108 ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?

ஜூன் 01-15

25.2.2011 அன்று கோவையிலுள்ள கே.ஜி.அறக்கட்டளை சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் எனும் சிறந்த விருதினை மருத்துவர் பக்தவத்சலம் அவர்கள் வழங்கிச் சிறப்பித்தார்.

அதே விழாவில் இன்னொரு அறிஞருக்கும் விருது வழங்கப்பட்டது.

 

அவருடைய பெயர் டாக்டர் வெங்கட் செங்கவல்லி. அய்தராபாத்தைச் சேர்ந்த இவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் அதை எப்படிச் சமாளிப்பது என்பதைப் பற்றி ஆராய்ந்து பல பட்டங்களைப் பெற்றவர். அய்தராபாத்தில் “Emergency Management And Research Institute” என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் தலைவராக இருந்து திறம்படப் பணியாற்றி வருகிறார்.

அவ்விழாவில் பேசிய வெங்கட் செங்கவல்லி, நான் அய்தராபாத்தில் நெருக்கடி நிலையில் நம் ஆளுமைத் திறன் _ ஆராய்ச்சி   என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருங்காலத்தில் எனக்கு, ஆம்புலன்சு வண்டிகளை நெருக்கடி நிலையில் எப்படி விரைவாகப் பயன்படுத்திக் கொள்வது, உயிருக்குப் போராடுபவர்களைப் பாதுகாப்பாக உடனடியாக எப்படி மருத்துவமனைகளில் கொண்டு சேர்ப்பது என்பதை ஆராய வேண்டும் என்று தோன்றியது. தீயணைப்பு நிலையத்திற்கு நிலையான ஒரு தொலைப்பேசி எண் இருப்பதைப் போல, அவசர போலீஸ் உதவிக்கு ஒரு எண் இருப்பதைப் போல ஆம்புலன்சுக்கும் ஒரு நிலையான எண் வேண்டுமே என்று சிந்தித்தேன். அது இந்தியா முழுமைக்குமான ஒரு பொது எண்ணாக இருக்க வேண்டும். 108 என்ற எண் பொருத்தமானதாக எனக்குத் தோன்றியது. 108 என்ற இந்த எண்ணை அழைத்தால் அடுத்த சில நிமிடங்களில் ஆம்புலன்சு வண்டி முதலுதவி வசதிகளுடன் வந்து நிற்க வேண்டும்.

இது தனியார் துறையில் இடம்பெற இயலாது. தீயணைப்புத் துறையைப் போல அரசாங்கம்தான் இதனை ஏற்று நடத்த வேண்டும். என்று தோன்றியது என்றும் சொல்லும் அவர், திட்டத்தைச் செம்மையாக வரையறைப்படுத்திக் கொண்டு முதலில் ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டியைப் போய்ப் பார்த்தார். திட்டத்தை நன்கு படித்துப் பார்த்த ஆந்திர முதலமைச்சர், அதனை நடைமுறைப் படுத்துவதென்று முடிவு செய்தார். அடுத்தவாரம் வந்து தம்மைச் சந்திக்குமாறு வெங்கட் செங்கவல்லியிடம் ஆந்திர முதலமைச்சர் கூறியனுப்பி விட்டார். அடுத்த நாள் செங்கவல்லிக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர் ரெட்டி விமான விபத்தில் காலமாகிவிட்டார்.

மனந்தளராமல் தமது 108 ஆம்புலன்சு திட்டத்தை மராட்டிய முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். சில நாட்களிலேயே மராட்டிய முதலமைச்சரிடம் இருந்து அழைப்பு வந்தது. மராட்டிய முதலமைச்சரின் மனம் ஏற்குமாறு நல்ல முறையில் விளக்கமளித்துவிட்டு வெற்றிப் புன்னகையோடு வெளியில் வந்தார். இன்னும் சில நாட்களில் மராட்டிய மாநிலத்தில் ஒரு மாபெரும் மாற்றம் நிகழப் போகிறது என்று ஆவலோடு காத்திருந்தார் வெங்கட் செங்கவல்லி. ஆனால் அவர் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை; மாறாக மராட்டிய முதலமைச்சரையே அங்கு மாற்றிவிட்டார்கள்! இப்போது புதிய முதலமைச்சர்!

மனம் உடைந்துபோன மருத்துவர் எவ்வளவு அருமையான திட்டத்தை வடிவமைத்துக் கொடுத்திருக்கிறோம்; நடைமுறைக்கு வராமல் காலம் தள்ளிக் கொண்டே போகிறதே என்று வருந்தினார்.

கடைசியாக, இனி நாம் பார்க்க வேண்டிய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிதான் என்று எண்ணிய வெங்கட் செங்கவல்லி, அவரிடம் விளக்கியுரைத்துவிட்டால் 108 எனும் இத்திட்டம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்ற நன்னம்பிக்கையோடு கலைஞரைப் பார்த்தார். கலைஞரைக் கவர்ந்தது 108! வெங்கட் செங்கவல்லி வெற்றி பெற்றார்.

கலைஞர் ஆட்சியில், தமிழ்நாட்டில் எண்ணற்றோர் உயிரைக் காப்பாற்றி ஒளியூட்டிய 108 ஆம்புலன்ஸ் வந்தது இப்படித்தான்.

– பேராசிரியர் டாக்டர் ப.காளிமுத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *