அறிவியல் : வேற்றுக் கோள்களில் உயிரினங்களை உருவாக்குவது இனி சாத்தியம்!

2022 அறிவியல் ஜூலை 16-31

சரவண இராசேந்திரன்

எதிர்காலத்தில் மனிதர்கள் வேற்றுக் கோள்களுக்குச் செல்லும்போது அங்குள்ள சூழலில் இனப்பெருக்கம் செய்து உயிர்களை உருவாக்குவது சாத்தியமில்லாத நிலை ஆகும். இதுவரை பூமியைப் போன்ற சூழலைக் கொண்ட கோள்கள் கண்டறியப்படவில்லை. இருப்பினும் நவீனத் தொழில்நுட்பம் மூலம் மனிதர்கள் எந்தத் தட்பவெட்ப நிலையில் உள்ள கோள்களிலும் தகுந்த பாதுகாப்பு வசிப்பிடங்களில் வாழமுடியும் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அப்படிச் சென்று வாழும் சூழலில் அங்கு தாவரங்களோ அல்லது இதர உயிரினங்களோ மனிதர்களோ இனப்பெருக்கம் செய்வது மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ளது.
இதற்குத் தீர்வாக, மெல்லிய திசுக்களைப் பாதுகாக்கும் முறையை ஜப்பானிய உயிர்வேதியியல் பேராசிரியர்கள் கண்டுபிடித்-துள்ளனர். இதன் மூலம் இனி பல ஆண்டுகாலம் விண்வெளியில் உயிர்வேதிப் பொருள்களைக் கொண்டு சென்று, தங்களது வேற்றுக்கோள் வசிப்பிடங்களை அடைந்த பிறகு, அங்கு உயிரூட்டம் செய்து, குளோனிங் முறையில் உயிர்களை உருவாக்க முடியும் என்பது சாத்தியமாகி உள்ளது.

உலரவைக்கப்பட்ட மிகவும் மெல்லிய பழங்களின் தோல்கள் விண்வெளியில் செல்லும் வீரர்களுக்கு, சுவையூட்டும் உணவைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. தற்போது உயிர்களின் மூலமான டி.என்.ஏ.வைப் பாதுகாத்து, புதிய உயிர்களை உருவாக்கவும் முடியும் என்று அறிவியலாளர்கள் உறுதிசெய்து காட்டியுள்ளனர்.
உயிரினங்களின் தோல் மற்றும் இதர உறுப்புகளை நீண்ட காலம் பாதுகாத்து வைப்பது பெரும் செலவீனம் உள்ள முறையாகக் கருத்தப்பட்டது. முக்கியமாக திரவ நிலையில் உள்ள நைட்ரஜனில் அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிகவும் நீண்ட காலம் நைட்ரஜன் திரவத்தில் இவ்வாறு வைக்கப்படும் போது அதில் வைக்கப்பட்டுள்ள உயிர்மூலக்கூறுகளில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது, மிகவும் குறைவான சதவிகிதமே என்றாலும், அதனை மீண்டும் எடுத்துப் பயன்படுத்தும்-போது அதனால் ஏற்படும் மாற்றங்கள் பாதிப்பை உருவாக்கும் காரணியாக அமைந்துவிடும்.

நீண்ட காலமாகவே இதற்கான மாற்று குறித்து வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வந்தது, இந்த நிலையில் யமன்ஷி பல்கலைக்-கழகத்தின் பேராசிரியர் சயக வகயாமா தலைமையிலான குழு மாற்று வழிமுறையில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கான ஆய்வு முடிவுகளை யமன்ஷி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பொதுவான முறையில் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் உடல் உறுப்புகள் சேகரித்து வைக்கப்படுவது வழக்கம். இதற்கு முக்கிய காரணமாகக் கூறுவது அமினோ அமிலங்கள் சிதைந்துவிடாமல் இருக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட செல்களைச் சேகரிக்கவுமே இந்த முறை பயன்படுத்தப்பட்டது. இந்த நிலையில் உடல் பாகங்களில் மிகவும் மெல்லிய தோல் பாகங்களை உலரவைத்து அதை உறைநிலையில் வைப்பது மிகவும் எளிதான வழிமுறையாகும்.
உயர் உறைநிலை உலரவைத்தல் என்பது உயிர் மாதிரியில் மெல்லிய தோல்பகுதியை காற்று இல்லாத ஆய்வுக் கலனில் வைத்து _ -80 டிகிரிவரை கொண்டு சென்று அதை உலரச்செய்வது ஆகும்.

இதன் மூலம் செல்லின் உள்ளேயே நீர்மங்கள் பனிக்கட்டிகளாக உறையாமல் செல்பாகங்களுக்குச் சேதமின்றி அவை வெளியே வந்துவிடும். இதன் மூலம் உயிர் மூலக்கூறான டி.என்.ஏ.க்களை நீண்டகாலம் பாதுகாத்துவைக்க முடியும் பின்னர் அவற்றை மீண்டும் எடுத்துப் பயன்படுத்தும் போது எவ்வித சிக்கலும் இருக்காது. இந்த முறை பொதுவாக மருத்துவத் துறையிலும் உணவு பதப்படுத்தும் துறையிலும் பயன்படுத்தப்-படுகிறது.
இந்த முறையில் பதப்படுத்தப்பட்ட உயிர் வேதிப்பொருள்கள் விண்வெளிக்கு கொண்டு சென்று அங்கு 5 ஆண்டுகளுக்கும் மேல் ஈர்ப்புவிசை இல்லாமலும் ஆக்ஸிஜன் இல்லா நிலையிலும் வைக்கப்பட்டன. இதனை ஜப்பானிய யமன்ஷி பல்கலைக்கழக உயிர் வேதியியலாளர்கள் குழு பேராசிரியர் சயக வகயாமா தலைமையில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் உறைந்த உலர்நிலையில் வைக்கப்பட்ட பொருள்கள் எவ்வித சேதமும் இன்றி இருப்பதைக் கண்டனர்.

மிகவும் குறைவான செலவில் பாதுகாக்கப்-படும் இந்த முறையில் விலங்குகளின் கருமுட்டைகள் மற்றும் விந்தணுக்கள் பாதுகாக்கப்படும்.
தற்போது செலவுமிக்கதாயுள்ள விந்தணு மற்றும் கருமுட்டை பாதுகாப்பு, விரைவில் மிகவும் குறைந்த செலவில் பாதுகாப்பதற்கு இது உதவும்.
எதிர்காலத்தில் விண்வெளியில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள், வேற்றுக் கோள்களுக்குப் பயணம் செய்பவர்கள் அங்கு சென்று உயிர்களை உருவாக்க இந்த நடைமுறை பெருமளவில் உதவக்கூடும்.
தற்போது இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வுக்கூடத்தில் குளோனிங் எலி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
தரவு:https://www.sciencealert.com/scientists-have-cloned-mice-from-freeze-dried-skin-cells