ஆசிரியர் பதில்கள் : அ.தி.மு.க. அடமானம் கூடாது!

2022 ஆசிரியர் பதில்கள் ஜுலை 16-31 2022

கே: சிதம்பரம் நடராசர் கோயிலில் ஆளுநர் தமிழிசைசவுந்தர்ராஜன் அவர்களுக்கே தீட்சிதர் செய்த அவமரியாதை – அவர்களின் ஆணவம், ஆதிக்கம் உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது அல்லவா?

– கி.மாசிலாமணி, மதுராந்தகம்
ப: முதலில் அவமானப்படுத்தப்பட்டதாக மக்கள் கருதி ஆத்திரப்படும் நிகழ்வைப் பூசி மெழுகும் புத்தியுள்ள ஆளுநர் தமிழிசைகள் பற்றிய நம் வேதனையைப் போக்கிட வழி சொல்லுங்கள். “அடிமையாய் இருப்பதைவிடக் கொடுமை அடிமை வாழ்வில் சுகம் காண்பது’’ என்ற டாக்டர் அம்பேத்கர் அறிவுமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது!

கே: கோயில் விழாக்களில் காவிக்கொடி ஏற்றி ஊடுருவும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை, சட்டப்படி தடுக்க என்ன செய்ய வேண்டும்?
– ஏழுமலை, வந்தவாசி
ப: வெகு சாமர்த்தியமாக இதைச் செய்கின்றனர் _ ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். காவிக்கொடி, மதக் கலவரம் எல்லாம் நுழைய வாய்ப்பை ஏற்படுத்துகின்றனர்!

கே: ஆங்கிலேயர் கல்வி முறையை மாற்ற வேண்டும் என்று மோடி கூறுவதன் நோக்கம் என்ன?
– கல.காளிதாசன், காஞ்சிபுரம்

ப: ஆர்.எஸ்.எஸ். குரல்; வேதம், வடமொழி திணிப்புக்கான பீடிகை.

கே: குடியரசுத் தலைவர் தேர்தலில் யஸ்வந்த் சின்ஹா வெற்றிபெற எதிர்க்கட்சிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
-ர.செம்பருத்தி, திருச்சி
ப: இதில் எதிர்க்கட்சிகள் துவக்கத்தில் காட்டிய ஆர்வம்கூட இறுதியில் இல்லையே! எனவே, உங்கள் விருப்பம் எளிதில் நிறைவேறாது!

கே: தனிநாடு கேட்கும் அளவுக்கு எங்களைத் தள்ளாதீர் என்று ஒன்றிய அரசுக்கு ஆ.இராசா விடுத்த எச்சரிக்கை காலத்தின் கட்டாயம்தானே?
– பா.கருப்பசாமி, மதுரை

ப: ‘யதார்த்தவாதி வெகுஜன விரோதி’ என்ற பழமொழியை, விமர்சிப்போருக்கு நமது பதிலாக வைக்க விரும்புகிறோம்.

கே: அ.தி.முக. சிக்கல் உள்கட்சி விவகாரம் என்று ஒதுக்குவது சரியா? அல்லது அ.தி.மு.க. இருப்பதே தமிழ்நாட்டிற்குப் பாதுகாப்பு என்று கருதி தலையீடு சரியா?
– தா.எழிலோவியா, வேளச்சேரி
ப: “இரண்டும் அல்ல; அ.தி.மு.க. என்பது அடமான தி.மு.க.வாக இல்லாமல், சுதந்திரத் தி.மு.க.வானால் மட்டுமே விடியல் உண்டு’’ என்பது அவர்களுக்குப் புரிய வேண்டும்.

கே: மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.சாமிநாதன் அவர்கள் தேவையில்லாமல் பெரியார் திருமணத்தைத் தொடர்புபடுத்தி தீர்ப்புக் கூறியது வரம்பு மீறிய வன்மம் அல்லவா?
– க.கோதண்டராமன், வேலூர்
ப: ஆர்.எஸ்.எஸ். தொடர்பு சிந்தனையாளர் அவர். இப்படி சம்பந்தமில்லாமல் எழுதி, தனது விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளுகிறார் போலும்! மேலும் எழுதட்டும். பெரியார் மேலும் ஒளி பெறுவார்! தங்கத்தின் ஒளி குறையாதே!

கே: இலங்கையில் உள்ள தற்போதைய சூழலில் தனி ஈழம் அமைக்க வாய்ப்பு உள்ளதா?
– ப.தமிழரசன், திண்டிவனம்
ப: அதீத ஆசையில் _ கற்பனையில் திளைக்காதீர்! நடைமுறையைப் புரிந்து கேளுங்கள்!