அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகள்

ஜூன் 01-15

 

அமெரிக்க மண்ணிலே சிகாகோவிலே 1988லே தமிழ்ப் பள்ளி தொடங்கப்பட்டது. மலேசியாவில் இருந்து வந்திருந்த தமிழ் ஆசிரியை சிறப்பாகச் சொல்லிக் கொடுத்தார்.

தமிழ் என்றால் முடியாது என்ற வார்த்தையையே அறியாத அமெரிக்கத் தமிழ் நெப்போலியன் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் மேனாள் தலைவர் பாபு அவர்களின் அயராத உழைப்பால் இன்று நானூறுக்கும் மேற்பட்ட ஏழு பள்ளிகள் சிறப்பாக இயங்குகின்றன. அன்றிருந்த ஆசிரியைகள் கலைச்செல்வி கோபாலன், கண்ணகி விசுவநாதன், சரோ இளங்கோவன் போன்றோரின் ஆர்வத்தாலும், அன்பாலும் குழந்தைகள் மழலைத் தமிழ் பேசிய நிலை மாறி, இன்று அழகிய தமிழ் உச்சரிப்புடன், ஆர்வத்துடன் பேசி, பாடி, நடித்து, பல போட்டிகளில் பங்கேற்கும் குழந்தைகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சி பொங்குகின்றது. அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த அய்ந்து வயது சிறுவன் நூறு திருக்குறள்களை ஒப்புவிக்கின்றான். பல சிறுவர்கள், சிறுமியர்கள் 200, 300, 700 என்று ஒப்புவிக்கின்றனர். அவர்களாகவே திருக்குறள் பற்றிக் கதைகள் சொல்கின்றனர்.

இன்று நடந்த ஆண்டு விழாவிலே பல போட்டிகள். முழுவதும் தமிழிலேயே ஆங்கிலம் கலக்காமல் கதை, வார்த்தைகள், பழமொழிப் போட்டிகள், கிராமிய கலை, பண்பாட்டுப் பாடல்கள், பொங்கலின் சிறப்புகள் என்று குழு குழுவாக அவர்கள் அளித்த நிகழ்ச்சிகள் பாராட்டின் உச்சத்தைத் தொட்டன.

இது இல்லினாய் மாநிலத்தின் கல்வித் திட்டத்தில் குழந்தைகள் படிப்புத் தேவையில் இணைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகின்றது.

இன்று பல தமிழ்ச் சங்கங்களும் அமெரிக்காவின் அத்துனைப் பெரு நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் சனி, ஞாயிறுகளில் நடப்பதும், குழந்தைகளின் தமிழ் அறிவும், தவறில்லா உச்சரிப்பும் தாத்தா பாட்டிகளைப் பெருமையில் ஆழ்த்தி விடுகின்றன.

– மருத்துவர்  சோம.இளங்கோவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *