ஆசிரியர் பதில்கள் : இலவசங்கள் ஏழைகளுக்கு மட்டுமே!

ஆகஸ்ட் 16-31,2021

 

கே:       சமத்துவபுரங்களில் ஜாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கு இடம் ஒதுக்கினால் அதன் நோக்கம் கூடுதலாக நிறைவேறுமல்லவா?

               – வ.கீதா, வேலூர்

    ப:       நல்ல யோசனை. தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அரிய யோசனை. முதலில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்புப் பணிகள் முடியட்டும். புதியவர்கள் எடுக்கும்போது இது சாத்தியப்படக்கூடும்.

கே:       சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய சட்டத்தடை உள்ளதா?

               – க.சிவசுப்பிரமணியன், திண்டிவனம்

ப:           எந்த சட்டத் தடையும் ‘இல்லை’. ‘தீட்சத நந்திகள் மறைப்பை அகற்றினால் தமிழோசை அருச்சனையாக ஒலிக்கும்!

கே:       தமிழில் அர்ச்சனை செய்ய ஆணை வழங்கிய அலுவலருக்கு அந்த ஆணை வழங்கும் உரிமை இல்லை என்ற வாதம் சட்டப்படி சரியா?

               – வே.செல்வபெருமாள், செய்யூர்

ப:           மக்கள் மன்றமும் நீதிமன்றமும் முடிவு செய்யும் _ மக்களாட்சியில் மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது மக்கள் அரசின் கடமை அல்லவா?

கே:       நாடாளுமன்றத்தில் விவாதமின்றி குரல்வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்படுவதை சட்டப்படி தடுக்க முடியாதா?

               – கல.சங்கத்தமிழன், செங்கை

ப:           முடியாது _ சட்டப்படி அனுமதி உள்ளதால்!

கே:       ‘சட்ட விரோதமாகக் குடியேறிய இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது’ என மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்திருப்பது சரியா?

– பா.அங்காளம்மாள், திருவொற்றியூர்

ப:           அகதிகளாக வந்தவர்களை அரசே ஆதரித்து உதவி முகாம்கள் அமைத்துள்ள நிலையில், ‘சட்ட விரோதம்’ எங்கே நுழைந்தது? எப்போது அரசுகள் உதவியுள்ளதோ அப்போதே அவர்கள் சட்டப்படியானவர்கள் என்ற முத்திரை பெற்றவர்களேயாவர்!

கே:       நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு டி.என்.ஏ. மசோதா கொண்டு வர இருப்பதன் நோக்கம் என்ன?

               – வே.கன்னியப்பன், மதுரை

ப:           யூகங்கள் செயலுருக் கொண்டால், பிறகு கருத்துச் சொல்லலாம்! அவசரப்பட வேண்டாம்!

கே:       பிகார் முதல்வர் நிதிஷ்குமார் எதிர்கட்சிகள் அணியில் இணைய வாய்ப்புண்டா?

               – அ.கிருஷ்ணன், தாம்பரம்

ப:           ‘அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது; நிரந்தர எதிரிகளும் கிடையாது!’ என்ற அரசியல் தலைவர்களின் கூற்றை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்; விடை தானே கிடைக்கும்.

கே:       இலவசம், நிதி உதவி ஏழைகளுக்கு மட்டுமே! நிரந்தர மாத வருவாய் உள்ளவர்களுக்கு இல்லையென்று கொண்டு வந்தால் நிதிச்சுமை குறையும் அல்லவா?

               – கா.மாரிமுத்து, திருத்தணி

ப:           நியாயமான கருத்து. நல்ல யோசனை. பசியேப்பக்காரர்களை பந்தியில் அமர்த்துவது நல்லது _ புளியேப்பக்காரர்களை ஒதுக்கினால் நல்லதுதான்!

கே:       ‘தினமலர்’ பத்திரிகைக்கு எதிராய் ஓர் இயக்கம் நடத்தி, வாங்க மறுக்கச் செய்தால் என்ன?

               – சி.பச்சையப்பன், பொற்பந்தல்

ப:           உதைத்த _ உதைக்கும் காலுக்கு முத்தமிடும் புத்தி, பாதிக்கப்படும் பல அரசியல் கட்சிக்காரர்களுக்கு மாறவில்லையே! தந்தை பெரியார் எவ்வளவு காலமாக இம்மாதிரி பூணூல் ஏடுகளைக் கையால் தொடாதீர்கள் என்றார். இப்போதுதான் புரிகிறதா?    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *