முகப்புக் கட்டுரை : மதச்சார்பற்ற அணியின் ஒருங்கிணைப்பே மகத்தான வெற்றிக்கு வழி!

2022 ஆகஸ்ட் 16-31 2022 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

மதவாத கட்சியான பி.ஜே.பி.யின் பலம் என்பதே, மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை இன்மையே! பி.ஜே.பி. கட்சியில் உள்ளவர்கள் தங்கள் கட்சி வளர்ச்சியும் வலுவும் பெறவேண்டும் என்பதற்காகத் தங்கள் நலனை விட்டுக் கொடுக்கிறார்கள். தன் முனைப்பைக் காட்டாது கட்சியின் நலனை முன்னிறுத்துகிறார்கள். இது அவர்களின் கூடுதல் பலம். கிடைத்த ஆட்சி அதிகாரங்-களை, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களின் ஊடகங்களின் பிரச்சாரம் இவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரை அமலாக்கத் துறை, வருமான வரித்துறை மூலம் அச்சுறுத்தியும், பதவி ஆசை காட்டியும், பணத்தைக் கோடிக்கணக்கில் கொடுத்தும் தங்களுக்கு ஆதரவாக ஆக்கிக் கொள்வது அவர்களின் அடுத்த பலம்.
ஆக, பி.ஜே.பி.யின் பலம் என்பது தங்கள் கொள்கைகளைப் பரப்பி, மக்கள் ஆதரவைப் பெற்று வந்தது அல்ல. மாறாக, சூழ்ச்சி, சதி, குதிரை பேரம், குழப்பம் உருவாக்கல், எதிர்க்கட்சிகளை உடைத்தல் போன்ற முறைகேடான வழியில், வகையில் பெற்ற பலமேயாகும்.

எனவே, பி.ஜே.பி.யை வீழ்த்த வேண்டும் என்றால், மதச்சார்பற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் சுயநலத்தை, தனிப்பட்ட ‘ஈ.கோ’வை, தன் முனைப்பைக் கைவிட்டு, கட்சிநலனை, நாட்டின் நலனை முன்னிறுத்திச் சிந்திக்க வேண்டும்; முடிவெடுக்க வேண்டும்.

உத்தரப்பிரதேச நிலை என்ன?
ஒரு காலக்கட்டத்தில் மாயாவதியும், மற்றொரு கட்டத்தில் முலாயம்சிங் யாதவும், அடுத்து அவரது மகன் அகிலேஷ் யாதவும் அதிக இடங்களைப் பெற்று ஆட்சி நடத்திய மாநிலம் உத்தரப்பிரதேசம். அப்படிப்பட்ட மண்ணில் பி.ஜே.பி. எப்படி ஆட்சிக்கு வந்தது?
மதவுணர்வும், இராமர் கோயில் கடடுமானமும் மட்டும் பி.ஜே.பி. ஆட்சி அமைய முதன்மைக் காரணங்கள் அல்ல. அவையும் காரணங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். பின், பி.ஜே.பி எப்படி ஆட்சியைப் பிடித்தது?
காங்கிரஸ் கட்சிக்கே உரித்தான, உடன்-பிறந்த கோஷ்டிப்பூசல், ஈகோ, காலை வாரிவிடுதல் போன்ற காரணங்களால் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்தது.
பிற்படுத்தப்பட்ட மக்களின் அரணாய் சமாஜ்வாடி கட்சியும், தாழ்த்தப்பட்ட மக்களின் அரணாய் பகுஜன் சமாஜ் கட்சியும் உறுதியாய் நின்று உழைத்தபோது மக்கள் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்தன. அவர்களை வீழ்த்த அவர்களின் முதன்மை எதிரியான பா.ஜ.க. பலமுறை முயன்றும் அது நடக்கவில்லை. ஆனால், தங்களுக்குள்ளே போட்டாபோட்டி, பதவி ஆசை காரணமாய் கட்சியின் ஒற்றுமை _ கட்டுக்கோப்பு குலைந்ததால் பி.ஜே.பி. வளரத் தொடங்கியது.

உத்தரப்பிரதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் பிற்படுத்தப்பட்டோரும், தாழ்த்தப்-பட்டோரும் ஆவர். இவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் தேர்தலைச் சந்தித்தால் 90% இடங்களை சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மட்டுமே பெற்றுவிடும். இன்றைக்கு அதுதான் நிலை. ஆனால், அங்கு பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்திருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பா.ஜ.க.வின் பலம் அல்ல; இந்த இரண்டு கட்சிகளின் ஒற்றுமையின்மை-தான்.
பிகாரிலும் இதே நிலைதான் இருந்தது. இதனால் பிகார் அடைந்த பின்னடைவும் இழப்பும் ஏராளம். அந்த அவலநிலையை முதல்வர் நிதிஷ்குமார் அவர்கள் தன் புத்திக் கூர்மையால் மாற்றி, மீண்டும் மதச்சார்பற்ற, சமூகநீதிக் கூட்டணி ஆட்சியை அமைத்து பி.ஜே.பி.யைத் தனித்து ஒதுக்கித் தள்ளி-விட்டார். இதைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது அறிக்கையில் சிறப்பாக எடுத்துக்காட்டி மற்ற மாநிலத் தலைவர்-களுக்கும் விழிப்பூட்டியுள்ளார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
“இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்று பிகார் மாநிலம். ஹிந்தி பேசும் மாநிலங்களில் அதுவும் முக்கியமான ஒன்று.

உற்சாகமும், ஊக்கமும் தரும் நிதிஷ்குமாரின் முடிவு!
எட்டாவது முறையாக 10.8.2022 அன்று முதலமைச்சர் பதவியேற்ற நிதிஷ்குமார் அவர்களும், அவருடன் மெகா கூட்டணி அமைத்து, துணை முதலமைச்சராக ஆகியுள்ள எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேஜஸ்வி (யாதவ்) அவர்களும், சரியான நேரத்தில், சரியான முடிவெடுத்து, பிகாரில் ஜனநாயகம் தழைக்கவும், சமூக நீதிக் கொடி தலைதாழாது பறக்கவும் ஒரு சமூகநீதி ஆட்சியை உருவாக்கிக் காட்டியுள்ளனர். மதவெறி _ வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுக்கும் வண்ணம் அந்த மாநிலத்தை மதவாதத்திலிருந்து காப்பாற்றி, ஜனநாயகத்தையும், இந்திய அரசமைப்புச் சட்ட பீடிகை வலியுறுத்தும், ‘‘இறையாண்மையுள்ள சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசினை”யும் ஏற்படுத்தி-யுள்ளனர். மக்களாட்சி முறையின் மாண்பு-களைக் காப்பாற்றிடும் ஆட்சி தக்க சமயத்தில் அங்கே _ அசோக சாம்ராஜ்ய மண்ணில் ஏற்பட்டுள்ளது என்பது பிகார் மக்களுக்கு மட்டும் மகிழ்ச்சி தருவதல்ல; இந்திய முற்போக்காளர்கள், சமூகநீதியாளர்கள் அனைவருக்குமே பெரும் உற்சாகத்தையும், குதூகலத்தையும் தருவதாகும்!
அய்க்கிய ஜனதா தளமும், ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்.ஜே.டி. _ லாலுபிரசாத் அவர்களது கட்சி இணைந்து) அமைத்துள்ள இந்தக் கூட்டணி _ மெகா கூட்டணியாக _ செக்யூலர் ஃப்ரண்ட் (Secular Front) ஆக அமைந்துள்ளது, நிச்சயம் பிகாரில் ஜனநாயகம் தழைக்கவும், இந்தியாவில் அரசமைப்புச் சட்ட நெறி முறைகளுக்கு விடை கொடுத்தனுப்பும் காவி _ கார்ப்பரேட் பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ். ஆட்சிக்கு சரியான மாற்றாகவும் திகழும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை.
பிகார் மக்களின் நியாயமான இரண்டு ஒருமித்த கோரிக்கைகளை மோடி தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஒன்றிய ஆட்சி நிறைவேற்றாமல் பிகார் மக்களின் அவநம்பிக்கையைப் பெற்றதன் விளைவே இது!

பிகார் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர்!
1. பிகார் மாநிலத்திற்கு தனிச் சிறப்பு அந்தஸ்து தருவதாகவும், அதற்கென பெரும் நிதி உதவி செய்வதாகப் பல தேர்தல்களில் கூறிய வாக்குறுதி நீர்மேல் எழுத்தாகியது; பிகார் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர்!
2. அதுபோலவே, அத்துணைக் கட்சிகளும் பிகார் மாநில பா.ஜ.க. உள்பட சமூகநீதி (இட ஒதுக்கீடு) அனைவருக்கும் சட்டப் பாதுகாப்புடன் கிடைக்க ஒரே சரியான வழி, ஜாதிவாரி கணக்கெடுப்பு (Caste wise Census) எடுக்க ஒன்றிய அரசு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

மிஞ்சியது ‘‘பட்டை நாமமே!”
டில்லிக்கு அனைத்துக் கட்சி குழுவுடன் பிகாரிலிருந்து சென்று, பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்து வற்புறுத்தியும் அவர்களுக்கு மிஞ்சியது ‘‘பட்டை நாமமே!”
இதன் விளைவுதான், அதிருப்தி; எதிர்ப்பு மேகங்கள் திரண்டு பா.ஜ.க. ஆட்சியை பிகாரில் காணாமற்போகச் செய்து, சமதர்ம ‘‘அசோக” மக்களாட்சி அந்த மண்ணில் மலர்ந்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி அவர்கள் சரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

நண்பர்கள் இல்லா தனி மரமாகவே பா.ஜ.க. இருக்கிறது
‘‘பா.ஜ.க. அமைத்துள்ள அதன் கூட்டணியில் (தேசிய ஜனநாயகக் கூட்டணி _ என்.டி.ஏ) உள்ள எதிர்க்கட்சிகளைக் கூட அழிப்பது, ஒழிப்பதுதான் அதன் முக்கிய இலக்காக உள்ளது; எனவே, ஹிந்திப் பிரதேச மாநிலங்களில் பா.ஜ.க. _ ஆர்.எஸ்.எஸ்., அதன் கூட்டணிக் கட்சிகளின் தோழமை எங்குமே இல்லை _ நண்பர்கள் இல்லா தனி மரமாகவே பா.ஜ.க. இருக்கிறது!
இதனை உண்மைதான் என்று ஒப்புக் கொள்வதைப்போன்று, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, இனி எதிர்வரும் காலத்தில், பா.ஜ.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இந்தியாவில் இருக்காது என்றாரே! குறிப்பாக பிராந்தியக் கட்சிகள் என்று அழைக்கப்படும் மாநிலக் கட்சிகளை முழுவதுமாக அழிப்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் என்று கூறுவதல்லாமல் இது வேறென்ன?” என்ற தேஜஸ்வியின் கேள்வி சரியானதுதானே?

நிதிஷ்குமாரை சுதந்திரமாகச் செயல்பட விடவில்லை ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் (தேர்தலில் பல சூழ்ச்சிகளுக்குப் பிறகும்கூட) தனிப் பெரும் கட்சியாக 79 இடங்களிலும், அய்க்கிய ஜனதா தளம் 45 இடங்களிலும், பா.ஜ.க. 77 இடங்களையும் சட்டமன்றத்தில் பெற்றுள்ள நிலையில், தனித்த பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்புக்கூட விடுக்காமல், ஒப்பந்தப்படி நிதிஷ்குமார் அவர்களை முதலமைச்சராகப் பதவியேற்க அனுமதித்தாலும், அவரது இறக்கைகளை வெட்டி பறக்கவிட்டதுபோல, அவரை சுதந்திரமாகச் செயல்பட விடாமல், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கவனமாகப் பார்த்துக் கொண்டது!

இன்றைய மவுனமான ஜனநாயகப் புரட்சி, பிகாரில்!
அந்த வேதனை வெடிப்புதான் இன்றைய மவுனமான ஜனநாயகப் புரட்சி, பிகாரில்!
1. ராஷ்டிரிய ஜனதா தளம் – 79
2. அய்க்கிய ஜனதா தளம் – 45
3. காங்கிரஸ் – 19
4. இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். – 12
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2
6. ஹந்துஸ்தானி அவாம் மோர்ச்சா – 4
7. ஏ.அய்.எம். எம்.அய். கட்சி – 1
சுமார் 164 எம்.எல்.ஏ.க்களின் பெருத்த மெஜாரிட்டியுடன் இந்த மெகா கூட்டணி பதவியேற்றுள்ளது!
இந்திய தேசிய காங்கிரஸ் தனது ஆதரவைத் தர உடனடியாக முடிவெடுத்தது மிகவும் வரவேற்கத்தக்க நல்ல திருப்பமான முடிவு!
2015இல் ‘‘ஆபரேஷன் தாமரை” மூலம் ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க.!
2015இல் பிகார் சட்டமன்றத் தேர்தலில் _ நிதிஷ்குமார் _ தேஜஸ்வி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. (பிரதமர் மோடி பலமுறை தேர்தல் பிரச்சாரம் செய்த பின்னரும்கூட!) ஆனால், அந்த ஆட்சி _ அமைத்தும்கூட பா.ஜ.க., அதற்கே உரிய ‘‘வித்தைகளை” கையாண்டது.

‘‘ஆபரேஷன் தாமரை” மூலம் அவ்வாட்சியைக் கவிழ்த்து, பா.ஜ.க. _ நிதிஷ் ஆட்சியாக அதனை மாற்றி, அப்போது ஜனநாயகப் படுகொலை நடத்தியவர்கள்; இப்போது நிதிஷ்குமாரைப் பார்த்து, ‘‘எங்களை (பா.ஜ.க.வை) கவிழ்த்துவிட்டீர்களே” என்று கேட்க, என்ன தார்மீக உரிமை உள்ளது?
மக்களிடம் வாக்குகள் வாங்கி, அவர்கள் ஆதரவுடன் அமைக்கப்படுகின்ற ஆட்சி அல்ல _ பா.ஜ.க. ஆட்சி!
2014ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, வெறும் 7 மாநிலங்களில் மட்டுமே பா.ஜ.க. ஆட்சி! பிறகு, இப்போது 17 மாநிலங்களில் ஆட்சி என்பது, ‘‘ஆபரேஷன் தாமரை” என்ற ‘வித்தை’யின்மூலம் _ எம்.எல்.ஏ.,க்களை கட்சி மாறச் செய்து அமைக்கப்பட்ட ஆட்சிகள்தானே ஒழிய, மக்களிடம் வாக்குகள் வாங்கி, அவர்கள் ஆதரவுடன் அமைக்கப்பட்ட பா.ஜ.க ஆட்சி அல்ல. (அண்மையில் உள்ள புதுச்சேரியில் பா.ஜ.க. எப்படி ஆட்சிக்கு வந்தது?).
மத்திய நிறுவனங்கள், சி.பி.அய்., அமலாக்கப் பிரிவு உள்பட இந்தத் ‘‘திரிசூலம்” தானே ஜனநாயக முறையை வீழ்த்திட பயன்-படுத்தப்பட்ட ஆயுதம்!
‘‘முற்பகல் செய்தது; பிற்பகல் விளைகிறது!”
அவ்வளவுதான்!
‘2024இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது’ என்று நிதிஷ்குமார் முதலமைச்சராக (8 ஆவது முறை) பொறுப்பேற்ற உடன் பேட்டியளித்திருப்பது குறிப்பிடத்தக்க திருப்பம் _ ‘‘விடியலை நோக்கி வெள்ளி முளைக்கத் தொடங்கிவிட்டது” என்பதையே காட்டுகிறது.
தமிழ்நாட்டைப் போலவே, ‘திராவிட மாடல்’ ஆட்சியாக அவ்விரு தலைவர்களுடன் கரம் கோத்த கூட்டணிக் கட்சிகளின் அரவணைப்பு _ தன்முனைப்புத் தலைதூக்காது, மதச்சார்பற்ற கொள்கையை முன்னிறுத்தி,, பொது எதிரியான மதவாதத்தினை அனு மதிக்காது _ சமூகநீதிக்கு எதிரான ஆட்சிக்கு பிகார் மண் இடந்தராது என்று காட்டிய அத்துணைத் தலைவர்களையும் தமிழ்நாடு பெரியார் மண் _ சமூகநீதி மண் _ ‘திராவிட மாடல்’ மண் வாழ்த்தி மகிழ்கிறது!’’ என்று தமது அறிக்கையில் ஆசிரியர் அகம் மகிழ்ந்து கூறியுள்ளார்கள்.

யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே முதன்மையானது!
நான், நான் என்ற ஈகோவில் ஒத்த கொள்கை, இலக்கு உடையவர்கள் பிரிந்து நின்று மோதுவது அறிவுக்கும், மக்கள் நலனுக்கும் உகந்தது அல்ல. இருக்கின்ற கள நிலைமைக்கு ஏற்ப, தங்களுக்குள்ள மக்கள் செல்வாக்கின் அடிப்படையில் இடங்களைப் பகிர்ந்து கொண்டு அகிலேசும், மாயாவதியும், காங்கிரசும் இணைந்து ஒரு வலுவான கூட்டணியை அமைத்தால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 90% இடங்களுக்கும் குறையாமல் வெற்றி பெற முடியும்! சென்ற சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்க முடியும்!
பிரிந்து நின்று எதிரியை ஆட்சியில் அமர வைத்துவிட்டு, கூனிக்குறுகி, செல்வாக்கு இழப்பதைவிட, ஒற்றுமையாய்க் கூட்டுச் சேர்ந்து நின்றால் கூட்டணி ஆட்சியைக் கட்டாயம் அமைத்து மான மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்!
எதிரி வரக் கூடாது, மதவாதக் கட்சி ஆட்சியில் அமரக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தால், ஒற்றுமை தானே வரும்! மாறாக, நீயா? நானா? மோதல் வலுத்தால், மூக்குடைபட்டு மூலையில் முடங்கவே நேரிடும். உத்தரப்பிரதேசத்துக்குப் பொருந்துவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருந்தும்.

கருநாடக மாநிலத்தின் கள நிலவரம் என்ன?
கருநாடக மாநிலம் திராவிட மண். அங்கு மதவாதச் சக்திகள் காலூன்றக் கூடாது. அப்படியிருந்தும் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கிறது என்றால், என்ன பொருள்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் விழிப்பின்றி, சிந்தனையின்றி, எதிரியின் சூழ்ச்சியை அறியும் திறன் இன்றி, பதவி வெறியில், பணத்தாசையில் வீழ்வதே அதற்குக் காரணம்.
பெம்மான் பசவர் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் 750 ஆண்டுகளுக்கு முன்பே களம் கண்டவர்; மக்களை ஒருங்கிணைத்தவர். அவர் வழி வந்தவர்களே இன்று பி.ஜே.பி.க்கு பின் அணிவகுப்பது பச்சைத் துரோகம் அல்லவா?
தேவகவுடா, சித்தராமையா சிதறிப் போகாமல் ஒற்றுமையாய் இருந்தால், மதச்சார்பற்ற உணர்வை முன்னிறுத்தி களம் கண்டால் கருநாடகத்தில் பி.ஜே.பி.யைத் துடைத் தெறிய முடியும்!

மகாராட்டிர மாநிலத்தில் மதவாத ஆட்சி நடக்கலாமா?
மராட்டிய மாநிலம் சமூகநீதி மண். ஜோதிராவ்பூலே, சாகுமகராஜ், அம்பேத்கர் போன்ற சமூக சமத்துவக் காவலர்கள் பண்படுத்திய மண். ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராய் அணிவகுத்த மண். அதற்கு எதிர்வினையாகத்தான் அங்கு ஆர்.எஸ்.எஸ். உருவாக்கப்பட்டது.
சிறுபான்மையினரான ஆரியப் பார்ப்பனர்-கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து ஆதிக்கம் செலுத்த முடிவது எதனால்? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. ஒவ்வொருவரும் தன்முனைப்புக் காட்ட முற்படுகின்றனர். பதவிக்காக கட்சியை உடைக்கவும், கைக்கூலிகளாய் மாறவும் காத்துக் கிடக்கிறார்கள். அதன் விளைவே இந்த அவல நிலைக்குக் காரணம்.
சிவசேனாவின் தோள் மீதேறி வளர்ந்த பா.ஜ.க. இன்று சிவசேனாவையே சிதறு தேங்காய் ஆக்கி தங்களின் ஆதிக்கத்தை அரங்கேற்றிவிட்டது. இது பி.ஜே.பி.யின் பலம் என்பதைவிட சிவசேனாவின் விழிப்பில்லா நிலையே காரணம் என்பதே உண்மையாகும்.

பிகாரைப் பின்பற்ற வேண்டும் புதுச்சேரி!
பிகாரில் நடந்துள்ள ஆட்சி மாற்றம் _ பட்டு உணர்ந்த பாடத்தின் விளைவு. பட்டுத்தான் உணர வேண்டும் என்று இல்லாமல் பட்டவர்கள் பெற்ற பாடத்தை முன்னிறுத்தி மற்றவர்கள் எச்சரிக்கையுடன் மீளுவதே சரியான செயலாகும். இன்றைய சூழலில் புதுச்சேரி மாநிலம், பா.ஜ.க.வின் பாசிசப் பசிக்கு இரையாகக் காத்திருக்கும் மாநிலம். தப்பித்துப் பிழைக்க இதுவே தக்க தருணம். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் தனது சொந்த நலன்களையெல்லாம் விட்டுத்தள்ளி, புதுச்சேரி மாநிலத்தின் பெருமை, மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மதச்சார்பற்ற மண்ணாக புதுச்சேரியை மாற்ற உறுதி கொண்டு, நிதிஷ்குமார் நிமிர்ந்து நின்று நிகழ்த்திய ஆட்சி மாற்றத்தைப் போல் உடனடியாகப் புதுச்சேரியிலும் நிகழ்த்த வேண்டும் என்பதே சமூகநீதியில், சமத்துவத்தில், மதச் சார்பின்மையில், மாநில நன்மையில், மக்கள் நலத்தில் அக்கறையுள்ளவர்களின் எதிர்பார்ப்பு. எனவே, புதுவை முதல்வர் துணிந்து முடிவெடுக்க வேண்டும்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு மதச்சார்பற்ற அணி வலுப்பெற வேண்டும்
2024இல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். சனாதனமா? சமத்துவமா?; ஜனநாயகமா? பாசிசமா?; ஒற்றைக் கலாச்சாரமா? பன்மைக் கலாச்சாரமா?; மனுதர்மமா? மனித தர்மமா? என்பன போன்ற முரண்பட்ட எதிர்எதிரான இரு கொள்கை-களுக்கு இடையே நடக்கும் மோதல். மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒன்றுமையின்றிப் பிரிந்து நின்று பா.ஜ.க.வை ஒன்றிய ஆட்சியில் அமர வைத்தால், பாசிச சனாதன ஆட்சிதான் நடக்கும்! சமூகநீதி, சமதர்மம் எல்லாம் ஒழிக்கப்படும்! சிறுபான்மை மக்கள் பழிவாங்கப்படுவர், அடக்கி ஒடுக்கப்படுவர்.