‘தலித்துகள் சூத்திரர்கள் அல்லர் என்பதால் அவர்களுக்கு இழிவு இல்லை என்பதா ?

ஜூலை 01-15

 

தவறான புரிதலில் உள்ள தலித் இளைஞர்கள் சிந்தனைக்கு…….

தலித் இளைஞர்களைக் குழப்பும் முகநூல் பதிவு:

இதில் இக்கால இளைஞர்கள் சிலருக்கு அய்யங்களும், குழப்பங்களும் கேள்விகளும் எழுகின்றன. எனவே சில விளக்கங்கள்.

தலித் சூத்திரர்கள் அல்ல.

அதனால், அவர்களுக்குச் சூத்திரர்களுக்கு உள்ள இழிவு இல்லை என்று பொருள் கொண்டு பெருமை கொள்வது அறியாமை!

ஆரிய பார்ப்பனர்கள் வர்ணம் பிரிக்கும்போது தங்களை உள்ளடக்கிய பிரிவில் தாழ்த்தப்பட்டவர்கள் வருவது தங்களுக்கு இழிவு, கேவலம் என்று எண்ணி அவர்களை அவ்வர்ணப் பிரிவில் சேர்க்கவில்லை. அவர்களை பஞ்சமர்கள், அய்ந்தாம் ஜாதியினர் என்றனர். பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் ஷத்திரியன், இடுப்பில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று பிரித்தனர்.

தாங்கள் பிறந்த கடவுளின் உடலிலிருந்து பிறக்கும் தகுதி தாழ்த்தப்பட்டவனுக்குக் கிடையாது என்பதால் அவர்களைத் தனியே ஒதுக்கி பஞ்சமர் என்றனர். கடவுளை வணங்கவும், கோயிலுக்குள் செல்லவும் தாழ்த்தப்பட்டோரை தடுத்தனர்.

1930வாக்கில் கும்பகோணம் நகராட்சியில் ஒரு தீர்மானம் போட்டார்கள்.

“பார்ப்பனர் வீடுகளில் மலம் எடுக்கக்கூட தாழ்த்தப்பட்டவர்கள் வரக்கூடாது. அவர்களை விட உயர்ஜாதியினர்தான் வரவேண்டும்!’’ என்பதே அத்தீர்மானம்.

அப்படியென்றால் என்ன பொருள்? ஆரிய பார்ப்பனனின் மலத்தைத் தொடும் தகுதிகூட தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடையாது என்பதுதான். 20ஆம் நூற்றாண்டில்கூட இருந்த நிலை இது என்பதைத் தோழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள் என்பதில் இழிவு இல்லை!

அவர்கள் ஆரிய பார்ப்பனர்களால் தாழ்த்தப்பட்டவர்களேயன்றி, உண்மையில் அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தவே தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கப்படுகின்றனர். அதனால், தாழ்த்தப் பட்டவர்கள் என்று சொல்லி அவர்கள் இழிவு படுத்தப்படுவதாய் எண்ணுவது அறியாமை! தாழ்த்தப்பட்டவர்கள் இந்து மதத்தை ஏற்காததால் அவர்களை ஊரின் புறத்தே ஒதுக்கி வைத்தனர் என்பது உண்மைக்கு மாறான கற்பனைக் கருத்து.

அவர்கள் தீண்டத்தகாதார் என்பதாலும், தூய்மையற்றவர்கள் என்பதாலும் ஊரின் புறத்தே தனித்து வாழும்படிச் செய்தனர்.

தாழ்த்தப்பட்டோர் இந்து கடவுளை ஏற்றே வாழ்ந்தனர். நந்தன் சிதம்பரம் கோயிலுக்குச் செல்ல தீவிரமாய் முயன்று போராடினர். இறுதியில் அவர் தொல்லை பொறுக்காமல் அவரைத் தீயில் தள்ளி தீட்சதர்கள் சிதம்பரத்தில் கொளுத்திக் கொன்றனர் என்பது வரலாறு.

தாழ்த்தப்பட்டவர் நிழல்கூட தங்கள் மீது படக் கூடாது என்று ஆரிய பார்ப்பனர்கள் அவர்களை இழிவுபடுத்தினர். ஆரிய பார்ப்பனர்களுக்கு எதிரில் தாழ்த்தப்பட்டோர் நடந்துவந்தால், காலையில் மேற்புறமாகவும், மாலையில் கீழ்ப்புறமாகவும் தாழ்த்தப்பட்டோர் செல்ல வேண்டும். அதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் நிழல் தங்கள் மீது வருவதைத் தவிர்த்தனர் என்பது நடைமுறை.

உண்மைகள் இப்படியிருக்க, தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள், தங்களின் இன எதிரி ஆரிய பார்ப்பனர்கள் என்பதை மறந்து, புதுப்புது கற்பனைகளில், மக்களைக் குழப்புவது அறியாமை!

(மஞ்சை வசந்தன் முகநூல் பதிவு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *