ஆசிரியர் பதில்கள்! : வார்த்தைகளால் கண்டித்தால் போதாது!

2022 ஆசிரியர் பதில்கள் ஜுலை 01-15 2022


கே: இஸ்லாமியர்களின் குடியிருப்புகள் திட்டமிட்டு இடிக்கப்படுவதை உச்சநீதி மன்றம் தலையிட்டு தடுக்க முடியாதா? இப்படிப்பட்ட பாசிசச் செயல்களுக்குத் தீர்வு என்ன?
– கருணா, மதுரை
ப: நிச்சயமாகத் தடுக்க முடியும். இதை நீதிமன்றம் சுட்டிக்காட்டினால், வார்த்தைகளால் கண்டித்தால் மட்டும் போதாது. திட்டமிட்டு நடத்தப்படும் இந்த வெறுப்பு அரசியல் அசிங்கத்தினைத் தடுக்க வேண்டும். மயிலை இறகு போட வேண்டலாமா?

கே: அக்னி பாத் திட்டத் திற்கு கார்ப்பரேட்டுகள் வலியவந்து ஆதரவு தருவது அத்திட்டத்தின் ஆபத்தை வெளிப்படுத்துவதாகக் கொள்ளலாமா?
– சசிகுமார், தாம்பரம்
ப: அருமையான கேள்வி. இந்த பா.ஜ.க. ஆட்சியின் அனைத்துச் சட்டங்களும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்கே மய்யப்படுத்தப்படுவதால், உங்களின் சந்தேகம் நியாயமானதே!
கே: பி.ஜே.பி. ஒன்றிய அரசுக்கு எதிராய் எழுந்துள்ள இளைஞர் எழுச்சியை, எதிர்க்கட்சிகள் தங்கள் ஆதரவின்மூலம் ஒருங்கிணைத்தால், பி.ஜே.பி.யை வீழ்த்த உதவுமல்லவா?
– அருண், சேலம்

ப: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை, விவசாயிகள் போராட்டத்தைப் போல, அக்னிபாத் அறிவிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எழுச்சி, குமுறல், கொந்தளிப்பு நாடு முழுவதும் வெளிப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இதில் தலையிடத் தேவையில்லை. வன்முறையில்லாமல் அறவழியில் போராட பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உரிமையுண்டு.

கே: மேகதாத் அணை கட்டும் முயற்சியைத் தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு என்ன நடவடிக்கைகளைச் சட்டப்படி இனி மேற்கொள்ள வேண்டும்? வாக்குறுதிகளை மட்டும் நம்ப முடியுமா?
– ரவி, சைதை
ப: அதற்குதான் தமிழ்நாடு அரசு உடனே குழுவை அனுப்பி, காவிரி நீர் ஆணையக் கூட்டத்தின் அஜெண்டாவிலிருந்து அதனை நீக்க உறுதி செய்துள்ளது. இந்த திராவிட மாடல் அரசும் முதல் அமைச்சரும் விழிப்போடு இருக்கின்றனரே!

கே: நீதிமன்ற ஆணைப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று போராடு கிறார்கள். இதில் அரசு எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
– அன்புச்செல்வன், திருச்சி

ப: ‘கடிதோச்சி மெல்ல எறிதல்’ என்ற குறள்வழியில் செயல்பட்டு, முள்ளில்பட்ட வாழை இலையைக் காப்பாற்றும் மென்மையான புத்திசாலித்தன அணுகுமுறையே சிறந்ததாகும். தேவையும்கூட!

கே: பகுத்தறிவாளர் கழக மாநாட்டுத் தீர்மானங் களை அரசு நிறைவேற்ற அழுத்தம் தேவைப்படுமா?
– ராஜசேகர், செஞ்சி
ப: எந்த அரசும் அழுத்தம் இருந்தால்தான் மக்களாட்சியில் செயல்பட்டு சட்டமியற்றும். நாம் தொடர்ந்து வற்புறுத்தி வரவேண்டும்!

கே: இலஞ்சத்தை ஒழிக்க, போட்டித் தேர்வுகள் மூலமே அரசுப் பணிகள் நிரப்பப்பட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தியின் கருத்து சரியா? அவர் கருத்து வேலைவாய்ப்பு அலுவலகங் களுக்கே வேலையில்லாமல் செய்யாதா?
– அருள், சென்னை

ப: சில நேரங்களில் இப்படி கருத்துகள் வருவதுண்டு -_ அனுபவம் வேறு மாதிரி என்பதே யதார்த்தமாகும்!

கே: கலைஞர் அரசு தமிழாக்கம் செய்த அரசியல் சாசனத்தில் ‘ஒன்றிய அரசு’ என்று இல்லை. ‘இந்திய அரசு’ என்றே உள்ளது. எனவே, ஒன்றிய அரசு என்று கூறக்கூடாது என்ற ‘துக்ளக்’ ஏட்டின் கருத்து சரியா?
– முத்துராமன், செங்கல்பட்டு
ப: விடுதலையில் (23.6.2022) எனது அறிக்கையில் விளக்கம் காண்க.
கலைஞர் அரசை விட தமிழாக்கத்தில் முன்னே செல்லக் கூடாது என்பது விதியா?
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை என்னும் குறளே அதற்குப் பதில்!
அது அன்றைய சூழல், மணிப்பிரவாள நடையில் எழுதிய பின், தனித்தமிழ் நடை கூடாது என்று கூறுவது சரியான வாதமாகுமா?

கே: பள்ளி, கல்லூரி வளாகங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது தொடர்வதால், மதச்சார்பற்ற கட்சிகளின், அமைப்புகளின் உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைத்து, ஒரு நிரந்தர செயல் திட்டத்தை அரசு உருவாக்கி, சமரசமற்ற கடும் நடவடிக்கை எடுத்தால் என்ன?
– சீனிவாசன், நாகர்கோவில்
ப: உங்கள் கேள்விக்கான பதில் பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்புகிறோம். நிச்சயம் உரிய நடவடிக்கை அத்துறை எடுக்கும் என்பது உறுதி!