ஜாதி – தனி மனித வழிபாடு – பெண்ணடிமை தமிழ் சினிமா: எங்கே செல்லும் இந்தப் பாதை? – 3

அக்டோபர் 16-31

ஜாதி – தனி மனித வழிபாடு – பெண்ணடிமை

தமிழ் சினிமா: எங்கே செல்லும் இந்தப் பாதை? – 3

 

– கை.அறிவழகன்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை குறித்த எதிர்மறைச் சித்தரிப்பு.

சமூகத்தின் இயக்கங்களையே எதிரொலிக்க வேண்டிய நிலையில் நமது திரைப்படங்கள் இருப்பதால் முற்று முதலாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஒரு தவறான பிம்பத்தையே அவை உருவாக்கி இருக்கின்றன. பல்வேறு திரைப்படங்களில்  ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒரு தியாகத்தின் சின்னமாகக் குறியீடு செய்யப்படுகிறது.

அண்மைக்காலத் திரைப்படங்களில் வெற்றி அடைந்த மாற்றுச் சிந்தனைத் திரைப்படங்கள் என்று சொல்லப்-படுகிற சில திரைப்படங்களை எடுத்துக்-காட்டாகக் கொண்டால் வெயில், பருத்தி வீரன், காதல், வெண்ணிலா கபடிக் குழு போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். ஓர் ஒடுக்கப்பட்ட மனிதனின் அனைத்து அசைவுகளும் தோல்வியை நோக்கிப் பயணப்-படுவதாக எடுக்கப்பட்ட வெயில் திரைப்படம் ஒரு மேல்ஜாதிப் பெண்ணைக் காதலிப்பதால் நிகழ்கிற ஒடுக்கப்பட்டவனின் மிகப்பெரிய தோல்வியாக முடிவுக்கு வருகிறது. உளவியல் வழியாக எந்த இடத்திலும் கலப்புத் திருமணம் நிகழ்ந்து வெற்றி பெறுகிற தலித் உடலைக் காட்டாமல் மேல்ஜாதிப் பெண்களைக் காதலிப்பதால்  நிகழ்கிற அவலங்களை மட்டுமே காட்சிப்படுத்தி, தன்னளவில் சமூகத்தைக் கடக்க முடியாமல் தேங்கி விடுகிறது.

ஓர் ஒடுக்கப்பட்டவன் உடல் வெயில் மாதிரியான ஓர் உயர் ஜாதிப் பெண்ணைக் காதலிப்பதால் நிகழும் சம்பவங்களின் தொகுப்பே காதல். ஊரில் இருந்து துரத்தப்பட்டதில் இருந்து விரட்டி விரட்டி அடிக்கப்படும் தலித் உடல் இறுதியாக கல்லால் அடிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து வீதியில் அலையும் வரையில் காட்டப்படுகிறது.  பருத்தி வீரன் திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் கலப்புத் திருமணத்தால் ஒடுக்கப்பட்டவன் உடலுக்கு நிகழ்கிற வன்முறையைச் சொல்கின்றன. வெண்ணிலா கபடிக் குழுவின் நாயகன் தனது அணியின் வெற்றிக்காக உயிரைக் கொடுத்து உழைக்கிற ஒரு தியாகியாக மாற்றப்படுகிறான். அவனது காதல் தியாகத்திற்குள் புதைக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டவர் ஒருவரை கதாநாயகனாகக் காட்டுவதே அரிது எனும் சூழலில், மேற்சொன்ன படங்களில் நிதர்சனத்தைக் காட்ட முடிந்ததே தவிர, பிற படங்களில் உள்ளதுபோன்ற சினிமாத்தன வெற்றிகளைக் கூட இப்படங்களின் கதாநாயகப் பாத்திரத்துக்கு வழங்கமுடியவில்லை.

இந்த வரிசையில் மாறுபட்டுச் சிந்தித்த மதராசப்பட்டினம், பேராண்மை போன்ற சில திரைப்படங்களையும் நம்மால் அடையாளம் காண முடியும் என்றாலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையைச் சொல்கிற அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் உடல் மற்றும் மனநிலையைச் சொல்கிற திரைப்படங்களை நாம் இன்னும் கண்டடையவில்லை என்பதே எஞ்சி இருக்கும் செய்தி.

ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் அல்லது இலக்கியங்கள் போலவே ஒடுக்கப்பட்-டோருக்கான திரைப்படங்கள் என்ற வரிசையை நோக்கி நமது சமூகம் பயணம் செய்ய வேண்டிய தேவை வழியெங்கும் நிரம்பிக் கிடக்கிறது. வலியை அதைப் போக்கும் காரணிகளை உணர்ந்தவர்கள் சொல்லும் போது மட்டுமே ஒரு நம்பகத்தன்மையும், உயிரோட்டமும் இருக்கும் என்பதுதான் கலையின் அடிப்படைக் கூறு. கலை இந்தச் சமூகத்தின் எஞ்சிய நினைவுகளைச் சுமந்து செல்கிற ஒரு ஊர்தி. அவற்றில் எவற்றை ஏற்றி நமது அடுத்த தலைமுறைக்கு அனுப்ப வேண்டும் என்பது ஒவ்வொரு சமூக அக்கறையுள்ள கலைஞனின் கடமையும்கூட. கலைஞர்களும், இளம் இயக்குனர்களும் நிறைந்து வழிகிற நமது சமூகத்தில் அவர்களின் திறனுக்கும், அறிவுக்கும் குறைவில்லை. அவர்களால் நமது சமூகத்திற்குப் பயனளிக்கக் கூடிய திரைப்படங்களை அல்லது கலையின் முழுப் பரிமாணத்தையும் பார்வையாளனுக்குக் கொடுக்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்க முடியும். நூற்றுக் கணக்கானவர்களை அடித்துத் துவைத்து, பின் கணவனை இழந்த பெண்களின் சேலைகளில் வண்ணங்களை ஊற்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் உடலைக் கல்லால் அடித்து உங்களால் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரைப்பட வரலாற்றில் எதிர்மறையாக உங்களைப் பதிவு செய்வதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இயக்குனர்களே தொடர்ந்து நீங்கள் அப்படியே செய்யுங்கள். நமது குழந்தைகளும், இளைஞர்களும் நடிகர்களின் புகைப்படங்-களுக்குப் பாலூற்றிக் கொண்டே மனநிலை பிறழ்ந்து வீதிகளில் அலையட்டும்.

தமிழ்த் திரையுலகம் கடந்த அய்ம்பது ஆண்டுகளில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றிய பல்வேறு நிகழ்வுகளைக் காட்சியாக்கி இருக்கிறது. ஆனால் அத்தகைய காட்சிகளில் உண்மையான வலிகளைவிடவும், அலங்கரிக்கப்-பட்ட வலிகளின் சுவடுகள்தான் அதிகமிருக்கும். இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பூணூலைக் கழற்றி எறியும் பார்ப்பனரை மிகப் பெரிய புரட்சியாளராகவும், தேவர் காலடி மண்ணைப் போற்றிப் பாடும் தேவர்களைக் கழுத்தறுக்கும் கட்டை மீசைக்காரர்களாகவும் சித்தரித்துப் பழகிப் போயிருக்கிற நமது திரைப்பட உலகம் தலித் திரைப்படங்களை ஏற்றுக் கொண்டு செரித்து விடுமா என்கிற கேள்விதான் நான் அதிர்ந்து போனதற்கான காரணம். ஏனைய துறைகளைப் போலவே திரைப்படத் துறையும் கருத்தியல் அடிமைத்தனங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் ஒரு காலகட்டத்தில் இந்த உரையாடல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட எல்லா முகாந்திரங்களும் இருக்கின்றன.

தமிழகத்தின் அன்றாட வாழ்வியலும், வரலாற்று இயங்கியலும் எப்படி இருக்கிறது என்கிற ஒரு பொதுவான நிலையை அறிந்த பின்னர் நாம் இத்தகைய கூர்மையான தளத்திற்குச் செல்வது இந்த விவாதக் களத்தை இன்னும் செம்மையாக்கும் என்று கருதுகிறேன். நகர்ப்புறக் கூட்டத்தில்  மறைத்து வைக்கப்பட்டு இல்லாமல் போனதாக அறிவு ஜீவிகளால் கட்டவிழ்த்து விடப்படும் ஜாதி மனப்போக்கு இன்றைய தமிழகக் கிராமங்கள் அனைத்திலும் ஒளிவு மறைவின்றியே விரவிக் கிடக்கிறது. தாழ்த்தப்பட்டோரின் திருமண விழாக்களுக்கு சொந்த ஊரில் இருக்கும் உயர் ஜாதியினர் என்போரோ அல்லது பிற்படுத்தப்பட்ட சூத்திர ஜாதியினரோ கலந்து கொள்வதில்லை. அப்படியே கலந்து கொண்டாலும் “கலர்” குடித்து விட்டு மொய் எழுதிச் செல்லும்  பழக்கம் நீண்ட நெடுங்காலமாகவே  காணக் கிடைக்கிறது. பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெற்று சமூக அடையாளத்தோடு இருக்கிற தலித் மக்களின் திருமண விழாக்களுக்குக்கூட இந்த எழுதப்படாத விதி பொருந்தும். இரட்டைக் குவளை முறையில் தேநீர் வழங்கும் பெரும்பான்மை தமிழகக் கிராமங்கள் வடக்கு, தெற்கு வேறுபாடுகள் இன்றிப் பரவிக் கிடக்கிறது. செருப்பைக் கக்கத்தில் வைத்துக் கொண்டு நடக்கும் மனிதர்கள் எந்த ஒரு குற்ற உணர்வும் இல்லாத சூத்திர ஜாதியினரின் தெருக்களைத் தினந்தோறும் கடந்துதான் வேலைக்குப் போகிறார்கள். ஒருமையில் அழைக்கப்படும் வயது முதிர்ந்த பெரியவர்களை சிவகங்கை மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் பல முறை கையாலாகாமல் கடந்து போயிருக்கிறேன். இருபத்து அய்ந்து ஆண்டுகளாக ஒரு கல்லூரியில் மாணவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட முடியாத, அதற்குத் தகுதி வழங்கப்படாத சமூகத்தின் பார்வையாளராக என்னைப் போலவே மூன்றாயிரம் பேர் படித்துக் கொண்டிருந்தோம்.

தள்ளி வைக்கப்படுகிற கொடுமைகள், குடிப்பதற்கான நீரைத் தான் வாழும் கிராமத்திலிருந்து பெற முடியாமல் வேறொரு கிராமத்திற்குப் பயணப்படுகிற பெண்களை, பள்ளிகளில் இன்னும் தனியாக அமர வைக்கப்படும் குழந்தைகளை, போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதற்குத் தகுதி இல்லாத குழந்தைகளை, அந்தக் குழந்தைகளின் மீது குத்தப்பட்டிருக்கும் அழியாத ஜாதி முத்திரைகளை, இன்னும் சொல்ல முடியாத வலி நிரம்பிய தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை இன்றைய தமிழ்  சினிமாவுக்குள்  கொண்டு வருவது  சாத்தியமா  என்கிற  விடை  காண  முடியாத  கேள்வி இங்கிருந்துதான் வெடித்துக் கிளம்புகிறது.

இந்நிலையில் தான் பா. ரஞ்சித் இயக்கத்தில் மெட்ராஸ் வெளிவந்திருக்கிறது. சென்னையின் திருவொற்றியூர், வேளச்சேரி, திருமங்கலம் போன்ற இடங்களில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், வெளியில் இருந்து வருகிற மக்கள் பார்க்கும் சென்னையின் பொதுமனம் எப்போதும் வேறானதாகவே இருக்கிறது, உண்மையில் அவர்கள் ஒருபோதும் சென்னையின் இதயத்தைப் பார்த்ததில்லை, சென்னையின் இதயம் அதன் உட்புறமான தெருக்களில், நெடிய உப்புக் காற்றடிக்கும் கடற்கரைக் குடிசைகளில், ஒன்று கூடி விளையாடும் பொதுவிடங்களில் என்று அலாதியானது.

“மெட்ராஸ்” திரைப்படத்தைப் பார்த்த போது அத்தகைய ஒரு உணர்வை மீட்டிப் பார்க்க முடிந்தது. அதே தெருக்கள், அதே ஒடுங்கிய குறுகலான ஆனால், நிறைய வாழ்க்கை இருக்கிற வீடுகள், அதிகாலைத் தண்ணீர்க் குழாய்கள், நியான் விளக்குகளில் படுத்திருக்கும் நாய்கள், அன்பு நிரம்பிய வெள்ளந்தியான மனிதர்கள் என்று சென்னையின் பூர்வீகக் குடிமக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறார் பா.ரஞ்சித்.
வணிக நலன்களுக்காகவோ, அடையாளம் குறித்த சிக்கல்களுக்காகவோ காளி கதாபாத்திரத்தை ஒரு முழுமையான ஒடுக்கப்பட்ட மனிதனாக உருவகம் செய்வதில் பா.ரஞ்சித்துக்கு மனத்தடை இருந்திருக்க வேண்டும், ஆனால், ஒருவேளை அந்த மனத்தடையை அவர் கடந்திருந்தால் அழுத்தமான ஒரு புதிய வரலாற்றில் அவரது பெயர் குறிக்கப்பட்டிருக்கும். அரசல் புரசலாக பல இடங்களில் கதை நாயகனை ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனாக அவர் காட்ட முயற்சி செய்திருந்தாலும், அது முழுமையாக வெளிப்பட்டு வணிக வழியாக எதிர்மறை நிலையை அடைந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் கொண்டிருக்கிறார்.

தங்களைச் சுற்றி நிகழ்கிற அரசியல் எப்படியெல்லாம் ஒரு எளிய சென்னை வாழ் இளைஞனின் வாழ்க்கையில் தாக்கம் விளைவிக்கிறது, கோட்பாட்டு ரீதியாக  அல்லது சமூகவியல் ரீதியாக எந்த ஒரு முக்கியத்துவமும் இல்லாத சுவர் விளம்பர அரசியல் எப்படி பல குடும்பங்களின் சமூகப் பொருளாதார இருப்பை வதம் செய்கிறது என்று அவரது பாணியில் சொல்லி இருக்கிறார் இயக்நனர். காலம் காலமாக சமூக மனங்களில் எத்தனை மாற்றங்கள் வந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் நிகழ்வதில்லை என்பதை ஒரு குறியீடாக சுவரை முன்னிறுத்தி காட்சிகளைக் கோர்த்த இயக்நனர், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை இன்னும் காட்டமாக வெளிப்படையாக வைத்திருக்கலாம் என்பது ஓர் ஆதங்கமாக இருக்கிறது.

ஆதிக்க அரசியலுக்கு எதிராக முன்னிறுத்தப்-படும் ஒடுக்கப்பட்ட மனிதனின் உடல் அழிக்கப்படுகிறது அல்லது கல்வி, தத்துவம் போன்ற அமைதி வழிப் பாதையை நோக்கி நகர்த்தப்படுகிறது என்று எல்லா வழக்கமான இயக்குநர்களைப் போலவே பா.ரஞ்சித் சொல்லி இருக்கிறார். கடைசிக் காட்சியில் ஒரு பக்கம் காளி பள்ளியில் சமூக மாற்றம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது மாரியின் இடத்தில் இன்னொரு துரோகியை (விஜி) முன்வைத்து துரோகத்தின் வரலாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைமைப் பண்பைச் சித்தரிக்க முனைவது ஏன் என்கிற மிகப்பெரிய கேள்வி எழுகிறது.

(தொடரும்)

 


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *