சிந்தனைக் களம் : இந்திய அரசியலை எச்சரிக்கும் பிரஞ்சுப் புரட்சி!

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

இளஞ்செழியன் ராஜேந்திரன்

ஜூலை 14, பிரஞ்சுப் புரட்சி தொடங்கிய நாள். வால்டேர், ரூசோவின் தாக்கத்தால் எழுந்த புரட்சிக்கு முக்கியமாக மூன்று காரணங்கள் இருந்தன.
1. வறுமையில் வாடிய மக்களைப் பற்றி சிந்திக்காதது.
2. மதவாதம் ஆட்சியைக் கட்டுப்படுத்தியது, எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றது.
3. கருத்துரிமை முற்றிலும் முடக்கப்பட்டது.
அரசர்கள் மக்களைப்பற்றிச் சிந்திக்காமல், தொடர்ந்து மதங்களை முன்னிறுத்தியும், மத வழிகாட்டுதல்படி ஆட்சி செய்வதுமான நிலையில் இருந்தனர். ஒரே மாதிரியான பழக்கங்களை, நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டித் திணித்தனர். உணவுக்கு ரொட்டிகூட கிடைக்காத மக்கள் அரண்மனையில் கையேந்தி நின்றபோது, அரசரின் மனைவி, “ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன? கேக் சாப்பிடுங்கள்” என்று கிண்டல் செய்தார். எல்லோரும் ஒரே மதமாக இருக்க வேண்டும்; அதுவும் கத்தோலிக்காக இருக்க வேண்டும், மற்றவர்களான, ப்ராடஸ்டண்ட்கள், யூதர்கள் போன்றவர்கள் வசிக்கலாம். ஆனால், உரிமைகள் கிடையாது என்று மறுக்கப்பட்டனர்.
கருத்துரிமை முற்றிலுமாக நசுக்கப்பட்டது. எதிர்த்துப் பேசுபவர்கள் அனைவரும் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டனர். வால்டேரின் மிக பிரபலமான வாசகம்”I will disapprove of what you say, but will defend to the death for your right to say it” என்பதாகும். அதாவது “உன் கருத்தை நான் முழுவதுமாக எதிர்ப்பேன். ஆனால், அதைச் சொல்வதற்கான உனது உரிமைக்காக உயிருள்ளவரை போராடுவேன்” என்று கூறினார். அந்த அளவிற்கு கருத்துரிமை நசுக்கப்பட்டது.
இப்போது மேலே சொன்ன நிகழ்வுகள் எல்லாம் மிகவும் பழக்கப்பட்டது போலவே இருக்கின்றன, அல்லவா? ஆமாம். இவை வெறும் 250 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த பிரஞ்சுப் புரட்சி கிடையாது, கடந்த 8 ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள் சந்திக்கும் பிரச்சனை.
1. மதத்தின் பெயரால் ஆட்சி செய்து மக்களை வதைக்கும் ஆட்சி. வறுமையில் இருக்கும் மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் கொடூரமாக நடந்து கொள்வது. உணவுப் பொருள் களின் விலை ஜி.எஸ்.டி ஏற்றம் அடைந்த பின், “வரி அதிகம் என்றால் வீட்டில் சமைத்துச் சாப்பிடுங்கள்” என்றும், வெங்காயம் விலை விண்ணைத்தொட்ட போது “எங்கள் வீட்டில் வெங்காயம் சாப்பிடுவது இல்லை; எனக்குத் தெரியாது” என்று 16ஆம் லூயியின் மனைவி சொன்னது போல் ஒன்றிய நிதியமைச்சர் மக்களைக் கிண்டல் செய்தது.
2. ஒரே நாடு, ஒரே ரேஷன், ஒரே கொள்கை என்று மதசார்பற்ற நாடான இந்தியாவை இந்து நாடாக மாற்ற கொடூரமாக வேலை செய்யும் அரசு. CAA/NRC போன்ற திட்டங்களால் மற்ற மதத்தினரை ஒதுக்கி வெளியேற்றத் துடிக்கும் ஆட்சி.
3. ஆட்சியை எதிர்த்து கருத்துகள் தெரிவித்த பத்திரிகையாளர்களை மிரட்டியும், சிலரைக் கொலை செய்தும், முழுக்க வலதுசாரி சிந்தனையாளர்களையும் அடிமைகளையும் பத்திரிகைகளில் அமர்த்தி, சினிமா உள்பட எதிலும் தங்களுக்கு எதிரான கருத்துகள் வரவிடாமல் செய்வது, எதிர்க் கேள்வி கேட்பவர்களை எல்லாம் “ஆண்டி இந்தியன்”, “தேசத்துரோகி” என முத்திரை குத்துகிறது ஒன்றிய அரசு.
இன்று எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் பிரதிநிதிகள்கூட நாடாளுமன்றத்தில் அரசை எதிர்த்துக் கேள்விகள் கேட்க, விமர்சிக்கக் கூடாதென வார்த்தைகளுக்குக்கூட தடை விதித்திருக்கிறது _ கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிச பாஜக அரசு. பிரான்சு நாட்டிலும் அன்று மக்கள் இப்படி கொடுமை-களுக்கு ஆளாக்கப்பட்ட போது, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒருநாள் வெகுண்-டெழுந்து மக்கள் புரட்சி வெடித்தது.
அடித்தட்டு மக்கள் வஞ்சிக்கப்படுவதும், கார்ப்பரேட்டுகளும் உயர் ஜாதியினருக்கும் வசதி வாய்ப்புகளைப் பெறுவதும், ஒற்றைக் கலாச்சாரம், மதவெறுப்பு, வறுமை, வேலையின்மை, வளர்ச்சியை மறந்து மதத்திற்கு முன்னுரிமை அளிப்பது போன்றவை மேலும் தொடர்ந்தால், அப்படி ஒரு மக்கள் புரட்சி இங்கும் வெடிக்கும். ஆனால், ஜனநாயக ரீதியாக நடக்கும். கொடூர வலதுசாரி ஆட்சியாளர்கள் அடியோடு தூக்கியெறியப்-படுவார்கள். மக்கள் உரிமை மீட்கப்படும். எப்படி வால்டேரும், ரூசோவும் பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டார்களோ அதே போல் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கரின் வழிகாட்டுதலின்-படி பாசிசத்திற்கும் மதவாதத்திற்கும் எதிரான புரட்சி வெடிக்கும். ஜனநாயகம் காக்கப்படும்.ஸீ