சிறுகதை : நன்றி சொல்வோம்!

ஆகஸ்ட் 16-31,2021

ஆறு.கலைச்செல்வன்

பசி!

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒன்றுதான் பசி.

பசிக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லை. எல்லோருக்கும் ஏற்படும் உணர்வுதான் பசி.

பசிக்கு ஒரே மருந்து உணவுதான். அது கிடைக்காமல் பசியால் நாள்தோறும் மடிவோர் பலர்.

புல், பூண்டு உள்பட அனைத்து உயிர்களுக்கும் தேவை உணவு.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’’ என்றார் வள்ளலார்.

“பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்’’ என்பதிலிருந்து மனிதனுக்கு பசி எடுத்தால் நற்குணங்கள் எல்லாமே பறந்தோடி விடும் என்பது கருத்தாகிறது.

இதை உணர்ந்த வள்ளலார் பசிப் பிணியே மனிதர்க்குத் தோன்றும் எல்லா மனப் பிணிகளுக்கும் காரணம் என்பதை நன்குணர்ந்து பசித்த எல்லோருக்கும் எல்லா வேளையும் உணவிட்டு மக்களின் பசிப் பிணியைக் களைய  முற்பட்டார்.

பசிப் பிணி நீங்கினால் மக்கள் உளநலம் பெற்று உலகை சீரிய முறையில் வழிநடத்துவர் என்பது அவரது கணிப்பு. அன்று அவர் மூட்டிய தீ இன்று வரை அணையாமல் பசித்தோரின் பிணியைத் தீர்த்து வருகிறது.

பசி என்பது ஒரு தீயநோய். தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்துண்ணும் பழக்கம் உடையவனை பசி என்னும் தீய நோய் அணுகாது என்கிறார் திருவள்ளுவர்.

“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்

தீப்பிணி தீண்டல் அரிது’’ (குறள்-_227)

என்கிறார் அறத்துப்பாலில் திருவள்ளுவர்.

ஆனால், மதவாதிகளோ பசி, வறுமை என்பதெல்லாம் முற்பிறவியில் செய்த விதிப்பயன் என்று கூறி அவர்களை அப்படியே அதிலேயே உழல விட வேண்டும் என்று விரும்புகின்றனர். அப்போதுதானே அவர்களால் பிழைப்பு நடத்த முடியும்!

மக்களின் போராட்ட உணர்வுகளையும், முயற்சி செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கினையும் அறவே ஒழித்துக் கட்ட மதவாதிகள் தங்கள் கோரப் பிடிகளை விலங்குகளாக மக்கள் கரங்களில் போட்டு வருகின்றனர். பலர் அச் சதிகாரர்களின் பிடியில் சிக்கி மாள்கின்றனர். ஆனால், அந்த மதவாதிகளின் மாயவலையில் சிக்காமல் முயற்சியால் அனைத்தையும் வென்று வாழ்வில் முன்னேற்றம் காண்பவர்களே பகுத்தறிவாளர்கள். அவர்களது வரிசையில் வந்தவன்தான் திருமாறன் என்பவனும்.

திருமாறன் என்பவன் பசியின் கொடுமையை, சிறு வயதிலிருந்தே அனுபவித்தவன். அவன் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தான். அதுமுதல் அவனது அம்மா மாதவி அவனை மிகவும் கடினப்பட்டு வளர்த்து ஆளாக்கி பட்டப் படிப்பும் படிக்க வைத்தார். இதற்காக அவன் அம்மா மாதவி பட்ட துன்பங்களும் அவமானங்களும் கணக்கில் அடங்கா. உணவின்றி இருவரும் தவித்த நாள்கள் பல. தனக்கு உணவில்லை என்றாலும் மகனின் பசியைப் போக்க அவர் துடித்த துடிப்பு சொல்லி மாளாது. தான் பல நாள் பட்டினி கிடந்து மகன் பசியை முடிந்தவரை போக்கி அவனைப் படிக்க வைத்து பட்டதாரியாகவும் ஆக்கி விட்டார்.

திருமாறன் மிகுந்த துன்பத்திற்கிடையே படித்ததால் ஆரம்பம் முதற்கொண்டு சராசரி மதிப்பெண்களையே பெற்று வந்தான். பட்டப் படிப்பிலும் இரண்டாம் வகுப்பில்தான் தேர்ச்சி பெற்றிருந்தான். அடுத்து வேலை தேடும் படலத்தில் ஈடுபடலானான். அதற்காக பல நிறுவனங்களுக்கும் வேலை வேண்டி விண்ணப்பித்தான். போட்டித் தேர்வுகள் எழுதவும் தன்னை தயார்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டான்.

அவனது தாய் மாதவி தன் மகனுக்கு அரசு வேலை கிடைத்துவிட்டால் தனது துன்பமெல்லாம் நீங்கிவிடும் என நம்பினார். இதற்காக அவர் பல கோயில்களுக்குச் சென்று வேண்டிக் கொண்டார். மகனுக்கு வேலை கிடைத்தால் மலை ஏறிவந்து மகனுக்கு மொட்டையடித்து வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் என விரும்பினார். தனது விருப்பத்தை மகனிடமும் தெரிவித்தார்.

போட்டித் தேர்வுகள் எழுத முற்பட்ட அவன் அதற்காக புத்தகங்கள் பலவற்றைத் தேடினான். புத்தகங்கள் வாங்க அவனிடம் பணம் இல்லை. நூல் நிலையங்களை நாடிச் சென்றான். அவன் குடியிருந்த பகுதியைத் தாண்டி ஓரிடத்தில் ‘பெரியார் படிப்பகம்’ என்ற பெயரில் ஒரு படிப்பகம் இயங்கி வந்ததை அறிந்தான் திருமாறன். அங்குச் சென்று பல புத்தகங்களையும் செய்தித் தாள்களையும் படித்தான்.

ஒரு நாள் அவன் எதிர்பார்த்தபடியே அரசு வேலைக்கு செய்தித்தாளில் விளம்பரம் வந்தது. உடனே, அதற்கு விண்ணப்பம் தயார் செய்து அனுப்பினான். இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துப் படித்தான்.

தேர்வு நாள் நெருங்கியது. மகனுக்கு எப்படியாவது வேலை கிடைத்திட வேண்டும் என மீண்டும் மீண்டும் வேண்டிக் கொண்டாள் மாதவி.

பல இன்னல்களுக்கிடையே தேர்வை நல்ல முறையில் எழுதி முடித்தான் திருமாறன். தேர்வில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை அவனுக்கிருந்தது. அவன் நம்பியபடியே தேர்வு முடிவுகளும் அமைந்தன.

ஆம்! அவன் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டான். அரசின் ஒரு நல்ல துறையில் பணி கிடைத்து அதில் சேர்ந்தும் விட்டான்.

மாதவி மகிழ்ச்சியில் ஆழ்ந்தார். முதல் மாதம் சம்பளம் பெற்றவுடன் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை முடித்து கோயில் உண்டியலில் பணம் போட்டு வர வேண்டுமென முடிவு செய்தார்.

இதற்கிடையில் அந்தப் பகுதியில் இருந்த ஒரு கோயிலின் அர்ச்சகர் ஒருவர் திருமாறன் வீட்டிற்கு வந்தார். திருமாறனுக்கு வேலை கிடைத்ததை வாழ்த்திவிட்டு அவனது முதல் மாத சம்பளத்தை கோயிலுக்கு நன்கொடையாகக் கேட்டார். அப்படிக் கொடுத்தால் அவனுக்கு செல்வம் மேன்மேலும் பெருகும் என ஆசை வார்த்தைகள் கூறினார். அவரது பேச்சு ஏனோ திருமாறனுக்கு எரிச்சலூட்டியது. அந்த அர்ச்சகர் இதற்கு முன் அவனைப் பலமுறை பார்த்திருக்கிறார். அப்போதெல்லாம் பேசாமல் ஒதுங்கிப் போனவர் தனக்கு அரசுப் பணி கிடைத்தவுடன் பணம் கேட்டு வருவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

தனது தாய் முதல் மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு தொலைவில் உள்ள கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியதை நினைத்துப் பார்த்த திருமாறனுக்கு,  தான் ஒரு நாள் பெரியார் படிப்பகத்தில் படித்த இடஒதுக்கீடு சம்பந்தமான புத்தகம் ஒன்று நினைவுக்கு வந்தது. அதுபற்றி மேலும் அறிய விரும்பிய அவன் ஒரு நாள் விடுமுறை நாளில் பெரியார் படிப்பகம் சென்றான்.

படிப்பகக் காப்பாளர் மணிமாறன் அவனை வரவேற்றார். அவனைப் பற்றிக் கேட்டறிந்தார். அவனுக்கு பணி கிடைத்ததை அறிந்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“அய்யா, இடஒதுக்கீடு பற்றி எனக்குப் புரிதல் வேண்டும்’’ என்று நேரிடையாக அவரிடம் கேட்டான் திருமாறன்.

“நல்லது தம்பி. மகிழ்ச்சி. உன்னைப் பற்றி நான் நன்றாக அறிந்து கொண்டேன். நம் போன்ற நலிவுற்ற பிரிவினருக்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இடஒதுக்கீட்டு முறை. நம் தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம்தான் நீயும் வேலை வாய்ப்பைப் பெற்றிருப்பாய். நீ திராவிட இயக்க வரலாற்றை நன்கு அறிய வேண்டும் தம்பி’’ என்று கூறி நிறுத்தினார் மணிமாறன்.

“அதுபற்றிக் கூறுங்கள்’’ என்று ஆவலுடன் கேட்டான் திருமாறன்.

அவனது ஆர்வத்தைக் கண்ட மணிமாறன் மிகவும் உற்சாகமடைந்தார்.

“1916ஆம் ஆண்டு 20ஆம் நாள் சென்னையில் டாக்டர் சி.நடேசனார், டாக்டர் டி.எம்.நாயர், சர்.பிட்டி.தியாகராயர் ஆகியோர் ஏற்பாட்டில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போதுதான் நீதிக்கட்சி, ஜஸ்டிஸ் பார்ட்டி என்று அழைக்கப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ தோன்றியது. 1921இல் பானகல் அரசரின் அமைச்சரவையால் வகுப்புவாரி உரிமை ஆணை நிறைவேற்றப்பட்டது. 1928ஆம் ஆண்டு சுப்பராயன் அமைச்சரவையில் எஸ்.முத்தையா முதலியார் இரண்டாவது அமைச்சராக இருந்தார். அவரால் 1921இல் நிறைவேற்றப்பட்ட இடஒதுக்கீட்டு முறையை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். இப்போது நாம் அனுபவித்து வரும் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு அதுவே அடிப்படையாகும்.’’ அவர் கூறும் செய்திகளைக் கவனமாகக் கேட்டு வந்தான் திருமாறன்.

மணிமாறன் மேலும் தொடர்ந்தார்….

“1928இல் நீதிக் கட்சியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பார்ப்பனர்கள் 1950ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் வழக்குத் தொடர்ந்தனர். 1950இல் உச்சநீதிமன்றத்தால் வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டது. இதைக் கண்டித்த தந்தை பெரியார் 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியை வகுப்புரிமை நாளாக அறிவித்து மக்களைப் போராட அழைத்தார். அந்தப் போராட்டத்தின் விளைவாகத்தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட்டு விதி 15(4) உருவாக்கப் பட்டது. பெரியாரின் போராட்டத்தின் மூலமாகத்தான் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் கல்வியில் இடஒதுக்கீடு கிடைத்தது.’’

மணிமாறன் பேச்சை திருமாறன் மட்டுமல்லாமல் அங்கு படிக்க வந்த பலரும் கேட்கத் தொடங்கினர். இதனால் மேலும் ஆர்வத்துடன் செய்திகளைக் கூறத் தொடங்கினார் மணிமாறன்.

“7.6.1971இல் கலைஞரால் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 25 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. பட்டியல் இன மக்களுக்கு 16லிருந்து 18 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது. அடுத்து 1.2.1980இல் எம்.ஜி.ஆர் 31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயர்த்தினார். 28.3.1989இல் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி 20 சதவிகித இடஒதுக்கீடு அளித்தார். பழங்குடியினர் சமூகத்திற்கு தனியாக ஒரு சதவிகிதம் அளித்தார்.

ஆனால், 16.11.1992 அன்று உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது என உத்தரவிட்டது. இதனால் 69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 31.12.1993இல் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாகியது. பின்னர் இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் 76ஆவது திருத்தமாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது விவர அட்டவணையில் சேர்க்கப்பட்டது. இவ்வாறு 9ஆவது விவர அட்டவணையில் சேர்க்க முழுமையாக அரசுக்கு ஆலோசனை வழங்கி செயல்பட்டு வெற்றியடைய வைத்தது யார் தெரியுமா?’’ என்று கேட்டு திருமாறனைப் பார்த்தார் மணிமாறன்.

“திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அய்யா அவர்கள்தான்’’ என்று மற்றவர்கள் ஒரு சேரக் கூறியதும் திருமாறன், தான் அதை உணரவில்லையே என்ற குற்ற உணர்வுடன் மணிமாறனைப் பார்த்தான்.

“இன்று நலிவுற்ற பிரிவைச் சேர்ந்த இளைய சமுதாயத்தினர் 69 சதவிகித இடஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கக் காரணம் திராவிடர் கழகமும் அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும்தான். அதன் பலனை அனுபவித்த இளைஞர்கள் நாடி வரவேண்டிய இடம் திராவிடர் கழகம். நன்றி சொல்ல வேண்டியது ஆசிரியர் அய்யாவுக்கு.’’

என்று கூறியதும் மணிமாறன் ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்கள் பற்றியும் பெரியார் உலகு பற்றியும் எடுத்துரைத்தார்.

இறுதியாக திருமாறனைப் பார்த்து, “தம்பி திருமாறா, நீ மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்ததிலிருந்து வேலைவாய்ப்பினைப் பெறும் வரை பெரியாரின் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்திருக்கிறாய்’’ என்று கூறி முடித்தார்.

அனைத்தையும் கேட்ட திருமாறன் ஒரு முடிவுடன் வீடு திரும்பினான்.

முதல் மாத ஊதியத்தைப் பெற்றான். திருமாறன் அவன் அம்மா மாதவி கோயிலுக்குச் செல்ல அழைத்தார். நேர்த்திக் கடன் செலுத்த வேண்டும் என்றார்.

திருமாறன் அம்மாவை அமரவைத்து திராவிட இயக்கமும், தந்தை பெரியாரும், ஆசிரியர் அய்யாவும் இடஒதுக்கீடு பெற்ற விவரங்களையும், தான் எவ்வாறு அதனால் பயன் பெற்றேன் என்பதையும் விரிவாக எடுத்துச் சொன்னான்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார் மாதவி. இறுதியாக, அம்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டான் திருமாறன்.

“அம்மா, இப்போ சொல்லுங்க. நாம் நன்றி சொல்ல எங்கே செல்ல வேண்டும்?’’

அம்மா தெளிவாகப் பதில் சொன்னார்.

“பெரியார் திடலுக்கு!’’    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *