அதிகம் பாதிப்பது பெண்களே!

அக்டோபர் 01-15

“டி.வி சீரியல்களால், பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சீரியல் இயக்குநர்களை பொறுத்தவரை, ஒரு கதையை அவர்கள் இயக்குகின்றனர். ஆனால், அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களைப் பெண்கள் பார்க்கும்போது, அதைக் கதையாக பெண்கள் எடுத்துக் கொள்வதில்லை; தன் நிஜ வாழ்வில் நடக்கும் சம்பவமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

அதிலும் குறிப்பாக, வேலைக்குப் போகும் பெண்களைவிட, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், வேலைக்குப் போகும் பெண்களுக்கு, தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நேரமும், அவகாசமும் கிடைக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, அந்தப் பகிர்வும், புது மனிதர்களின் அறிமுகமும் கிடைப்பதில்லை.

சுற்றிச் சுற்றி அவள் பார்ப்பனவற்றையே தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் உலகம் மிகக் குறுகிய வட்டத்தில் அடைபடுவதால், அவளுடைய பெரும் பொழுதுபோக்காக சீரியல்களையே எடுத்துக் கொள்கிறாள். புது மனிதர்களின் அறிமுகமும் பலரின் வாழ்க்கை நிகழ்வுகளும் தெரியாத அவளுக்கு, சீரியலே ஒரு நல்ல தோழியாகிறது! சீரியலில் வரும் நிகழ்வுகள் உண்மையில் நடப்பவை என்றே அவள் நம்புகிறாள். ஏனெனில், வெளியில் நடப்பனவற்றை அறிந்திராத நேரத்தில் தனக்குக் கிடைக்கும் ஒரே ஊடகமாக சீரியலைத்தான் பார்க்கிறாள். ஆகையால், ‘அதில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அப்படித் தான் இருக்கும். அவர்கள் அப்படியானவர்கள்தான்’ என்ற மனநிலைக்கு ஆளாகி விடுகிறார்கள் பெண்கள்!

பலரும் சொல்லலாம். ‘தொழில் நுட்பம் முன்னேறி விட்டது; அவர்களின் வட்டம் பெரிதாகி விட்டது’ என்று.  உண்மையில், ‘இல்லை’ என்பதே அதற்கான பதில்! ஏனெனில், 30 சதவீத பெண்களே, வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கே தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தவிர, தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கின்றனர்; அது வேறு கதை. மீதி, 70 சதவீதம் பெண்கள், வீட்டில்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு சீரியலே, பெரும் பகிர்தலாக, ஆறுதலாக இருக்கிறது.

தான் பார்க்கும் சீரியலில் வரும் பெண், உறவினர்களை எப்படி நடத்துகிறாளோ, அப்படியேதான், தானும் நடந்துகொள்ளத் தூண்டப்படுகிறாள்.

தான் பார்க்கும் சீரியலில் வரும் கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக, காட்சி ஒளிபரப்பாகிறது. அன்று தன் கணவர் வேலை முடிந்து, வீட்டிற்கு வருவதற்கு தாமதமாகி இருக்கலாம்; அவர், போன் செய்ய மறந்திருக்கலாம். ஆனால் இதை, அன்று தான் பார்த்தக் காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொள்கிறாள். அதேபோல், ஒரு சீரியலில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம், தன் வாழ்வில் நடந்த நிகழ்வை பிரதிபலித்தால், உடனே, ‘தான்தான் அது’ என்ற முடிவுக்கும், சிலர் வந்து விடுகின்றனர். அந்த கேரக்டருக்கு நடப்பனவற்றை, தன்னுடைய நிஜ வாழ்வில், பல பெண்கள், ‘அப்ளை’ செய்து பார்க்கின்றனர். ‘நம் வாழ்விலும் இனி இப்படித்தான் நடக்கும்‘ என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற சீரியல்களை பெண்கள் பார்ப்பதால், அவர்களின் குடும்பத்திலும் தேவையில்லாத பிரச்னைகளே படையெடுக்கின்றன!

நன்றி: ‘குமுதம் சிநேகிதி’ – 27.9.2018

– உளவியல் நிபுணர் ஜெயமேரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *