(இயக்க வரலாறான தன்வரலாறு – 208) எனது பி.பி.சி வானொலி பேட்டியை மீண்டும் மீண்டும் ஒலிபரப்ப கோரினார்கள்!

ஆகஸ்ட் 15-31 2018

 கி.வீரமணி

14.10.1983 அன்று சென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி சார்பில் பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்ற விழாவில் எங்களுக்கு பாராட்டு விழாவும், கழகத்தின் மூதாட்டியாரும் -_ மறைந்த சுயமரியாதைச் சுடரொளி பாவலர் பாலசுந்தரம் அவர்களின் துணைவியாருமான பட்டம்மாள் பாலசுந்தரம் அவர்களுக்கு நிதியளிப்பு விழாவும் நடைபெற்றது.

நான் உரையாற்றும்போது, “இயக்கத்தின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவராக விளங்கிய, இயக்கத்தின் ஆரம்ப காலம் தொட்டு உழைத்தவர் மறைந்த பாவலர் பாலசுந்தரம் ஆவார்கள். அவரது துணைவியார் பட்டு பாவலர் அவர்கள் நமது இயக்கத்திலே தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறவர் ஆவார். 1938ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலேயே ஈடுபட்டு சிறை சென்ற வீராங்கனை ஆவார். ‘‘பட்டு பாவலர்’’ பங்கேற்காத நிகழ்ச்சியே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இயக்கத்திலே தம்மை முழுமையாக இணைத்துக் கொண்டு சுழன்று சுழன்று பணியாற்றி வருகிறார்.

அன்னை மணியம்மையார் அவர்கள் நம்மிடையே இல்லாத நேரத்திலே இவர்களைப் போன்ற அன்பு உள்ளங்கள்தான் நமக்கு உற்சாகத்தைத் தருகின்றன. இந்த சீரிய முயற்சியில் ஈடுபட்ட மகளிர் அணியினரை நான் பெரிதும் பாராட்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தேன்.

14.10.1983 அன்று சென்னை அடையாறு ஆண்கள் மய்ய தொழில்நுட்பக் கல்லூரியின் தமிழ்ப் பேரவையைத் துவக்கி வைத்து உரையாற்றிய நான், ஈழத் தமிழர் கொடுமையை விளக்கும் கண்காட்சியை 16.10.1983 அன்று மன்னார்குடியில் திறந்து வைத்து உரையாற்றினேன்.

18.10.1983 அன்று சென்னை பெரியார் திடலில், அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள எனக்கு சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பாராட்டு வரவேற்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காமராசர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். சென்னை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் பெரியார் பேருரையாளர் டாக்டர் மா.நன்னன் வரவேற்று உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் தலைமை ஏற்றுப் பேசிய பழ.நெடுமாறன் அவர்கள், “தந்தை பெரியார் வழியில் தமிழர்களை ஒன்றுபடுத்தும் சக்தியாக தளபதி வீரமணி இன்று திகழ்ந்துகொண்டிருக்கிறார்.’’  நான், “பார்த்ததும் அறிந்ததும்’’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினேன்.

கிழ-க்கு முகவை மாவட்ட தி.க. பொருளாளர் ஆர்.சுப்பிரமணியம் அவர்களது செல்வி விஜயலெட்சுமிக்கும் ரத்தனகுமாருக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா டாக்டர் கலைஞரின் தலைமையில் 21.10.1983 காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. நான் அந்த மணவிழாவில் முன்னிலை வகித்தேன்.

 அதன் பின் 21.10.1983 அன்று மாலை காரைக்குடி என்.ஆர்.சாமி பவள விழாவில் தி.மு.க. தலைவர் கலைஞரும் நானும் கலந்துகொண்டோம்.

23.10.1983 அன்று கோவையில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு கூட்டத்தைத் தொடர்ந்து அன்று பிற்பகல் 12.30 மணி அளவில் செய்தியாளர்களைச் சந்தித்தேன்.

இலங்கையிலுள்ள தமிழர்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் ஜெயவர்த்தனே அழைத்து பேச வேண்டும் என்று பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் விடுத்த வேண்டுகோளையும் ஜெயவர்த்தனே புறக்கணித்து விட்டார் என்று குற்றம் சாட்டினேன்.

கோவை மாவட்ட திருப்பூர் நகரப் பேருந்து நிலையம் அருகில் 24.10.1983 அன்று மாலை 6.45 மணிக்கு தமிழ் ஈழ விடுதலை பிரச்சார பணிமனை துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு ஈழ விடுதலைக்கு விலைமதிக்க முடியாத உயிரைக் கொடுத்த ஈழத் தமிழ்த் தியாகிகள் நினைவாக சிறப்பாக அமைக்கப்பட்ட கல்வெட்டினை நான் திறந்து வைத்து உரையாற்றினேன்.

26.10.1983 அன்று கோயில் நிலங்களுக்கு குத்தகைதாரர் சாகுபடி சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கக் கூடாது என்று வற்புறுத்தி, திராவிடர் கழகத்தின் சார்பில் கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதனை நான் பங்கேற்று கொட்டும் மழையிலும் சட்டசபை நோக்கி கழகத்தின் எழுச்சிப் பேரணியைத் தொடங்கி வைத்து உரைநிகழ்த்தினேன்.

வடாற்காடு மாவட்ட திராவிடர் கழக கமிட்டிக் கூட்டம் 29.10.1983 அன்று மாலை 4.45 மணிக்கு திருவண்ணாமலை பயணியர் விடுதியில் என் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கழக கமிட்டிக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.

நான் அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து திரும்பியதைப் பாராட்டும் வகையில் 30.10.1983 அன்று செந்துறையில் நடைபெற்ற வரவேற்பு விழா பொதுக்கூட்டத்தில் ஜாதி _ மத _ கடவுள் பேதங்களை அகற்றும் மாமருந்து ஈரோட்டு மருந்தே! இனவுணர்வே தமிழர் சமுதாயத்தின் இன்றைய முதல் தேவை என்று முழக்கமிட்டேன். மறுநாள் இதேபோன்று, விருத்தாசலத்தில் 31.10.1983 அன்று ஒன்றிய தி.மு.க. சார்பாக அளிக்கப்பட்ட பாராட்டு விருந்தில் நான் கலந்துகொண்டேன்.

சென்னை உயர்நீதிமன்றப் பதவிகளைப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்யவிருப்பதை கவனப்படுத்தியும் _ தாழ்த்தப்பட்டோர்க்கு அய்க்கோர்ட்டில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமையைச் சுட்டிக்காட்டியும் நான், ஜனாதிபதி ஜெயில்சிங், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோருக்கு 04.11.1983 அன்று சமூகநீதி காக்க கழகத்தின் சார்பில் தந்தி அனுப்பினோம்.

15.11.1983 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழ விடுதலை பொதுக்கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசுகையில்,

“தமிழர் இனத்திற்குக் கேடு வரும்போது அவர்கள் எந்தக் கோடியிலே இருந்தாலும் அவர்கள் ஒன்று கூடுவார்கள் என்பதற்கு அடையாளமாகவே இங்கே ஒன்றுகூடி யிருக்கிறோம்’’ என்று கூறினேன்.

“பம்பாய் தமிழர் பேரவை’’ ஆண்டு விழாவில் கலந்துகொள்ள பம்பாய் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்று, 15.11.1983 அன்று பிற்பகல்  ஒரு மணிக்கு சாந்தாகுரூஸ் விமான நிலையத்தை சென்று அடைந்தேன். என்னை வரவேற்க தமிழர் பேரவை தி.க., தி.மு.க., ப.க. தோழர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

மாலையில் “மாதூங்கா – ஜிம்கானா’’ மைதானத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் தமிழர் பேரவை ஆண்டுவிழாவில் நான் எழுச்சி யுரையாற்றினேன்.

16.11.1983 அன்று 11 மணியளவில் தாராவி காமராசர் பள்ளித் தலைவர் டாணியேல் அவர்கள் அழைப்புக்கிணங்க நான் பள்ளிக்குச் சென்று பார்வையிட்ட பின், 17.11.1983 அன்று காலை 10 மணி அளவில் ‘தமிழின் ஓசை’ நிறுவனத் தலைவர் பரமசிவன் அவர்களின் அழைப்பை ஏற்று கோலிவாடாவில் உள்ள ‘தமிழின் ஓசை’ அலுவலகத்திற்குச் சென்றேன்.

23.11.1983 அன்று டில்லி வந்த ஜெயவர்த்தனேவை எதிர்த்து தமிழர்கள் தடையை மீறி சிங்கள வெறியர்களை எதிர்த்து புதுடெல்லியில் நானும், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் கழகத் தோழர்களுடன் கைது ஆனேன். டெல்லியில் தமிழர்கள் வாழும் பகுதிகளான சுல்தான்புரி, அருள்பார்க், பாரத் நகர் ஆகிய பகுதிகளிலிருந்து 4 தனிப் பேருந்துகளில் தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வந்துகொண்டிருந்தனர்.

26.11.1983 அன்று காலை 10.15 மணியளவில் திருவண்ணாமலையில் நடைபெற்ற செயராமப்பிள்ளை திருமண மண்டபத்தில் செங்கம் நகர திராவிடர் கழக செயலாளர் கு.பச்சையப்பன்_மங்கையம்மாள் ஆகியோரது செல்வி தேன்மொழிக்கும் _ ஜவகர் நகர் சென்னை மா.வேணுகோபால்_ ஆனந்தியம்மாள் ஆகியோரது செல்வன் இராசேந்திரன் அவர்களுக்கும் எனது தலைமையில் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மணமக்களுக்கு ‘‘ராகு காலத்திலேயே’’ வாழ்க்கை ஒப்பந்தம் நடத்தி வைத்து உரையாற்றினேன். மறுநாள் 27.11.1983 ஞாயிறு அன்று தஞ்சை காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் வழக்கறிஞர் சீனிவாசன் விஜயலட்சுமி ஆகியோரது வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை நான் நடத்தி வைத்தேன். கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருமணத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் நடராசன் தலைமை தாங்கினார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ப.வேணுகோபால் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். மற்றும் தஞ்சை மாவட்ட நீதிபதி அவர்களும், மாவட்ட சிறப்பு நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களும், மாவட்ட உதவி நீதிபதி அவர்களும் பெரியார் பெருந்தொண்டர் தஞ்சை ராசகோபால், மேலத்தஞ்சை மாவட்டத் தலைவர் ஆர்.பி.சாரங்கன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஒய்.எஸ்.பரிசுத்தனார், வழக்கறிஞர் அ.பூபாலன் ஆகியோர் மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

அன்று பிற்பகல், “தந்தை பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்’’ வளாகத்தில் “நிறுவனர் நாள்’’ விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ப.வேணுகோபால் அவர்களும், மாண்புமிகு மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களும், அப்துல் பாஸ் அவர்களும் பங்கேற்றனர்.

விழாவில் நான் உரையாற்றும்போது, “கல்வி என்றாலே அது ஒரு இடத்திலேயே தேங்கி நிற்கின்றது.

“வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை

வரவிடவில்லை மத குருக்களின் மேடை’’

என்று புரட்சிக்கவிஞர் தந்தை பெரியாரின் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினார். எனவேதான் கல்வி என்பது எல்லா மட்டத்தினருக்கும் வேறுபாடின்றி இன்றைய தினம் கல்வியை தமிழ்நாட்டில் அனைவரும் பயில்கின்றனர் என்றால் தந்தை பெரியாரின் தொண்டுதான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது’’ என்று உரையாற்றினேன்.

29.11.1983 அன்று உடுமலைப்பேட்டையில் ஒன்றிய திராவிடர் கழக பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பான பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொண்டு ஒன்றரை மணிநேரம் உரையாற்றினேன்.

இந்திய அரபு நட்புறவுக் கழகத்தின் சார்பில், “தேசிய பாலஸ்தீனப் போராட்ட ஆதரவு நாள்’’ என்று 01.12.1983 அன்று சென்னை சாஸ்திரி கோகலே அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.

நான் தலைமை உரையாற்றும்போது, ”பாலஸ்தீன மக்களும் நாடும் நாட்டால் வேறுபட்டாலும் உள்ளத்தால் ஒன்றுபட்டி ருக்கிறோம். இங்கே பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் படங்களாக வைத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பாலஸ்தீன விடுதலைக்கு நாம் ஏன் குரல் கொடுக்கிறோம் என்பதற்கு இந்தப் படங்களே பரிந்துரைக்கின்றன; அந்த நாட்டுக்குரிய மக்கள் குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு துரத்தி அடிக்கப்படுகின்றனர். இனப் படுகொலைகள் நடந்திருக்கின்றன என்பதை பல்வேறு ஆதாரங்களோடு எடுத்துரைத்தேன்.

லண்டன் பி.பி.சி. வானொலியில் – என்னை பேட்டி கண்ட எஸ்.சங்கரமூர்த்தி அவர்கள் எனக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதம் 01.12.1983 ‘விடுதலை’யில் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.

அந்தக் கடிதத்தில், “பேரன்பிற்குரிய நண்பர் வீரமணி அவர்களுக்கு வணக்கம்.

இங்கே லண்டனில் தங்களைச் சந்தித்ததும், அளவளாவி மகிழ்ந்ததும், தமிழோசைக்கென ஒலிப்பதிவு செய்ததும் என் வாழ்வில் இனிய புத்துணர்ச்சியூட்டிய அறிவார்ந்த அனுபவங்களாக என்றும் நிலைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

தங்கள் ‘செவ்வி’ (மிஸீtமீக்ஷீஸ்வீமீஷ்) தமிழோசையில் ஒலிபரப்பானதைக் கேட்டு பல நூறு மடல்கள் அன்பர்களிடமிருந்து வந்துள்ளன. அச்செவ்வியை மீண்டும் ஒலிபரப்பக் கோரி அன்புடன் பலர் வேண்டிக் கொண்டிருக்கி றார்கள்.

உரிய தருணம் வரும்போது மீண்டும் ஒலிபரப்ப எண்ணியுள்ளேன்.

தந்தை பெரியாரிடம் குடிகொண்டிருந்த கொள்கைப் பிடிப்பும் உறுதியும் -_ அனைத்திற்கும் மேலாக எளிய, இனிய பண்பாடும் தங்களிடம் மிளிர்கின்றன. அந்த மரபை என்றும் காத்து, தமிழ்ச் சமுதாயம் தன்மான உணர்வும் பண்பாடும் எழுச்சியும் பெறப் பாடுபடும் வகையில் தாங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்’’ என்று எஸ்.சங்கரமூர்த்தி எழுதியிருந்தார்.

4.12.1983 ஞாயிறு அன்று நாகபுரியில் மராத்திய மாநில (விதர்பா பகுதி) மண்டல் கமிஷன் மாநாட்டினைத் துவக்கி வைத்து நான் ஆங்கிலத்தில் உரையாற்றினேன்.

என்னுடைய ஆங்கில உரையை பஞ்சாப் ராவ் தேஷ்முக் நினைவுக் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் வாடேஸ்கர் அவர்கள் மராத்தியில் மொழிபெயர்ப்பு செய்தார்.

சுமார் 20,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பொதுமக்கள், மாணவர்கள், பேராசிரியர்கள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சில வெளியூர் வியாபாரிகள் போன்ற பலதரப்பட்டவர்களும் பல்வேறு கட்சி ஊழியர்களும் ஏராளமான தாய்மார்களும், மாணவிகளும், தொழிலாளர்களும் அம்மாநாட்டில் மிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டதுடன் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கைதட்டி தமது உணர்ச்சிகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

“மண்டல் கமிஷன் அறிக்கை என்பது அரசியல் சட்டப்படி நியமிக்கப்பட்ட ஒரு கமிஷன் அறிக்கை. அரசியல் சட்டப்படி நியாயமாகச் செயல்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் உண்டு’’ என்று வலியுறுத்திப் பேசினேன்.

(நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *