ஆதிசங்கரன் X விவேகானந்தர்

ஜூன் 01-15

மே 5! கார்ல் மார்க்ஸ் 196ஆம் பிறந்த நாள்! அதேநாளில் ஆதிசங்கரன் பிறந்த நாள் என்று அக்கிரகாரம் அறிவித்தது. அதுவும் ஆதிசங்கரனின் 2524ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று பிரச்சாரம்! தினமணியைப் பாருங்கள்.

ஆர்யாம்பாள் எனும் விதவைப் பார்ப்பனப் பெண்மணியின் மகன் சங்கரன். 32 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து இறந்தவன். (பொது ஆண்டு 775_807). இதுதான் வரலாற்று நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி. பத்ரிநாத், துவாரகா, பூரி, சிருங்கேரி எனும் நான்கு ஊர்களில் நான்கு மடங்களை நிறுவித் தன் அத்வைதக் கருத்துகளைப் பரப்பிட ஏற்பாடு செய்தவன் என்பதும் வரலாறுதான்.

 

இதற்கு மாறாகக் காஞ்சிபுரத்தில் அய்ந்தாம் மடம் கட்டினான் என்பது தமிழ்நாட்டுப் பார்ப்பனப் புளுகு. இந்தப் புளுகு மடமும்கூட கும்பகோணத்தில் இருந்த மடம் மாற்றலாகி வந்ததால் உண்டானதுதான் என்பதும் வரலாறு. மேலும் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள ஆசிரியர் வீரமணி அவர்களின் சங்கராச்சாரி _ யார்? எனும் நூலைப் படிக்கப் பரிந்துரை. இந்தப் புளுகு மடத்தின் சார்பாக வலைப்பதிவில் செய்யப்பட்டிருக்கும் அண்டப் புளுகு ஆதிசங்கரன் பொது ஆண்டுக்கு 510 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்தான் என்பது. அந்தப் புளுகின் அடிப்படையில் தினமணி கட்டும் ஆகாயப் புளுகுதான் 2524ஆம் ஆண்டுப் பிறந்த நாள் என்பது. தொடக்கமே இப்படிப்பட்ட புளுகு என்றால், தொடர்வது எல்லாமே புளுகுகள்தான்.

 

அத்வைதம் இதுதான்

பிரம்மமே சத்யம். உலகம் மாயை. ஜீவனும் பிரம்மமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றே! _ இதுதான் அத்வைத சாரம். (பிரம்மம் சத்யம், ஜகன் மித்யா, ஜீவோ பிரம்னமவ நாபர) இதையே பொறுமையாகப் படியுங்கள். பிரம்மம் உண்மை _ உலகம் மாயை. இந்த இரண்டும் ஒன்றே _ என்றால் பிரம்மத்தைப்  போலவே உலகமும் உண்மைதான்! வேறாகச் சொன்னால் உலகத்தைப்போலவே பிரம்மமும் மாயைதான்! சரிதானே? பொருள் சரிதான், வாதமும் சரிதான். ஆனால் மூன்று சொற்களிலேயே இத்தனை முரண்பாடா? முரண்பாடாகப் பேசியவன் எப்படி பகவத் பாதான்? பாதகமாகப் பேசிய படுபாதகன் அல்லவா? இந்த ஆளைப் பற்றிப் பெருமை பேசுவதற்காக சங்கர விஜயம் எனும் நூலை வித்யாரண்யசாமி என்பவர் எழுதி வைத்துள்ளார்.

இவர் சொன்ன பிரம்மம் என்றால் எது? பிரம்மத்தையும் பிரம்மாவையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக்கூடாது. பிரம்மம் கடவுள் அல்ல. பிரம்மத்திற்குக் கோயில் கிடையாது. மாண்டுக்யேபநிஷத் கூறும் விவரப்படி பிரம்மம் என்பது ஆத்மா. (அயம் ஆத்மா பிரம்ம) பிரக்ஞைதான் _ பிரம்மம் என்கிறது அய்தராயபநிஷத் (பிரஞ்ஞானம் பிரஹ்ம).

பல்வேறு உபநிஷத்களில் குறிக்கப்பட்டுள்ளபடி, பிரம்மம் என்பது _ சூரியன், பிராணம், ஆகாயம், பெயர் (நாம பிரம்மம்), வாசம், வாக்கு, மனம், சங்கல்பம், சித்தம், தியானம், விஞ்ஞானம், பலம், அன்னம், தண்ணீர், தேஜஸ், ஸ்மிருதி, ஆசை, வாக்கு, பிராணன், கண், செவி, இதயம், சத்தியம், மின்னல், பயமின்மை, தவம், வாயு, ஓம், எல்லாமும் பிரம்ஹம் (சர்வம் கல்பிதம் பிரம்மம்) போன்ற பலவும் அடங்குமாம். (யோ வை பூமா தத் சுகம். நால்வே சுகம். அஸ்தி பூமைவ சுகம்) எது பூமியோ, அதில் மட்டும்தான் சுகம் உள்ளது. பூமி அல்லாததில் சுகம் இல்லை. பூமி என்றாலே சுகம் என்றும் கூறியுள்ளனர். (சாந்தோக்யோ பநிஷத்!) இது உண்மையிலும் உண்மை (சத்யஸ்ய சத்யம்) என்றும் அதே உபநிஷத் அடித்துக் கூறுகிறது.

மாயை – குழப்பக் கருத்து

பிரம்மம் என்பதற்கு ஆயிரம் அர்த்தம், விளக்கம், வியாக்கியானம் கூறுவது ஒரு பக்கம் இருக்கட்டும். பூமிதான் சுகம், பூமி அல்லாததில் சுகம் இல்லை என்கிறதே சாந்தோக்ய உபநிஷத் (3.14.1.) இதற்கு என்ன விளக்கம்? பூமியை மாயை என்றாக்கிவிட்ட ஆதிசங்கரன் இதற்கு என்ன சமாதானம் கூறினார்?

பிரம்மத்திடம் கண் போகாது, வாக்கு போகாது, மனம் போகாது, அதை நாம் அறிய முடியாது, அதை எப்படி விளக்கிச் சொல்வது என்பதையும் நாம் அறிய மாட்டோம் என்று கோனோபநிஷத் கூறுவதுபோலக் கூறித் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது. காஞ்சி மடப் பேர்வழிகளோ, தினமணிப் பேர்வழிகளோ அறிவு நாணயத்தோடு விளக்கிட வேண்டும். செய்வார்களா?

பகுத்தறிவு கூடாதாம்

பிரம்மமே இத்தனைக் குழறுபடிகளில் சிக்கித் தவிக்கிற நிலையில் ஆதிசங்கரன் பிரம்ம சூத்ரங்களுக்கு உரை எழுதினானாம். ஆதிசங்கரனின் விளக்கம் எடுத்த எடுப்பில் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கம் கூறியுள்ளதைப் பார்ப்போம். பகுத்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் உணர்வு கொண்டவர்களாக இல்லாமல் வேதங்களின் கருத்தை நம்பி வளர்பவர்களாக இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார். இதே பாணியில்தான் எல்லா மதங்களுமே! கழுதையின் கழிவுகளில் முதல் கழிவென்ன? கடைசிக் கழிவு என்ன? எல்லாமே ஒன்று போலத்தான்!

அடுத்ததாக, சூத்திரர்களுக்கு உபநயனம் செய்யப்படாததால் அவர்களை வேதத்தைக் கற்றறிந்து கொள்ளும் உரிமை இல்லை என்று கூறுகிறார். இந்து மதத்தவர்களில் ஏறத்தாழ 85 விழுக்காடு இருக்கக்கூடிய மக்கள் தொகையினர் படிக்கக் கூடாத வேதம் இருந்தால் என்ன? பாழாய்ப் போனால் என்ன? என்பதுதானே வெகுமக்களின் எண்ணமாகவும் செயலாகவும் இருக்க வேண்டும்? இருக்கிறது! அந்த அடிப்படையில் ஆதிசங்கரன் வெகுமக்களுக்கு விரோதமான கருத்துகளைக் கூறியவன்தானே! வெகுமக்களின் விரோதிதானே! அத்வைத மடங்கள் அனைத்தும் வெகுமக்களின் விரோத மடங்கள்தானே!

ஏன் விரட்டினான்?

அத்வைதியான ஆதிசங்கரன் தன் எதிரே வந்த (சூத்திர ஆணுக்கும் பார்ப்பனப் பெண்ணுக்கும் பிறந்த) சண்டாளனைப் பார்த்து என் எதிரே வராதே! விலகிப் போ என்று கூச்சல் போட்ட சம்பவமே அந்த ஆளின் உயர்ஜாதி மனப்பான்மையைக் காட்டியதே! பரமாத்மாவும் ஜீவாத்மாவும் இரண்டல்ல, ஒன்றுதான் என்பது ஆதிசங்கரன் கூறியது என்றால், சண்டாளனின் ஜீவாத்மாவை ஏன் விரட்ட வேண்டும்? பரமாத்மாவோடு ஒன்றியது சூத்திர ஜீவாத்மா அல்ல என எடுத்துக் கொள்ளலாமா? ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றுதான் என்று ஆதிசங்கரன் குறிப்பிட்டது பார்ப்பன ஜீவாத்மாவோ? மடப்பேர்வழிகள் மறுமொழி கூறவேண்டும்.
அத்வைதக் கருத்தை உணர்வுகளில் வைத்துக்கொள்ள வேண்டுமாம். செயலில் கைக்கொள்ள வேண்டாமாம். இதுவும் ஆதிசங்கரனின் வியாக்யானம். இதனால்தான் சண்டாளனை விலகிப்போ என்று கூச்சலிட்டானாம். இந்த முரண்பாட்டைக் கண்டு காறித் துப்பியிருப்பார்களோ? சங்கர விஜயம் எழுதிக் கதைகட்டி பரப்பி விட்டனர் _ பரமசிவனே சோதனை செய்வதற்காகச் சண்டாளன் வேடத்தில் வந்ததாக! எத்தனை எத்தனைப் பார்ப்பனத் தந்திரங்கள், பாரீர்!

பார்ப்பனச் சவடால்

ஆதிசங்கரனைப் பற்றி விவேகானந்தன் கூறியது சரியான சான்றிதழாக இருக்கும். சவரக் கத்தியைப் போன்ற கூர்த்த மதிகொண்ட ஆதிசங்கரன் நல்ல கல்விமான், தர்க்கத்தில் சிறந்தவன். இருப்பினும் பெருந்தன்மை அற்ற ஆள். தான் பார்ப்பனன் என்பதைப்பற்றி மிகவும் பெருமை பீற்றிக்கொண்டவர். தென்னிந்தியப் புரோகித வர்க்கத்தைச் சார்ந்த கர்வம் கொண்ட ஆள் என்பது அவர் கூற்று. (பார்க்க: The Complete Works – Vol 7 பக்கம் 116).

ஆதிசங்கரனையொட்டி எல்லாருமே சங்கராச்சாரியர் என்றே மடத்தலைவர்களும் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே முதல் ஆளைக் குறிப்பதற்காக ஆதிசங்கரன் எனப்படுகிறார். நான்கு மடத் தலைவர்களும்கூட ஜாதித் திமிருடன் நடந்துகொண்டே வருகிறார்கள். அவர்களைப் பற்றியும் விவேகானந்தர் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறார். … சங்கராச்சாரியாரைப் போன்ற திறமை மிக்கவர்கள் புதிய சிந்தனையை உருவாக்குகிற வகையில் ஜாதிப் பாகுபாடுகளை உருவாக்கிவிட்டனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ள பொய்ச் செய்திகள் அனைத்தையும் நான் கூறினால் சிலர் என்னை எதிர்க்கக் கூடும் என்றே குறிப்பிட்டிருக்கிறார். ((The Complete Works  தொகுப்பு 3 பக்கம் 296).

மூன்றும் மூன்று விதம்

சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ராமானுஜன் என்பான் பிரம்ம சூத்ரங்களுக்கு உரை எழுதிய ஆள். மிகப் பெரிய உரை. ஆனால் புதுச் செய்தி ஏதும் இல்லை. இந்த ஆள் சொன்னதை விசிஷ்டாத்வைதம் என்கிறார்கள். பிரம்மம் என்பது எது என்பதை அத்வைதம் போலக் குழப்பாமல் நாராயணன்தான் எனக் கூறுகிறது. நீரில் தூங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் கடவுள் எனப் பொருள்படும் சொல் நாராயணன் என்பது! பிரம்மம் உண்மை. உலகம் உண்மை _ ஜீவாத்மா உண்டு, பரமாத்மா உண்டு என்பது இவருடைய உரை. என்னய்யா, ஒரே சூத்திரத்திற்கு இரண்டு வேறுவித உரைகள்? எப்படி? இதுதான் இந்து மதம்!

இராமானுஜனுக்கு 200 ஆண்டுகள் கழித்து வந்த மாத்வன், உரை எழுதித் தந்தான். அதைத் துவைதம் என்கின்றனர். பரமாத்மா வேறு. ஜீவாத்மா வேறு. பிரகிருதி (உலகம்) வேறு. ஆண் ஆத்மா, பெண் ஆத்மா என்ற பேதம் உண்டு. மனிதர்களிலும் பேதம் உண்டு என்பது துவைதம்.

அத்வைதம் சூத்திரன் படிக்கக்கூடாது என்றது. விசிஷ்டாத்வைதம் சூத்திரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றது. துவைதம் மேல் மூன்று வருணத்தானுக்கும் தொண்டு செய்வதற்குத்தான் சூத்திரன் இருக்கிறான் என்றே கூறிவிட்டது. இந்து மதத்தின் மூன்று பிரிவுகளுமே 85 விழுக்காடு மக்களுக்கு விரோதமானவையே!
சூத்திரன் சுடுகாடாம்

ஆபஸ்தம்ப ரிஷி எழுதிய தர்மசூத்திரம் (1,3,9) சூத்திரனை நடமாடும் மயானபூமி என்று கூறி அவனருகில் யாரும் வேத பாராயணமோ விவாதமோ செய்யக்கூடாது என்றே கூறியுள்ளது.

உரை எழுதிய ஆசார்யர்கள் எல்லாரும் சரியான அர்த்தங்களைத் தருவதற்காகப் பல பொய்களைக் கூறியுள்ளனர். பலாத்காரம் செய்து தமக்கு உடன்பாடில்லாத கருத்துகளைப் பல கோடிக்கணக்கான மக்கள் ஏற்கும்படிச் செய்த இவர்களது செயல்களைப் பார்த்தால் விளங்கும். ரிஷிகளும் அறிவாளிகளும் சேர்ந்துகொண்டு செய்த அநியாயமான செயல் இது என்பது நன்றாக விளங்கும். படித்தவர் செய்யும் அநியாயம் என்பது படிக்காதவர் செய்யும் அநியாயத்தைவிடவும் கொடுமையானது. பண்டிதர்கள் தம் புத்தி பலத்தால், மற்றவர்கள் மீது தம் கருத்தைத் திணிக்க வேண்டி, பலாத்காரத்தின் மூலம் தடைகளை ஏற்படுத்தி வெற்றி கண்டவர்கள். ஸ்மிருதிகளும் புராணங்களும் குறுகிய புத்தியின் வெளிப்பாடுகளாகும். அவற்றில் பெரிய பெரிய தவறுகள் உள்ளன. ஜாதிப் பெருமைகளும் காழ்ப்புணர்ச்சிகளும் மிகுந்துள்ளன. (… Are Full of Fallacies, Errors, and the Feelings of Class and Malice) என்று விவேகானந்தர் இவற்றின் யோக்யதையைத் தோலுரித்துக் காட்டியுள்ளார். (கருத்துத் தொகுப்பு 6, பக்கம் 394).

– சார்வாகன்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *