கருப்புப்பணம் எங்கே இருக்கிறது?

ஜூலை 16-31

– மணிமகன்

இந்தியா ஒரு ஏழை நாடு என்று நீண்ட நாட்களாகச் சொல்லப்படுகிறது. இனிமேல் அப்படிச் சொல்லாதீர்கள். வேண்டுமானால் இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள். இந்தியா ஏழைகள் அதிகம் வாழும் பணக்கார நாடு.

 

பணக்காரர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதே நேரம் ஏழைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே பரம்பரைப் பணக்காரர்கள் மட்டுமல்ல, புதிய தொழில் அதிபர்கள், சாமியார்கள், அரசியல்வாதிகள்; ஏன் சாமிகளும்கூட பணக்காரர்கள்தான். பின் எப்படி இது ஏழை நாடு. எனவேதான், சொல்லுங்கள் இந்தியா ஏழைகள் வாழும் பணக்கார நாடு என்று

சாய்பாபாவின் அறையில் இதுவரை…

 

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மரணம் அடைந்த சத்ய சாய்பாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய்பாபா தங்கியிருந்த யஜுர் மந்திர் கட்டடத்தில் உள்ள அவரது தனி அறை கடந்த மாதம் அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. அதில் 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி, 12  கோடி ரூபாய் ரொக்கம் இருந்தது. பின்னர் சில நாட்கள் கழித்து யஜுர் மந்திர் கட்டடத்தில் சாய்பாபாவின் தனி அறைக்கு அருகே உள்ள ஒரு அறையை அனந்தபூர் மாவட்ட இணை கலெக்டர் அனிதா ராமச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

 

அப்போது சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்களும் உடன் இருந்தனர். அந்த அறையில், 116 கிலோ வெள்ளிப் பொருட்கள், 905 கிராம் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் உட்பட ரூ 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இன்னும் தோண்ட வேண்டிய அறைகளும் உள்ளன; ஆராயவேண்டிய கணக்குகளும் உள்ளன.

 

இந்தச் சாமியார் மட்டுமல்ல; இன்னும் கணக்குக் காட்டவேண்டிய சாமியார்களும் சோதனையிட வேண்டிய மடங்களும் ஏராளம் உள்ளன.

 

 

எல்லோரும் ஒருவரே என்ற சரிநிகர் சமமான நிலையை எட்ட வேண்டும் என்பது குறித்துக் கவலைப்படாதவர்கள், கல்வி, வேலை வாய்ப்பில் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை கொள்ளாதவர்கள், சமூகத்தில் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் ஜாதி, மத பேதம் ஒழிந்து எல்லோரும் சமத்துவமாக வாழப்  போராடாதவர்கள், பொருளாதாரச் சமநிலை எய்திட உழைக்காதவர்கள் இவை குறித்தெல்லாம் வாய் திறக்காதவர்கள் இப்போது புதிதாய்க் கிளம்பியிருக்கிறார்கள். கருப்புப்பணத்தைக் கண்டுபிடியுங்கள்; அது சுவிஸ் வங்கியில் இருந்தாலும் கொண்டுவாருங்கள் என்கிறார்கள். நல்ல முழக்கம்தான் வரவேற்போம். ஆனால், சுவிஸ் வங்கியைவிட அதிகமான பணம் இந்தியாவிலேயே இருக்கிறதே, அது தெரியாதா இவர்களுக்கு?

இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 7 அன்று ஒரு கோவிலுக்குச் சென்று வழிபட்ட படங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளன. அவர் தொட்டு வணங்குவது தங்கத்தகடுகளால் ஆன கோவில் சுவரை. அந்தக் கோவில் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கோயில். இவர் மட்டுமல்ல, ஏறக்குறைய இந்திய அரசியல்வாதிகள் பெரும்பகுதியினர் வெங்கடாஜலபதியைப் போல பணக்கார சாமிகள் குடிகொண்டிருக்கும் கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் உள்ளவர்கள்தான். இவர்கள்தான் சட்டமன்றங்களில், நாடாளுமன்றங்களில் வறுமையைப் போக்க(?) திட்டம் தீட்டுகிறார்கள். அந்தத் திட்டங்களில் வரிவசூல் பணங்களும், வெளிநாட்டுக் கடன்களும், நிதி உதவிகளும் மட்டுமே இடம்பெறும். இவர்கள் சென்று வரும் கோவில்களில் உள்ள பணமும் நகையும் இந்தத் திட்டங்களைத் தீட்டும் போது நினைவில் வராது.

இந்தியாவில் 5 லட்சத்து 74 ஆயிரம் பெரிய கோவில்கள், 2 இலட்சம் நடுத்தரக் கோவில்கள் உள்ளன. இவற்றில் 12 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் தங்கம் இருக்கிறதாம். ஆண்டுக்கு 12 இலட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய் தட்சணையாக மட்டும் வருகிறது. இது ஒரு தோராயக் கணக்குதான். இன்னும் முழுமையாக கோவில்கள் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. நடந்தால் கணக்கு எங்கேயோ போகலாம்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் ஒரு பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி எழுதிய அந்தப் பாடலில் கலைவாணர் இப்படிப் பாடுவார்.

எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்;

உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்;

சாமிகள் அடிகளில் சரண் புகுந்தாயோ?

சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?

அவர் பாடியது போலத்தான் இந்தியாவில் சாமிகளின் அடிகளிலும், சந்நியாசிகளிடமும் பணம் குவிந்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அண்மையில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான நகைகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒரு கோவிலிலேயே ஒரு லட்சம் கோடி என்றால் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் எத்தனைக் கோடிக் கோடிகள் இருக்கும்? இது யாருடைய சொத்து? இது ஏன் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது? இந்தக் கேள்விகளை ஏன் அரசியல்வாதிகளோ, திடீர் அவதாரப் புருஷர்களான ஊழல் ஒழிப்பு உத்தமர்களோ எழுப்புவதில்லை? இவர்கள் மட்டுமல்ல, அடிக்கடி பீதி கிளப்பும் ஊடகங்களும் இதனைக் கண்டுகொள்வதில்லை.

செய்திகள் அடிபடும் போது அதையும் ஒரு செய்தியாகக் காட்டிவிட்டு அப்படியே விட்டுவிடுகிறார்கள். தங்களுக்கு வேண்டாத அரசியல்வாதிகள் ஏதேனும் சட்டத்துக்கு முரணான காரியங்களில் ஈடுபட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராகக் குதித்து உலக நியாயம் பேசும் இந்த ஊடகங்கள் கோவிலில் குவிந்திருக்கும் பல லட்சம் கோடிகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. எங்காவது கிராமங்களில் பழைய வீடுகளைத் தோண்டும்போதோ, ஏரி,குளங்கள் தூர்வாரும் போதோ, வயல்வெளிகளிலோ புதையல் கிடைத்தால் அரசு என்ன சொல்கிறது. இந்தப் புதையல் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்றுதானே சொல்கிறது! பழைய அய்ம்பொன் சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டால் அதனைத் தொல்லியல் துறையினர் உடனே எடுத்துச் சென்று பொருட்காட்சியில் வைத்து அதனை அரசின் சொத்து ஆக்கிவிடுகிறார்கள் அல்லவா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை கிடைத்துள்ள நகைகள்

  • தங்க மணிகள்
  • தங்கக் கயிறு
  • தங்கத்திலான சாமி சிலைகள்
  • தங்கக் கிரீடங்கள்
  • தங்க மாலைகள் இவை மூட்டைகளில் கட்டிவைக்கப் பட்டிருந்தவை. இது போக வைரம்,    வைடூரியம், ரத்தினம் ஆகியவை மட்டும் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்குமாம்.
  • 18 அடி நீளத்தில் 10 கிலோ எடை கொண்ட தங்கச் சங்கிலி.
  • 1200 க்கும் மேற்பட்ட சரப்பொலிகள் என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள். இவற்றில்அவல் என்ற வகையைச் சேர்ந்த ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன.
  • 3 மணிமகுடங்கள்
  • தங்கத் தாம்பாளங்களில் தங்க நாணயங்கள்- 450 கிலோ
  • சொர்ணத்தண்டு என்று அழைக்கப்படும் தங்கத்தடி.
  • தங்க நெக்லஸ் மற்றும் தங்கப் பதக்கங்கள்.
  • தங்கக் குடங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள தங்கக் காசுகள்.
  • பெரிய ரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற அரியாசனம்.
  • மன்னர்கள் அணியும் தங்கம் மற்றும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பெற்ற கிரீடங்கள்.
  • பத்னாபசாமி சிலை ஒன்று.
  • 2 அடி நீள தங்க விஷ்ணு சிலை.
  • 18 அடி உயர 35 கிலோ தங்க அங்கி.
  • கிருஷ்ணதேவராயர் காலத்து ராசிக்கல் மோதிரங்கள்.
  • கிழக்கிந்தியக் கம்பெனி தங்க நாணயங்கள். இன்னும் திறக்கவேண்டிய அறைகள் உள்ளன.

ஏழைகள் வாழும் கிராமங்களில், நடுத்தர மக்கள் வாழும் நகரங்களில் மண்ணுக்கு அடியில் கிடைக்கும் புதையல்களும், பொன்னும் பொருளும் அரசுக்குச் சொந்தம்; ஆனால், பணக்கார சாமிகள் இருக்கும் கோவில்களில் உள்ள பொன்னும் பொருளும் அரசுக்குச் சொந்தமில்லையா?

திருப்பதியில் பணக்காரர்களால் கொட்டப்படும் பணமும் தங்கமும் சென்ற நூற்றாண்டிலும், இந்த நூற்றாண்டிலும் வரி ஏய்ப்பு செய்து பாவம் போக்க புண்ணியம் தேடிய இந்தியப் பணக்காரர்களால் அளிக்கப்பட்டவை. பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகள் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் ஆண்ட மன்னர்களின் ஏக போகத்தால் மக்களை வதைத்து அடிமைகளாக நடத்தப்பட்டு அடக்கி ஆண்டு அடித்த கொள்ளை. இந்த நகைகளும் பொற்காசுகளும் வானத்தில் இருந்து விழுந்துவிடவில்லை. மன்னருக்கு மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இருந்தும் ஆலயத்துக்கு மக்கள் அளித்த நன்கொடைகளில் இருந்தும்தான் உருவாக்கப்பட்டவை. எனவே, மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அந்தப் பணத்தை மக்கள் நலத்திற்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்று ஏராளமான கடிதங்கள் கேரளாவின் காசர்கோடு பகுதியில் இருந்து கேரள அரசின் தலைமைச் செயலகத்திற்கு வந்து குவிந்தவண்ணம் உள்ளதாம். நாடு சுதந்திரம் பெற்றபோது மன்னர்கள் ஒழிக்கப்பட்டு அவர்களது சொத்துகள் அரசின் நிருவாகத்தில் கொண்டுவரப்பட்டன. மன்னர் மானியம்கூட ஒழிக்கப்பட்டுவிட்டது. அப்படி இருக்கையில் பழங்கோவில்களில் உள்ள கணக்கில் அடங்கா நகைகளும் அரசின் சொத்துதானே!

பத்மநாப சாமி கோவில் புதையல் வெளிவரத் துவங்கியவுடன் நாட்டின் பல கோவில்களில் உள்ள புதையல்கள் பற்றிய செய்திகள் வரத்தொடங்கிவிட்டன.

ஆசியாவிலேயே மிகப்பெரிய ராஜகோபுரத்தைக் கொண்ட சிறீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலும் தங்கப் புதையல் இருப்பதாக சிறீரங்கத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமாச்சாரியார் தமிழக இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு மனு அனுப்பி உள்ளார்.

அதில், சிறீரங்கம் கோவில் கி.பி.1736ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 48 வருடங்களாக ஆபத்துகளைச் சந்தித்தது. 1755ஆம் ஆண்டு பிரெஞ்சுப் படையினர் சிறீரங்கம் கோவிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள், பொற்காசுகள் இருந்த சிறீபண்டாரத்தைக் கொள்ளையடிப்பதற்காக வந்தனர். இந்தச் சம்பவம் நாள் குறிப்பில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனவே, இந்தக் குறிப்புகள் மூலம் படையெடுப்பின் போது சிறீரங்கம் கோவிலில் ஆவிநாடன், திருச்சுற்றில் உள்ள கருடன் சன்னதிக்குப் பின்புறம் அந்த ஆபரணங்களையும், பொற்காசுகளையும் அப்போதைய ஸ்தலதாரர்கள் (கோவில் நிருவாகத்தினர்) பாதுகாப்பாக வைத்திருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது.

இப்போது உள்ள நவீன கருவிகள் மூலம் கருடன் சன்னதிக்கு எந்த வித சேதமும் ஏற்படாமல் சோதனை நடத்தி அந்தப் புதையல் பற்றி தெரிந்து கொள்ளலாம். எனவே, இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

காசேதான் கடவுளடா….

 

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் கடைசி ரகசிய அறையைத் திறக்கக் கூடாது என்று ஜூலை 8 அன்று உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. திருவாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இளவரசர் ராஜா மார்த்தாண்ட வர்மா தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் ரவீந்திரன், பட்நாயக் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ரகசிய அறைகள் திறக்கப்பட்ட பிறகு பலருடைய பார்வை கடவுள் மீது இல்லை; ரகசிய அறைகளின் மீதுதான் உள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

 

தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம்
காசு முன் செல்லாதடி…..

 

குதம்பாய் காசு முன் செல்லாதடி
ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்தில்

 

காசுக்குப் பின்னாலே…

 

குதம்பாய் காசுக்குப் பின்னாலே…  இது அன்றே பாடிய குதம்பைச் சித்தரின் பாடல்.

 

திருவாரூர் கோவிலிலும் புதையல் இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.

திருவாரூர் தியாகராஜசாமி கோயிலிலும் 2 ரகசிய அறைகள் இருக்கிறது. இந்த அறைகளைத் திறந்தால் விலை உயர்ந்த பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது.

அர்த்த மண்டபத்துக்குப் பின்புறம் கருங்கல்லால் அடைக்கப்பட்டுள்ள ஒரு அறை உள்ளது. இவ்வாறு அறை இருப்பது தெரியாமல் மூடுவதற்கு கல் திரையிடுதல் என்று பெயர். பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க, கோயில்களில் உள்ள முக்கியத் திருமேனிகள், விலை உயர்ந்த பொருட்களையும் கருவறையில் வைத்து மூடச்செய்வது மன்னர்களின் வழக்கம். இந்த வகையில் இந்த அறை கல்லால் திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கலாம். அதைப்போல் மேற்குப் பிரகாரத்தில் உள்ள ஆனந்தீஸ்வரர் சன்னதியிலும் ஒரு ரகசிய அறை உள்ளது. இதன் உள்ளேயும் ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம், என்கிறார். தமிழகத்தின் இன்னொரு முக்கியமான கோவிலும் இருக்கிறது. அது சிதம்பரம் நடராசர் கோவில். இக்கோவிலை அரசு ஏற்க முயலும்போதெல்லாம் அங்குள்ள தீட்சிதர்கள் அதற்குத் தடையாக உள்ளனர். அது ஏன் என்பதும் இந்த நேரத்தில் கேள்வியாக எழுகிறது.

கோவில்களில் குடிகொண்டிருக்கும் சாமிகளெல்லாம் கோடீஸ்வரர்களாக இருக்கும் நிலையில், அவர்களைக் கும்பிடும் ஆசாமிகள் கோவணாண்டிகளாக இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

கருப்புப் பணம் என்று அரசு எதைச் சொல்கிறது?அரசின் வருமான வரிக்கணக்கில் வராத பணம்தான் கருப்புப் பணம். அப்படியானால் இந்தக் கோவில்களில் உள்ள பணமும், நகைகளும் மட்டுமல்லாமல் சாய்பாபா போன்ற சாமியார்களின் அறைகளில் உள்ள பணமும் அரசின் வருமானவரிக் கணக்கில் வராதவைதான். அரசின் பார்வை சுவிஸ் வங்கியின் மீது மட்டும் அல்லாமல் இந்தப் பக்கமும் திரும்ப வேண்டும். மீடியாக்களும் கருப்புப் பணத்தைக் கைப்பற்றப் புறப்பட்டிருக்கும் புதிய ஊழல் ஒழிப்பு உத்தமர்களும் இந்தக் கோவில்களின் மீதும் கொஞ்சம்  கடைக்கண் பார்வையை வீசட்டும்.

உலகப் பொருளாதார மந்தம், நாட்டின் பணவீக்கம், மக்கள் நலம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கான பணத்தேவை உள்ளிட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் களையவும், வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கும் பணத்தைத்தேடி இந்தியா எங்கேயும் அலைய வேண்டாம்; எந்த நாட்டிடமும் கையேந்த வேண்டாம்; பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் மண்டியிட வேண்டாம். நம் நாட்டில் உள்ள கோவில்களிலும், சாமியார்களின் மடங்களிலும் புகுந்தால் போதும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *