ஆசிரியர் வாழுங்காலத்தில் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமை! – இனமுரசு சத்யராஜ்

டிசம்பர் 01-15

 

பேரன்புடையீர் வணக்கம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு ‘உண்மை’ இதழ் சார்பாக வெளிவரவுள்ள சிறப்பு மலருக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவராக நம்மிடையே இயங்கிக் கொண்டிருக்கும் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 84ஆம் ஆண்டு பிறந்தநாள் என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

அவரது அயராத உழைப்பு இன்றும் திராவிட இயக்கத்தை உயிர்ப்போடு இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.

ஆசிரியர் அய்யா அவர்களோடு எனக்கு இருக்கும் நட்பும், உறவும் மறக்க முடியாததாகும். ஆம்! வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும்பேறு அய்யா “பெரியார்” அவர்களின் திரைப்படத்தில் நடித்தது. அதில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.

அய்யா பெரியார் அவர்கள் தனது இறுதி நாட்களில் தான் கலந்து கொண்ட சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே தனது உடல் உபாதை காரணமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டு அந்த வலியோடு அம்மா, அம்மா என்று கதறிக் கொண்டே மக்களிடத்தில் பேசியுள்ளார். அதைத் திரைப்படத்தில் காட்சிப்படுத்த தயாரானபோது நான் நேரில் பார்க்காததால் எப்படி அய்யா பெரியார் அவர்கள் அதைத் தாங்கிக் கொண்டார் என்று ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களிடம் கேட்டபோது, அதை அப்படியே நடித்துக்காட்டி எல்லோரையும் வியக்க வைத்தார்கள் என்பது மட்டுமல்ல; கண்களில் கண்ணீர் வடிய அழுதது, எனக்கும் அழுகை வந்து விட்டது. அந்த அளவிற்கு அய்யாவின் அடிநாதத் தொண்டராக விளங்கியவர் அல்லவா நமது ஆசிரியர் அவர்கள்.

அதேபோல அய்யா பெரியார் அவர்கள் பயன்படுத்திய படுக்கை, கட்டில், அவர் பயணம் செய்த அதே வாகனம் என அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்ததல்லவா? மேலும்  ‘பெரியார்’ படத்தின் 100ஆவது நாள் வெற்றி விழாவில் அன்றைய முதல்வர் மானமிகு தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களால் அய்யா பெரியார் அவர்கள் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தை  எனக்கு  நினைவுப் பரிசாக அணிவித்தும் எனக்குப் பெருமை சேர்த்தார்கள். என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பாக்கியமாகக் கருதி அந்த மோதிரத்தை   பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்.

அதேபோல ‘பெரியார்’ படப்பிடிப்பு தஞ்சை கல்லூரி வளாகத்தில் நடந்தபோது ஆசிரியர் அய்யா அவர்கள் தங்கும் அறையினை வழங்கியதும் எனக்கு பெரிய வாய்ப்பு என்றே கருதுகிறேன்.

தந்தை பெரியாரின் தத்துவ வாரிசாக விளங்கும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோமே என்பதே நமக்குப் பெருமை என்று கருதுபவன் நான்.

அப்படிப்பட்ட சிறப்புகளுக்கெல்லாம் உரிய ஆசிரியர் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்த-நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் கழக குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு காலம் நல்ல உடல் நலத்தோடு வாழ்ந்து  நம்மையும் நம் இனத்தையும் கட்டிக் காக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்பதையும் தெரிவித்து மீண்டும் ஒருமுறை அய்யா அவர்களுக்கு எனது சார்பிலும், எனது குடும்பத்தின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி வணக்கம்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *