அவ வயசு அப்படி!

அக்டோபர் 16-31

சிறுகதை  : அவ வயசு அப்படி!

தூங்கிப் பல மாசமாச்சும்மா… சாப்பிட முடியல… பசிக்குது… சாப்பாடு உள்ள போக மாட்டேங்குது

சோகமாய், எப்போது வேண்டுமானாலும் அழுது விடுவேன் என்பதுபோல், கலங்கிய கண்களுடன் மனநல மருத்துவர் கயல்விழி முன் அந்தப் பெண் அமர்ந்திருந்தார்.

கயல்விழி அந்தச் சின்ன நகரத்தில் கொஞ்சம் பிரபலமான மனநல மருத்துவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி அவர் பேசும் பெண்ணுரிமைச் சிந்தனைகள் பலரது புருவங்களை உயர்த்தும். பெண் _ பெண்ணுடல், பாலியல் குறித்து பட்டவர்த்தனமாக, தெளிவாகப் பேசக் கூடியவர். பழைமைவாதிகள் அவர் கருத்தை மறுத்தாலும், அறிவியல் பார்வை உள்ள யாவரும் கயல்விழியின் கருத்துக்குக் கை கொடுக்கவே நினைப்பார்கள்.

உங்களுக்கு என்ன வயசும்மா?

46 ஆகுதும்மா…

கயல்விழி அப்போதுதான் கவனித்தாள். இந்த முகத்தை… மூக்கின் அருகில் பெரிய மச்சம்… ஓ! இது மைதிலி மாமியில்ல!

சட்டென்று பொறிதட்டியது கயல்விழிக்கு.

கயல்விழியின் சக மருத்துவர் ஆனந்தனின் பரிந்துரையில் வந்தவர்தான் மைதிலி மாமி.

45 வயது மதிக்கத்தக்க பெண் இவர். கணவனை இழந்தவர். வீட்டிற்கு அருகில் தன்னைவிட வயது குறைந்த இளைஞரோடு பாலியல் உறவில் வாழ்ந்தவர். கல்லூரியில் படிக்கும் மகள் கண்டுபிடித்ததால் மனம் உடைந்து தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது காப்பாற்றப்பட்டவர் என்பதுதான் கயல்விழிக்குச் சொல்லப்பட்ட மைதிலி மாமியின் முன்கதைச் சுருக்கம்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்த மைதிலி மாமியால் தன் வீட்டில் நடந்த கொடுமையான நிகழ்வு கயல்விழியின் மனத்திரையில் ஓடியது.

கயல்விழி அப்போது மருத்துவக் கல்லூரி மேல்படிப்பு மாணவி. அண்ணன் திடீரென விபத்தில் இறந்து போனார். இரண்டு குழந்தைகளையும் மாமியார் மாமனார் பார்த்துக் கொண்டதால், கணவனின் வேலையை கயல்விழியின் அண்ணி கலாவதி பார்த்துக் கொண்டிருந்தார். இந்த மைதிலி மாமி அதே தெருவில் கடைசி வீட்டில் வசித்தவர். ரேடியோ பெட்டி என்பதுதான் அந்தத் தெருவில் மைதிலியின் பட்டப்பெயர்.

யாரைப் பற்றியும் தப்பும், தவறுமாய் அடுத்தவரிடம் வத்தி வைப்பதுதான், அவரது பொழுதுபோக்கு.

அப்படித்தான் ஒருநாள் மழைநாளில் தன்னுடன் பணி செய்யும், சக நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு வந்தார் கலாவதி. அவ்வளவுதான். ஒரே வாரத்தில் கலாவதி மனமுடைந்து தூக்குக் கயிற்றை மாட்டிக்கொள்ளும் அளவிற்கு, அந்தத் தெரு முழுவதும் கலாவதியை, அந்த இளைஞனுடன் இணைத்து வைத்து, இல்லாததும், பொல்லாததுமாகப் பேசித் தூற்றி விட்டார் மைதிலி மாமி.

காலம் கெட்டுப் போச்சு. அவ விதி சின்ன வயசுல தாலி அறுத்திட்டா, ரெண்டு பிள்ளைகள வச்சுக்கிட்டு, புதுசா ஆம்பிள கேக்குதாக்கும் அவளுக்கு. செத்துப் போன புருசனுக்குத் துரோகம் செய்யலாமா? மைதிலியின் டயலாக் இது.

அம்மாவும், அக்காவும் சண்டைக்குப் போய்விட்டார்கள். அப்பா மைதிலி மாமியை அடிக்கவே போய்விட்டார்.

மைதிலி நீயும் ஒரு பொம்பளதான, இப்படி நீ நாக்குல நரம்பில்லாமப் பேசலாமா? நடுங்கும் குரலில் நியாயம் கேட்டார் அம்மா.

மாமி ஒன்றும் சளைத்தவரில்லை. என்னக்கா நீங்க? மருமகளை வேலைக்கு அனுப்பலாமா? நா அவளத் தப்புச் சொல்லல, அவ வயசு அப்படி. பாவம் அவ என்ன செய்வா? என்றாள் மாமி.

பரிவு காட்டுவதுபோல் நடித்தாலும், வார்த்தைகளில் பரிகாசமே மேலோங்கி நின்றது.

ஒரு பொம்பள கேவலம் 5 நிமிசச் சொகத்துக்காக, மான மரியாதையை எழந்து நிக்கனுமா? உங்க மருமகளால உங்க குடும்ப கௌரவம் போச்சேக்கா நீட்டி முழக்கிப் பேசினாள் மாமி.

சீ! நீயும் ஒரு பொம்பளயா? இனிமே ஏதாவது பேசுன… வார்த்தைகள் வராமல், நடுக்கத்துடன் தடுமாறினார் அப்பா…

வீட்டிற்குள் வந்தவுடன் எல்லாரிடமும் நடந்ததுபற்றிப் பேசினார். இளம் பெண்ணை, துணை இல்லாமல் வதைப்பது தவறோ? என யோசித்தவர் போல. அண்ணி பிடி கொடுக்கவே இல்லை. ஆறுமாதம் கழித்து நண்பரின் மகனை அண்ணிக்கு மறுமணம் செய்து வைத்தபின்தான் ஓய்ந்தார் அப்பா.

அப்போதும் இதே மைதிலி மாமியின் வாய் விசமாய்த்தான் வார்த்தைகளைக் கொட்டியது. இது என்ன கூத்துடா சாமி? மாமனாரே மருமகளுக்குக் கல்யாணம் முடிக்கிறாராம்.

என்ன டாக்டர் ஊசி போடுவீங்களா? மைதிலியின் கேள்வி, கயல்விழியை நிகழ் காலத்திற்குக் கொண்டு வந்தது.

உங்க பிரச்சினை என்னம்மா? சொல்லுங்கம்மா…?

எப்போதடா கேட்பாள் என்றிருந்த மாதிரி, மைதிலி மாமி மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகளைக் கொட்டத் தொடங்கினார்.

என் ஆத்துக்காரர் செத்து ரெண்டு வருமாச்சு, அந்த மனுசனோட நான் ஒன்னும் சந்தோசமா குடும்பம் நடத்தல. 6 மாசத்துக்கு முன்ன அந்தக் கடங்காரன் எதிர் வீட்டுல குடி வந்தவன் சும்மா இருந்திருக்கப்படாதோ?

ஒரு நாள், மாமி எங்க வீட்ல பேன் மாட்டனும். உசரமா நாற்காலி இருந்தாக் குடுங்கன்னு வந்தான்.

நான் கண் இமைக்காம டி.வி.யில கிரிக்கெட் பாத்துக்கிட்டிருந்தேன். அவனும் டி.வி.யை ஆர்வமாய்ப் பார்த்தான். ஏன் மாமி உங்களுக்கு கிரிக்கெட் ரொம்பப் புடிக்குமான்னான். ஆமான்டா அம்பின்னேன். பக்கத்துல அலமாரியில இருந்த பொன்னியின் செல்வன் புத்தகத்தை ஆர்வமா எடுத்து இத யாரு படிப்பான்னான்? ஏன் கேக்குற? எனக்கு கல்கியின் கதைன்னா உயிர்னேன். எனக்கும் ரொம்பப் புடிக்கும்னு சொன்னான்.

வாசல்ல வச்சிருந்த செம்பருத்திச் செடிய ரசிச்சான். என்னமோ தெரியல அவனுக்குப்  புடிச்சதா சொன்ன, அவன் ரசிச்ச எல்லாமும் எனக்கும் புடுச்சித் தொலைஞ்சது. அடிக்கடி வீட்டுக்கு வந்தான். அவன் பேச்சை மட்டுமல்ல, அவனையும் ரசிக்க ஆரம்பிச்சேன். எனக்கு என்னென்ன பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு அதையெல்லாம் வாங்கித் தந்தான். என் புருசனிடம் அனுபவிக்காத ஏதோ ஒரு அன்னியோன்யமும், அன்பும் அவன்ட்ட இருந்தது. கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போனான். அப்புறம் சினிமா போனோம். வீட்டுக்குள்ள படுக்கையறைவரை வந்துட்டான்.

நான் இந்த வயதில் தடுமாறித்தான் போனேன்…. எல்லை மீறியாச்சு… என் பொண்ணு பார்த்துட்டா… நான் காதலிக்கிறவன் என்ன ஜாதியோன்னு குதி, குதின்னு குதிச்சியே, நீ மட்டும்… இவன் என்ன ஜாதி…? வெளிப்படையா கல்யாணம் கட்டிக்கத்தான் ஜாதி வேணுமா? யாருக்கும் தெரியாமப் படுத்துக்க ஜாதி முக்கியமில்லையா?ன்னு அசிங்க அசிங்கமாப் பேசினா. அவமானம் தாங்க முடியல…

குலுங்கிக் குலுங்கி அழுதாள் மைதிலி மாமி.

மாமி, மைதிலி மாமி அழாதீங்க என்றதும் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் மாமி.

மாமி என்னைத் தெரியலையா? நான்தான் சுந்தரம் வாத்தியார் மகள் கயல்விழி. கேவலம்… அஞ்சு நிமிச சொகத்துக்குன்னு… நீங்க பேசுன அந்த வார்த்தையைக் கேட்டுத்தான் எங்க அண்ணி தூக்கு மாட்டப் போனாங்க தெரியுமா?

கெஞ்சும் முகத்தோடு கையெடுத்துக் கும்பிட்டாள் மைதிலி.

கயல் மன்னிச்சுடும்மா. அன்னைக்கு என்னமோ திமிருல பேசிட்டேன். தலைவலி, காய்ச்சல் தனக்குன்னு வந்தாத்தான் தெரியும்பாங்க. அது உண்மைதான்.

மாமி முதல்ல உங்க குற்ற உணர்ச்சியில் இருந்து வெளியில வாங்க. எந்த வயதானாலும், ஆணுக்கும், பெண்ணுக்குமான பாலியல் உறவை, கேவலம் அஞ்சு நிமிச சுகம்னு இழிவாச் சொல்ல முடியாது.
இயற்கை மனித மறு உற்பத்தியையே அந்த அஞ்சு நிமிச சுகத்தில்தான் பொதிந்து வைத்திருக்கிறது தெரியுமா?

பெண் என்றால் கணவனைத் தவிர யார் மீதும் காதல் வரக்கூடாதுன்னும், பிள்ளைகள் பெரிசாயிட்டா 40 வயசுக்குமேல பெண்ணுக்கு எதுக்குக் காதலும் காமமும்னு நாம நினைக்கிறோம். இதெல்லாமே, காலம் காலமாய், இங்க இருக்கிற தப்பான மூடநம்பிக்கைகள்தான்.

மனிதனுக்குப் பயந்து, அடங்கி நடக்கிற யானை மதம் பிடித்தால் காட்டையே துவம்சம் பண்ணுது. மதம்னா என்னன்னு தெரியுமா? யானைக்குப் பாலியல் தேவை பூர்த்தி அடையாமல் போவதால்தான் மதமாக _ கொடூரமாக வெளிப்படுகிறது.

ஆணும், பெண்ணும் எந்த வயதிலும் காம வயப்படுதல் தவறில்லை. அதுதான் இயற்கை. பாலியல் உணர்வை பாவம் என்று சொல்லி மதங்கள்தான் நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்றன.
மாமியின் முகத்தில் லேசாய்த் தெளிவு தென்பட்டது.

மாமி! நாளைக்கு உங்க மகளைக் கூட்டிட்டு வாங்க…

அடுத்த நாள் மாமியின் மகள் உமா கயல்விழியின் முன் அதே கலவர முகத்தோடு அமர்ந்தாள். கயல்விழி மெதுவாய், அதே சமயம் அழுத்தமாய் அந்தப் படித்த பெண்ணிடம் அறிவியல்பூர்வமாய் விளக்கம் தந்தாள்.
உமாவிற்கு தன் அம்மா, தன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார் என்ற செய்தியை மருத்துவர் கயல்விழி கூறியபோது சந்தோசத்தில் கண் கலங்கியது.

இங்க பாரு உமா, பள்ளியில, கல்லூரியில படிக்கிறப்ப வர்ற காதலையே ஏத்துக்காத சமூகம் நம்முடையது.

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? ஆணுக்கும், பெண்ணுக்கும், 20, 30 வயதில் மட்டும் இல்லை. 40, ஏன் 60 வயதிற்கு மேலும் காதல் வரும் தெரியுமா?

தண்ணீரின் இயல்பு பள்ளத்தை நோக்கிப் பாய்வதுதான். மனசும் அப்படித்தான். அன்போ, அரவணைப்போ இல்லாமல் காய்ந்து கிடக்கிற மனசு, அன்பு காட்டும் அக்கறை செலுத்தும், பெண்ணையோ, ஆணையோ அருகாமையில், நெருக்கமாய் சந்தித்தால் காதல் கொள்வதும்கூட இயற்கைதான்.

உன் அம்மா அந்த நபரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதுதான் மனம். ஆனால் Time will heal all the wound. காலம் எல்லாப் புண்ணையும் ஆற்றும் அருமருந்து.

நீ உன் அம்மாவிடம் அன்பும், அக்கறையுமாக நடந்து கொள். முடிந்தவரை கூடவே இரு. கோவில், சினிமா, பூங்கா, கடை என எங்காவது கூட்டிக் கொண்டு போ என்றதும் மகிழ்ச்சியாய் விடை பெற்றுக் கொண்டார்கள் தாயும், மகளும்.

அம்மா முழுமையாக குணமடைந்து விட்டதாக அந்த மகள் நம்பினாள். கணவனை இழந்த 46 வயதான அந்தத் தாய்க்கு இன்னும் அன்பும், அரவணைப்புமாய் ஓர் ஆண் துணை தேவை என்பதை மனம், உடல்ரீதியாக அறிந்த மருத்துவர் கயல்விழி அறிவார்.

உன் அம்மாவிற்கு மறுமணம் செய்து வை, அதுதான் தீர்வு என கயல்விழி கூறவில்லை. அதை உமாவே விரைவில் உணர்வாள் என்று கயல்விழிக்குத் தெரியும்.

நீண்ட பெருமூச்சோடு கயல்விழி அடுத்த நோயாளியைக் கவனிக்கத் தயாரானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *