வரலாற்றுச் சுவடு : 17 வயதிலேயே தளபதி மு.க.ஸ்டாலின் சாதனை

ஆகஸ்ட் 16-31,2021

ஓர் அற்புதச் செய்தி

முனைவர் பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்

தமிழினத் தலைவர் கலைஞர் கழகத்தவருக்கு அரணாகவும், கழகத்தவர் குடும்பத்தினருக்குத் தாயாகவும், தந்தையாகவும், குடும்பத் தலைவராகவே தாம் வாழ்ந்த நாள்களில் திகழ்ந்தார்.

அந்த அன்புத் தலைவர் மறைந்தபோது அய்யோ, தமிழ்ப்பால் ஊட்டிய தகைமைசான்ற தலைவர் இல்லையே! என்று வேதனைக் கடலில் மூழ்கினர்.

ஆனால், காலம் அவ்வாறெல்லாம் நம்மைக் கைவிட்டு விடவில்லை. தம் அருமை மகன் தளபதி ஸ்டாலினை தன்னைத் தொடர்ந்து மக்கள் பணியாற்றிட விட்டுச் சென்றார்.

தளபதி நினைத்திருந்தால் தள்ளாடிக் கொண்டு, பி.ஜே.பி. துடுப்புக் கொண்டு எப்படியோ காலம் நடத்திக் கொள்வோம் என்று எப்படியோ ஓட்டிக் கொண்டிருந்த அ.தி.மு.க.விலிருந்து ஒரு சிலரை இழுத்திருந்தால் போதும், ஜனநாயகப் படுகொலைக்குத் தூண்டுதல் கிடைத்து இருக்கும்.

நாலாண்டுகால நாசக்கார, அடிமை ஆட்சிக்கு முடிவு கிட்டியிருக்கும். 13 இளம் மருத்துவக் கனவுடன் இருந்தோர் வாழ்வு பெற்றிருப்பர், வாழ்வை முடித்திருக்க மாட்டார்கள் என்று சிலர் எண்ணினாலும், தளபதி உறுதியாக மறுப்புத் தெரிவித்து விட்டார் என்பதே உண்மை.

சிலர் _ இயக்கத்தவர்களே, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் வேலி தாண்டத் தயாராயிருக்கிறார்கள். சில ‘சி’க்கள் மட்டும் போதும் என்றபோது, ‘மக்கள் வாக்குப் பெற்றுத்தான், மக்கள் சேர்ந்துதான் அரியணையில் அமர்த்த வேண்டும்’ என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். அத்தோடு ஓர் வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்தால் நன்று.

சிலர், விவரமற்றவர்கள், விவஸ்தை யில்லாமல், கலைஞர் விரும்பியிருந்தால் துணை முதல்வராக ஆக்கியவர், தளபதிக்கு முதல்வர் பட்டம் சூட்டியிருந்தால் இயக்கத்தவரோ மக்களோ எதிர்த்திருக்க வாய்ப்பில்லையே, ஏன் செய்யவில்லை? அவருக்கே விருப்பமில்லை என்றும் பொய்யுரை பரப்பினர். உண்மை என்ன? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வராக வரவேண்டுமே தவிர, தலைவர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட முதல்வர் என்ற அவச்சொல் ஏறியிருக்கும். எடப்பாடி என்ன மக்கள் தேர்ந்தெடுத்த முதல்வரா? இல்லையே. மண்டியிட்டுத் தவழ்ந்து முதல்வர் ஆனவர் என்பதை மாற்ற முடிகிறதா?

ஆனால், தளபதியை அப்படி எவரும் விரல் நீட்டிக் குறை சொல்ல முடியாது. காரணம், உழைப்பு! கடினமான உழைப்பு!! படிப்படியான வளர்ச்சி!!! 17 வயதில் தொடங்கிய உழைப்பு விதை இன்று 68 வயதில் முற்றித் திரண்ட முதிர்ச்சியான, பக்குவப்பட்ட அறிவாக, பண்பாடுள்ள முதல்வராகப் பரிணமித்துப் பார்போற்றச் செய்திருக்கிறது.

இந்தக் கூற்றுக்கான அடிப்படை ஒன்றை _ வரலாற்று உண்மையை _ அறியச் செய்வதே இந்தப் படைப்பின் நோக்கம்.

தந்தை 14 வயதில் கொடிபிடித்து, திருவாரூர்த் தெருக்களில், ‘தேடி வந்த இந்திப் பெண்ணே, ஓடிப்போ’ எனும் முழக்கமிட்டார் எனில், 17 வயதில் ஓர் அருஞ்சாதனை -_ அதுவும் மனிதநேயச் சாதனை நிகழ்த்தியிருக்கிறார் தனயன் மு.க.ஸ்டாலின்.

இன்று இயக்கக் குடும்பங்களை வாழவைத்த தலைவர் அடிச்சுவட்டில் தளபதி ஸ்டாலின் _ முதல்வரான பின்னும் நடைபோட்டு வருவதை இந்தக் காலக்கட்டத்தில் குறிப்பிடுவதிலும் ஒரு செய்தி இருக்கிறது.

இன்றைக்குத் தளபதி ஸ்டாலின் தமிழ் மண்ணின் மக்கள் தலைவர் _ முதலமைச்சர் இன்று அவர் ஜாடை காட்டினால் போதும், குறிப்புக் காட்டினால் போதும் _ அறப்பணிக்கு, உதவிக் கரம் நீட்டினால் ஆயிரமாயிரவர் அணிவகுத்து முன்வருவர்.

1969இல் ‘கொள்கைச் செம்மல்’ என அழைத்திடப் பெற்ற ஏ.கோவிந்தசாமி திராவிடர் கழகத் தலைமைக் கழகச் செயலாளர், வேளாண் அமைச்சர் என்று எல்லாம் அழைக்கப் பெற்ற வன்னியர் மரபில் வந்த ‘கொள்கைச் செம்மல் ஏ.கோவிந்தசாமி’ என அழைக்கப்பெறாமல் ஏ.கோவிந்தசாமி என்றே பலராலும் அழைக்கப் பெற்றவர் _ இன்னும் பல பெருமைகளுக்கு உரியவர். அவர் அமைச்சரான போதிலும், அந்தஸ்து மட்டுமல்ல; செல்வமும் சேர்த்துக் கொள்ளாதவர்.

“நான் ஏழையாகவே சாகிறேன். யாராவது என் மீது ஏதும் குற்றச்சாட்டுவார்களேயானால் நான் இறந்துவிட்டாலும் விடாதீர்கள். நீதி விசாரணை நடத்துங்கள். நான் நிரபராதி என்பதை நாட்டுக்கு நிரூபியுங்கள்’’ என்று தான் இறப்பதற்குச் சில மணி நேரம் இருக்கும்போது கேட்டுக் கொண்டவர்.

எனவே, அவர் குடும்பம் மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் கொண்ட குடும்பம். பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபடத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நிதி அளித்தார் கலைஞர்.

சென்னையில் கலைவாணர் அரங்கில் இரங்கல் கூட்டத்தில் கண்ணீர் மல்கக் கலைஞர் இரங்கல் உரை ஆற்றுகிறார். கலைஞரின் கண்ணீர் மல்கும் இந்த இரங்கல் உரையினைக் கேட்டார் _ தலைவர் கலைஞரின் 16 வயதே  ஆன 1.3.1953இல் பிறந்த, அப்போது பள்ளிப் படிப்பை முடித்த சிறுவன் மு.க.ஸ்டாலின். கலைஞரின் நான்கு புதல்வர்களில் ஒருவர். தி.மு.க. என்னும் இயக்க முத்திரை ஏதும் படிந்திடாச் சிறுவன்.  ஆயினும் கோபாலபுரம் இளைஞர் தி.மு-.க. என்னும் அமைப்பை நடத்திய மனிதநேயப் பண்பாளர். மானிடப் பற்றாளர். வியப்பாக இருக்கிறது _ அன்று அந்த வயதில் மானுடப் பற்று!

தந்தையின் கண்ணீர் மல்கிய உரை, கலைஞர் எடுத்துரைத்த அவரது எளிய குடும்ப வாழ்க்கை, அந்தத் துயர் துடைப்புப் பணியில் நாமும் ஏதாவது செய்ய வேண்டும், நிச்சயம் ஏதேனும் செய்ய வேண்டும் என்னும் துடிப்பு ஏற்பட்டிருக்கிறதே அதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது.

சென்னை கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் ரூபாய் ஆயிரம் (ரூ.1,000) மறைந்த கொள்கைச் செம்மல் கோவிந்தசாமி குடும்பத்திற்கு நிதி அளித்தார். அன்று தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவியாளர் சம்பளமே ரூ.105 தான். ஆம்! ரூபாய் 105 மட்டும்தான் என்றால் இந்த ஆயிரம் ரூபாய் அப்போது எவ்வளவு மதிப்பு மிக்கது என்பது விளங்கும்.

எண்ணிப் பார்க்க வேண்டும். 16 வயது நிரம்பிய இளைஞன், பள்ளி இறுதி வகுப்பு முடித்திருக்கும் நிலை. கல்லூரி காணும் காளைப் பருவம். எப்படி இந்த 1,000 ரூபாய் கொடுத்தார். உண்டியல் பணமா? அல்லது தந்தையிடம் வேண்டி வாங்கிச் சேர்த்தது எனலாமா? இல்லை. இல்லவே இல்லை.

எம்.ஜி.ஆர். இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் நாடோடி மன்னன். அன்று அவர் தி.மு.க. நடிகர். ஸ்டாலினுக்கு ஓர் எண்ணம் தோன்றி அதைச் செயலாக்கியதில் வெற்றி கிட்டி இருக்கிறது. கோடம்பாக்கம் ராம் திரையரங்கில் எம்.ஜி.ஆர். நடித்த நாடோடிமன்னன் திரைப்பட சிறப்புக் காட்சியின் வாயிலாகத் திரட்டிய நிதி ஆயிரம் ரூபாயாகச் சேர்ந்திருக்கிறது.

தி.மு.க. செயல் தலைவராக _ தலைவராக ஆவதற்கு முன் திகழ்ந்த தளபதி அன்றே செயல் வீரராகச் சாதனை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

ஒரு நல்ல பணிக்கு உதவி அன்றே 52 ஆண்டுகளுக்கு முன்னே முன்நின்ற தளபதியின் இச்செயல் சாதாரணமானதாகத் தோன்றவில்லை. திரட்டிய நிதியைக் கழகப் பொருளாளர் சாதிக் பாட்சாவிடம் முறையாகச் சேர்த்திடவும் செய்தார்.

தலைவர் கலைஞர், சான்றோன் எனத் தன் மகனைக் கேட்டு அன்றே பெருமிதம் பொங்கக் கூறியவை இவை:

“அண்ணா வழி நடவுங்கள், கருணாநிதியோடு ஒத்துழையுங்கள்’’ கழகத்தைக் கட்டிக் காத்திடுங்கள், ‘நாட்டு மக்களுக்குப் பணியாற்றிடுங்கள்’ என்று கழக நண்பர்களிடம் சொன்ன பின்னரே, “என் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்றார் அந்தத் தொண்டர். அந்தத் தொண்டருக்குத் தொண்டரான நான் மக்களுக்குக் குடும்ப நிதி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன். நிதியும் குவிந்து வருகிறது.

“என் மகன் ஸ்டாலின் தானே இயக்கிக் கொண்டு வரும் இளைஞர் தி.மு.கழகத்தின் சார்பில் நாடோடி மன்னன் படத்தைத் திரையிட்டுக் கோவிந்தசாமி குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறான்.’’ (‘மே’ 25, 1969)

இவ்வளவு அடிப்படையான உண்மை இருக்க, முரசொலி மாறனுக்கு அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய பணிகளைப் பாராட்டிச் சிலை வைத்தபோது, எதிலும் காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கும் பா.ம.க.வினர், பா.ம.க.வின் பசுமைத் தாயகம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், “கடந்த 50 ஆண்டுகளாகத் தி.மு.க. மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை ஆட்சி செய்த காலத்தில் எல்லாம் தி.மு.க.வுக்கு ஏ.ஜி. அவர்களின் நினைவு வரவில்லை. இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் சூழலில் ஏ.ஜி. அவர்கள் முதன்முதலில் வெற்றி பெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வந்த பின்னர்தான் மு.க.ஸ்டாலினுக்கு ஏ.ஜி. அவர்களின் பெயர் ஞாபகத்திற்கு வந்திருக்கிறது’’ எனப் பொய்ப் பரப்புரை நிகழ்த்திய கொடுமையும் செய்துள்ளனர். காலத்தின் கோலம் அது. இன்று இதுபோன்ற சூது, பொய், புனை சுருட்டுகள் யாவையும் தாண்டி அரியணை ஏறியிருக்கிறார்.

இப்படிப்பட்ட பொய்யுரைகளால், இடைத் தேர்தலில் ஜாதிப் பெயர் கொண்டு வெற்றி பெற்றவர்களால் 2021ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தளபதியின் தலைமைக்கு வெற்றி கிட்டியது. தி.மு.க. வென்றது. இது வரலாறு.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *