திராவிடம் வெல்லும்!

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

கைம்பெண் மறுமணம் – பெரியார் வழியில் மராட்டியம்!

மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ள கைம்பெண் திருமணம் குறித்து “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில ஏடு (13.5.2022) வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டில் தந்தை பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன செய்தாரோ அது இன்று மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட தங்கை மகள் 7 வயது முத்தம்மாவுக்கு,
12 வயது மணமகனைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவன் திடீரென அம்மை நோயால் இறந்து போனான். அப்போது முத்தம்மாவுக்கு 9 வயது. அவளுக்கு விதவைச் சடங்குகள் செய்தார்கள். செய்தி அறிந்த பெரியார் அந்த வீட்டுக்குப் போனார். முத்தம்மா அவரது காலைக் கட்டிக் கொண்டு அழுதாள். அப்போதே பெரியார் மனதில் ஒரு உறுதி எடுத்துக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆனது. அவளை சிதம்பரம் கோவிலைப் பார்க்கப் போவதாகச் சொல்லி அனுப்பி வைத்தார். ஒரு மணமகனை ஏற்பாடு செய்து, தன் நண்பர்கள் மூலமாக சிதம்பரத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்தார்.
அந்த மணமக்களை இரயில் வண்டியில் ஈரோட்டுக்கு வரவழைத்து, ஈரோடு இரயில் நிலையத்தில் இருந்து மேளதாளங்கள் ஏற்பாடு செய்து திருமண ஊர்வலமாக வீட்டுக்கு அழைத்து வந்தார். உறவினர்கள் கொதித்துப் போய் அவரை ஜாதியில் இருந்து நீக்கினார்கள். அவருக்கு யாரும் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. எந்தச் சடங்குக்கும் அவரை அழைக்கக் கூடாது என ஒதுக்கி வைத்தார்கள்.
1919ஆம் ஆண்டு, பெரியார் ஈரோடு நகர்மன்றத் தலைவர் ஆகிவிட்டார். அதன் பிறகே அவரை ஜாதியில் மீண்டும் சேர்த்துக் கொண்டார்கள். பெரியார் கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்து வைத்ததைக் கேள்விப்பட்ட ஒரு உயர் வகுப்பு கைம்பெண், தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுக் கொண்டார். அந்தப் பெண்ணுக்கு, அவரது ஜாதியிலேயே ஒரு மணமகனைத் தேடி, திருமணம் செய்து வைத்து வரலாறு படைத்தார் பெரியார்.
அதன்பிறகு, தந்தை பெரியாரின் பரப்புரைகளின் விளைவாக, தமிழ்நாட்டில் கைம்பெண்கள் மறுவாழ்வு பெறத் தொடங்கினர். இது தமிழ்நாட்டில் நடந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், ஹெர்வட் (பிமீக்ஷீஷ்ணீபீ) என்ற கிராமத்தில், இனி கணவன் இறந்தால், பெண்ணின் நெற்றிப்பொட்டை அழிக்கக் கூடாது, வளையல்களை உடைக்கக் கூடாது, வெள்ளைச் சேலை கட்டக் கூடாது என, கிராமசபை தீர்மானம் நிறைவேற்றியது. அதேபோல, மற்ற கிராமங்களும் பின்பற்ற வேண்டும் என, மராட்டிய அரசு ஆணை பிறப்பித்தது. மராட்டியத்தின் கிழக்கே விதர்பா பகுதியில் முதன்முதலாக, பல கிராமங்கள் அதைப் பின்பற்றி தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.
வாசிம் மாவட்டத்தில், மாலேகான் வட்டத்தில் தோர்கேடா என்ற கிராமம், (விதர்பாவில்) இந்த வழக்கத்தை ஒழித்த முதல் கிராமம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.ஸீ
(நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்)