கட்டுரை: பெரியாரும் திராவிட நாடும்

2022 அக்டோபர் 16-30 2022 கட்டுரைகள்

ஆ.வ.ப.ஆசைத்தம்பி தொகுத்தது

திராவிடர்களின், தமிழர்களின் நிலைமையைத் தெரிந்துகொள்ள விரும்பு-கிறவர்கள்; முதலாவது திராவிட நாடு ஒரு தனி நாடு என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
திராவிட நாட்டின் எல்லைகளைக் குறிப்பது கஷ்டமில்லை. இயற்கை திராவிட நாட்டைச் சுற்றி மூன்று பக்கங்களில் சமுத்திரங்களையும் ஒருபுறம் விந்தியமலையையும் நிறுத்தி வைத்திருக்கிறது.
திராவிட நாடு தெளிவாக ஒரு தனிப்பட்ட சமூகத்தையுடையது. திராவிட மொழியான தமிழ்மொழி எத்தனை பிரிவாய்ப் பிரிந்திருந்தும் ஆரியரோடு சம்பந்தப்படாமல் ஒரு தனிப்பட்ட இனமாக இருப்பதற்கு தமிழ் மொழியின் தன்மைக்கு நான் வந்தனம் செலுத்துகிறேன்.
எந்த அந்நிய நாட்டினருக்கும் உட்படாமல், திராவிட நாடு திராவிடருக்கே சொந்தமாக இருக்க வேண்டும்.
திராவிடநாடு தனக்கு இஷ்டமான சட்டங்களைச் செய்து கொள்ளுமானால், அதைப்போல சட்டத்திற்கு அடங்கி நடந்து மிக உயர்ந்த ஆட்சியை அமைத்துக்கொள்ளும் நாடு உலகத்தில் வேறிராது.

“திராவிட நாடு தனி நாடாக வேண்டும்’’ என்று சொல்லாதவர்கள் ஆரியர்கள்தான்.
நாம் பெற்ற ஒவ்வொரு சீர்திருத்தமும் நீதியும் ஆரியர்களின் கையில் இருந்து பறிக்கப்பட்டவைகளே!
நமக்குக் கதி நம்முடைய மொழி. அதுவே நமது குணத்தை அமைக்கிறது.
எந்த நாட்டார், வர்க்கத்தார், ஒரு இனத்தின் உரிமையையும் சுதந்திரத்தையும் உதறித்தள்ளுகிறார்களோ, அவர்களைத் தனிப்பட்டவர்-களும் கூட்டத்தார்களும் உதறித் தள்ளுவது நிச்சயம்.நாங்கள் ஆரியர்களைப் போல் ஆங்கிலேயர்-களுக்கு வேண்டியவர்களுமல்லர். நாங்கள் ஒரு தனிப்பட்ட ஒரு இனம். எங்கள் அன்பிற்குரியது

திராவிட நாடு ஒன்றே!
திராவிட நாடு தன்னுடைய சுதந்திரத்தை விட்டுக்கொடுக்க மறுப்பதே, தொன்றுதொட்டு வடநாட்டிற்கும் திராவிட நாட்டிற்கும் நடந்த சண்டைக்குக் காரணம்.
திராவிட நாடு பிரியாமல் இருக்கும்வரை ஆரியர்களுக்கு அபாயந்தான், சுதந்திரத் திராவிட நாட்டினால் அபாயமில்லை. பலவந்தமாக மத்திய சர்க்காருடன் இணைக்கப்பட்டிருக்கும் திராவிட நாடு, தன்னைக் கசக்குகிறவனைத் துவேசித்து, தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். திராவிட நாடு பிரிந்த அன்றுதான் ஆரிய _ திராவிடப் பிரச்சினை தீரும்.
தன் இன சுதந்திரத்தை விரும்பும் எந்தச் சமூகத்தையும் ஒரு சிறிய வர்க்கம் எதிர்த்து நிற்பது வழக்கம்.
திராவிட இனத்திலுள்ள ஒவ்வொருவரும் விடுதலை பெற வேண்டுமென்று முழுமனதுடன் தீர்மானித்தாலே திராவிட நாடு இலகுவில் பெற முடியும்.
(‘திராவிட நாடு’ இதழ் – 04.07.1943)