சிறுகதை : குடும்பத்தில் ஒருவன்

உங்களுக்குத் தெரியுமா? பிப்ரவரி 16-28,2022

ஆறு.கலைச்செல்வன்

கீழத்தெரு என்று அழைக்கப்படும் அந்தத் தெரு அன்று அல்லோலகல்லோலப்பட்டது. தெரு முழுக்கத் தோரணங்கள். மூலைக்கு மூலை ஒலி பெருக்கிகள். அவற்றில் பெருத்த இரைச்சலுடன் பாடல்கள். எல்லாம் எதற்காக? அந்தத் தெரு முனையில் முதல்வீடாக இருக்கும் அருண்குமார் தன் வீட்டில் கோயில் கட்டி அதற்கு ‘கும்பாபிஷேகம்’ நடத்த உள்ளான். தன் வீட்டின் ஒரு பகுதியுடன் எதிரே உள்ள சாலையையும் ஆக்கிரமிப்பு செய்து அந்தக் கோயிலைக் கட்டியுள்ளான்.

கோயில் கட்டும் பணியைத் தொடங்குமுன் தன் வீட்டின் முன் ஓர் அறிவிப்பு பலகையையும் வைத்தான். கோயில் கட்ட பணமோ அல்லது செங்கல், சிமெண்ட், கம்பிகள் போன்ற பொருள்களாகவோ நன்கொடை அளிக்கலாம் என்ற அறிவிப்பை அந்தப் பலகையில் செய்தான். இதன்மூலம் ஏராளமான நன்கொடை வசூல் செய்துவிட்டான்.

கோயில் கட்டுவதற்கு முன்பு அந்தச் சாலை வழியாக பெரிய கார்கள் எல்லாம் சென்று கொண்டிருந்தன. ஆனால், அவன் தற்போது சாலையையும் ஆக்கிரமித்து கோயில் கட்டிவிட்டதால் பெரிய கார்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது.

அந்தத் தெருவில் சுமார் முப்பது வீடுகள் இருக்கும். திருவிழாவையொட்டி காலையிலேயே வீட்டிற்கு வெளியே வண்ணக் கோலங்கள் போடப்பட்டன. வீட்டு வாசலில் போடாமல் சாலையின் நடுவிலேயே பெண்கள் அனைவரும் கோலங்கள் போட்டனர். காரணம் வீட்டை ஒட்டி வாசலில் சாக்கடை நீர் தேங்கி நின்று கொண்டிருந்தது. கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாக அவை விளங்கின. மேலும் துர்நாற்றமும் வீசியது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பெண்கள் கோலம் போட்டனர்.

அந்தத் தெருவைக் கடந்து சென்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு கலைக் கல்லூரியும், மேல்நிலைப் பள்ளியும் இருந்தன. அங்கு செல்பவர்கள் சிலர் குறுக்கு வழியாகச் செல்ல இந்தத் தெருவைப் பயன்படுத்தி வந்தனர். கார்களும் சென்று வந்தன. ஆனால், தற்போது தெருவை ஆக்கிரமித்து கோயில்-கட்டிவிட்டதால் சற்று பெரியதான கார்கள் அந்த வழியாக வந்து திரும்ப முடியாமல் போய்விட்டது. சிறிய ரக கார்களே சற்று கடினப்பட்டே ஓட்டிச் செல்ல வேண்டியதாகி விட்டது.

காலை பத்து மணிக்கு சாமி ஊர்வலம் என்று அருண்குமார் சொல்லியிருந்தான். அதனால் நீண்ட நேரமாக பெண்கள் வண்ணக் கோலங்களைப் போட்டுக் கொண்டிருந்தனர். சாமி ஊர்வலம் இருப்பதால் பலரும் அன்று அந்த வழியைப் பயன்படுத்தாமல் வேறு வழியில் சென்றனர். விவரம் தெரியாத சிலர் அந்த வழியாக வந்து அல்லல்பட்டனர். முகிலனும் தான் பணியாற்றும் கல்லூரிக்குச் செல்ல தனது பைக்கில் அந்த வழியாக வந்தான்.

பெண்கள் கோலம் போட்டுக் கொண்டிருந்த-தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாலும் முகிலன் பைக்கிலிருந்து இறங்கி தள்ளிக் கொண்டே சென்றான்.

ஆனாலும் பைக்கின் டயரும், முகிலனின் காலும் ஒரு மூதாட்டி போட்ட கோலத்தில் பட்டுவிட்டது. இதனால் ஆத்திரமுற்ற அந்த மூதாட்டி முகிலனை கண்டபடி திட்டினார்.

“சாமி ஊர்வலம்னு தெரியுமில்ல. எதுக்கு இந்த வழியா வரணும்? காலில் செருப்போட போறியே! உனக்கே நல்லாயிருக்கா. கோலத்தை அழிச்சிட்டியே. நீயெல்லாம் நல்ல கதிக்கு போகமாட்டே’’ என்று சத்தம் போட்டார் அந்த மூதாட்டி.

முகிலன் நாள்தோறும் செல்லும் தெருதான் அது. மூதாட்டி திட்டியதும் அந்தத் தெருவை நோட்டமிட்டான் முகிலன். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் சாக்கடை நீர் தேங்கியிருந்தது. அடைப்பை நீக்கினால் ஓரளவு சாக்கடை நீர் ஓடும் என்றாலும் அதை யாரும் செய்ய முன் வரவில்லை. எங்கு பார்த்தாலும் ஒரே கெட்ட வாடை வீசியது. அழுகிய பழங்கள், காய்கறிகளை மட்டுமல்லாது வீட்டில் செத்துப்போன எலிகளைக்கூட சிலர் அந்த சாக்கடையில் வீசி எறிந்துள்ளனர்.

இதையெல்லாம் கண்ட முகிலன் அன்று அந்த மூதாட்டியிடம் எதுவும் பதில் பேசாமல் தன் பணியைக் கவனிக்க வேகமாகச் சென்றுவிட்டான். ஆனால், அவன் மனதிற்குள் இந்தத் தெரு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து கொண்டான்.

சாமி ஊர்வலம் எல்லாம் முடிந்த மறுநாள் அந்தத் தெரு வழியாகச் சென்றான் முகிலன். முதல் நாள் ஊர்வலம் நடந்தபோது வீசிய குப்பைகள் எல்லாம் அகற்றப்படாமல் அப்படியே கிடந்தன. வாழை, தென்னை மட்டைகள், தேநீர் குடித்த பிளாஸ்டிக் டம்ளர்கள் என எங்கும் பரவிக் கிடந்தன.

முதல் நாள் முகிலனை வசை பாடிய அதே மூதாட்டி அன்றும் முகிலனை அடையாளம் கண்டு கொண்டு மீண்டும் வசைபாட ஆரம்பித்தார். அப்போது நிலை தடுமாறிய அவர் வீட்டோரம் ஓடிய சாக்கடை நீரில் விழுந்தார். அதைக் கவனித்த முகிலன் ஓடிச் சென்று அவரைத் தாங்கிப் பிடிக்க முயன்றான். ஆனால், சுதாரித்துக் கொண்டு எழுந்தார் அந்த மூதாட்டி. தான் குடிப்பதற்காக கொண்டு வந்திருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் மீது ஊற்றி சாக்கடையை கழுவச் செய்தான். ஆனாலும், அந்த மூதாட்டி வசைபாடுவதை நிறுத்தவில்லை.

“ஏன் கோலத்தை மிதித்தாய்?’’ என்றார்.

“அம்மா, கோபப்படாமல் கேளுங்க. இது பொது வழி. நீங்கதான் நடந்துசெல்லும் பொது வழியில் கோலம் போட்டீங்க. உங்க வீட்டு வாசலில் நீங்க கோலம் போட முடியாது. காரணம் அங்கே சாக்கடை ஓடுது!’’ என்று பதில் சொன்னான் முகிலன்.

“அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுறே? உன் வேலையைப் பார்’’ என்று கத்தினார் மூதாட்டி.

“அம்மா, நாம் எல்லோருமே கவலைப்பட்டுதான் ஆகணும். இந்தச் சாக்கடையால் கொசுக்கள் உற்பத்தியாகும். அதனால் டெங்குக் காய்ச்சல் போன்ற பல நோய்கள் வரும். இங்கு இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, இந்தத் தெருவில் செல்லும் அத்தனை பேருக்கும் நோய்கள் பரவும். அதனால் வீட்டுக்கு முன் சாக்கடை தேங்காமல் பாத்துக்க வேணும்’’ என்று பொறுமையாகப் பதில் கூறினான் முகிலன்.

அவன் பேசியதைக் கேட்ட சிலர் அங்கு வந்து கூட ஆரம்பித்தனர்.

“நீங்க சொல்றது சரிதான். இப்ப இந்தத் தெருவில் நிறைய பேருக்கு சுரம் இருக்கு’’ என்றாள் கூட்டத்தில் இருந்த கவிதா என்ற பெண்.

“சுகாதார நிலையத்தில் சொல்லி மருந்து தெளிக்கச் சொல்ல வேண்டும். அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்’’ என்றான் முகிலன்.

“குடி நீர்கூட இங்கே சுத்தமா வர்றதில்லை. சாக்கடையும் கலந்தே வருது’’ என்றார் ஒரு பெரியவர்.

“அது சரி, இங்கு எத்தனை பேர் படித்து பட்டம் வாங்கியிருக்கீங்க?’’ என்று குழுமியிருந்த தெருவாசிகளைப் பார்த்துக் கேட்டான் முகிலன்.

“இங்கு யாருமே பட்டப் படிப்பு படிக்கல. நான் பிளஸ்டூ வரைக்கும் படிச்சேன். அப்புறம் என்னைப் படிக்க வைக்கலே’’ என்று வேதனையுடன் சொன்னாள் கவிதா.

“பக்கத்தில் கல்லூரியை வச்சிக்கிட்டு படிக்காம இருக்கிறது தப்பு. படிக்காதவங்க அதிகமா இருக்கிறதால்தான் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் தராமல் சாமி, பக்தி, ஊர்வலம்னு வேண்டாத வேலை செஞ்சிகிட்டு இருக்கீங்க’’ என்றான் முகிலன்.

இதைக் கேட்டு சிலர் ஆத்திரமடைந்தனர். சாமி ஊர்வலத்தை அவமதிப்பதாக சிலர் கத்தினர். மேலும் அங்கு அதிக கூட்டமும் கூட ஆரம்பித்துவிட்டது.

“எனக்கு நல்லாத் தெரியும். இந்தத் தெருவில் யாருமே அரசு வேலைக்கோ, தனியார் துறையில் நல்ல வேலைக்கோ சென்றது கிடையாது. எல்லோருமே கூலி «லைதான் செய்றீங்க. நோய் நொடியோட கஷ்டப்படுறீங்க. ஆனாலும், பக்தியில் மூழ்கி ரோட்டையே அடைச்சுக் கோயில் கட்டவிட்டிருக்கீங்க. இது எந்த விதத்தில் நியாயம்?’’ என்று மீண்டும் பேசினான் முகிலன்.

அவன் பேசியதை சிலர் ஆமோதிக்க ஆரம்பித்தனர்.

இதையெல்லாம் ஓரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்தான் அருண்குமார். தெரு மக்களுக்கு விழிப்புணர்வை முகிலன் ஏற்படுத்தி விடுவானோ எனப் பயந்தான். பிறகு ஒரு முடிவுடன் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

நாள்கள் சில நகர்ந்தன. நாள்தோறும் அந்தத் தெரு வழியாக வரும்போது மக்களிடம் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தான் முகிலன். அவன் பேச்சைக் கேட்ட பலர் கல்லூரியில் சேர முடிவு செய்தனர். இளைஞர்கள் சாக்கடையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப் பட்டுள்ளதை மக்கள் உணர ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் ஒரு நாள் இரவு அருண்குமார் அந்தத் தெரு மக்களைக் கூட்டி அவர்களிடம் பேசினான்.

“இங்கு முகிலன் என்பவன் வந்து உங்களை-யெல்லாம் பேசி மயக்கி வர்றான். பக்தியை கேலி பேசுறான். அவன் என்ன ஜாதீன்னு உங்களுக்குத் தெரியுமா? நம்மகிட்ட நிக்கக்கூட தகுதியில்லாத ஜாதி. நான் அவன் யார்னு கண்டுபிடிச்சுட்டேன். அவனை நம்பாதீங்க. அவன் பேச்சைக் கேக்காதீங்க’’.

அருண்குமார் இப்படிக் கூறியதை ஒருசிலர் விரும்பினாலும் பலரும் அவன் கூறியதை ஆதரிக்கவில்லை.

“ஜாதி ஒரு பக்கம் இருந்தாலும் அந்தத் தம்பி சொல்றதும் உண்மைதானே! அந்தப் பிள்ளை சொல்லித்தான் இப்ப நம்மதெருவில் பல புள்ளைங்க காலேசு பக்கம் போயிருக்கு’’ என்று பலர் பேச ஆரம்பித்தனர்.

“ஓகோ! அப்படியா! கீழ்ஜாதிக்காரன் உங்களுக்கு ஒசந்தவனா போயிட்டானா?’’ என்று கத்தியபடியே அந்த இடத்தை விட்டு அகன்றான் அருண்குமார்.

இந்நிலையில் ஒரு நாள் இரவு அந்தத் தெருவில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும். கார் ஏற்பாடு செய்ய முயன்றனர். ஆனால், யாருக்கும் விவரம் போதவில்லை. அப்போது முகிலனால் கல்லூரியில் சேர்க்கப்பட்ட கவிதா விவரம் அறிந்து நோயாளி ஊர்தி எனப்படும் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தாள். உடன் ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால், கோயில் திருப்பத்தில் சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டிருந்ததால் ஆம்புலன்ஸ் தெருவில் நுழைய முடியவில்லை. குறைந்தபட்சம் ஒரு தூணையாவது இடித்தால்தான் வண்டி உள்ளே நுழைய முடியும். என்ன செய்வதென்று  அனைவரும் திகைத்து நின்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணோ பிரசவ வேதனையால் துடித்தாள். உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை. அப்போது கல்லூரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு தாமதமாக தனது சிறிய ரகக் காரில் அந்தத் தெரு வழியாக வந்தான் முகிலன். வழியில் மக்கள் கூட்டமாக இருந்ததைப் பார்த்து காரை நிறுத்தி விசாரித்தான். உடன் சற்றும் தாமதம் செய்யாமல் தனது காரில் கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு வந்த வழியே திரும்பி மருத்துவமனையில் சேர்த்தான்.

மறுநாள் காலை. கல்லூரிக்குச் செல்ல அந்தத் தெரு வழியாக வந்தான் முகிலன். கோயிலுக்கு அருகில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சிலர் கைகளில் கடப்பாரை-களுடன் நின்று கொண்டிருந்தனர். முகிலனைப் பார்த்ததும் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஓடிவந்தனர்.

“என்ன செய்றீங்க?’’ என்று கேட்டான் முகிலன்.

“ரோட்டை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்தக் கோயிலை இடிக்கப் போறோம்’’ என்றான் கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞன்.

“தம்பி, நேத்து ஆம்புலன்ஸ் வர வழியில்லாமப் போயிடுச்சி. சமயத்துக்கு நீ வரலைன்னா நெலமை ரொம்ப மோசமாப் போயிருக்கும். இந்தக் கோயிலோட ரோட்டில் இருக்கிற இந்த ஒரு தூணையாவது இடிச்சாத்தான் நாங்க வாழ முடியும்’’ என்றார் ஒரு பெரியவர்.

அருண்குமார் அங்கு கோபத்துடன் நின்று கொண்டிருந்தான்.

“என்னைவிட இந்தக் கீழ்ஜாதிக்காரன்தான் உங்களுக்கு ஒசத்தியா போயிட்டானா? நாம இந்தத் தெருவுல எல்லாமே ஒரே ஜாதி. இது அவனுக்குப் பிடிக்கல. அதனால் கலகம் பண்ண வந்துட்டான்’’ எனக் கத்தினான்.

“டேய் அருண்குமார்! எங்களுக்கு இப்ப விழிப்புணர்வு வந்துடுச்சு. ஜாதி மனிதனை சாக்கடையாக்கும் என்பது புரிஞ்சிடுச்சு. நாங்க இந்தத் தெருவில் ஓடிய சாக்கடையை மட்டும் நீக்கல. ஜாதிச் சாக்கடையையும் நீக்கிட்டோம். இந்த முகிலன் தம்பி கொள்கையால் உயர்ந்த தம்பி. எங்க குடும்பத்தில் ஒருவன் இந்த முகிலன்’’ என்று அருண்குமாரைப் பார்த்துக் கூறினார் அந்தப் பெரியவர்.

“சரி, சரி. என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு. வாங்க இடிக்கிற வேலையைப் பார்ப்போம்’ என்று சொல்லிக்கொண்டே கடப்பாரையை உயர்த்திய கூட்டத்தினரைப் பார்த்து, “நிறுத்துங்க’’ என்று கத்தினான் முகிலன். அனைவரும் திரும்பி முகிலனைப் பார்த்தனர்.

“இந்த வேலையை நாம் செய்யக் கூடாது. சட்டப்படிதான் நாம் அணுக வேண்டும். புகார் மனு எழுதி மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், காவல்துறை அலுவலர்களிடமும் தர வேண்டும். அவர்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் கலைந்து செல்லுங்கள்’’ என்று கூட்டத்தினரைப் பார்த்து வேண்டினான் முகிலன்.

முகிலன் சொல்வது சரிதான் என்பதை உணர்ந்த கூட்டத்தினர் அவன் கூறியதை ஏற்று புகார் மனு அளிப்பதற்கான ஆயத்தப் பணியில் ஈடுபடலாயினர்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *