அய்யாவின் அடிச்சுவட்டில்…. – 115

அக்டோபர் 01-15

 

சூளுரை நாள்

அய்யா, அம்மா ஆகியோர் மறைந்த நிலையில் வற்றாத கண்ணீர், தாளமுடியாத துயரம், வார்த்தைகளால் வடித்திட முடியாத வேதனை -_ இவைகளோடு தமிழ்ப் பெருமக்களுக்கு மிகுந்த பணிவன்புடன் இந்தக் கழகத்தை வழிநடத்திட எனக்குக் கொடுக்கப்பட்டது மிகப் பெரிய பொறுப்பு ஆகும்!

நமது அறிவு ஆசான் அய்யா அவர்களை 41 ஆண்டுகளுக்கு முன் இழந்தோம். எளிதில் ஆறுதல் பெறமுடியாத அந்த ஈடுசெய்ய முடியாத இழப்புக்குப் பிறகும், ஒரே ஒரு ஆறுதல் அய்யா அவர்களை 95 ஆண்டுகாலம் வரை காத்த நம் அருமை அம்மா அவர்களை, அய்யா நமக்கு விட்டுச் சென்றிருந்தார் என்பதுதான்.

அய்யா மறைவுக்குப்பின் அம்மா அவர்கள்  கடும் நோயின் உபாதைக்கிடையிலும் கலங்காமல், தனது லட்சியப் பயணத்தைச் சிங்கமெனத் தொடர்ந்தார்கள். லட்சோப லட்ச கருஞ்சட்டைச் சிங்கக் குட்டிகளை _ பகுத்தறிவுத் தங்கக் கட்டிகளை உருவாக்குவதிலும் அய்யாவின் கொள்கைகளைத் தரணியெங்கும் பரப்புவதிலும் அவர்கள் ஆற்றிய பணி, வரலாறு ஆகியிருக்கிறது!

அன்னையார் அவர்களது திடீர் மறைவு காரணமாக தமிழினம் மிகுந்த ஏமாற்றத்துடன் துயரக் கடலின் நடுவே தத்தளித்துக் கொண்டிருந்தது.

அய்யா அவர்களைத்தான் அவரது நூற்றாண்டு விழாவில் நாம் நம்மோடு வைத்து விழா கொண்டாடி மகிழ இயலவில்லை என்றாலும், அம்மா அவர்களையாவது கலந்துகொள்ள வைத்து விழாவினை முடிப்போம் என்ற நம்பிக்கையுடன் இருந்த நமக்கு இயற்கை மிகப் பெரிய சதி செய்து, தோல்வியைத் தந்துவிட்டது. என்னே கொடுமை!

தலைவர் அன்னையார் அவர்களின் இறுதிப் பயணத்தின்போது தமிழ்ப் பெருமக்கள் அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி, மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு அவர்களது இடையறாத பணிக்கு _ கைமாறு கருதாத தன்னல மறுப்புத் தொண்டுக்குக் காட்டிய வீரவணக்கம் எவராலும் எளிதில் மறக்க இயலாத ஒன்றாகும். அந்த நம்பிக்கையோடு கருஞ்சட்டைக் கடமை வீரர்களான நாம் _ இராணுவக் கட்டுப்பாடு காக்கும் லட்சிய வீரர்களான நாம் _ நமது பயணத்தில் எத்தகைய சோதனைகளும் சூறாவளிகளும் ஏற்படினும் தொய்வின்றித் துணிவுடன் கழகப் பணியைத் தொடருவோம்!

தந்தையும் _ அன்னையும் நம் இயக்கக் குடும்பத்தினர்; நம்மைப் பொருத்தவரை அவர்கள் மறைந்தவர்கள் ஆகிவிடமாட்டார்கள். நெஞ்சில் நிறைந்தவர்களாக -_ இரத்தத்தில் உறைந்தவர்களாக ஆகிவிட்டார்கள்.

வழியும் கண்ணீருடன் எங்கள் விழிகள் அறிவுத் தந்தையும் _ தாயும் காட்டிய வழியையே நோக்குகின்றன! எங்கள் கால்கள் அந்த வழி தவறாது நடைபோடத் தொடங்கிவிட்டன. எங்கள் உள்ளங்களோ சபலத்திற்கு இடம் கொடுக்காத உறுதிமிக்க லட்சியக் கதவுகளால் காக்கப்பட்டு வந்தாலும் அய்யா_அம்மாவினை எண்ணி புதுத்தெம்புடன் தொடருகிறோம் என்று நம் அன்னையார் அவர்கள் இறப்பிற்குப் பிறகு 19.03.1978 அன்று நான் எழுதிய அறிக்கையில்  விடுதலையின் முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அன்று முதல் எமது பயணம் அய்யா_அம்மா அவர்கள் போட்டுத்தந்த பாதையில் எவ்விதமான சபலங்களுக்கும் ஆளாகாமல் தொடருகிறது.

திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்கள் இயற்கை எய்திய செய்தி, தமிழ் இன உணர்வு படைத்த அனைவர் இதயங்களையும் வேதனைக் கடலில் ஆழ்த்தியது. அந்த வேதனையுடன் தமிழ்நாடெங்கும் சூளுரை நாள் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கழகத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் அனைத்து மாவட்டங்களிலும் கலந்து கொண்டேன்.

திராவிடர் கழகப் பொருளாளர் தஞ்சை மானமிகு க.மா.குப்புசாமி அவர்களும் என்னுடன் அனைத்துக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். மார்ச் 26இல் தொடங்கிய சூளுரை நாள் பொதுக்கூட்டங்கள் கோவையில் தொடங்கி இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. நமது பக்கத்து மாநிலமான பெங்களூர் உள்ளிட்ட இடங்களிலும் சூளுரை நாள் பொதுக்கூட்டம் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்த சூளுரை நாள் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட இயக்கத்தின் அடிப்படை வரலாற்றை முதலாகக் கொண்டு, தந்தை பெரியார் அவர்களது கொள்கை என்பது எவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் அவரவர் இயங்குவதற்குள்ள உயிர்மூச்சு போன்றது.

கழகத்தில் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 3.4.78 _ தஞ்சை, 4.4.78 _ புதுக்கோட்டை, 5.4.78 _ காரைக்குடி, 6.4.78 _ மதுரை என்று சுற்றுப் பயணம் தொடர்ந்தது.

மதுரையில் 6-.4.1978இல் கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் இருந்தபோது, கழகத்தில் இருந்து அன்னையார் அவர்களால் வெளியேற்றப்பட்ட தோழர்கள் சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி, திருவாரூர் கே.தங்கராசு, சென்னை டி.எம்.சண்முகம் ஆகியோர், தந்தை பெரியார் டிரஸ்ட் மற்றும் இயக்கச் சொத்துகளை தமிழக அரசே கைப்பற்றிவிட வேண்டும். உடனடியாக சொத்துகளை நிர்வகிக்க ளியீயீவீநீவீணீறீ ஸிமீநீமீவீஸ்மீக்ஷீ ஒருவரை நியமிக்க வேண்டும். வீரமணியை நிர்வாகம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி, ஒரு வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர். அது சம்பந்தமாக எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே 1976இல் நெருக்கடி நிலை முடிவுக்கு வருவதற்குச் சற்றுமுன் மிசாவிலிருந்து நான் விடுதலையாகி வந்தபோது, டிரஸ்ட்டின் எல்லா சொத்துகளின் வாடகைகளைக்கூட அட்டாச் செய்து _ நேரே வாடகைகளை வருமான வரித்துறையினருக்கு அனுப்பும் நிலையை வருமான வரித்துறை செய்திருந்தது. அதுபோதாது என்று திருவாரூர் கே.தங்கராசு, டி.எம்.சண்முகம் கையொப்பமிட்டு வீரமணி, மணியம்மையார் ஆகியோர் ஏராளம் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளார்கள்; பெரியார் பணம் அது. அதனையும் நீங்கள் எடுத்து வெளிக்கொண்டு வாருங்கள் என்று எழுதி, வருமான வரி பெரிய அதிகாரிக்கு மனு அனுப்பியதை, அந்தப் பார்ப்பனப் பெரிய அதிகாரி என்னிடம்  பேசியபோது அவரே என்னிடம் காட்டினார். (என்னிடம் அதன் நகல் இன்னமும் உள்ளது).

நமது கழகத்தவர்கள் கவலையும் பதற்றமும் அடைந்தபோது, நான் அவர்களை, ஒன்றும் பதற வேண்டாம்; வழக்கு மன்றத்தில் வழக்குகளை நல்ல வண்ணம் நம்மால் நடத்தி வெற்றி காண முடியும். பல்வேறு அனுபவம்மிக்க சட்ட வல்லுனர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்களின் அறிவுரைகளைப் பெற்று அதன்படிச் செயல்படுவோம். இதற்காக டிரஸ்ட்டிலிருந்து (அய்யா அறக்கட்டளையிலிருந்து) ஒரு பைசாகூட வழக்குச் செலவுக்கென எடுக்காது, மக்கள் ஆதரவுடன் வழக்கு நிதி ஒன்றினை அறிவித்து, அந்த நன்கொடைகளின் மூலம் கிடைக்கும் பணத்தையே வழக்கு நடத்திடச் செலவு செய்ய முடிவு செய்துள்ளோம் என்றவுடன், நிதி குவிந்தது!

உணர்ச்சிப்பூர்வமாக பொதுமக்களும் பணம் தந்தனர் _ ஒரு ரூபாய் _ 2 ரூபாய் என்று. கூட்டத்தில் பட்டாணி விற்றவர் வெறும் 50 காசுகள் தான் அய்யா என்னால் தரஇயலும் என்று கூறி மனமகிழ்ச்சியுடன் தந்தார். வங்கிக்கணக்குத் திறக்கப்பட்டது. வழக்கு நிதி தந்தோர் பட்டியல் நாளும் விடுதலையில் வெளிவந்த வண்ணம் இருந்தது!

இந்த வழக்குப் போட இம்மூவரும் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரைச் சந்தித்துப் பேசிய பின்னரே இப்படி ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது என்பதும், அதனை உறுதிப்படுத்திடும் வகையில் எம்.ஜி.ஆரோடு மிக நெருக்கமான ஒரு மூத்த வழக்குரைஞரை (திரு.என்.சி.இராகவாச்சாரி) ஏற்பாடு செய்து இருந்தார்கள் என்பதும் தெரிந்தது. நான் நமது அறக்கட்டளை சார்பில், பிரபல வழக்குரைஞர் திரு.கே.கே.வேணுகோபால் அவர்களை நேரில் சென்று கேட்டு வழக்கு நடத்திட (நம் சார்பில்) ஒப்புதல் வாங்கினேன்.
இப்படி, தொடங்கும்போதே எதிர்நீச்சல்களில் தான் என் பணி தொடங்கியது!

–    (நினைவுகள் நீளும்…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *