நினைவு நாள் : சுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன்

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

நினைவு நாள் : ஆகஸ்ட் 9
வை.கலையரசன்

புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். அந்த ஊரில் வசதி படைத்த மிராசுதார் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது மாமா திருவைகாவூர் பிச்சை பிரபலமான கம்யூனிஸ்ட் தலைவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘புலவர்’ பட்டம் படிக்க வந்தபோது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொருளாதார ஆனர்ஸ் வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள் ஆயினர். ஆசிரியர் மூலம் தந்தை பெரியாருக்கு அறிமுகம் ஆனார்.
இவருக்குத் திருமணம் செய்துவைக்க இவருடைய பெற்றோர் அவர்களுடைய உறவு முறைப் பெண்களைப் பார்த்துப் பேசிவிட்டு அழைத்த நிலையில் மறுத்துவிட்டார். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் கி.வீரமணி உள்பட பலர் வலியுறுத்தியும் இசையவே இல்லை. ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் திருச்சி வந்தவர், அய்யாவுடனே தங்கி அவருடன் சுற்றுப் பயணம் செல்லத் தொடங்கினார் _ அய்யாவின் உதவியாளராக.

தந்தை பெரியாரை அவரது இறுதி நாள்களில் அன்னை மணியம்மையாருக்கு அடுத்து உரிமையுடன் பொறுப்புடன் கவனித்து வந்தவர். குறிப்பாக உணவுக் கட்டுப்பாட்டிற்கு பலரது வெறுப்புக்கு ஆளானவர். அய்யாவிடம் எந்த ஊதியமும் பெறாமல், அவரது தேவைகளுக்கு வீட்டிலிருந்து பணம் வரவழைத்துச் செலவழித்துக் கொண்டு தொண்டு செய்தவர். தந்தை பெரியாருடன் இணைந்த காலம் முதல் இறுதிக் காலம் வரை அவரது சிறுநீர் வாளியைச் சுமந்தவர்.
இவரது தொண்டு பற்றி தந்தை பெரியார், “கழகத் தொண்டிற்கு ஆதரவளிக்கவும், தொண்டாற்றவும், இன்று பல தோழர்கள் இருந்தாலும், முழுநேரத் தொண்டர்களாக இன்னும் சிலபேர் வேண்டியிருக்கிறார்கள். இப்போது தோழர் இமயவரம்பன் (புலவர் பரீட்சை பாஸ் செய்தவர்) மாதம் 150 ரூபாய் வரை சம்பள வருவாயை விட்டு, தனது குடும்ப பெரிய சொத்து நிருவாகத்தையும் விட்டு, மற்றும் பணத்தோடு வரக்கூடிய பல சவுகரியங்களையும் தள்ளிவிட்டு வீட்டிலிருந்து பணம் தருவித்து செலவு செய்துகொண்டு, கழகத்திற்கு ஒரு வேலையாளாக 3, 4 ஆண்டுகளாகத் தொண்டாற்றி வருகிறார்’’ என்று கூறியுள்ளார்.

தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின் அன்னை மணியம்மையாரின் உதவியாளராகப் பணியாற்றினார். அன்னை மணியம்மையாரின் மறைவிற்குப் பின் கழகத் தலைவர் ஆசிரியருக்கு உதவியாக கல்வி நிறுவனங்களுக்கு நிருவாகியாக, தாளாளராகப் பணியாற்றினார். குறிப்பாக அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தினை வளர்த்தெடுத்ததில் இவரது பங்களிப்பு மகத்தானது. ‘உண்மை’ ஏடு தொடங்கிய காலம் முதல் தன் இறுதி நாள்வரை அதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் எந்த ஊதியமும் பெறாமலேயே!
புலவர் தலைசிறந்த எழுத்தாளர் ஆவார். ‘விடுதலை’ ஏட்டில் அவர் எழுதிய தொடரான, “பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்’ என்னும் நூல் பார்ப்பனர்கள் செய்த சதிகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்திய தொடராகும்.

பின்னர் இது நூலாக வெளிவந்து பல பதிப்புகளைக் கண்டது. ‘உண்மை’ ஏட்டில் அவர் எழுதிய ‘வரலாற்றில் சதி’ மற்றும் ‘வரலாற்றில் குழந்தை மணம்’ ஆகிய கட்டுரைத் தொடர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப்பட்டு ‘வரலாற்றில் பெண் கொடுமைகள்’ என்னும் தலைப்பில் தனி நூலாக வெளிவந்துள்ளது. இந்நூல் உடன்கட்டை ஏறுதல் பழக்கம் வேதகாலம் முதல் இருந்ததையும், அதனைத் தடுக்க முஸ்லிம் மன்னர்களும் ஆங்கிலேய ஆட்சியாளர்-களும் மேற்கொண்ட முயற்சிகளையும் ஆதாரத்துடன் விளக்குகிறது.
‘இந்திய வரலாற்றில் நரபலி’ என்னும் நூல் பல்வேறு தகவல்களைத் தரும் நூலாகும். மேலும், ‘விடுதலை’, ‘ஞாயிறு மலர்’, ‘உண்மை’ ஏடுகளிலும் பெரியார் பிறந்த நாள் மலர்களிலும் ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளாமல் இயக்கத்திற்-காகவே வாழ்ந்த புலவர் இமயவரம்பன் 9.8.1994 அன்று மறைவுற்றார். உடலால் மறைந்தாலும் அவரது சிந்தனைகள் புத்தகங்களாய் நம்முடன், நம் கொள்கைகளைச் சுமந்து வாழ்கின்றன.
வாழ்க புலவர் இமயவரம்பன்!