இந்து மதம் : இந்து மதத்தின் தவறான கோட்பாடுகள், நம்பிக்கைகள்!

2022 ஆகஸ்ட் 01-15 2022 மற்றவர்கள்

ந.ஆனந்தம்


இந்து மதத்தில், ஜாதிய முறைதான் அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. ஜாதிய முறை மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பிரிக்கிறது. உயர்ந்த ஜாதியினர்களுக்கு உயர்ந்த அந்தஸ்தை அளிக்கிறது. தாழ்ந்த ஜாதியினரை இழிவாக நடத்துகிறது.
இந்து மதம் பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்துவதை நியாயப்படுத்துகிறது. மேலும், அதைக் ‘கடவுளின் ஏற்பாடு’ என்கிறது. அனைவருடைய இவ்வுலக வாழ்வும் ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்கிறது. அதை மாற்ற இயலாது என்கிறது. இக்கருத்து மனிதனை விதியை நம்பும்படி செய்கிறது.
விதித் தத்துவத்தை ஏற்ற மக்கள் ஊக்கமற்றவர்களாகவும், தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் வாழ்வில் அக்கறை யற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். விதியை நம்பத் தொடங்கியவர்களால், அதிலிருந்து விடுபடவே முடிவதில்லை. வாழ்நாள் முழுவதும் அடிமை மனப்பான்மையுடன் வாழ்கிறார்கள்.

சிந்திக்காமல் வாழ்கிறார்கள்.
இந்து மதத்தின் தத்துவ நூல்கள் ஒழுக்கத்தை வலியுறுத்தவே இல்லை. எடுத்துக்-காட்டாக, பகவத் கீதையும், மனுஸ்மிருதியும் அந்தந்த ஜாதிகளுக்கு விதிக்கப்பட்ட வேலைகளைச் செய்வதுதான் மனிதனது கடமை என்கிறது. சக மனிதனை நேசிக்க வேண்டும்; மனித நேயத்தோடு வாழ வேண்டும் என்று சொல்லவே இல்லை. சுயமாகச் சிந்திக்கச் சொல்லவே இல்லை.

மதத்தின் குறிக்கோள் மக்கள் மனத்தில் நல்ல ஒழுக்க விழுமியங்களைப் பதிய வைத்து, நற்பண்புகளுடைய மனிதர்களை உருவாக்குவது-தான் என்பது தத்துவவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். இதுபற்றி விமர்சனம் செய்யும் ஆல்பர்ட் அய்ன்ஸ்டைன் (1879_1955), மதத்தின் குறிக்கோள் சுதந்திரமான, பொறுப்பான தனிநபர்களை உருவாக்கி, அவர்கள் தங்கள் அறிவை, ஆற்றலை மனித சமுதாயத்திற்கு தன்னிச்சையாவும், மகிழ்வுடன் அளிக்கும் மனப்பான்மையை உண்டாக்குவது தான் என்கிறார். அவருடைய அளவு கோலின்படி இந்து மதம் உண்மையான மதமே அல்ல. தத்துவவாதிகளின் கருத்தும் அதுவே.

காலங்காலமாக சிந்தனையாளர்கள் மனித சமத்துவக் கோட்பாட்டை வலியுறுத்தி வருகிறார்கள். இந்து மதம் இதற்கு முற்றிலும் முரணான கொள்கைகளை வலியுறுத்துகிறது. ஆகவே, பிறப்பில் பேதம் கற்பிக்கும் இந்து மதக் கோட்பாடே முற்றிலும் தவறானதாகி விடுகிறது.
இந்து மதத்தில் ‘சிலை வணக்கமும்’ முக்கிய அங்கமாக இருக்கிறது. பார்ப்பனர்கள், தாங்கள் மந்திரங்கள் ஓதி சிலைகளுக்கு உயிர் ஊட்டிவிட்டதாகப் பொய் சொல்லுகிறார்கள். தங்களுடைய மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டு கடவுள் அச்சிலைகளுக்குள் தங்கி இருப்பதாகப் பொய் சொல்லுகிறார்கள்.

தங்களுடைய மேலாண்மையைத் தக்க வைக்கவும், தங்கள் ஜாதியினர் சிலைகளுக்குப் பூஜை செய்தும், சில சடங்குகளைச் செய்தும் மக்களை ஏமாற்றிப் பணம் பெற்று, உழைக்காமல் வாழ்வதற்காக இப்பொய்களைச் சொல்கிறார்கள். இப்பொய்களை நம்பி இந்துமத நம்பிக்கையாளர்-கள் சிலை வணக்கத்திற்கு அதிகமான நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறார்கள். இதனால் பயனடைவோர் பார்ப்பனப் பூசாரிகள் மட்டுமே!

கடவுள் சிலைகளுக்கு அற்புத சக்தி உள்ளதுபோல் ஒரு மாயையை உண்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதை நம்பி மக்கள் பல ஊர்களிலுள்ள கோவில் சிலைகளை வணங்கச் செல்கின்றனர். எடுத்துக்காட்டாக, திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு தினமும் 50,000 முதல் 60,000 பேர் செல்கின்றனர். கோயில் உண்டியல்களில் பணத்தைக் கொட்டுகிறார்கள். பணத்தை கோயிலுக்கு அளிப்பதால் தங்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நினைத்துக் கொள்கிறார்கள்.
இந்து மதத்தின் இன்னொரு தவறான நம்பிக்கை பசுமாடு பற்றியது. எந்த வேதமும் பசுவுக்குப் புனிதம் கற்பிக்கவில்லை. அண்மைக் காலம் வரை அனைவரும் மாட்டுக்கறியைச் சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறார்-கள். வரலாறு இதைப் பதிவு செய்திருக்கிறது.

இன்றைய அறிவியல் உலகில் பசு மாட்டுக்குப் புனிதம் கற்பிப்பதும், அவற்றைப் பாதுகாப்போம் என்று கூறிக்கொண்டும், கோடிக்கணக்கான பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருப்பதும் முற்றிலும் தவறாகும். உலகெங்கும் பசு மாடுகள் அய்ந்து அல்லது ஆறு கன்றுகள் ஈன்றவுடன் பொருளாதார ரீதியில் பயனற்றதாக ஆகிவிடுகின்றன. அதன் பின்னர், உலகெங்கும் அம்மாடுகளை இறைச்சிக்காகத்தான் பயன்படுத்துகிறார்கள். நாமும் அவ்வாறு செய்வதே அறிவான செயல்.ஸீ