நாட்டுநடப்பு : ஆரிய பார்ப்பனர் பிள்ளை விளையாட்டே அத்திவரதர் தரிசனம்!

ஆகஸ்ட் 01-15 2019

பொதட்டூர் புவியரசன்

தொலைக்காட்சி, கைப்பேசி, மழலையர் பள்ளிகள் என இப்போது பலவிதமான இடையூறுகள் வந்து விட்டதால் குழந்தைகள் வெளியில் விளையாடுவதை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்பாக ஓடியாடக் கூடிய குழந்தைகள் மரப்பாச்சிப் பொம்மைகளை வைத்து, மாப்பிள்ளை_மணப்பெண் என்று அலங்கரித்து, திருமணங்களை நடத்தி விளையாடுவார்கள். விருந்துகூட தடபுடலாக நடக்கும். அருகில் உள்ள மரத்து இலைகளைப் பறித்து வந்து வரிசையாகப் பந்தி வைத்து, தம் கைக்காசுக்கு ஏற்ப கடையில் வாங்கிய தின்பண்டங்களை விருந்து வைப்பார்கள். காசில்லாத குழந்தைகள் கல், மணல், கொட்டைகள் இவற்றைப் பரிமாறுவார்கள். பொம்மைக் கல்யாணம் முடிந்ததும் விருந்துண்டு ஏப்பம் விடும் சிறுவர், சிறுமியர் அவர்களுடைய கற்பனைத் திறனுக்கேற்ப அந்தப் பொம்மைத் திருமணங்களை ஆடம்பரத் திருமணங்களாக செய்து காட்டுவார்கள். அவர்களுடைய அந்தக் கற்பனை விளையாட்டு நம்மை வியக்க வைக்கும்.

இப்போது அதே போன்று பெரியவர்கள் கையில் கிடைத்த பெரிய மரப்பாச்சிப் பொம்மைக்கு விழா நடந்து வருகிறது. தண்ணீரில் கிடந்ததால் பாசி பிடித்த கட்டையைத் தேய்த்துக் கழுவி ஒப்பனை செய்து படுக்க வைத்து, நாளும் ஒரு வண்ணத்தில், பட்டாடை போர்த்தி மக்களுக்குக் காட்டி வருகின்றனர். ஊடகங்களும் போட்டி போட்டுக்கொண்டு “காவி வண்ணப் பட்டாடையில் காட்சி தந்தார்; மஞ்சள் வண்ண பட்டாடையில் அருள்பாலித்தார்; நீலப் பட்டாடையில் அருள் பாலித்தார்’’ என்றெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பொம்மையை எப்படி எங்கே படுக்க வைத்தார்களோ அங்கேயே அப்படியே படுத்துக் கிடக்கிறது. அதை கையைத் தூக்கி ஆசி வழங்கியது போல் அருள்பாலித்தார் என்று எழுதுகிறார்கள்.

எப்படி வந்தார் அத்தி வரதர்?

16ஆம் நூற்றாண்டில் முகலாயர் படையெடுப்பின்போது அவர்களுக்கு அஞ்சி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் உற்சவர் சிலை உடையார்பாளையம் ஜமீன் அரண்மனையில் மறைத்து வைத்துப் பாதுகாக்கப்பட்டதாம். அந்த உற்சவருக்குப் பதிலாக அத்திமரத்தால் செய்த வரதராஜ பெருமாளை வைத்து பூஜைகள் செய்து பக்தர்களை நிறைவு செய்தார்களாம்.

படையெடுப்பு அச்சம் நீங்கி மீண்டும் உற்சவர் வரதராஜர் காஞ்சிக்கு வர 40 ஆண்டுகள் ஆயினவாம். அந்த 40 ஆண்டு நினைவைப் போற்றும் வகையில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அந்த அத்திவரதரை மீண்டும் வைத்து பூஜைகள் செய்வதென உருவாக்கப்பட்டதாம்! அதுவரை 40 ஆண்டுகளுக்கு பூச்சி கரையான் மரத்தை அழித்து விடாதிருக்க தண்ணீரில் ஆழ்த்தி வைத்து காப்பாற்றுவார்கள். மூங்கில் கட்டுகளை மாதக்கணக்கில் தண்ணீரில் ஊற வைத்திருப்பதை ஆங்காங்கே காணலாம். ஏனெனில் ஏற்கெனவே உள்ளே புகுந்த பூச்சிகள் அழிந்து புதிய புழுக்களும் சேராதிருக்க அவ்வாறு செய்வார்கள். தண்ணீரில் வைக்காமல் தரையில் புதைத்து வைத்திருந்தால் இந்த 40 ஆண்டுகளில் அத்திவரதர் கரையான் சாப்பிட்டு காணாமல் போயிருப்பார்.

அத்திமரத்தின் அடிமரம் வலிமையானது, சிற்பம் செதுக்க ஏதுவானது. இந்த அத்திவரதரைக்கூட யாரோ ஒரு சிற்பி காலில் போட்டு மிதித்துக் கொண்டுதான் செய்திருப்பார். யாரோ செதுக்கிய சிற்பத்தைக் காட்டி வயிறு வளர்க்க இந்த அர்ச்சகர்கள் வந்து விட்டார்கள். “எல்லாம் பிள்ளை விளையாட்டு’’ என்று வள்ளலார் கூறியது போன்று அக்காலக் குழந்தைகளின் பொம்மை விளையாட்டை ஆரிய பார்ப்பனர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பொம்மை விளையாட்டால் உயிரிழப்பு, பொருளிழப்பு, மனித சக்தி இழப்பு என ஏராளமான இழப்புகள். இவற்றை ஈடுசெய்ய முடியுமா அத்திவரதரால்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *