கட்டுரை: ஆசிரியர் 90

2022 கட்டுரைகள் டிசம்பர் 1-15 2022

ஆளூர் ஷாநவாஸ், சட்டமன்ற உறுப்பினர் வி.சி.க.

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 ஆகிவிட்டது என்பதை எவரும் ஏற்க மாட்டார்கள். ஏனெனில், 90 வயதுக்கு உரிய முதுமையோ, சோர்வோ, நடுக்கமோ அவரிடம் துளியும் இல்லை. துடிப்புடன் இயங்குகிறார். அன்றாடம் எழுதுகிறார்; பேசுகிறார். ஊர் ஊராய் பயணிக்கிறார்.
சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம் என்றார் அய்யா பெரியார். பெரியாரின் வாக்கையே தன் வாழ்க்கையாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள், சலிப்பின்றி, ஓய்வின்றி சுற்றிச் சுழல்கிறார்.
இந்த வயதிலும் அவர் இப்படி ஊக்கத்துடன் இயங்குவதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது அவரது உணவுப் பழக்கமா, உடற்பயிற்சி வழக்கமா என்று கேட்டால், அவற்றை விட அவரது கொள்கை முழக்கமே காரணம் என்பேன்.
மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க. அரசால் திணிக்கப்பட்டுள்ள ‘நீட்’ தேர்வை எதிர்த்து ஆசிரியர் அவர்கள் பரப்புரைப் பயணத்தை மேற்கொண்டார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் பேசினார். இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் இந்தி எழுத்துகளைத் தார் பூசி அழிக்க, களத்தில் இறங்கினார். இடஒதுக்கீடுக் கொள்கைக்கு ஆபத்து என்றவுடன் உடனே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். இப்படி, அவர் இயங்குவ தெல்லாம் நமக்காக, நம் தலைமுறைக்காக.
இப்போது இந்தியாவைச் சூழ்ந்துள்ள பாசிச ஆபத்திலிருந்து நாட்டைக் காக்கவும், அந்த ஆபத்து தமிழ்நாட்டை நெருங்கிவிடாமல் தடுக்கவும் ஆசிரியரின் எழுத்தும், பேச்சும், இயக்கமும் நமக்குத் தேவை. 69% இடஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு பெற்றதில் அன்று அவரது அர்ப்பணிப்பும் பங்களிப்பும் எப்படித் தேவைப்பட்டதோ அப்படியே இன்று 10% பொருளாதார இடஒதுக்கீட்டை முறியடிக்க அவரது வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
இந்து மக்களின் கட்சி என்று தம்மை சொல்லிக்கொள்ளும் பாஜக, பெரும்பான்மை இந்து மக்களான பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டிற்காக ஒருபோதும் நின்றதில்லை. மாறாக அத்தகைய இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டவே முயன்று வருகிறது. ஆனால், முன்னேறிய வகுப்பினரின் இடஒதுக்கீட்டுக்காக அதே பா.ஜ.க., முழு வீச்சுடன் களத்தில் நிற்கிறது. அதை நடைமுறைப் படுத்துவதற்காக விதிகளை மீறுகிறது, வரம்புகளைத் தாண்டுகிறது, எந்த எல்லைக்கும் இறங்கிப் போகிறது. அப்படியெனில், பா.ஜ.க. யாருக்கான கட்சி என்ற கேள்வியை உரக்கக் கேட்க வேண்டியுள்ளது. அந்தக் கேள்வியை வரலாற்றுத் தரவுகளுடன், அடுக்கடுக்கான சான்றுகளுடன், ஆணித்தரமாகக் கேட்பவர் தான் ஆசிரியர் அவர்கள். அவரது ஒரே அறிக்கை போதும்; அது, இடஒதுக்கீட்டுக்கு எதிரான பா.ஜ.க.வை முழுதாக அம்பலப்படுத்திவிடும்.
இன்றைக்கு இந்திய அளவில் பா.ஜ.க.வை கொள்கை ரீதியில் எதிர்க்கும் தலைவர்கள் ஒருங்கிணையாமல் சிதறி இருப்பதே பா.ஜ.க.வுக்-கான பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது. அங்கு பா.ஜ.க.வுக்கு எதிராக தலைவர்கள் ஒருங்கிணையாமல் இருப்பதற்குக் காரணம், அவர்களை ஒருங்கிணைக்கும் உத்தியோ- _ முதிர்ச்சியோ _ அரவணைக்கும் தன்மையோ உள்ள ஒரு தலைவர் இல்லாமல் போனதே. ஆனால், தமிழ்நாட்டில் அந்த ஒருங்கிணைவு எளிதில் கைகூடி விடுகிறது. அதற்குக் காரணம் ஆசிரியர் அவர்களே. ஆசிரியரால் அனைத்துத் தலைவர்களையும் பெரியார் திடலில் சந்திக்க வைக்க முடிகிறது. முக்கியப் பிரச்சனைகளில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தல் அரசியலுக்கு அப்பால் உள்ள ஒரு தலைவராக ஆசிரியர் இருப்பதால், தேர்தல் அரசியலில் பங்கேற்கும் தலைவர்களை ஒருங்கிணைப்பது அவருக்கு எளிதாகி விடுகிறது. இப்படி ஒரு தலைவர் இந்திய அளவில் இல்லாமல் போனது துயரமே என்றாலும், அந்தப் பணியையும் நம் ஆசிரியரே முன்னின்று செய்ய வேண்டும். அவருக்கான தேவை நாடு தழுவிய அளவில் உள்ளது.
சமூக நீதியைக் காக்க, சமத்துவ சமுதாயத்தை அமைக்க ஆசிரியரின் பயணம் வெல்க!