களே, கழகத் தோழர்களே, திரளாகத் திரண்டிருக்கக் கூடிய பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது முதற்கண் வணக்கம்.
மதவாதிகள், மதக் கருத்துகள் ஒருபக்கத்தில் இருந்தாலும், மற்றவர்களையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் – வேகமாக – ஆபத்து வந்துவிட்டது – ஊர் கிராமத்துக்காரர்கள் எல்லாம் வாருங்கள் என்று அவர்களைக் கூட்டவேண்டுமானால், இப்பொழுதுகூட மாதா கோவிலில் மணி அடிப்பார்கள் _ அந்த மணி அடித்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள் என்று கிராமத்தில் ஒருமுறை உண்டு. அதுபோல, இப்பொழுது மணி அடிக்க வேண்டிய நேரம் – எல்லோரையும் ஒன்று சேர்க்க வேண்டிய நேரம். அதைத்தான் இங்கே நம்முடைய தலைவர்கள் சொன்னார்கள். மிகப்பெரிய அளவிற்கு, இதுவரையில் காலங் காலமாக நம்முடைய தலைவர்கள் அரும்பாடு பட்டார்கள்_ சமூகநீதிக்காக.

அமைச்சர்களாக இருக்கிறவர்கள் எல்லாம் ஊர்வலத்தில் முழக்கமிட்டார்கள், ‘‘எங்கள் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், பெருந் தலைவர் காமராசரும், முத் தமிழறிஞர் கலைஞரும் பெற்றுத் தந்த உரிமைகளை இழக்கமாட்டோம், இழக்கமாட்டோம்” என்று ஊர்வலத்தில் முழக்கமிட்டவர்கள் இதோ அமைச்சர்களாக இருக்கிறார்கள்_-அதுதான் இந்த ஆட்சிக்கே வலிமை. அதுதான் மிக முக்கியமானது. கொள்கை உணர்வு – அப்படிப்பட்டவற்றை விடுவோமா என்று கேட்டோமே, அந்தக் கேள்வி இன்றைக்குத் தேவைப்படுகின்ற கேள்வி மட்டு மல்ல – அதற்கு விடை காணவேண்டிய கட்டத்தை நாம் பெற்றிருக்கின்றோம்.
அந்த வகையில், சட்டப் போராட்டத்தை நீங்கள் நடத்துங்கள்; மக்கள் போராட்டத்தை நாங்கள் நடத்துவதற்குத் தயாராக இருக்கிறோம் என்கிற உறுதிமொழியைச் சொல்லும் நிலையில், எங்களுடைய முதலமைச்சர், ‘திராவிட மாடல்’ ஆட்சி -ஏதோ சாதாரணமாக நீங்கள் நினைக்கவேண்டாம் – இது இரும்புக்கோட்டை – இது மணலால் கட்டப்பட்ட கோட்டையல்ல இந்தப் பாறையில் மோதினால், உங்கள் மண்டை உடையுமே தவிர, கோட்டை சரியாது. காரணம், கோட்டையில் ஓட்டையும் போட முடியாது; கோட்டையில் அவர்கள் இருக்கிறார்கள்; கோட்டைக்குள் வேறு யாரும் நுழைந்துவிடவும் முடியாது.

ஆரியம் வாலாட்டவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். அதனுடைய பணிகளை, இங்கே பெரியார் மண்ணிலே நுழைத்துவிடவும் முடியாது என்று காட்டும் வகையில்தான் நண்பர்களே, கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கிற அத்துணை கருஞ்சட்டைத் தோழர்களும் இருக்கிறோம். எங்களுக்குப் பதவியோ, மற்றவையோ
கிடையாது – உயிர் துச்சமல்ல என்று கருதக்கூடிய அந்த உணர்வோடு இருக்கக் கூடியவர்கள் இருக்கிறோம்.
எனவேதான், உங்கள் பணி சிறக்கட்டும். – இந்த அணி அதைப் பாதுகாக்கும். அந்த உறுதிமொழியைச் சொல்வதுதான் என்னுடைய பதிலுரையாக இருக்குமே தவிர, வேறு கிடையாது. நாங்கள் பதவி வேட்டைக்காரர்கள் அல்லர்! ஏனென்றால், எங்களை பதவியால் அளக்க முடியாது, அளக்கவேண்டிய தேவையும்
இல்லை. ஒருபோதும் நாங்கள் புகழ்வேட்டையைத் தேடக் கூடியவர்கள் அல்ல.
உலக வரலாற்றிலே அப்படிப்பட்ட ஒரு தலைவர் என்ன சொன்னார், தொண்டர்களை அழைக்கும் நேரத்தில், ‘‘கெட்ட பெயர் எடுக்கிறவர்கள் என் பக்கத்தில் வாருங்கள்” என்று சொன்னார்.

ஏனென்றால், போலித்தனமான நல்ல பெயருக்காக வரவேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டினுடைய உரிமைகள், மொழி உரிமைகள், மாநில உரிமைகள், கல்வி உரிமைகள், சமூகநீதி உரிமைகள் அவை அத்தனையும் பாதுகாக்கவேண்டும் என்று சொல்லுகிறபொழுது, கடந்த ஒன்றரை ஆண்டு
கால ‘திராவிட மாடல்’ ஆட்சி உலகத்தை ஈர்த்திருக்கிறது. ஒரு நூறாண்டு கால வரலாற்றைப் புரட்டிப் போட்டு இருக்கக்கூடிய அற்புதமான சாதனையைச் செய்த முதலமைச்சராக நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.
இந்தப் பொற்காலம் தொடருவதற்காக, உங்களுடைய பலத்தைக் கூட்டுவதற்காக, உங்கள் பக்கத்தில்கூட அல்ல, – உங்களுக்கு முன்னால்
பாதுகாப்பாக இருப்பவர்கள் நாங்கள்.பதவிக்கு ‘‘என்ட்ரி” தேடக்கூடியவர்கள் அல்ல; – பதவிக்குப் போன உங்களுக்கு ‘‘சென்ட்ரி”யாக இருப்பது எங்களுடைய வேலை என்பதை மட்டும் சொல்லி, அனைவருக்கும் நன்றி கூறி, முடிக்கின்றேன்.

இளமை எப்பொழுதும் இந்தப் பணியைச் செய்யும் -இந்த நிகழ்ச்சி என்னை 90ஆகப் பார்க்கவில்லை. 90, 90, 90 என்று சொன்னார்கள் – 90 என்ன 800-றா? என்று கேட்கக்கூடிய அளவிற்கு, அந்த உணர்வோடு திரும்புகிறேன். அது உங்களுக்குப் பாதுகாப்பு. – உங்களுக்கு என்று சொன்னால், தனிப்பட்ட முறையில் அல்ல.
‘திராவிட மாடல்’ ஆட்சி இந்தியா முழுவதும் பரவும்_ – 2024 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏற்படும். ஒரு காலத்தில் நாங்கள் எல்லாம் இப்படி இங்கே அமர்ந்திருப்போம் உயிரோடு என்று சிறைச்சாலையில் இருந்தபோது நினைக்கவில்லை.
ஆனால், இன்றைக்கு அவர் முதலமைச்சராக இருந்து உத்தரவு போடுகிறார். எழுந்து நின்று உறுதி சொல்ல முடியாதவர்கள், மறுத்த
வர்கள் எல்லாம்கூட இன்றைக்கு சமூகநீதிக்கு உறுதிமொழி சொல்லவேண்டிய அளவிற்கு, அவர்கள் உறுதிமொழியைச் சொல்கிறார்கள். அதற்காகத்தான் ‘வீரமணி சமூகநீதி விருது’ – இந்த விருதை விட பெரிய சாதனை என்னவென்றால், சொல்லக்கூடாதவர்கள் எல்லாம் உச்சரித்தார்கள்; – சொல்லத் தயங்-கியவர்கள் எல்லாம் உச்சரித்தார்கள்.

பெரியார் பிறந்த நாள் – சமூகநீதி நாள் என்று அறிவித்தார்கள். அம்பேத்கர் பிறந்த நாள் – சமத்துவ நாள் என்று அறிவித்தார்கள். அந்தத் திறமை, அந்த ஆற்றல், அந்தத் துணிச்சல், அதுதான் ஸ்டாலின் என்பதற்குப் பெயர். அதுதான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதிலேயே எல்லாமும் அடங்கியிருக்கிறது.
ஆகவேதான், அப்படிப்பட்ட வீரம் செறிந்த பெரியார் மண்ணை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்கிவிட முடியாது; ஒருபோதும் காலி மண்ணாகவும் ஆக்கிவிட முடியாது. எத்தனைக் காலிகளையும், காவிகளையும் நீங்கள் சேர்த்தாலும், அதைச் சந்திப்பதற்கு மக்கள் தயார்! மக்கள் தயார்!! மக்களை ஆயத்தப்படுத்த நாங்கள் தயார்! தயார்!!
நன்றி, வணக்கம்.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! என்று ஏற்புரையாற்ற, விழா இனிதே நிறைவுற்றது.